Tuesday, March 7, 2023

Bulletproof Children- நம் சமகாலத்தில் குறுக்கிடும் இருண்ட தேவதைக் கதை



காலத்துக்கு காலம் மாறுபடுகின்ற மனித அனுபவங்களை கலைப்படைப்புகளில் கொண்டு வருகின்ற போது கலைப் படைப்பின் மொழியிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றது. ஒரு கதையை எப்போதும் ஒரே முறையில் சொல்வதைவிட வேறுபட்ட முறைகளில் அந்த கதையை முன் வைக்கின்ற போது அது தருகின்ற அனுபவம் முற்றிலும் வித்தியாசப்படுகிறது. சிங்கள சினிமாத்துறை புதிய இயக்குநர்களின் முயற்சியால் பல பரிசோதனை முயற்சிகளைக் கடந்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில் “ஹோகானா பொகுன“ எனும் திரைப்படத்தின் மூலம் இந்திக பேர்டினான்டோ என்ற இயக்குனரை இலங்கை சினிமாத்துறை திரும்பிப் பார்த்தது. ஈரானியத் திரைப்படங்களில் மஜீத் மஜீதி படைக்கும் குழந்தைகளின் உலகை இந்திக அத்திரைப்படத்தின் மூலம் உருவாக்கி இருப்பார். அத்திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றதோடு அனைவரது மனங்களையும் ஈர்த்த ஒரு திரைப்படமாக காணப்பட்டது. சிறியவர்களும் பெரியவர்களுமாக அந்தத் திரைப்படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.

இந்திக பேர்டினான்டோ தன்னுடைய கலைப் படைப்புக்களில் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க விருப்பம் உடையவர். பெரும்வரவேற்பைப் பெற்ற அவரது “ஹோகானா பொகுன“ திரைப்படத்திற்கு முற்றிலும் மாற்றமான அவரது வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு dark fairy tale ஆக வெளிவந்திருக்கிறது Bulletproof Children .

“ஹோகானா பொகுன“திரைப்படம் தந்த பரவசத்தோடு அவரது இரண்டாவது படத்திற்காகக் காத்திருந்தேன். Bulletproof Children ஓர் இருண்ட தேவதைக் கதையாகக் காட்சி தருகிறது. முற்றிலும் வேறுபட்ட சினிமா அனுபவம் ஒன்றை இந்திக, இங்கே நிகழ்த்துகிறார். ஒரு பேருந்திற்குள் நிகழும் கதை. மொத்தப்படத்தில் 90 வீதமான காட்சிகள் பேருந்திற்குள்.மிகுந்த பொறுமையோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னால் இலங்கையிலே நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி நடைபெறுகின்ற இரவிலே கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் செல்கின்ற ஒரு பேருந்தில் தமது இறந்துபோன குழந்தையை வசதியின்மை காரணமாக ஒரு அட்டைப் பெட்டியில் எடுத்துச் செல்லும் பெற்றோர்களின் கதையைச் சுற்றியே படம் சுழல்கிறது.

அந்தப் பேருந்தில் அந்தப் பெற்றோறோருடன் சேர்ந்து தம் மாத சம்பளத்தைக் கொண்டாடித் தீர்க்கும் இரண்டு வயோதிப அரச உத்தியோகத்தர்கள், நோய்மையின் அவதியால் அல்லல்படும் ஒரு பாட்டியோடு காட்டுயானைத் தாக்குதலில் உயிருக்குப் போராடும் தாத்தாவைப் பார்க்கப் போகும் மகன், ஒரு மாய வித்தைக்காரன், கிரிகெட் விளையாட்டை நேரடியாக் கேட்டுக் கொண்டு பயணிக்கும் ஒரு கிரிகெட் பித்தன்,இரண்டு பௌத்த துறவிகள், கொழும்பில்  போட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊர் திரும்பம் மாணவர்கள், தன்னுடைய காதலனோடு ஊரை விட்டுச் செல்லும் ஓர் இளம் ஜோடி,ஒரு தமிழ்க் குடும்பம் என அந்த பேருந்து ஒட்டுமொத்த இலங்கையின் குறுக்கு வெட்டு தோற்றமாக காட்சி தருகின்றது.

