Tuesday, March 21, 2023

தட்டு தெகே இஸ்கோலே – சுவர்களுக்கு வெளியில் ஒரு வகுப்பறை

 

                           

 

//இரவும் பகலும் என் நாடி நரம்புகளில் ஓடும் அதே வாழ்க்கையருவிதான்  உலகமெலாம் ஓடி தாள லயங்களுடன் களி நடனம் புரிகிறது. பூமியின் துணிக்கைகள் வழியாக எண்ணற்ற புல்வெளியில் ஆனந்தமாய் அரும்பி.. ஆரவாரமாக அலைபாயும் இலைகளாயும் பூக்களாயும் சட்டென்று வடிவம் கொள்வதும் அதே வாழ்க்கைதான்.// ரவீந்திரநாத் தாகூர்(மொழிபெயர்ப்பு- பீ.எம்.எம் இர்பான்)

தட்டு தெகே இஸ்கோலே තට්ටු දෙකේ ඉස්කෝලේ (இரண்டு மாடிப் பாடசாலை) சர்வதேசத்தின் கவனத்தை வென்ற மற்றொரு சிங்களத் திரைப்படம். பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்குமான திரை விருந்தாக இருக்கிறது இத் திரைப்படம்.

 மலேரியா தொற்று பரவுவதன் காரணமாக சூரியபாலுவெவ எனும் கிரமத்தில் இருக்கின்ற பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். எளியவர்களுக்கு எதற்குக் கல்வி என்ற நிலைப்பாட்டில் இருக்கும் அதிபருக்கும் பாடசாலையை நடாத்தும் ஆசை இல்லை. இதனால் பாடசாலையை மூடி விட முடிவு செய்கின்றனர்.அப் பாடசாலையில் பணிபுரியும் காவலாளியான பால மாமா ஆசிரியராக மாறி வானத்தின் கீழ் உள்ளவற்றைக் கொண்டு பாடம் நடாத்தி அந்த மாணவர்களை எப்படிக் கரை சேர்க்கிறார் என்பதுதான் கதை.

இயற்கையையும் மனிதனையும் இணைத்துக் கொண்டு கண்ணீரும் புன்னகையும் கலந்து வடிவமைக்கப்பட்ட அழகியல் நிறைந்த சினிமா அனுபவத்தைத் தந்திருக்கிறார் லலித் ரோஹித எதிரிசிங்க.



லலித் ரோஹித எதிரிசிங்க எனும் ஊடகவியலாளரின் நாவலாசிரியரின் முதல் திரைப்படம் என்று நம்ப முடியாத அளவுக்கு தனது திறமையை அவர் நிரூபித்திருக்கிறார்.

இயற்கையின் மீது பேரன்பு கொண்ட அந்தக் கலைஞன் தன் வாழ்க்கையின் அனுபவங்களின் சேகரத்திலிருந்து அழகியலும் வாழ்க்கைப் பாடங்களும் நிறைந்த ஒரு படைப்பை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். தான் மாணவப் பருவத்தில் நடந்து திரிந்த வயல்வெளிகளை, நீராடிய அருவிகளை, பார்த்து ரசித்த மலைகளை, தன் தோல்விகளின் போது கட்டித்தழுவிய மரங்களை வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து விரியும் காட்சிகளால் ஈரம் கொண்டு ஓவியமாக்கியிருக்கிறார்.


ஒரு மனிதன் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இயற்கையோடு எப்படி உறவாட முடியும் என்பதை இத்திரைப்படம் சொல்லித் தருகிறது.இயற்கை ஒரு அண்ணையாக எங்களைத் தழுவிக் கொண்டாலும் நாம் அதன் மடியில் தலைசாய்ப்பதில்லை. அதன் குரலைக் கேட்பதில்லை. அடர்ந்து விரிந்த மரங்களின் நிழலை, அதன் இலைகளைத் துளைத்துக் கொண்டு வரும் சூரிய வெளிச்சத்தை, பச்சை நிறம் தரும் கண்களுக்கான சுகத்தை அன்றாட வாழ்வின் பரபரப்பில் மனிதன் தவறவிடுகிறான். கடந்து வந்த வாழ்க்கையில் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதை இத்திரைப்படம் எமக்கு நினைவூட்டுகிறது.

