Tuesday, November 11, 2025

நான் எழுத்தணியைக் கலைக்கூடங்களிலிருந்து தெருக்களுக்கு கொண்டு செல்கிறேன் - கரீம் ஜப்பாரி

 

கரீம் ஜப்பாரி  உலகப் புகழ்பெற்ற எழுத்தணி மற்றும் ஒளிக் கலைஞர். ஒளியின் மீதும் எழுத்துக்களின் மீதும் அவருக்குள்ள ஆர்வம், பண்டைய கூறுகளை நவீன வடிவமைப்பில் இணைக்கும் அவரது ஆர்வத்தால் உத்வேகம் கொள்கிறது.

எழுத்தணி வழியாக கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் இணைக்கும் பாலங்களை அமைப்பதே அவரது கலையின் முக்கிய நோக்கம். அவர் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், பாரம்பரிய வடிவங்களையும் பாணிகளையும் அவர் தக்கவைத்துக் கொள்கிறார்.

அவரது பரந்த திறமைகளுக்காக, கரீம் நேரடி கலை நிகழ்ச்சிகள், கலை நிறுவல்கள் (art installations), பெரிய அளவிலான சுவரோவியங்கள், செயலமர்வுகள்(workshops), குழுக் கலந்துரையாடல் (panel discussions), போன்றவற்றுக்காக அறியப்படுவதோடு நிவ்யோர்க் பல்கலைக்கழகம் (NYU) மற்றும் யேல் (Yale) போன்ற முன்னணி பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் வழங்கியுள்ளார்.

துபாயில் நடைபெற்ற முதல் இஸ்லாமிய படைப்பாற்றல் விருதில் அவர் இரண்டாம் பரிசை பெற்றார், மேலும் சமீபத்தில் உலகின் முன்னணி 30 பொது கலைஞர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனித்துவமான கலை மற்றும் எழுத்தணியின் எதிர்காலம் குறித்து கரீம் ஜப்பாரியுடன் பைதுல்பன் இணையம் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம்.

 

தமிழில் – இன்ஸாப் ஸலாஹுதீன்

 

உங்கள் சிறுபருவம் மற்றும் கலைஞராக உருவாகிய உங்கள் பயணம் குறித்துச் சொல்ல முடியுமா?

என் குழந்தைப் பருவத்தில், குடும்பத்துடன் தெருவில் நடந்து செல்லும் போது அயலவர்கள் எங்களைப் பார்த்தவுடன் தங்களைத் திருப்பிக்கொள்ளும் அந்த வேதனையை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். எங்களுடன் யாரும் பொது இடங்களில் பேசத் தயங்கினார்கள். என் தந்தை ஒரு அரசியல் கைதி, செயற்பாட்டாளர், தூனிசியாவை ஆட்சி செய்த அடக்குமுறை அரசின் பொது எதிரி. எங்கள் குடும்பம் கடுமையான காவல் கண்காணிப்பில் இருந்தது.

பத்து வயதான நான், தனிமையிலும் தந்தையை நினைத்தும் நேரத்தைச் செலவழிக்க வேறு வழிகளைத் தேடினேன். அப்போது நான் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மத நூல்களின் புதையலைக் கண்டேன். அவை எங்கள் முன்னோர்களில் ஒருவரான புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரிடம் இருந்து வந்தவை. அந்தப் புத்தகங்கள் மக்ரிபி எழுத்து (Maghrebi script) எனப்படும் வட ஆப்பிரிக்காவின் பழைய அழகிய எழுத்து வடிவில் எழுதப்பட்டிருந்தன.

அது ஒரு கலை வடிவம்; அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாவிட்டாலும் அது ஆன்மாவுடன் பேசுகிறது,என்று நான் உணர்ந்தேன். அந்த எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையின் பல மணிநேரங்களை கையால் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதுவதில் செலவிட்டதைப் பார்த்தேன். அவர்களின் நீண்ட இரவுகளையும், என் தந்தையின் புன்னகையையும் கண்டேன்.

