Sunday, January 22, 2012

ஸ்டீவ் ஜோப்ஸ் –

ஸ்டீவ் ஜோப்ஸின் மரணத்திற்குப் பின்னரே அவர் பற்றிய தேடல் எனக்குள் அதிகரிக்க ஆரம்பித்தது. நீண்ட காலத்திறகுப் பிறகு வார விடுமுறை ஒன்றை மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.பழைய உயிர்மை இதழ்களை ஒவ்வொன்றாகப் புரட்டுகிறேன்...நவம்பர் மாத இதழில் ஷாஜி அவர்கள் எழுதிய ஸ்டீவ் ஜோப்ஸ் – அது ஒரு கணினிக் காலம் கட்டுரையில் மனது நின்று விடுகிறது.ஸ்டீவ் ஜோப்ஸின் உற்பத்திகளை வாங்கி இன்னும் நுகரவில்லை என்ற கவலையோடு ஷாஜியின் இந்தக் கட்டுரையை நன்றியோடு வலைப் பூ நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்

                    ஸ்டீவ் ஜோப்ஸ் – அது ஒரு கணினிக் காலம் 

எதிர்காலத்தில் வரப்போகிறது என்று நினைக்கும்
சந்தோஷங்களைப்பற்றி கனவு காணும்பொழுது மட்டும்தான்
மனிதன் உண்மையில் சந்தோஷமாகயிருக்கிறான்.
- ழாக் லகான்

விளம்பர இயக்குநர் நண்பர் சரத் ஸந்தித்துக்கு பணத்துக்கு புல்லுவிலைதான். பென்ஸ் தொடங்கி பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார். ஒரு நாள் அவர் வோக்ஸ்வாகன் டொராக் என்கிற தனது விலையுயர்ந்த சொகுசு விளையாட்டுக் காரில் பெங்களூரின் க்ராஃ போர்டு அங்காடிப் பகுதியில் வந்திறங்கியபோது தெருவெங்கும் ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. ’என்னடா ஆச்சு’ என்று யோசித்துக் கொண்டு காரை விட்டு வெளியில் இறங்கி, அது யாருடைய பணம் என்று நாலா பக்கமும் பார்த்தார். அந்தநேரத்தில் இன்னும் மூடப்படாமல் இருந்த அந்த காரின் பின்கதவுவழியாக அவரது செங்கல் நிறமான தோல் பையை எடுத்துக்கொண்டு ஒரு திருடன் ஓடிவிட்டான்.

கவனம் திருப்ப ரூபாய் நோட்டுகளை கீழே போட்டிருந்தவனேதான்! என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் பல பல வங்கிகளின் பணஅட்டைகள், காசோலைப் புத்தகங்கள், விலை உயர்ந்த ப்ளாக்பெர்ரி அலைபேசி போன்றவை மாயமாகிவிட்ட. ஆனால் அது எதுவுமே அவரை அதிகமாக பதற்றமடையச் செய்யவில்லை. அந்த பையில் இருந்த, தனது உயிரினும் மேலாக அவர் பாதுகாத்துவந்த ஆப்பிள் மாக் புக் ஏர் எனும் மடிக்கணினி திருட்டுபோனதுதான் அவரை வேதனைக்குள்ளாக்கியது. அது மிக விலை உயர்ந்த கணினி. ஆனால் அவருக்கு அது ஒரு விலை தீராப்பொருள்! தனது இரண்டாம் இதயத்தைப் போலவும் இரண்டாம் மூளையைப் போலவும்தான் அது அவருக்கு இருந்தது.

