உங்களை பற்றிய ஒரு அறிமுகம்?
ஹன்தெஸ்ஸ அல்மனார் கல்லூரியில் என்னுடைய
பாடசாலை வாழ்க்கை தொடர்ந்தது. சாதாரண தரம் வரை அங்கு படித்துவிட்டு மேற்படிப்புக்காக
நளீமியா கலாபீடத்தில் இணைந்தேன். வெள்ளைக் காகிதம் பல வண்ணங்கள் சிந்திய ஓவியம்
மாதிரி வாழ்க்கை அங்குதான் தன்னை புதிதாக வரைந்து கொண்டது.
அங்கு கல்வியை முடித்துக் கொண்டு ஊடகவியல்
கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் டிப்லோமா கற்கையை
தொடர்ந்து கொண்டு பத்திரிகைத் துறையில் பணியாற்றினேன்.
பதிப்பகக் கனவுகள் துளிர்விடவே “நிகழ்“
எனும் பெயரில் பதிப்பகம் தொடங்கி நான்கு புத்தகங்கள் வெளியிடக் கிடைத்தது.
என்னால் ஓரளவு பாட முடியும். 2003 ஆம்
ஆண்டு காற்றுச் சுமந்து வரும் கனவுகள் எனும் இசைத் தொகுப்பில் ஒரு பாடலைப் பாடச்
சந்தர்ப்பம் கிடைத்தது.தொடர்ந்து வந்த காலங்களில் ஒரு சில இசைத்
தொகுப்புக்களுக்காகப் பணியாற்றினேன்.சுமார் 10 பாடல்கள் அளவில் எழுதியுள்ளதோடு சில
பாடல்களையும் பாடியுள்ளேன்.
வானொலி நாடகம் எழுதும் ஒரு பயிற்சிப்
பட்டறையில் கலந்து கொண்டேன்.ஒரு நாடகம் எழுதினேன்.சிங்கள மொழியிலிருந்து இரண்டு
நாடகங்களை மொழியெர்த்தேன். துரதிஷ்டமாக நான் அதைத் தொடரவில்லை.
நான் எழுதிய ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை, இலையில் தங்கிய
துளிகள் ஆகிய நுல்களும்
அவற்றிக்காக இயற்றிய பாடல்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தற்போது ஸம் ஸம்
நிறுவனத்தில் ஊடகத் துறைப் பணிப்பாளராகக் கடமையாற்றுகிறேன்.
வாசிப்பு,எழுத்தின் மீதான காதல் எப்போது
உருவானது?
எழுத்தும் வாசிப்பும் பாடசாலை காலத்திலிருந்து ஓரளவு ஆர்வம் மிக்கதாக இருந்தன. அவ்வப்போது கவிதைகள் எனும் பெயரில் சில கிறுக்கல்களளை எழுதிப் பார்த்ததுண்டு. இருந்தாலும் சொல்லும் படியான எந்த எழுத்தும் எனக்குள் பிறக்கவில்லை.
நளீமியாவுக்குச் சென்ற பிறகு வாசிப்பினுடைய எல்லைகள் விசாலித்தன எனலாம். இலக்கியத்தின் மீதான ஈடுபாடு என் தேசத்துக்குரிய ஆசிரியர் ஏ. பி. எம் இத்ரீஸ் மூலம் வலுப்பெற்றது. வாசிப்பின் போதை மெல்ல மெல்ல எனக்குள் நுழைய வாசிப்பின் ஆழம் தேடி நான் பயணிக்க ஆரம்பித்தேன்.
இலக்கியம் சார்ந்த நூல்களையே முதலில்
வாசிக்க ஆரம்பித்தேன். கவிதை,சிறுகதை,நாவல் என புனைவுகளில் இருந்த ஈடுபாடு காலம்
செல்லச் செல்ல அபுனைவுகளிலும் ஏற்பட்டது.
இலக்கியம் மட்டும்தான் வாசிக்க வேண்டும்
என்றில்லை என்பதை உணர்ந்த பின் வாசிப்பின் மீதான காதல் இன்னும் அதிகரித்தது. நான்
அறியாத உலகை வாசிப்பு எனக்குள் அழைத்து வருகிறது.வாசிப்பை ஒருபோதும் தவறவிடக்
கூடாது என்பதை ஒரு நியதியாக வைத்திருக்கிறேன். ஆனால் பொடுபோக்கும்
சோம்பேறித்தனமும் என்னை ஜெயித்துவிடுகின்றன.ஆனால் எப்போதும் நான் புத்தகங்களின்
காதலனாக இருக்க விரும்புகிறேன். வாசிக்காத புத்தகங்களும் என்னோடு இருக்கின்றன. அவற்றின் இருப்பும்
என்னைப் பொருத்தவரையில் முக்கியமானதே.