விரைவில் நான் அதில் லயித்துவிட்டேன். அந்த எழுத்துக்களை மீண்டும் மீண்டும் நகலெடுத்து, அதன் வளைவுகளும் கோடுகளும் என் கைகளில் பழகும் வரை பயிற்சி செய்தேன். நான் என் சொந்த ஊரான காசரைனை விட்டு தங்கிப் பயிலும் பாடசாலைக்குச் சென்றபோதுதான் அந்த வெறி அதிகரித்தது, மேலும் எனது புதிய திறமை நண்பர்களைக் கவர்ந்தது. இதற்கு முன்பு எனக்குக் கிடைக்காத ஒன்று அது.

இப்போது எனக்கு 44 வயதாகிறது. கனடா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்டு முழுநேர கலைஞராக பணியாற்றுகிறேன். பாரம்பரிய அரபு எழுத்தணியை (Arabic Calligraphy) சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல, சுவரோவியம் (murals), கிராஃபிட்டி (graffiti), மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறேன்.

தியானம் போன்ற மனக்குவிப்பு மற்றும் நீண்டகாலப் பயிற்சியை முக்கியமாகக் கருதும் இந்தக் கைவினை, வேகம் மற்றும் தாற்காலிக திறனை மட்டுமே மதிக்கும் இக்காலத்தில் மறைந்து விடுமோ என்ற கவலை எனக்குண்டு.

எனது பணி, பாரம்பரிய எழுத்தணிக் கலையையும்  நவீன மெய்நிகர் உண்மை உலகையும் இணைக்கும் பாலமாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

 

உங்கள் எழுத்தணி, பாரம்பரிய அரபு எழுத்தணி  பாணியிலிருந்து வேறுபட்டது என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். அரபு எழுத்தணி பற்றி நன்கு தெரியாதவர்களுக்கு, அதன் முக்கிய குறியீடுகள் குறித்தும், உங்கள் வேலையில் நீங்கள் பயன்படுத்தும் பாணியிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்றும் சொல்லுங்கள்?

பாரம்பரிய எழுத்தணி மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்தது. அதில் பல விதிமுறைகள் உள்ளன; அதனால் இளம் தலைமுறையினருக்கு அது அடைய முடியாத ஒன்றாகவே தெரிகிறது.

நீங்கள் ஒரு அழகான, அற்புதமான, நன்கு அறியப்பட்ட, பாரம்பரிய எழுத்தணிக்  கலைஞராக இருக்கலாம், ஆனால் உங்கள் கலை இளைய தலைமுறையினரிடம் பேசுவதில்லை,” என்கிறேன்.
புதிய முயற்சிகளையும் தொழில்நுட்பத்தையும் ஏற்க மறுப்பது, இளைஞர்களை விலக்கி வைப்பதோடு, முழு பாரம்பரியத்தையும் ஆபத்துக்கு உட்படுத்துகிறது. “உங்கள் கலை உங்களுடனேயே இறந்து கொண்டிருக்கிறது,” என்று நான் அவர்களிடம் சொன்னேன். “உங்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது, ஆனால் நான் எழுத்தணியைக் கலைக்கூடங்களிலிருந்து தெருக்களுக்கு கொண்டு செல்கிறேன்.”

 

தெருக் கலாசாரத்தின் கலைச்சுதந்திரம் மற்றும் தெருக் கலையை உருவாக்குதல் உங்கள் கலைப்பணியை எவ்வாறு பாதித்தது?  

அனைவரையும் சென்றடையவும், என் கலையை ஜனநாயகப்படுத்தவும் தெருக்கள் எனக்கு வாய்ப்பளித்தன. இதனால் அழகைக் காணும் கண்களுக்கும், செய்தியை உள்வாங்கும் இதயத்திற்கும் அது கிடைத்துவிடும் வாய்ப்பைப் பெறுகிறது.

 

இவ்வளவு அடையாளம் காணக்கூடிய தனித்துவமான ஒருகலைப் பாணியை நீங்கள் எவ்வாறு உருவாக்கினீர்கள்?

 

பல வருட கடின உழைப்பும், போட்டி நிறைந்த உலகில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற நிலையான தேடலும் அதற்குக் காரணம்தான். சிறுவயதில் நான் தொடர்ந்து நகலெடுத்து வந்த பண்டைய புத்தகங்களிலிருந்து எனக்கு உத்வேகம் கிடைத்தது, எப்போதும் முன்னே நிற்க வேண்டும் என்ற இடைவிடாத உந்துதலும் இருந்தது. என் கையெழுத்தைப் பார்க்காமலேயே மக்கள் என் படைப்புகளை அடையாளம் காண வேண்டும் என்று நான் விரும்பினேன். உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பேசும் ஒரு ஸ்டைலை நான் விரும்பினேன்.

