Wednesday, October 11, 2023

இந்த ஆவணப்படத்தை இயக்குவதில் எனக்கிருந்த மிகப் பெரிய வரையறை இத்தகைய ஒரு பரந்த விடயப்பரப்பின் மூலாதாரங்களை எப்படிச் சேகரிப்பது, எங்கிருந்து தொடங்குவது,யாரிடம் கதைப்பது என்பதுதான்- நாத்யா பிமானி பெரேரா

 


இலங்கை முஸ்லிம்களின் ஒலிக்கலைகள் மற்றும் பாடல் மரபுகளை ஆராயும் “மினாரத்“ ஆவணப்பட இயக்குனருடனான நேர்காணல்

 நாத்யா பிமானி பெரேரா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். இவரது ஆவணப்படம் மற்றும் புனைகதை படைப்புகள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாத்யா, நெதர்லாந்து சமூகக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் எம். பட்டம் பெற்றுள்ளார். '4th of February' ரிஸானா நபீக் தூக்கிலிடப்பட்ட ஆண்டு அவரது தலைவிதியைப் பற்றியும், வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்ற மீண்டும் செல்ல இருக்கின்ற இலங்கைப் பணியாளர்களைப் பற்றியும் பேசுகிற அவரது முதல் ஆவணப்படம்.

'While You Slept' குறும்படம், அண்மைக்காலமாக இலங்கைக்கு வருகின்ற சீனத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பாலுறவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கைப் பெண் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இதன் இணை திரைக்கதை எழுத்தாளராக பூபதி நளின் இருக்கிறார். Open Doors நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டில், இயக்கிய Work at Your Own Risk என்ற ஆவணப்படம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பகுதிகளில் சமூகத்திற்கு பல தவிர்க்க முடியாத சேவைகளை வழங்கும், முறைசாரா தொழிலாளர் சந்தையில் தினமும் பல ஆபத்துக்களை எதிர்கொள்ளும் பெண் தொழிலாளர்களைப் பற்றியது.

அண்மையில் அவர் இயக்கிய இலங்கை முஸ்லிம்களின் ஒலிக்கலைகள் மற்றும் பாடல் மரபுகளை ஆராயும் “மினாரத்“ ஆவணப்படம் அவரது முதலாவது முழு நீளத் திரைப்படமாகும்.இந்த ஆவணப்படம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை PVR திரையரங்கில் மாலை 7.40 மணிக்கு காண்பிக்கப்படுகிறது. 

நேர்காணல்- இன்ஸாப் ஸலாஹுதீன்

 

இந்த ஆவணப்படத்தை இயக்குவதற்கான ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

எதிர்பாராத நேரத்தில் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சர்வதேச இனத்துவக் கற்கை மையத்தில் பணியாற்றிய நதீன் வன்னியசிங்கம், 'இலங்கை முஸ்லிம்களின் இசையும் பாடல் மரபுகளும்: ஒரு கண்ணோட்டம்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதனை மையப்படுத்தி அது குறித்த ஆவணப்படம் ஒன்றை இயக்குமாறு அந் நிறுவனம் எனக்கு அழைப்பு விடுத்தது. 

பொதுவாக அரசியல் பொருளாதாரம், மற்றும் விளிம்புநிலை மனிதர்கள் பற்றிய விடயங்கள் சார்ந்த முயற்சிகளில் ஈடுபடும் எனக்கு இப்படியான ஒரு ஆவணப்படத்தை இயக்குவது இதுவே முதல் தடவை.

 

படப்பிடிப்பின் போது எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய ஆய்வு  நடவடிக்கைகளுக்காக கொழும்புக்கு வெளியே செல்வதில் கொவிட் கால பயணத்தடை,எரிபொருள் தட்டுப்பாடு,விலையேற்றம் காரணமாக சில சவால்கள் இருந்தன. அவை எல்லோருக்கும் பொதுவான சவால்கள். இதனால் பேருவலை,கல்பிட்டி போன்ற சில பிரதேசங்களில் படப்பிடிப்பை கைவிடவும் இன்னும் சில இடங்களில் படப்பிப்பு நாட்களை மட்டுப்படுத்திக் கொள்ளவும் ஏற்பட்டது.