பல்லின கலாச்சார தேசத்தில் 'சகவாழ்வு, மத சகோதரத்துவம், இன புரிந்துணர்வு' குறித்த உங்கள் விடயவதானங்களையும் கள முன்னெடுப்புக்களையும் பகிருங்களேன்?
இச் சொற்கள் இலங்கைச் சூழமைவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் வெற்றுச் சொற்களாகவே இருந்துவிட்டுப் போகும் துர்ப்பாக்கியம் அவற்றிற்கு இருக்கிறது.போருக்குப் பிந்திய இலங்கையில் உண்மையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் உழைக்க வேண்டியிருக்கிறது.
போர்,இனக்கலவரம்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
என வரலாற்றில் நாம் எவ்வளவோ கடந்து வந்திருக்கிறோம். சமூகங்களுக்கிடையிலான
இடைவெளிகளைக் குறைப்பது அவ்வளவு எளிதல்ல. புரிந்துணர்வை வளர்ப்பதன் மூலமே அவற்றை
சாத்தியப்படுத்த முடியும்.புரிந்துணர்வை மாநாடுகளால் வளர்க்க முடியாது.பரஸ்பர
உரையாடல், இணைந்து செயற்படல் மூலமே அதனை சாத்தியப்படுத்த முடியும். எமது நிறுவனம்
மதங்களைக் கடந்த மனித நேயத்தை முதன்மைப்படுத்திச் செயற்படுவதானால் கடந்த பல
வருடங்களில் சகோதர சமூகங்களுடன் ஓரளவு நெருங்கிப் பழகச் சந்தர்ப்பம்
கிடைத்தது.ஒவ்வொரு சமூகமும் தனித்த அடையாளங்களுடனனும் கலாசாரங்களுடனும் இலங்கையில்
வாழ்க்கிறது.இலங்கையர் என்ற அடையாளம் எம்மை இணைக்கும் புள்ளியாகத்
தொழிற்படுகின்றபோதே நாம் நாமாக இருக்க முடியும். அதைநோக்கிய உரையாடல்களுக்கு கலை
இலக்கியம் நல்ல கருவிகளாகப் பயன்பட முடியும்.
அண்மையில் நீங்கள் கலந்து கொண்ட
கதைசொல்லலுக்கான சர்வதேச செயலமர்வு குறித்துச் சொல்ல முடியுமா?
மெடா நிறுவனத்தின் செயலமர்வுகளை
முன்னெடுக்கும் செரிடா நிறுவனத்தின் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை
ஏற்படுத்துவதற்கு டிஜிடல் கதைசொல்லல் முறையை எப்படி ஒரு கருவியாகப் பன்படுத்தலாம்
என்பது பற்றிய ஒரு செயலமர்வு அது.
கதைசொல்லலின் புதிய பரிமாணங்களை அச்
செயலமர்வு எனக்குக் கற்றுத் தந்தது. காலத்தை உறைய வைக்கும் “தப்லோ“
வடிவத்தைப் பயன்படுத்தி embodied storytelling எனப்படுகின்ற எமது உடல்களை
உருவகப்படுத்தி கதையை முன்வைக்கும் முறை இங்கு முக்கியமானது.அதே போல இருவர்
இணைந்து “நமது கதையை“ சொல்லும் முறையும் தனித்துவமானது. செரிடா நிறுவனம் மிகக்
கச்சிதமாக அதனை வடிவமைத்திருந்தது.
இலங்கைச் சூழலில் கதைசொல்லல் ஒரு
முக்கிய கருவியாக சகல துறைகளிலும் பயன்படுத்தப்பட முடியும் என்பதை அச் செயலமர்வு எனக்கு ஆழமாக உணர்த்தியது.
உங்களது எழுத்துலக படைப்புக்கள் மற்றும் நீங்கள் பெற்ற விருதுகள் குறித்து?
ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை, இலையில் தங்கிய துளிகள் ஆகிய இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன். இவை தவிர நூற்றுக்கு மேற்பட்ட நேர்காணல்கள் செய்திருக்கிறேன். நூல்,சினிமா விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளனாகவே இன்னும் என்னைப் பற்றி நான் மதிப்பிடுகிறேன்.
வாசகர்களின் அங்கீகாரமும் அவர்களது அன்பும் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய விருதாகும். எனது எழுத்துக்களுக்கு
அவர்கள் தந்த, தருகின்ற அங்கீகாரத்தையே நான் உயர்ந்த விருதாகக் கருதுகின்றேன்.