 

உங்கள் படைப்பை உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறீர்கள்?

என் எழுத்துக்கள் ஒரு மறைக்கப்பட்ட அழகை வெளிப்படுத்துகின்றன, ஏனென்றால் நாம் அனைவரும் எழுத்துக்களைப் பார்க்கவும் எழுதப்பட்டவற்றை  படிக்கவும் நாம் ஆர்வமாக உள்ளோம். நான் பல ஆண்டுகளாக மறுவடிவமைத்த மிகவும் பழைய எழுத்தணிப் பாணியைப் பயன்படுத்துவதால், மக்கள் அதை வரலாற்றின் ஒரு பகுதியாகவோ அல்லது பழைய கையெழுத்துப் பிரதியாகவோ பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

கலைக்கு சமூக மாற்றத்தையும் உரையாடலையும் ஏற்படுத்த முடியுமா?

ஆரம்பம் முதல்  எனது கலை உரையாடலை உருவாக்குவதற்கும் பாலங்களைக் கட்டுவதற்கும் என்று நான் சொன்னேன், 2010 ஆம் ஆண்டு நான் செய்த எனது முதல் சுவரோவியம் "எழுத்தணி நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலம்" என்பதே.

உங்கள் படைப்பை ரசிக்க அரபு மொழி தெரிந்திருக்க வேண்டுமா?

இல்லை. எனது படைப்புகள் உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்றன. உண்மையில், அறபு மொழி அறியாதவர்கள் என் சுவரோவியங்களின் அழகை ஆழமாக உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

 

உங்கள் படைப்புகள் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும், எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

நீங்கள் உங்கள் வரலாற்றை அறியாவிட்டால், யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள்,” என்று நான் உறுதியாக நம்புகிறேன்.நீ யார், எங்கிருந்து வருகிறாய்,என்பது உனக்குத் தெரியாவிட்டால், அதை எப்படி ஒருவனுக்கு விளக்க முடியும்?"

 நம் முன்னோர்கள் ஒருவருக்கொருவர் பரப்பிய அனைத்து அறிவின் சேகரம் நாம்தான் என்பதை எழுத்தணி அவனுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. எழுத்தணிக் கலை இப்படித்தான் கடத்தப்பட்டுள்ளது - குருவிடமிருந்து மாணவனுக்கு, பின்னர்  மாணவர் அடுத்த குருவாக மாறுவார் - அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய வரலாற்றையும் ஞானத்தையும் பதிவு செய்யும் ஒன்றாகவே எழுத்தணி இருந்துள்ளது.

 


உங்கள் புத்தாக்கச் செயல்முறையை விவரிக்க முடியுமா, கருத்தாக்கத்திலிருந்து படைப்பு வரை உங்கள் மனதின் வரைபடத்தைச் சொல்ல முடியுமா?

 வரலாற்றுப் புத்தகங்களிலும், மறைந்திருக்கும் அறிவிலும் எனக்கு அகத்தூண்டுதல் கிடைக்கிறது. மக்களின் குருட்டுத்தனமான போதனைகளுக்கும் மூளைச் சலவைக்கும் அப்பால்தான் நான் எப்போதும் பார்க்கிறேன். எனது படைப்புகள் மூலம் ஒரு ஆழமான செய்தியை நான் கடத்துகிறேன், அதைப் புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர்கள் அதைப் புரிந்து கொள்ள முடியும். எனவே அது எப்போதும் ஒரு யோசனையுடன் தொடங்குகிறது, அதை ஒரு கலைப்படைப்பில் பிரதிபலிக்கும் திறனைப் பெறும் வரை அது என் மனதில் வாழ்கிறது.

உங்களுக்குப் பிடித்த கலைஞர்கள் யார்?

Ai Weiwei, Ahmad Angawi, Rustam Qbic, Add Fuel

 உங்களின் மிகவும் சவாலான வேலைதிட்டம் எது?