இறந்த குழந்தையை பேருந்தில் எடுத்துச் செல்ல முடியாது என்று சாரதி வாதிட பாதையில் இருக்கும் காவல் தடுப்புகளைக் கடந்து அந்த வாகணம் எப்படிப் பயணிக்கிறது?அவர்களைக் காப்பாற்ற வாகணத்தில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? இறுதியில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

இலங்கை போன்ற மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகள் உள்ள ஒரு நாட்டிலே நகர்ந்து கொண்டிருக்கின்ற  ஒரு பேருந்திலே நடக்கும் கதையைக் காட்சிப்படுத்துவது சிரமமானதே.இருந்தும் இயக்குநர் எல்லாத் தடைகளையும் கடந்து தனது சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு நிகழ்த்துகிறார்.

அந்தப் பேருந்து வாழ்க்கையின் குறியீடாக் காட்சி தருகிறது. வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை வகையான மனிதர்களை,நிகழ்வுகளை நாம் எதிர்கொள்கிறோம்.ஒரு பேருந்துப் பயணம் என்பது மத்தியதர வர்க்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகக் காட்சி தருகிறது.ஒவ்வொரு மனிதரின் துயரக் கதைகளை,சந்தோசங்களை,இருண்ட வெளிகளைச் சுமந்து கொண்டு அன்றாடம் எத்தனையோ வாகணங்கள் பயணிக்கின்றன.இந்தக் கதையிலும் ஒட்டுமொத்த இலங்கையின் மாதிரிக் கதைகளை இயக்குநர் பிரதிபலிக்கச் செய்கிறார்.பேருந்தில் ஏறும் மாயவித்தைக்காரனின் மாயாஜாலம் கற்பனையையும் நிஜத்தையும் இணைக்கும் பாலமாகக் காணப்படுகிறது. எல்லா அனர்த்தங்களின் போதும் எதாவதொரு மாயாஜாலம் நிகழ்ந்துவிடாதா என நம் உள்மனம் தத்தளிக்கும் அல்லவா அதற்கான குறியீடே அந்த மாயாஜாலக்காரன்.




வரலாற்று நிகழ்வுகள்,கற்பனை,புனைவு என்வற்றின் கலவையைாக உண்மையை சினிமா வழியே எப்படிச் சொல்லலாம் என்பதற்கான பரிசோதனை முயற்சியே இத்திரைப்படம் என்கிறார் இந்திக.

இத்திரைப்படம் சோக -நகைச்சுவை,இசையியல்,த்ரில்லர் என பல ஜோனர்களை உள்ளடக்கி போர்,கிரிகெட்,வறுமை, மற்றும் எமது அரசியல் பொருளாதார நிலமைகளில் நாம் எப்படியெல்லாம் வாழ்ந்தோம்,வாழ்கிறோம் என்தற்கான சாட்சியாகத் திகழ்கிறது.

பியல் காரியாவசம் மற்றும் இந்திக பேர்டினான்டோ இணைந்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஒளித் தொகுப்பு, பின்னணி இசை என எல்லாப் பகுதிகளிலும் புதிய கலைஞர்களோடும் தேர்ந்த கலைஞர்களோடும் பணியாற்றி இத்தகைய சினிமா அனுபவத்தை வழங்கிய குழுவிற்கு வாழ்த்துக்கள்.

ஒரு கலைப் படைப்பு மகிழ்வளிக்கின்ற அதே நேரத்திலே சமூகத்தோடு நெருங்கிய ஊடாட்டத்தையும் நிகழ்த்த வேண்டும். Bulletproof Children நம் சமகாலத்தில் குறுக்கிடுகிறது.போரின் துயரங்களை,வறுமையின் அகோரத்தை,அதிகாரத்தின் குரலை என எல்லா நிலைகளிலும் எம்மைப் பாதுகாக்கும் கவசங்களை அது தேடுகிறது.தோட்டாக்களை ரோஜாக்களாக மாற்றும் மாயாஜாலத்தை நிகழ்த்துகிறது.

இன்ஸாப் ஸலாஹுதீன்

 

 

 

1 comment:

  1. Nice to read.. திரைப்படம் தரும் சுவாரஸ்யத்தை விட உங்களது எழுத்து விருவிருப்பாக உள்ளது சூப்பர்..

    ReplyDelete