விருதுகளுக்குப் பின்னால் உள்ள அரசியல் பற்றியும் நான் புரிந்து
வைத்திருக்கிறேன்.விருதுகளில் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை. எத்தனையோ நல்ல
எழுத்துக்கள் யார் கண்ணிலும் படாமல் இருப்பதில்லையா?
'தரமான இலக்கிய படைப்புக்கள் மீதான செரிவான வாசிப்பறிவு எழுத்தாளனின் எழுத்தை வீரியமாக்கவல்லது' என்பது குறித்த உங்களது அபிப்ராயங்கள்?
எந்த ஒரு எழுத்தாளனும் முதலில் வாசகராக இருக்க வேண்டும் எழுத்தாளனாக இருப்பது இரண்டாம் பட்சமே. தரமான இலக்கிய படைப்புகளை தொடர்ந்து வாசிக்கும் போதுதான் ஓர் எழுத்தாளன் மேம்படுகின்றான். தன்னைச் சூழ உள்ள மனிதர்களின் கதைகளை, எழுத்துக்களை, அந்த காலகட்டத்தின் பிரச்சினைகளை, சவால்களை, ஒரு சமூகம் ஒடுக்கப்படுவதை, குரலற்ற ஒருவர் நசுக்கப்படுவதை,அதிகாரத்தின் கரங்களால் அடக்கப்படுபவர்களுடைய துயரங்களை என எல்லாவற்றையும் ஓர் எழுத்தாளர் வாசிக்க வேண்டும். நுணுக்கமான பார்வை கொண்டவனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனுடைய
எழுத்துக்கள் யதார்த்தபூர்வமாய் இருக்கும்.
எல்லாக் காலகட்டத்திலும் வாசிப்பிற்கான
முழுமையான இடம் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் நவீன கருவிகளின் வருகை மக்களை
மேலோட்டமாக வாசிப்பதற்குப் பழ்க்கியிருக்கிறது.முகநூல் வாசகர்கள், முகநூல்
எழுத்தாளர்கள்,முகநூல் கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள்.அப்படித் தோன்றுவது
தவறில்லை. ஆனால் ஆழமான வாசிப்பனுவம் இல்லாமல் ஒருவர் எழுத வெளிப்படுவது
ஆபத்தானது.சொற்களைக் கோர்க்கத் தெரிந்த எல்லோரும் எழுத்தாளர் ஆவதில்லை.எழுத்தின்
உள்ளடக்கமும் கனமும் வீரியமும் மிக்கதாக இருக்க வேண்டும்.எழுத்தாளன் வாசிப்பின்
ஆழங்களில் தன்னைப் புதைத்துக் கொள்ளத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.
உங்களுடைய எவ்வொரு பொழுதில் உவ்வொரு
வாழ்க்கை ,இலையில் தங்கிய துளிகள் நூல் ஆகிய இரண்டு நூல்களுக்கும் theme song செய்திருந்தீர்கள். அப்படியொரு
யோசனை ஏன் தோன்றியது?
“ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை“நூல்
வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்த போது திடீரென அப்படியொரு யோசனை தோன்றியது. இசையமைப்பாளர்
நண்பர் ஷமீலுடன் தொடர்பு கொண்ட போது செய்துவிடலாம் என்றார்.இசையமைத்தார். எழுதிப்
பாடி முடித்தோம். அது நல்ல வரவேற்பாகவும் ட்ரென்டாகவும் இருந்தது. அடுத்
புத்தகத்திற்கும் அப்படியே செய்தேன். நூல் வெளியீட்டுடன் ஒரு பாடல் வெளியீடும்
இடம்பெறுவதை ஒரு வழக்கமாக மாற்ற விரும்பினேன்.இன்னும் சில பாடல் வடிவங்களுடன் ஒரு
நூல் வெளியீட்டைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.பார்க்கலாம்.
நேர்காணல் உங்களுக்கு மிகவும்
பிடித்தமான ஒன்று. நூற்றுக்கும் மேற்பட்டவர்களை நீங்கள் நேர்காணல்
செய்திருக்கிறீர்கள். அந்த ஆர்வத்தை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்.
