பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை குருநாகலில் உள்ள கிராமியப் பாடசாலை ஒன்றில் பெற்றுக் கொண்டார். 1990 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், 1998 ஆம் ஆண்டு தனது முதுகலைப் படிப்பிற்காக Wisconsin பல்கலைக்கழகம் சென்றார்.
அங்கு இலக்கியத்தில்
எம்.ஏ பட்டம் பெற்றதும், பேராசிரியர் சார்ல்ஸ்
ஹலிசேயின் (Prof .Charles Hallisey) கீழ் கலாநிதிக்
கற்கையை மேற்கொள்வதற்கு விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் அவருக்கு புலமைப்பரிசில் வழங்கியது.
2004 இல் தனது கலாநிதிப் பட்டத்தைப்
பெற்ற பிறகு, கோர்னெல் (Cornel) பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக நியமனம் பெற்றுச்
சென்றார். அதேநேரம் விமர்சனம் மற்றும் கோட்பாடு பற்றிய கற்கையில் ஈடுபட்டார்.
2008 ஆம் ஆண்டு,
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். பட்டப்
பின்படிப்பின்போது இலக்கியம், இலக்கியக் கோட்பாடு,
நாடகக் கோட்பாடுகள், மொழிபெயர்ப்புக் கோட்பாடு, அழகியல் கோட்பாடுகள், திரைப்பட ஆய்வுகள் போன்ற பாடநெறிகளில் ஈடுபட்டார்.
புனைகதை, கவிதை மற்றும் இலக்கியக் கோட்பாடு ஆகிய பரப்பில்
15 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை
வெளியிட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டில் ‘சிறந்த’ சிறுகதைத் தொகுப்பிற்காகவும், 2008 இல் ‘சிறந்த’ நாவலுக்காகவும் தேசிய இலக்கிய விருதை வென்றார்.
தற்போது பேராதனைப்
பல்கலைக்கழகத்தில் சிங்களப் பேராசிரியராகக் கடமை புரியும் லியனகே அமரகீர்த்தி,
இலக்கியக் கோட்பாடு, மொழிபெயர்ப்பு ஆய்வுகள், பின்காலனித்துவக் கோட்பாடு, நாடகக் கோட்பாடுகள் மற்றும் அழகியல் சார்ந்த பாடங்களைக் கற்பித்து
வருகிறார்.
அரசியல், சமூகம், சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து எழுதியும் பேசியும்
வருவதோடு ஒரு அறிவுஜீவியாக இருந்து கொண்டு செயற்களத்திலும் இயங்குவது அவரது சிறப்பம்சம்
எனலாம். அவருடன் மேற்கொண்ட நேர்காணலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
போருக்குப் பிந்திய
இலங்கையில் சமூகங்களுக்கு மத்தியில்
புரிந்துணர்வை வளர்ப்பதற்காக நீங்கள் ஒரு பாடநெறியை பல்கலைக்கழகத்தில் அறிமுப்படுத்தினீர்கள்.
அது பற்றிய விளக்கத்தோடு இந்த நேர்காணலை ஆரம்பிக்கலாம்
மூன்று தசாப்தங்களாக
இந்த நாட்டிலே நீடித்த போரினால் நாங்கள் இழந்தைவைதான் அதிகம். போரானது சமூகங்களுக்கு
மத்தியில் இருந்த புரிந்துணர்வை மேலும் விரிவுபடுத்தியது. யுத்தம் முடிவடைந்த பின்னரும்
இந்த நிலை நீடிக்கவே செய்தது. குறிப்பாக பல்கலைக்கழகத்தில் கற்கின்ற சிங்கள மாணவர்களுக்கு
மத்தியில் தமிழ், முஸ்லிம் மக்களின்
வாழ்க்கை முறை, கலாசாரம் குறித்த
புரிந்துணர்வு அவ்வளவாக இருக்கவில்லை. எனவே அது பற்றிய தெளிவை வழங்கும் நோக்குடன்,
ஒரு பாடநெறியை அறிமுகப்படுத்தினோம். அதனுடைய பாடத்திட்டத்தை
நான்தான் தயாரித்தேன்.
சிங்கள மொழிக்கு மொழி
மாற்றம் செய்யப்பட்டுள்ள இலக்கியப் பிரதிகள் ஊடாக, தமிழ்-முஸ்லிம்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை,
சிங்கள மாணவர்களுக்கு இப்பாடநெறியில் நாங்கள் கற்பிக்கின்றோம்.
ஒரு வருட காலம் கொண்ட பாடநெறி இது. மாணவர்கள் மிகவும் ஆர்வமாக இதில் கலந்து கொள்கிறார்கள்.
மிகவும் பிரசித்தமான பாடநெறியாகவும் காணப்படுகிறது.