நான் பயன்படுத்தும் வின்டோஸ் கணினிகளின் வேகமற்ற தன்மை, அவசர வேலைகளுக்கு நடுவில் திடீரென்று உறைந்து நிற்கும் அவற்றின் இயலாமை, பலமணிநேரம் கஷ்டப்பட்டு செய்த வேலைகளோ எழுதி முடித்த பக்கங்களோ காணாமலாகி விடும் மாயம் போன்றவையைப் பற்றி யெல்லாம் நான் சொல்லும்போது ’நீ ஏன் ஒரு ஆப்பிள் மாக் வாங்க க்கூடாது? ஒருமுறை அதைப் பயன்படுத்திப் பார்த்தால் அப்புறம் நீ வின்டோஸை ஏறெடுத்துகூட பார்க்க மாட்டாய்’ என்று சொல்லுவார். ஆனால் நான் ஒருபோதும் ஆப்பிளின் எந்த ஒரு தயாரிப்பையும் வாங்கி தோ பயன்படுத்தியதோ இல்லை. நண்பர் ஜெயமோகன் ஒருமுறை அமெரிக்கப் பயம் முடித்து வந்தபோது எனக்கு ஒரு ஐ போட் வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தார். ஆனால் எம் பி3 வடிவமான பாடல்களை கேட்பதிலோ காதுக்குள் வைக்கும் குட்டி இயர்ஃபோன்கள் வழியாக இசை கேட்பதிலோ விருப்பமில்லாததனால் நான் அதை ஒரு ஆப்பிள் விரும் பியான நண்பர் சிங்கப்பூர் பரணிக்கு கொடுத்து விட்டேன்.

என் பல கட்டுரைகளின் மொழிபெயர்ப்பாளராகயிருந்த நண்பர் சௌதி அராபிய முபாரக் ஒரு ஆப்பிள் அடிமை. பலவகையான ஆப்பிள் படைப்புகளை வைத்திருந்த அவர் ஒருமுறை தனது ஆப்பிளின் வல்ல மைகளை பலமணிநேரம் எனக்கு செயல்முறை விளக்கம் கொடுத்தது ஞாபகமிருக்கிறது. அதற்கு சிநாட்கள் முன்புதான் நான் அஸ்யூஸ் எனும் கொஞ்சம் விலை அதிகமான வின்டோஸ் மடிக்கணினி ஒன்றை வாங்கி யிருந்தேன். அதைப்பார்த்து இன்னும் கொஞ்சம் பணத்தைப்போட்டு ஒரு ஆப்பிளை வாங்கியிருக்கலாமே என்று முபாரக் வருத்தத்தோடு சொன்னார்.
எனது நெருங்கிய நண்பர்கள் பலரும் ஐ போட், ஐ ஃபோன், ஐ பாட், மாக் புக் ப்ரோ போன்ற பலவகையான ஆப்பிள்களுக்கு மாறியபோதிலும் நான் ஆப்பிள்கள் எதுவும் இல்லாமல்தான் இன்றுவரை வாழ்ந்து வருகிறேன். ஆனால் வின்டோஸ், லினக்ஸ் போன்ற மற்ற கணினி வகைமைகளும் உருவாவதற்கு மூலகாரணியாகயிருந்த, தனிநபர்க் கணினி என்கிற பேரதிசயத்தை உருவாக்கி உலகுக்கு வழங்கிய ஸ்டீவ் ஜோப்ஸைப் பற்றி எப்போதுமே நான் மிகுந்த ஆர்வத்துடன் யோசிப்பதுண்டு. ஒரு ஆப்பிளின் சிறப்புகளை நியூட்டனைவிட அதிகமாக உலகுக்கு விளக்கியவர் ஸ்டீவ் ஜோப்ஸ்! 

ஸ்டீவ் ஜோப்ஸைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது ஏறத்தாழ இருப தாண்டுகளுக்கு முன்புதான். அப்போது எனக்கு கணினிகளைப் பற்றி எதுவுமே தெரியாது. அக்காலத்தில் நான் படித்த இந்திய சாமியார்களைப் பற்றியான ஒரு கட்டுரையில், உத்தரப்பிரதேசத்தின் விருந்தாவனப் பகுதி யில் வாழ்ந்துவந்த ’வேப்பிலை பாகற்காய் பாபா’ (நீம் கரேலி பாபா) என்கிற சாமியார் 1970களில் அமெரிக்காவில் சில முக்கியச் சீடர்களைக் கொண்டிருந்ததாகவும், ஆப்பிள் கணினி நிறுவனத்தை நிறுவிய கணினி விஞ்ஞானி ஸ்டீவ் ஜோப்ஸ்கூட சிலகாலம் அவரது சீடனாக இருந்ததாகவும் படித்தேன். 