உண்மையான வகுப்பறை சுவர்களுக்கு வெளியே இருக்கிறது என்பதை அது உரத்துச் சொல்கிறது. புளியமரத்தின் கீழ் பால மாமா வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் அற்புதம் நிகழ்கிறது. தோல்விகளின் போது துவண்டு போகாமல் இருக்க, முழு உலகமும் நம்மை எதிர்த்தாலும் புன்னகையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள, அறிவு கூடும் போது நெற்கதிர்கள் போல பூமியை நோக்கிப் பணிவு காட்ட, இயற்கையைப் போல பரந்த நோக்கம் கொள்ள, மரங்களைப் போல அறிவிழும் ஒழுக்கத்திலும்  உயர்ந்து செல்ல என தட்டு தெகே இஸ்கோலே வாழ்க்கைக்கான மகத்ததான பாடங்களை இயற்கையின் மடியிலிருந்து கற்றுத்தருகிறது.

பால மாமாவின் வகுப்பறை ரவீந்திரனாத் தாகூர் உருவாக்கிய சாந்தி நிகேதன் என்ற பாடசாலையை நினைவுபடுத்துகிறது. தாகூர் இயற்கையின் சூழலில் அமைந்த தனித்துவமான கல்விமுறை ஒன்றையே கனவு கண்டார். இந்தியப் பொருளாதார மேதை அமர்த்யா சென், புகழ்பெற்ற இயக்குநரான சத்யஜித்ரே ஆகியோர் அவர் உருவாக்கியசாந்தி நிகேதனில்படித்தவர்கள்தாம்.

 


நவீன கல்விமுறை விழுமியமும் பொறுப்புணர்வும் கொண்ட உதாரணபுருஷர்களை உருவாக்கத் தவறியிருக்கிறது. மதிப்பெண்களால் ஒரு மனிதனின் ஆளுமையை ஒருபோதும் முழுமையாக மதிப்பிட முடியாது என்பதையும் இயற்கையோடு இணைந்த கல்விமுறையின் முக்கியத்துவத்தையும் இயக்குநர் வலுவாகப் பதிவு செய்திருக்கிறார். தங்களுடைய அறிவுத் தேடலுக்கு பாடசாலைகளின் போதாமையை உணர்ந்து வெளியேறி இயற்கையிடமிருந்து கற்றுத் தேர்ந்த மனிதர்கள் இப்படத்தைப் பார்க்கும் போது எனக்குள் தோன்றி மறைந்தனர்.

கற்பித்தலை அதன் கலைகளை தம் ஆன்மாவுக்குள் உள்வாங்கி கற்றுக் கொடுக்கும் பால மாமாவிடம் கற்றுக் கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தம் உள்ளத்தைத் திறந்து கொள்ளச் செய்வதற்கான பல சாவிகளை இயக்குநர் கதையில் வைத்திருக்கிறார்.

வணிக நோக்கத்தை முதன்மைப்படுத்தியே இன்று எல்லாமும் நடைபெறுகின்றன. அதிலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான அறைகூவல் இத் திரைப்படத்தில் கேட்கிறது. முன்னுதாரணமாகத் திகழ முடியாத மனிதர்களைக் கொண்டாடும் இந்த உலகில் மனிதநேயத்துடன் இயற்கையோடு அன்பு கொண்ட சக மனிதர்களை நேசிக்கும் உதாரணபுருஷர்களை கல்வி உருவாக்க வேண்டும் என்று அது கேட்கிறது.

பாடசாலையின் காவலாளியான பால மாமாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் முன்னனிக் கலைஞர் ஜகத் சமில உட்பட நேர்காணல் மூலம் 3000 பேர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 12 சிறுவர்கள் வரை அனைவரும் திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.


பின்னணி இசைபாடல்கள்,ஒளிப்பதிவு என எல்லாத்துறைகளிலும் நம் ரசனையை மேம்படுத்தும் மானுடத்தின் மகிமையை, இயற்கையின் பேரன்பை இதயங்களில் அழகிய காட்சி மொழி கொண்டு திரையில் எழுதிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸின்வாழ்க்கையில் கடினமான விடயங்களில் ஒன்று, உங்களால் உச்சரிக்க முடியாத வார்த்தைகள் உங்கள் இதயத்தில் இருப்பதுஎன்ற வார்தைகேளோடு படம் நிறைவுறுகிறது.ஆம், உச்சரிக்க முடியாத வார்த்தைகளால் இதயம் கனக்க ஆரம்பித்து விடுகிறது. அதுவே கலையின் வெற்றி.

 



 







No comments:

Post a Comment