இதேபோல தமிழ்ப் பிரிவிலும்
தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட சிங்கள இலக்கியப்
பிரதிகளினூடு, சிங்கள மக்களின் வாழ்க்கையைக்
கற்பிக்குமாறு கேட்டிருந்தோம். இதுவரை அது நடைபெறவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம்
என எதிர்பார்க்கிறேன். எல்லாப் பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற பாடநெறிகளை, ஆரம்பிப்பதனூடாக சமூகங்கள் குறித்த புரிந்துணர்வை
மேலும் வளர்க்கலாம்.
இலங்கையிலுள்ள முக்கிய
சிங்கள இலக்கியவாதிகள், இன முரண் பாடுகளின்போது
சிறுபான்மை சமூகங்களின் பக்கமே நிற்கின்றனர்.இதனை தமிழர்களும் முஸ்லிம்களும் புரிந்துகொள்ள
வேண்டும் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சிங்கள இலக்கியம்
குறித்து சுருக்கமான ஒரு அறிமுகத்தை வழங்க முடியுமா?
சிங்கள இலக்கியம்
குறித்து பொதுவான அறிமுகம் ஒன்றைத் தருவது சிரமமான விடயம்தான். செவ்வியல் இலக்கியத்தை
எடுத்துக் கொண்டால் கி.மு 3ஆம் நூற்றாண்டுகளில்
சிங்கள மொழி வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. பண்டைய சிங்கள இலக்கியத்திற்கான உதாரணம் சீகிரிய பளிங்குச் சுவர்களில் உள்ள பாடல்கள்தான். அதில்
சுமார் 750 பாடல்கள் இருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
புத்தக வடிவிலான உதாரணத்
தற்கு, 10 ஆம் நூற்றாண்டைத் தொடர்ந்து
பல இலக்கியப் பிரதிகள் கிடைக்கின்றன. இவை புத்தரின் படிப்பினை மற்றும் அவரது வாழ்வு
பற்றிய விடயங்களைப் பேசுகின்றன.
காலனித்துவ ஆட்சிக்
காலத்தில்- குறிப்பாக ஒல்லாந்தருடைய காலத்தில்- சிங்கள இலக்கியம் மதக் கூறுகளிலிருந்து
விடுபட ஆரம்பிக்கிறது. 18,19 ஆம் நூற்றாண்டுகளில்
மாத்தறை இலக்கிய யுகத்தில் சிங்கள இலக்கியம் பௌத்த தர்ம அடிப்படைகளிலிருந்து அன்றாட
வாழ்வை நோக்கி நகர்கிறது.இருபதாம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் கொழும்பு யுகத்தில் கவிதைகள்
தோற்றம் பெறுகின்றன. இதன் பின்னர் நவீன இலக்கியம் தோற்றம் பெறுகிறது. சிறுகதை, நாவல் இலக்கியம் வருகிறது. பியதாஸ சிறிசேன,
மார்ட்டின் விக்ரம சிங்க, டபிள்யு ஏ. சில்வா போன்றவர்கள் ஊடாக, சிங்கள நாவல் வளர்ச்சி பெறுகிறது.
1940களில் சிறுகதை,
நாவல் இலக்கியம் குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான
இடத்தை அடைகிறது. 1950களில் பாரம்பரிய கவிதைகளிலிருந்து
வசன கவிதை தோன்றுகிறது. பல்கழைக்கழகத்தைச்
சேர்ந்தவர்களால் நவீன நாவல் பற்றிய கருத்து வளர்ச்சி பெறுகிறது. டீ.எச் லோரன்ஸ் ஜெம்ஸ்
ஜோய்ஸ் போன்றோரின் தாக்கம் ஏற்படுகிறது. நாவல் இலக்கியம் புதிய திசைகளை நோக்கிப் பயணிக்க
ஆரம்பிக்கிறது
இன்று சிங்கள நாவல்,
சிறுகதை, கவிதை என்பன பல்வேறு நாடுகளின் இலக்கிய கலாசாரத்தின் பாதிப்புக்கு
உள்ளாகி, சிறந்த ஒரு இடத்தை அடைந்திருக்கிறது.
கருத்தளவிலும் வடிவமைப்பிலும் மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. எந்தவொரு இலக்கியமும்
ஒரு கட்டத்தோடு முற்றுப்பெறுவ தில்லை. அதேபோன்று சிங்கள இலக்கியமும் வளர்ச்சியை நோக்கி
நகர்கிறது.
பௌத்த இலக்கியம்,
சிங்கள இலக்கியம் ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு
என்ன?
மாத்தறை யுகம் வரைக்கும்
சிங்கள இலக்கியத்தையும் பௌத்த இலக்கியத்தையும் பிரித்தறிந்து கொள்வது சிரமமானது. இக்காலத்தில்
பௌத்த இலக்கியம் என்பது அடிப்படையில் சிங்கள இலக்கியம் தான். ஆனால் பௌத்த இலக்கியம்
பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும்
எழுதப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின்
பின்னர் மத இலக்கியத்திலிருந்து பிரிந்து உலகாயத இலக்கியம் தனியாக வளர ஆரம்பிக்கிறது.