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த ஒரு விஞ்ஞானமுமில்லாத நானே பதினைந்து வயதிலிருந்து மனிதக் கடவுளர்களுக்கும் போலிச் சாமியார் களுக்கும் எதிராக பேசியும் செயல்பட்டும் வந்திருக்கிறேன்! ஒரு உண்மையான விஞ்ஞானியால் எப்படித்தான் ஒரு சாமியாரின் அடி வருடியாக இருக்க முடியும்? அந்த கேள்வி என்னை ஸ்டீவ் ஜோப்ஸைப் பற்றி தேடவும் படிக்கவும் வைத்தது. உண்மையில் ஸ்டீவ் ஜோப்ஸ் எந்த ஒரு சாமியாருக்குமே சீடனாகவெல்லாம் இருந்ததேயில்லை.

1973ல் வெறும் 18 வயது மட்டுமே இருந்த ஸ்டீவ் இந்தியா வந்திருக்கிறார். அப்போது வேப்பிலை பாகற்காய் பாபாவுக்கு அமெரிக்காவிலிருந்த புகழை மனதில் வைத்துக்கொண்டு அவரை சந்திக்க விரும்பி விருந்தாவனம் சென்றிருக்கிறார். ஆனால் வருங்கால உலகின் மிக முக்கியமான விஞ்ஞானி தன்னைத்தேடி வருவதை தீர்க்கதரிசனம் செய்ய முடி யாமல்போன வேப்பிலை பாபா, ஸ்டீவ் வருவதன் முன்னரே இறந்துபோனார்! கொஞ்சகாலம் இந்தியாவில் அலைந்து திரிந்த ஸ்டீவ் இந்திய சாமியார்களின்மேல் மிகுந்த வெறுப்புடனும் ஆனால் புத்தரின் தத்துவங்களின்மேல் ஆழ்ந்த ஈர்ப்புடனும்தான் அமெரிக்கா திரும்பினார் என்று சொல்லப்படுகிறது. அவர் விஞ்ஞானியானதும் ஆப்பிளை நிறுவி யதுமெல்லாம் அதற்கும் பல ஆண்டுகளுக்கு பின்புதான்.

ஸ்டீவைப்போல் தான் வாழ்ந்த உலகத்தை என்றென்றைக்குமாக மாற்றி யமைத்தவர்கள் மிகக்குறைவே. புவிமண்டலத்தின் காந்த ஈர்ப்புத் தன் மையை கண்டுபிடித்த ஐசச் நியூட்டனுக்கும், மின்சாரம், மின்விளக்கு, ஒலிப்பதிவு போன்றவற்றை கண்டுபிடித்த தோமஸ் ஆல்வா எடிசனுக்கும், தானியங்கி வாகனங்களை கண்டுபிடித்த ஹென்றி ஃபோர்டுக்கும் நிகரா னவராக இன்றைய உலகம் போற்றும் ஸ்டீவ் ஜோப்ஸ் ஞானமும் விஞ் ஞானமும் அசாத்தியமான அறிவும் ஆற்றலும் படைத்திருந்த ஒரு மனித அதிசயம். அவரது வாழ்க்கையையும் செயல்களையும்விட ஆச்சரியகரமான ஒன்று நம் காலகட்டத்தில் நிகழ்ந்ததில்லை என்றே நினைக்கிறேன்.


