மனுஷ்ய புத்திரனின் இந்தப் புத்தகத்தை பல தடவைகள் படித்தாயிற்று.அவரது கவிதைகள் படிக்கப் படிக்க ஒரு சுவாரஷ்யத்தைத் தந்து கொண்டே இருக்கின்ற அதேவேளை நம்மை அந்தரத்திற்கு அலைத்துச் செல்கின்றன. உன் னோடிருத்தல், தன்னோடிருத்தல்,பிறரோடு இருத்தல் என மூன்று வகைகளில் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அன்பே இக் கவிதை களின் ஆதார நீரோட்டமாக இருக்கின்றது.
'ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட் டமாக அமைந்திருக்கின்றது.
அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடை யறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கின்றது... எப்போதும் மறுக்கப்படுகிற கரைந்துகொண்டிருக்கிற உண்மையில் இருக்கிறதா இல் லையா? ஏன்று கூடத்தெரியாத காதல்களைப் பற்றி எழுதுகிறவனாக இருக்கிறேன் என்பதால் இத்தொகுப்பு 'நீராலானது' என்று பெயரிடப்படுகிறது. அதன்பின் நீர்மையில் நிரைந்திருக்கும் ஈரமும் பரிவும் நிச்சயமின்மையும் நிராகரிப்பும்தான் என்னைப் பற்றியும் இந்த வாழ்க்கையைப் பற்றியும் நான் திரும்பத் திரும்ப அறியக் கூடியதாக இருக்கிறது.' என முன்னுரையில் மனுஷ்ய புத்திரன் சொல்வது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
நீராலானது என்ற சொல் முதலில் எனக்கு அரூபமாக இருந்தது.எனவே முதலில் அந்தக் கவிதையைத் தேடினேன்.
வெறுப்பைப் போல திடமாக
வஞ்சகம் போல சந்தேகிக்க முடியாத
தீமையைப் போல தொடர்ந்து வருவதாக
கசப்பைப் போல நெஞ்சோடு அடைப்பதாக
குற்றத்தின் கறைகளைப்போல கழுவித் தீராததாக
ஒரு பொய்யைப் போல வாக்குறுதி அளிப்பதாக
இல்லை
உனதிந்தப்
பிரியங்கள்
நிசப்தமற்ற சலனங்களை இந்த வரிகள் உண்டுபண்னி விடுகின்றன.அதன் கடைசி வரிகள் கனத்த பாரத்தை தருகின்றன.
......................
ஒரு மழையைப் போல
சேமிக்க முடியாத
சம்பவங்களின் நாளை
நினைத்தபடி...
இன்னுமொரு கவிதை இப்படி முடிகின்றது.எல்லா மழையையும் சேமிக்க முடியாதுதான்.நினைவுகளும் அப்படித்தான்.
விடை கொடுக்கும் போது...எனும் கவிதை அற்புதமாகத் தோன்றுகின்றது.
விடை கொடுக்கும் போது
உன்முகத்தில் நிழல்கள் விழுவதில்லை
இன்னும் நம்பிக்கைக்கு
இடமுண்டாவென திரும்பிப்
பார்க்கவே செய்கிறேன்
விடைகொடுக்கும் போது
உன் கண்கள் எதையும்
வெளிப்படுத்துவதில்லை
இந்த உலகை விட்டுச் செல்லும் ஒருவன்
என்னை மட்டும் ஏன் அனுப்புகிறீர்கள்?
என்று கேட்பது போல
உன்னைக் கேட்க விரும்பினேன்
விடைகொடுக்கும் போது
உன் அசையும் கைகள்
உறுதியிழப்பதேயில்லை.
இந்த முறையும்
சரியாகச் சொல்லிக்கொள்ளவில்லையோவென
வழியெல்லாம் நினைத்துக்கொண்டு போகிறேன்.
கேட்காததும் சொல்லாததும் என்ற கவிதையைப் பாருங்கள்.நம் அன்றாடத்தில் எல்லோர் மனதிலும் இருக்கும் வரிகளாகவே இவை எனக்குத் தோன்றுகின்றன.