படப்பிடிப்பின் போது முஸ்லிம் மக்களைத் தொடர்பு கொள்வதில் எந்தச் சவாலும் இருக்கவில்லை. மிகப்பெரிய ஆதரவே கிடைத்தது.

ஏனைய எந்தவொரு ஆவணப் படப்பிடிப்புக்கும் போல கடைபிடிக்க வேண்டிய முறைமைகளை நான் பின்பற்றினேன். யாருடன் கதைக்க வேண்டும் எப்படிக் கதைக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டேன்.

மதஸ்தானங்களுக்குச் செல்லும் போது கூடுதல் அவதானம் தேவைப்பட்டது. ஆண்கள் மாத்திரம் இருக்க வேண்டிய இடங்களில் படப்பிடிப்புக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிவிட்டு நான் வெளியில் இருந்தேன். அது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. ஏனைய எல்லா இடங்களிலும் நான் எனது பாட்டுக்கு வேலை செய்தேன். அங்கு நான் மாத்திரம் பெண்ணாக இருக்கிறேன் என்பது எனது வேலைக்குத் தடையாக இருக்கவில்லை.

உண்மையில் இந்த ஆவணப்படத்தை இயக்குவதில் எனக்கிருந்த மிகப் பெரிய வரையறை இத்தகைய ஒரு பரந்த விடயப்பரப்பின் மூலாதாரங்களை எப்படிச் சேகரிப்பது,  எங்கிருந்து தொடங்குவது,யாரிடம் கதைப்பது என்பதுதான். திரைப்படத்தை பார்த்த பின்னர் உருவாகும் உரையாடல் மூலம்தான் அந்த வரையறைகளைக் கடக்க முடியும் என்று நம்புகிறேன்.

மறுபுறம் இஸ்லாமிய கலாச்சார பாரம்பரியம், இன்று உலகளாவிய ரீதியில் மிகவும் பரந்த, மிகவும் வளமான, பண்டைய மற்றும் மேம்பட்ட வரலாற்றைக் கொண்டது.

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப தனித்துவமான கலாசாரங்கள் மற்றும் இடைச்செயற்பாடுகளில் ஒற்றுமை இருப்பது போல அவற்றில் இருக்கும் வித்தியாசங்களும் அழகானவை.

இலங்கையில் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட ஏற்படுகின்ற மாற்றங்களை உலகலளவிலும் பிராந்திய அளவிலும் காணப்படுகின்ற போக்கிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

இந்தப் பணியை முடிப்பதற்கான கால அளவு மற்றும் நிதி வரையறையும் சிலபோது சவாலாக அமைந்தது.

ஆனால் ஒரு ஆவணப்படம் தேவையான விடயங்களை மீண்டும் மீண்டும் உள்வாங்கி சேர்ப்பதற்கான விஷேட தன்மையைக் கொண்டுள்ளது. சிலபோது நான் அதைச் செய்யலாம். அல்லது இத்திரைப்படத்தை பார்க்கும் ஒருவர் விடுபட்ட விடயங்களைச் சேர்த்து ஓர் ஆவணப்படம் தயாரிக்க முன்வரலாம்.

 

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய உங்கள் மனப்பதிவுகள் என்ன?

பெரும்பாலானவர்கள் “முஸ்லிம் சமூகம்“ அல்லது “இலங்கையில் வசிக்கும் முஸ்லிம்கள்“ என்ற ஒற்றைப்படையான மனத்தோற்றத்தோடுதான் அவர்களை நோக்குகின்றனர். கதைக்கின்றனர் ,பழகுகின்றனர் என்பது முஸ்லிம் அல்லாத ஒருவர் என்ற வகையில் என்னுடைய அவதானம்.