முதலில் ஒரு பெரிய கட்டடத்தின் பரப்பளவுடனும் பின்னர் ஒரு பெரிய அறையின் பரப்பளவுடனும் ருந்த கணினி என்கிற ராட்சஸ இயந்திரத்தை உலகில் ஒவ்வொருத்தராலும் மடியில்வைத்து பயன்படுத்தக்கூடிய ஒன்றாக்கி மாற்றியது மட்டுமல்ல ஸ்டீவின் சாதனை. சாமர்த்தியமான அல பேசிகள், இசை கேட்கும் கைக் கருவிகள், திரையில் தொட்டு இயக்கும் மின்கருவிகள் போன்றவற்றையெல்லாம் இன்று நாம் பயன்ப டுத்தும் வடிவத்தில் உலகுக்கு வழங்கியவர் அவர் தான். ஆயிரக்கணக்கான பக்கங்களில்கூட எழுதி முடிக்கமுடியாத அவரது ஆளுமையையும் சாதனை களையும் மிகவித்தியாசமான அவரது வாழ்க்கையையும் சுருக்கமாக எட்டிப்பார்ப்போம்.

1955ல் அமெரிக்காவின் கலிஃபோர்னியாப் பகுதியில் ஒரு கல்லூரி மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட உடலிச்சையின் பக்கவிளைவாக பிறந்தவர் அவர். அவர்களுக்கு முற்றிலுமாகத் தேவையற்ற ஒரு பொருளாகக் கிடந்த அக்குழந்தையை பால் ஜோப்ஸ் மற்றும் க்ளாரா ஜோப்ஸ் தம்பதியினர் தங்கள் குழந்தையாக ஏற்றெடுத்தனர். ஸ்டீவன் பால் ஜோப்ஸ் என்று பெயர் வைத்தனர். அவர்கள் அக்குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் வழங்கினர். முழுசுதந்திரத்துடன் வாழ்வ தற்கான சூழலை உருவாக்கி அளித்தனர். 

ஸ்டீவ் ஒருபோதும் பள்ளிப்படிப்பில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெறவேயில்லை. உயர்ந்த மதிப்பெண்கள் எடுக்காத ஒருவனை மாணவனாகவே எற்றுக்கொள்ளாத உலகம் நம்முடையது! அதுமட்டு மல்லாமல் ஸ்டீவுக்கு எழுத்துக்களை தப்பாகப் புரிந்துகொள்ளும் டிஸ்லெ க்ஸியா (Dyslexia) என்கிற மூளைச்சிக்கலும் இருந்தது. ஐன்ஸ்டீன், கிரகாம் பெல், ஹென்றி ஃபோர்ட் போன்ற உச்சபட்ச விஞ்ஞானிகளுக்கும் இருந்திருக்கிறது அச்சிக்கல்! ஆனால் அறிவியல் விஷயங்களில் மிகுந்த நாட்டமிருந்த ஸ்டீவுக்காக தங்களது வீட்டின் அடித்தளத்தில் ஒரு அறிவியல் சோதனைக் கூடத்தையே அமைத்து கொடுத்தனர் அவரது தாய் தந்தையர்கள். தங்களது மகன் ஒரு மகா அறிவாளி என்பதை அவனது சின்ன வயதிலேயே அவர்கள் அடையாளம் கண்டிருந்தனர்.

தனது 12 வயதில் முதன்முதலில் ஒரு பெரிய கணினியையும் அதன் செயல்திறனையும் பார்த்து வியந்துபோன ஸ்டீவ் அத்தகைய ஒன்றை வாங்கி பிரித்து பார்த்து ஆராய ஆசைப்பட்டார். பள்ளிப்படிப்பை ஒருவழியாக முடித்த அவர் தொலைதூர நகரமான ஒரீகனுக்குச் சென்று அங்குள்ள ரீட்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். பாடவேளைகளை அலட்சி யப்படுத்தி பெரும்பாலான வகுப்பறைகளுக்குள்ளேயே ஏறாமல் திரிந்த ஸ்டீவை விரைவில் அக்கல்லூரியிலிருந்து வெளியேற்றினார்கள். ஆனால் அவரோ அங்கிருந்துபோகாமல் தனக்கு பிடித்த வகுப்புகளில் மட்டும் சென்று அமர்ந்து பாடங்களை கவனித்துவந்தார். 