கேட்பாய்
கேட்பாய் என
சொல்லாதிருந்தவை
சொல்வாய்
சொல்வாய் என
கேட்காதிருந்தவை
வேறொன்றுமில்லை
இரகசியமென்றும்
இடைவெளியென்றும்.
விடுவிப்பிற்குப் பின்..என்கிற கவிதை பிரியத்தின்ஏற்காமையைச்சொல்கின்றது.
இத்தோடு
என்னைப் பற்றிய
குற்ற உணர்வுகள் அனைத்திலிருந்தும்
உன்னை விடுவித்துவிட்டேன்
ஆனால்
அது ஏன்
ஒரு வெறுப்பைப் போல
ஒரு பிரிவைப் போல
ஒரு புறக்கணிப்பைப் போல
காட்சியளிக்கிறது?
நிலை எனும் கவிதை காத்திருத்தலின் அனுபவத்தைத் தருகின்றது.
பேரூந்து
நிலையத்தில் இதோ
வருகிறேன் என்று
சொல்லிப்போன
அம்மாவுக்காக
எவ்வளவோ நேரமாய்
காத்திருக்கிறது
ஒரு குழந்தை
பார்க்கப் பார்க்க
தீராத முகங்iகைப்
பார்த்தபடி...
மீறல் ஒரு மென்மை அனுபவமாகத் தோணுகிறது.அது ஒரு மீறாத விதியைச் சொல்கிறது.
எல்லாப் பாதுகாப்பு
ஏற்பாடுகளிலும்
ஒரு கதவு
மூடப்படாமல் போகிறது
விளையாட்டின் விதிகளை
நாங்கள் யாரும்
மீறாவிட்டாலும்
மைதானத்தின் கோடுகள்
கரைகின்றன
இச்சிறு மழையில்.
கைகளை விடுவித்துக் கொள்வது எப்படி? என்ற கவிதை உறவுகளில் கண்களுக்குப் புலப்படாத பக்கங்களைச் சொல்கிறது.அவை பரிச்சயமான சொற்களாக இருந்தாலும் கவிதை தரும் பிரதிபளிப்பு நினைவுகளினூடு எப்போதும் பயணிக்கக் கூடியது
.
நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பது
உங்களுக்குத் தெரியும்
நான் ஒரு நல்ல மனிதன் என்பது
எனக்குத் தெரியம்
நீங்கள் உங்களைப் பற்றி
புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்
நான் என்னைப் பற்றி
புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றேன்
உங்கள் கவிதைகள் உங்களை
ஏமாற்றுகின்றன
என்னுடைய கவிதைகள் என்னை
ஏமாற்றுகின்றன
நீங்கள் வெறுக்கிற பெண்னைத்தான்
நீங்களும் காதலிக்கிறீர்கள்
நான் வெறுக்கிற பெண்னைத்தான்
நானும் காதலிக்கிறேன்
உங்களை அவமதித்தவர்களை
நீங்கள் பலி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
என்னை அவமதித்தவர்களை
நான் பலி வாங்கிக் கொண்டிருக்கிறேன்
உங்களுடைய தந்நிரங்களால்
நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்கள்
என்னுடைய தந்நிரங்களால்
நான் முன்னேறிச் செல்கிறேன்
உங்களுடைய சீடர்களால் நீங்கள்
காட்டிக் கொடுக்கப்படுகிறீர்கள்
என்னுடைய சீடர்களால் நான்
காட்டிக் கொடுக்கப்படுகிறேன்
உங்களுடைய தெய்வங்கள்
உங்களுக்குத் துணையிருக்கின்றன
என்னுடைய தெய்வங்கள்
எனக்குத் துணையிருக்கின்றன
உங்களுக்கு நீங்கள் மன்னிப்பு அளிக்கிறீர்கள்
எனக்கு நான் மன்னிப்பளித்துக் கொள்கிறேன்
என்னை எப்படிக் கையாள்வதென்று
உங்களுக்குத் தெரியும்
உங்களை எப்படிக் கையாள்வதென்று
எனக்குத் தெரியும்
நல்லது நண்பரே!
நமக்குள் யார் மனமும்
சந்தேகமில்லாமல் நம் கைகளை
விடுவித்துக் கொள்வது எப்படி?