குறைந்தபட்சம் முஸ்லிம் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் இருக்கும் இலங்கைச் சோனகர், மலாயர், போரா, மேமன்,  போன்ற இனத்துவப் பல்வகைமை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் கலாசாரப் பல்வகைமை பற்றி அவர்கள் தெரிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.

இந்த ஆவணப்பட முயற்சியில் ஈடுபடும் போது முஸ்லிம்களை ஒரே தொகுதி மக்களாக நினைப்பது எத்தனை தவறானது என்பது மீண்டும் மீண்டும் எனக்கு உறுதியானது. நான் பெற்ற அனுபவங்கள், சந்திப்புகள் மூலம் நான் ஏற்படுத்திய நெருங்கிய உறவுகள் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை.இந்தக் கேள்விக்கு நான் சொல்ல விரும்பும் பதில் இதுதான். உணர்வுகளைப் பற்றி கேட்டிருக்கிறீர்கள். எனது பதில் அறிவு பற்றியது. பரவாயில்லைதானே?

 


ஆவணப்படத்திற்கு எப்படி வரவேற்பு உள்ளது?

தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் படத்தை இன்னும் பலருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியுள்ளது. கலை நிறுவனங்களுக்கு அப்பாலும் கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் காட்சிப்படுத்த தயாராக உள்ளோம். கொழும்பிலும் கொழும்பிற்கு வெளியேயும் படத்தை திரையிட்டு பார்வையாளர்களுக்கு விவாதத்திற்கு இடமளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்கள், சிறு குழுக்கள் எங்களை தொடர்பு கொண்டால், நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்.

 

இசை மற்றும் பாடல் மரபுகளின் தொடர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உங்கள் பரிந்துரைகள்…

கலாச்சாரம் என்பது மாறாமல் இருப்பதல்ல. அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டும், புதியவற்றை உள்வாங்கிக் கொண்டும் இருக்கக்கூடிய ஒன்று. இசை மற்றும் பாடல் மரபுகள் என்று வரும்போது இதனை நன்றாக அவதானிக்கலாம். அதற்கான தடயங்களை  படம் முழுவதும் காணலாம்.

கலை மரபுகளைப் பாதுகாப்பது என்பது வேறுபட்ட ஒன்று. ஒரு குறிப்பிட்ட குழு அல்லது குழுக்களால் தேர்ச்சி பெற்ற இசை/பாடல் மரபுகள், தற்போது நடைமுறையில் இல்லாமல் போயுள்ளவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பதிவு செய்து வைப்பது, வரலாறாக மாற்றுவது முக்கியம்.

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் உள்ள நாட்டுப்புறப் பாடல்கள் எழுத்தில் மட்டுமே பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் பாடிய ராகமும் தாளமும் யாருக்கும் தெரியாது என இப்படத்தில் பேராசிரியர் அனஸ் ஒரு கட்டத்தில் குறிப்பிடுகிறார்.

MWRAF சில வருடங்களுக்கு முன் கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து CD யாகப் பாதுகாக்க சில முயற்சிகளை மேற்கொண்டது. அதில் சில பாடல்கள் இந்தப் படத்தில் படத்தில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்னர் பாடல் மற்றும் இசை வடிவங்களைப் பாதுகாப்பது பற்றிச் சிந்திப்பதற்கு விஷேட காரணம் எதுவும் இருக்கவில்லை. வானொலி, தொலைக்காட்சி, குறுந்தகடுகள் மட்டுமின்றி, டிஜிட்டல் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலகட்டத்தில் அதனைச் சாத்தியப்படுத்துவது சிரமமானதல்ல. சிலபோது இந்தப் படம் அது பற்றித் தேடுவதற்கான சிறு முயற்சியாக அமையலாம்.

 


No comments:

Post a Comment