முறைப்படியான கல்வியை உதறியதில் கோபமடைந்த அவரது தாய் தந்தையினர் வழங்கும் பண உதவிகளை இனிமேல் வாங்கவேண்டாம் என்று முடிவெடுத்த ஸ்டீவ் பழைய பீர் மற்றும் கொக்க கோலா புட்டிகளை சேகரித்து அதை விற்றுக் கிடைக்கும் சொற்பமான பணத்தில்தான் க்காலகட்டத்தில் வாழ்ந்தார். ஒரீகன் அமெரிக்காவிலுள்ள இந்திய ஆன்மீ கத்தின் தலைநகரமாகத்தான் அப்போது இருந்தது. ஓஷோ எனும் ரஜ்னீஷ், ஹரே கிருஷ்ணா அமைப்பு போன்றவற்றுக்கு அங்கு பெரும் ஆசிரமங் களும் கோவில்களும் இருந்தன. அங்குள்ள ஹரே கிரூஷ்ணா கோவி லில் தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் இருந்தது. ஒருமுறை அதைச் சாப்பிட நேர்ந்த ஸ்டீவ் அந்த இந்திய சைவ உணவை தனக்குப் பழக்கமான அமெரிக்க அசைவ உணவை விட சுவையானதாகவும் தூய்மையா னதாகவும் உணர்ந்தார். பின்னர் தினமும் வெகுதூரம் நடந்து அக்கோவி லுக்குப்போய் அதைசாப்பிட ஆரம்பித்தார். அத்துடன் மாமிசத்தை முற்றிலுமாகத் தவிர்த்தும் மிகக்குறைவாக மீன், முட்டை, பால் போன்றவை சாப்பிட்டும் கிட்டத்தட்ட சைவமாகவே மாறினார் ஸ்டீவ். இந்தியா மேலான அவரது மோகத்தை ஊக்குவித்தது இந்நிகழ்சிகள்தான். 

குழந்தைகளுக்காக மின்னணு விளையாட்டுச் சாதனங்களை தயாரிக்கும் அட்டாரி எனும் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அதிலிருந்து சேமித்த சொற்ப பணத்தை வைத்துதான் தன் கல்லூரி நண்பருடன் ஒரு ஹிப்பியாக அவர் இந்தியா வந்தார். பலவகை போதைப்பொருட்களை அவர் பழகிய காலமும் அதுவே. அந்தகாலத்தைய தன் வாழ்க்கையில் தான் உருப்படியாகச் செய்த ஒரே விஷயம் எல்.எஸ்.டி எனும் போதைப் பொருளை உட்கொண்டதுதான் என்று ஒருமுறை ஸ்டீவ் சொல்லி யிருக்கிறார்.

மனித மூளையில் புகுந்து மாற்று சிந்தனைத்திறன், கண்மூடினாலும் காணும் காட்சிகள், மதிமயக்கம், காலத்தையும் நேரத்தையும் பற்றியான மாற்று எண்ணங்கள் போன்றவை அளிக்கக்கூடிய அந்த லைசேர்ஜிக் ஆசிட் தான் அக்காலத்தின் பல இந்தியச் சாமியார்களுக்கும் ’ஞான திருஷ்டி’யை உருவாக்கிது! பௌத்த மதத்தின் சிந்தனைகளை உள்வாங்கி, தலை மழித்து இந்திய உடையில்தான் ஸ்டீவ் இங்கிருந்து மெரிக்கா திரும் பினார். ஆனால் விரைவில் ஸ்டீவ் மீண்டும் தனது அறிவியல் சோதனை கூடத்திற்குள் வாழ ஆரம்பித்தார்.

மின் இயந்திரங்களை பிரித்தெடுத்து மீண்டும் பொருத்தி அவற்றை வினோதமான வேலைகளுக்குப் பயன்படுத்துவதில் திறமைவாய்ந்தவராக இருந்த வோஸ்னிக் எனும் நண்பருடன் இணைந்து 1976ல் ஆப்பிள் நிறுவ னத்தை தொடங்கினார் ஸ்டீவ். முதலில் ஸ்டீவின் அப்பாவின் பழைய வாகனக் கொட்டகைதான் அவர்களது பட்டறையாக இருந்தது. அங்குதான் உலகத் தனிநபர் கணினிகளின் மூலமாதிரிகள் உருவானது. ஆப்பிள்1 உலகின் கவனத்தைக் கவர்ந்தது. ஆப்பிள் 2 வணிகவெற்றியும் பெற்றது. பின்னர் நிகழ்ந்தது உலகின் தலையெழுத்தையே மாற்றியமைத்த கணினி உலக வரலாறு.

