Thursday, February 23, 2023

Gaadi(காடி) : ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல்


 

Gaadi (காடி) திரைப்படம் முடிந்ததும் வேறு உலகம் ஒன்றில் நான் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றியுள்ள எல்லா சப்தங்களுக்கும் நடுவே உறைந்த மனநிலையோடு நான் பயணித்துக் கொண்டுருந்தேன்.ஒரு நல்ல கலைப்படைப்பு நிச்சயம் நம்மை பாதிக்கச் செய்கிறது.

 

முற்றிலும் வேறுபட்ட கதைக்களம் ஒன்றை ப்ரசன்ன விதானகே இம் முறை தெரிவு செய்திருக்கிறார்.

 Gaadi 2019 ஆம் ஆண்டு வெளிவந்து பல சர்வதேச திரைப்பட விழாக்களில் காண்பிக்கப்பட்டு தற்போது இலங்கையின் திரையரங்குகளுக்கு வந்திருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்று இத் திரைப்படம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

 Gaadi என்பது வரலாற்றுப் புனைகதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும், இது 1814 ஆம் ஆண்டு இலங்கைத் தீவின் கரையோரப் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சி நிலவிய காலத்தை மையப்படுத்தியதாகும்.

 1814 ஆம் ஆண்டு சிறிவிக்ரம ராஜசிங்க மன்னனுக்கு எதிராக "ரதல" பிரபுக்கள் மேற்கொண்ட மலையகக் கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர், கிளர்ச்சித் தலைவர்களின் மனைவிகளை,சகோதரிகளை தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த "ரொடியர்"களுக்கு தாரைவார்க்க ராஜசிங்க மன்னன் கட்டளையிடுகிறான். இதனால் அவர்களில் சிலர் மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் போது, டிகிரி என்ற இளம் மனைவி ஆற்றில் பலியாக மறுக்கிறார்.எனவே உத்தரவுப்படி அவள் விஜய எனும் "ரொடியர்" குலத்தைச் சேர்ந்த இளைஞனை மணக்க உத்தரவிடப்படுகிறாள்.

 விஜய அவளை மணக்க விரும்பினாலும் அவர்களது சாதிக்கு அவளைத் திருப்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறான். அதுவரை அவனது சமூகத்தை விட்டும் விலகி வாழ வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.

 தத்தமது அடையாளங்களை விட்டுக்கொடுக்க மறுக்கும் இருவரும் காட்டில் அலைந்து திரிகின்றனர்.இறுதியில் விஜயவின் சமூகத்தில் அனைவரையும் பலிகொடுத்த நிலையில் டிகிரி தன் சுயத்தை தூக்கி எறிந்து விட்டு விஜயவுடன் இணைந்து கொள்கிறார்.

 ரொடியர் குலத்தைச் சேர்ந்த பெண்கள் தமது மார்பை மறைத்து ஆடை அணிய முடியாது என்பது சட்டம். அப்படி மறைத்தால் உயர்குலாத்தைச் சேர்ந்தவர்களால் பலவந்தமாக அது நீக்கப்படும். தன் கண்ணியத்தைக் காக்க டிகிரி மார்பை மறைத்து ஆடை அணிய முற்படுகிறாள். முழு ஊரும் பிரதியுபகாரமாக அடிக்கப்படுகிறார்கள்.

விளிம்பு நிலை மக்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறது என்பதை இந்தக் காட்சி நினைவுபடுத்துகிறது.இந்தியாவில் மார்பு வரி செலுத்தும் நடைமுறை இருந்ததும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.மேலும் ரொடியர்கள் பிச்சை எடுப்பதை முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர்.

 


படம் முழுக்க முழுக்க காட்டுப் பகுதியில் நடக்கிறது. காட்டின்,மலைகளின் அழகை கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரஜீவ்.

 ரதல எனும் உயர் குலாத்தைச் சேர்ந்த ஒரு பெண் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒரு ஆணுடன் காட்டில் அலைந்து கொண்டு இருவரும் தங்கள் விருப்பத்திற்கு எதிராக ஒன்றிணைந்து தங்களது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் சேர்ந்து வாழப் போராடுகிறார்கள்.தத்தமது அடையாளங்களோடு வாழ்க்கையின் மேடுபள்ளங்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்,அடையாளங்களின் காலடியில் எப்படி மண்டியிடுகிறார்கள் என்பதை திரைப்படம் வலிமையான மொழியில் பேசுகிறது.

 படத்தின் பெரும்பாலான பகுதி இருவரின் அலைதலை மையப்படுத்தி இருப்பது கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தவே செய்தது.அந்தச் சலிப்பு விஜய,டிகிரி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களுக்கும் ஏற்படுகிறது.ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்தலுக்கான போராட்டத்தில் அவர்கள் சலிப்பை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கான குறியீடே அது.

 இன,மத அடையாளங்களின் பெயரால் சிக்குண்ட இலங்கையின் சூழமைவில் இத்திரைப்படம் சொல்ல வரும் செய்தி முக்கியமானது.

 இன்றைய பின் நவீன உலகிலும் ஆண்-பெண்,சிறுபான்மை- பெரும்பான்மை,வெள்ளை-கருப்பு, உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி, பணக்காரன்- ஏழை என பல்வேறு அடையாளப் போராட்டங்களுடனேதான் வாழ வேண்டியிருக்கிறது.

 மனிதத்தை விட அடையாளத்தை புனிதமாகக் கருதும் உலகில் இது போன்று இன்னும் ஆயிரம் படங்களுக்கான தேவை இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரலாக சூரியனின் குழந்தைகள் எழுவார்கள்.


No comments:

Post a Comment