பேராசியர் எம். எஸ். எம் அனஸ் அவர்களைத்
தான் நான் முதன் முதலில் நேர்காணல் செய்தேன். இத்ரீஸ் ஆசிரியரின் தூண்டுதலினால்
அது நடந்தது.பத்திரிகைத் துறைக்குள் என்னை அழைத்துச் சென்றதும் அந்த நேர்காணல்தான்
என்று நினைக்கிறேன். பிறகு கிளை மொழிகள் பற்றி ஒரு சிறிய தேடலில் இருந்த போது
பேராசிரியர் எம்ஏ. நுஃமான் அவர்களைச் சந்தித்தேன். படிப்படியாக பலதரப்பட்ட
ஆளுமைகளுடன் நேர்காணல் செய்வதும் அவர்களுடன் பல்வேறு விடயங்கள் சார்ந்து
உரையாடுவதும் எனக்கு அலாதியான விருப்பமாக மாறிப்போனது.
ஆளுமைகளைச் சந்தித்து உரையாடுவது அவர்களது
வாழ்நாள் அனுபவங்களைக் கேட்பது வயதால் என்னையும் அதிகரிக்கச் செய்யும் உணர்வைத்
தந்தது.ஒவ்வொரு ஆளுமையினதும் தனித்துவம் வாய்ந்த உலகை நான் எனக்குள் சுமந்து
கொள்ளும் அனுபவத்தை நேர்காணல்கள் மூலம் பெற்றேன்.மற்றது ஒருவரை நேர்காணல் செய்ய
முன்னர் அவர் பற்றிய அறிமுகம்,அவரது எழுத்துக்கள் பற்றியெல்லாம் விரிவாக ஆராய்வது
என் அறிவை மேலும் வலுப்படுத்த உதவியது.பின் சிங்கள மொழிபேசும்
கலைஞர்களை,புத்திஜீவிகளை,செயற்பாட்டாளர்களளை நேர்காணல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.
வெளிநாடுகளில் இருக்கும் எழுத்தாளர்களை,கலைஞர்களை,திரைப்பட இயக்குநர்களை நேர்காணல்
செய்வது இன்னும் மகிழ்ச்சியான ஒன்று. நேர்காணல்கள் வழியே அத்தகைய ஆளுமைகள்
நண்பர்கள் போலப் பழகுவது மனதுக்கு இன்னும் இதமான அனுபவமாக இருக்கும்.
பாடல் எழுதும் அனுபம் பற்றிச் சொல்லுங்கள்?
பாடல் எழுதுவது என்னைப் பொருத்தவரைளில் கொஞ்சம் சிரமமான விடயம்தான்.காரணம்
நான் எழுத வேண்டி வந்த பாடல்கள் கருத்துக்களைச் சுமந்த பாடல்களாக வெளிவந்தவை.
காதல் பாடல்களை இலகுவாக எழுதிவிட முடியும்.ஆனால் கருத்துக்குகளுக்காக எழுதும் போது
கூடுதல் கவனம் தேவை.எப்படியோ பத்துப் பாடல்கள் அளவில் எழுதியிருப்பது
மகிழ்ச்சிதான்.ஆனால் எண்ணிக்கையில் அவை சொற்பமே.அத்தகைய முயற்சிகளைச் செய்பவர்கள்
நமது சமூகத்தில் குறைவு என்பதால் எப்போதாவது அபூர்வமாக அப்படியான பாடல்கள்
வெளிவருகின்றன.இந்த நிலை மாற வேண்டும். எமக்குள் பல்வேறு கலைஞர்கள்
இருக்கிறார்கள். அனைவரும் ஒன்று சேர்வதற்கான ஒரு களம் தேவைப்படுகிறது.அவர்களை
ஒருங்கிணைப்பதற்கான ஒரு பொறிமுறை தேவைப்படுகிறது.இளைஞர்களே முன்னால் வாருங்கள்.
அக்கினிச் சிறகுகள் சஞ்சிகை மற்றும் அதன் அண்மையகால செயற்பாடுகள் குறித்து ஏதாவது?
அக்கினி சிறகுகள் சஞ்சிகை டிஜிட்டல் வடிவில் இரண்டு வருடங்களாக வெளிவருவது சாதனைதான். இளைஞர்கள் குழுவொன்று எழுத்து, வாசிப்புச் செயல்பாடுகளில் தொடர்ந்தும்
ஈடுபடுவது நம்பிக்கை தருகிறது. உங்களுக்கு என்
வாழ்த்துக்கள். நுகர்வுக் கலாச்சாரம் மலிந்த உலகில் இலக்கியம் எழுத்து சஞ்சிகை
உன்று தொடர்ச்சியாக இயங்குவது சாதனைதான். தொடர்ந்தும் இயங்குங்கள்.உங்கள்
செயற்பாடுகளை இன்னும் பல தளங்களுக்கு விரிவுபடுத்துங்கள்.
நன்றி: அக்கினிச் சிறகுகள்
No comments:
Post a Comment