பெரும் வெற்றிகளை அடையப்போகும் தனது நிறுவனத்தை உலக அளவுக்கு எடுத்துச்செல்ல பெரும் பணமும் வணிகநுட்பங்கள் தெரிந்த பெரும் கைகளும் தேவை என்று உணர்ந்த ஸ்டீவ் பெப்ஸி கோலா நிறுவனத்தின் அப்போதைய தலைவராகயிருந்த ஜான் ஸ்கல்லியை சந்தித்தார். வெறும் சக்கரைத் தண்ணியை விற்று உலகை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு தன்னுடன் இணைந்து வரும்கால உலகை வடிவமைக்க வாருங்கள் என்று சொல்லி ஜான் ஸ்கல்லியை ஆப்பிளின் வணிகத்துறை மேல் அதிகாரியாக கொண்டுவந்தார் ஸ்டீவ். ஸ்டீவ் உருவாக்கி ஆப்பிள் லிஸா போன்ற பல புதிய தயாரிப்புகளுடன் ஆப்பிள் ஒரு வெற்றிபெற்ற நிறுவனமாக மாறியது. 

தேகாலகட்டத்தில் ஸ்டீவின் பல கண்டுபிடிப்புகளை நகலெடுத்து, அவற்றிலிருந்து வின்டோஸை உருவாக்கி உலகம் முழுவதும் மலிவுவிலையில் பரப்பி பெரும் வணிக வெற்றியை அடைந்தார் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ். யார் வேண்டுமானாலும் நகலெடுக்கக் கூடிய முறையில் அமைத்திருந்ததனால் வின்டோஸ் வெகுவிரைவில் உலகம் முழுவதும் பரவியது. ஆனால் தரமான ஸ்டீவின் படைப்புகள் அந்த அளவில் மக்களால் ஏற்கப்படவில்லை. அத்துடன் தான் ரத்தமும் வேர்வையும் சிந்தி உருவாக்கி தனது கனவு நிறுவனத்திலிருந்து ஸ்டீவை விரைவில் வெளியேற்றினார் அந்த முன்னாள் சக்கரைத் தண்ணி வியாபாரி! ஒரு தந்திரமான வியாபாரிக்குமுன் ஒரு உண்மையான படைப்பாளி, விஞ்ஞானி தாற்காலிகமாக தோற்றுப்போனார். இதை யெல்லாம் பற்றி பின்னர் சொல்லும்போது “சிலநேரம் வாழ்க்கை நம்மை பின்னிருந்து ஒரு பெரிய செங்கல்லால் அடித்து கீழே விழவைக்கும். நாம் அதனால் இறந்து போகப் போவதில்லை. நம்பிக்கை இழக்கக்கூடாது. பசியுடன் இருங்கள். முட்டாள்களாக இருங்கள்”என்று கூறினார் ஸ்டீவ்!
 
அதன்பின் தன்னால் ஆப்பிளை போன்ற பல நிறுவனங்களையும் வெற்றிகளையும் உருவாக்க முடியும் என்று மறுபடியும் நிரூபித்தார் ஸ்டீவ். அமெரிக்காவில் புகழ்பெற்ற நெக்ஸ்ட் எனும் தனிநபர் கணினி மற்றும் மென்பொருள் நிறுவனத்தை வெற்றிகரமாக உருவாக்கினார். பிரபல திரைப்பட இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸின் லூக்காஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி அதை பிக்சார் எனும் கணினி வரைகலைத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாக மாற்றினார். அங்கு அவர் எடுத்த டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ போன்ற திரைப்படங்கள் இன்றுவரை உலகின் மிக அதிகமான வருவாயை குவித்த கணினி வரைகலைத் திரைப்படங்கள். அந்நிறுவனத்தை பின்னர் பலகோடி டாளர்களுக்கு வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு விற்றதன் வழியாக உலகத்தின் மிகப்பெரிய கேளிக்கை நிறுவனங்களில் ஒன்றான வால்ட் டிஸ்னியின் பாதி உரிமையாளராக மாறினார் ஸ்டீவ் ஜோப்ஸ். 