2013 ஆம் ஆண்டு துனிசியாவின் மிக நீளமான சுவரோவியத்தை என் தந்தை  பல வருடங்கள் கழித்த சிறைச்சாலையின் சுவர்களில் வரைந்தேன். 240 மீட்டர் சுவரோவியத்தை முடிக்க எனக்கும் என் முழு இகுழுவினருக்கும் 45 நாட்கள் ஆனது.

உங்கள் படைப்பாற்றல் மிக்க பார்வையும் கலையும் அரபு அச்சுக்கலையை எவ்வாறு பரவலாகப் பாதித்துள்ளன?

 அரபு உலகில் "calligraffiti" என்ற ஒரு முழு கலை இயக்கத்தின் தொடக்கத்தை நான் கண்டேன், மேலும் ஒரு புதிய தலைமுறை படைப்பாற்றல் நிறைந்ததாகவும், எல்லா இடங்களிலும் உத்வேகத்தைத் தேடுவதாகவும் தோன்றியது. நான் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான செயலமர்வுகளை நடாத்தியிருக்கிறேன்., எனது படைப்புகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக Online இல் கிடைக்கின்றன. நான் எல்லா செய்திகளிலும் இருக்கிறேன், எனது ஒளி எழுத்தணிக்கலை பற்றிய கலாநிதி ஆய்வுகளும் எழுதப்பட்டுள்ளன. நான் முதலில் என்னை மகிழ்விக்க கலை செய்கிறேன், நான் மற்றவர்களை ஊக்குவிக்கிறேன் என்றால் அது இறைவனின் ஆசீர்வாதம், அதை நான் தினமும் அனுபவிக்கிறேன்.

 

அரபு வசந்த காலத்தில், துனிசியாவில் ஒரு புதிய இயக்கத்தின் பிறப்பைக் கண்டேன், புரட்சி "calligraffiti" இல் ஒரு புதிய ஆர்வத்தைத் தூண்டியது, இது பாரம்பரிய எழுத்தணியை மிகவும் நவீனமான, நேர்த்தியான தெரு "கிராஃபிட்டி" பாணியுடன் இணைக்கிறது. இவர்கள் தங்கள் மொழியைப் பற்றி பெருமைப்படுபவர்கள். அவர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, அதன் அர்த்தத்தை அவர்கள் அறிவார்கள், மேலும் அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்.

 

கலைநிலையத்தில் ஒரு வழக்கமான நாள் உங்களுக்கு எப்படி இருக்கும், உங்கள் கலைப் பயிற்சி எவ்வாறு வளர்ந்துள்ளது அல்லது மாறியுள்ளது?

 

இது இது வித்தியாசமான துறைகளோடு செய்யும் தொடர்ச்சியான பரிசோதனையாகும், ஏனென்றால் நிறுவல்களில் (installation art) வேலை செய்வது எனக்கு சமீப காலமாக மிகவும் பிடிக்கும், எனவே எனக்குப் பிடித்ததை அடைய நிறைய சோதனை மற்றும் பிழை தேவைப்படுகிறது.புதிய ஒளி கலை பற்றிய கருத்துருவாக்கங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிகழ்த்துகலைகள் என பலவற்றில் நான் பணியாற்றுகிறேன்.


உங்களுடைய எழுத்தணிப் படைப்புகள் ஏதேனும் இஸ்லாமிய கலை மரபால் குறிப்பாக ஈர்க்கப்பட்டதா?

எனது முழுப் பணியும் இஸ்லாமியக் கலை மரபிலிருந்தே உருவானதுதானே.

 

அரபு எழுத்தணி மற்றும் இஸ்லாமிய கலையின் எதிர்காலம் குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன, அதற்கு மைய நீரோட்டத்தில் இடம் உண்டு என்று நினைக்கிறீர்களா?

எனது படைப்புகள் பாரம்பரியவாதிகள் புதிதாக ஒன்றை முயற்சிக்கவும், நவீனத்துவவாதிகள் பாரம்பரியத்தின் மதிப்பை நினைவில் கொள்ளவும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன், எழுத்து என்பது தப்பிக்கும் ஒரு வடிவம், நினைவகத்தில் ஒரு சாகசம். மாற்றம் அழகானது, ஆனால் உங்கள் வேர்களுடன் உள்ள இணைப்பை இழந்தால், நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.

 


No comments:

Post a Comment