ஆப்பிளிலிருந்து வெளியேற்றப்பட்டு பத்தாண்டுகளுக்கு பின்னர் அந்நிறு வனத்தின் அப்போதைய தலைவர்கள் ஸ்டீவிடம் மன்றாடி மறுபடியும் அவரை ஆப்பிளுக்கு கொண்டுவந்தனர்! ஸ்டீவ் கேட்ட விலைக்கு அவரது நிறுவனமான நெக்ஸ்ட் கணினிகளை ஆப்பிள் வாங்கிதன் வழியாகத்தான் அது நடந்தது. ஆப்பிளின் துணை மேலாளராக உள்ளே வந்த ஸ்டீவ் சிலமாதங்களில் மறுபடியும் அதன் முக்கிய உரிமையாளராக மாறினார். ’ஐ’ எனும் பெயருடன் ஆரம்பிக்கும் படைப்புகளின் யுகம் அங்கிருந்து ஆரம்பித்தது. ஐ மாக், ஐ போட், ஐ ஃபோன், ஐ பாட் போன்றவற்றின் வழியாக அவர் ஒரு ஐ காட் (I God) ஆகவே மாறினார். உலகப்பொருளாதார நெருக்கடியின்போது கூட அவரது நிறுவனம் பெரும் லாபத்தை ஈட்டியது! பின்னர் மைக்ரோஸாஃப்டின் பில் கேட்ஸையும்கூட விற்பனையில் வெகுதூரம் அவர் தாண்டிச்சென்றார். அமேரிகாவின் பெரும் செல்வந் தர்களில் ஒருவராக அவர் மாறினார்.

ஸ்டீவ் ஜோப்ஸ் ஒரு தீவிர இசை ரசிகர். அமெரிக்க பாப் இசையின் பொற்காலத்தில் பிறந்து வளர்ந்தவர். பாப், ராக் அண்ட் ரோல், கண்ட்ரி போன்ற இசை வடிவங்களில் அதீத நாட்டம் இருந்தவர். இசை கேட்பதன் மீதிருந்த தீவிர ஆர்வம்தான் ஐ போட், ஐ டச் போன்ற இசை கேட்கும் கைக்கணினிகளை உருவாக்க அவருக்கு தூண்டுதலாக அமைந்தது. உண்மையில் ஐ போட் தான் ஆப்பிளின் தலையெழுத்தையே மாற்றி அதை உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மின்னணு கேளிக்கை கருவிகள் மற்றும் கணினி தயாரிப்பு நிறுவனமாக ஸ்தாபித்தது.

பீட்டில்ஸ் இசைக்குழு அவரது ஆதர்சமாகயிருந்தது. அதன் இசை மட்டுமல்லாமல் அதன் பெரும் வெற்றிபெற்ற உலகச்சந்தை அமைப்பும் ஸ்டீவுக்கு பெரும் உத்வேகமளித்திருந்தது. அவரது ஆதர்ச பாடலா சிரியரும் இசையமைப்பாளரும் பாடகரும் பாப் டிலன் தான். பாப் டிலனின் காதலியும் சகப்பாடகியுமாக பலகாலம் இருந்தார் என்கிற ஒரே காரணத் தினால் தன்னைவிட பதினைந்து வயது அதிகமான ஜோவான் பைஸ் (Joan Baez) என்கிற அமெரிக்க நாட்டுப்புறப் பாடகியை காதலித்தார் ஸ்டீவ் ஜோப்ஸ்! தன்னைவிட பத்து வயது அதிகமான உலகப்புகழ்பெற்ற திரைநடி கையும் பாடகியுமான டயானே கீட்டனை (Diane Keaton) அவர் காதலித்ததும் இசைசார்ந்த காரணங்களால்தான். 

ஸ்டீவுக்கு 23 வயது இருந்தபோது க்ரிஸ் ஆன் என்கிற பெண்ணிடம் ஏற்பட்ட காதலில் அவருக்கு லிஸா என்கிற பெண்குழந்தை பிறந்தது. க்ரிஸ் ஆனை அவர் திருமணம் செய்யவில்லை என்றாலும் தன் மகள் லிஸாவை தன்னுடன் வைத்து வளர்த்து ஆளாக்கினார் ஸ்டீவ். தனது மூன்றாவது படைப்பான கணினிக்கு அவர் வைத்ததே தன் மகளின் பெயரான ‘லிஸாஎன்றுதான். இன்றைக்கு லிஸா ஒரு வெற்றிபெற்ற அமெரிக்க பத்திரிகை எழுத்தாளர்.

லாரென் பவல் என்கிற பெண்ணைத்தான் ஸ்டீவ் திருமணம் செய்தார். அத்திருமணத்தில் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஏறத்தாழ 45 வயது இருக்கும்போது ஸ்டீவுக்கு மோசமான மண்ணீரல் புற்றுநோய் பிடிபட்டது. அதிலிருந்து தப்பிக்க ஆயுர்வேதம் முதல் ஈரல் மாற்றும் அறுவை சிகிட்சை வரை எல்லாமே முயன்று பார்த்தார். அவரது வாழ்க்கையின் நாட்களைக் கொஞ்சம் அதிகரிக்க மட்டும்தான் அம்முயர்ச்சிகளால் முடிந்தது. இளமையில் ஒரு திரையுலக உச்சநட்சத்தி ரத்தைவிட அழகானவராகயிருந்த ஸ்டீவ், அந்த நோயின் காரணமாக முற்றிலுமாக இளைத்துப்போய் தனது ஐம்பது வயதிலேயே ஒரு முதிய வரின் தோற்றத்துடன் வாழநேர்ந்தது. 

எந்தகணமும் வந்துசேரப் போகும் தனது மரணத்தை கண்முன் பார்த்துக்கொண்டே பல ஆண்டுகள் வாழ்ந்தார் ஸ்டீவ். ஆனால் அவர் மரணத்தை பயப்படவில்லை. அவர் சொன்னார் “நான் கூடிய சீக்கிரம் இறந்துபோய்விடுவேன் என்று தெரிவதுதான் எனது பெரிய பலம். ஏனெனில் எல்லா எதிர்பார்ப்புகளும், எல்லா தற்பெருமைகளும், தோல்வியைப் பற்றியான எல்லா பதற்றங்களும் மரணத்தின் முன் இல்லாமலாகி விடுகிறது. இனி இழப்பதற்கு எதுவுமேயில்லை. என் இதயத்தை மட்டுமே இனி நான் பின்தொடரலாம்”.

யாருக்குமே தேவையில்லாத ஒருவராகப் பிறந்து, ஒன்றுமின் மையிலிருந்து ஒரு பேருலகத்தையே உருவாக்கி, உலகுக்கு மிகத் தேவையான மிகக்குறைந்த மனிதர்களில் ஒருவராக வாழ்ந்த ஸ்டீவ் ஜோப்ஸ் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி இறந்து போனார். எதிர்காலம் என்று மட்டுமே எப்போதும் முழங்கிக் கொண்டிருந்த ஸ்டீவ் கடைசியில் கடந்தகாலமாகிவிட்டார். ஆனால் அவர் வழியாக உலகின் பலகோடி மக்கள் வரப்போகும் தங்களது எதிர்காலத்தைப்பற்றி நினைத்து புன்ன கைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
நன்றி-http://musicshaji.blogspot.com/2011/11/blog-post_2745.html

 



No comments:

Post a Comment