ஆனால், அது முழுமையான பிரிந்தது என்று
சொல்ல முடியாது. ஏனெனில், இன்று எழுதப்படுகிற
எந்தவொரு இலக்கியத்திலும் மதத்தின் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. பௌத்த தர்மத்தின்
கூறுகளை, படிமங்களை உள்வாங்கியே சிங்கள
இலக்கியம் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அவை பௌத்த பிரதிகள் அல்ல. பௌத்த மத விடயங்களை மட்டும் எழுதுகிறவர்களும்
இருக்கிறார்கள்.
நவீனத்துவம்,
பின்நவீனத்தும், மாய யதார்த்தவாதம் போன்ற நவீன கோட்பாடுகள் சிங்கள இலக்கியத்தை
எந்தளவு பாதித்துள்ளது?
1950 களில் பேராதனை குரு
குலத்தினூடாக- நவீனத்துவம் சிங்கள இலக்கியத்திற்குக் கிடைக்கின்றது. இதனால் நிறைய வெற்றிகள்
கிடைக்கின்றன. சிறிகுனசிங்க, குனதாஸ அமரசேகர,
சுனந்த மஹேந்திர, ஹேமரத்ன லியனாரச்சி போன்றவர்கள் நாவல் இலக்கியத்தில் புதிய வெளிச்சத்தைப்
பாய்ச்சுகின்றனர்.
பின்நவீனத்துவம் ‘ரெடிகல்’ அரசியல் குழுக்களின் ஊடாக
வந்தடைகிறது. அறிவார்ந்த தளத்தில் இயங்கக் கூடியவர்கள், இதனைப் பெரிதாக வரவேற்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தால்,
பின்நவீனத்துவம் இலக்கியத்தில் பெரிய தாக்கங்களை
உண்டுபண்ணவில்லை
1980 களின் பிந்திய காலப்
பகுதியில் மெஜிகல் ரியலிஸத்தின் பயன்பாடுகள் அதிகரிக்கின்றன. புனைவு இலக்கியத்தை யதார்த்தவாதத்திற்கு
அப்பால் கொண்டு செல்ல வேண்டும் என சிந்தித்தவர்கள் உருவாகினார்கள். 2000 ஆம் ஆண்டுகளை அடைகின்றபோது, குறிப்பாக யதார்த்தவாதத்தைக் கடந்த சிறு கதைப் பிரதிகள்
அதிகம் வெளிவருகின்றன. சைமன் நவகத்தேகம,
அஜித் திலகசேன, பியல் காரிய வசம், பிரபாத் ஜயசிங்க, கீர்த்தி வெலிசரகே, நிஷ்ஷங்க விஜய மான்ன,
நான் உட்பட பலர் இப் படியான படைப்புக்களைக் கொண்டு
வந்திருக்கிறோம். புதிய தலைமுறையிலும் பலர் எழுதுகிறார்கள்.
ஆசிரியன் இறந்து விட்டான்
என்ற கோட்பாட்டை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?
ரொலான் பார்த் ஆசிரியன்
இறந்து விட்டான் என்று சொன்னது எழுத்தாளரின்
மரணத்தையல்ல. பின் நவீனத்துவத்தின் வருகையைத் தொடர்ந்து, மொழியில் ஒன்றைச் சொல்லும் போது அதன் அர்த்தம் சொல்பவரினால் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை.
வாசிப்பவரும் அதன் அர்த்தத்தை எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பது முக்கிய மாகிறது.
இலக்கியம் என்பது
ஒற்றை நேர்கோட்டில் சொல்வதல்ல. உதாரணமாக உங்கள் பெயர் என்ன என்று கேட்டால் அதில் இரண்டு
அர்த்தம் இல்லை. ஆனால் கவிதை அப்படியில்லை. மொழிப் பயன்பாடு சிக்கல் நிறைந்ததாக மாற
மாற, அர்த்தத்தை புரிந்து கொள்வதில்
வாசகனுக்கு கூடிய பொறுப்பு உருவாகிறது. ‘ஆசிரியரின் மரணம்’ என்பது வாசகனின் பிறப்பையே
குறிக்கிறது.
இனியும் எழுத்தாளனை
மையப்படுத்தி, அந்தப் பிரதி வாசிக்கபடுவதில்லை.
வாசகனே அர்த்தத்தை உருவாக்குகிறான் என்பதையே ரொலான் பார்த்தின் கருத்து பேசவருகிறது.
இலக்கிய பணியின் அர்த்தமானது வாசக சமூகத்தினால் கூட்டாகவே உருவாக்கப்படுகிறது.
சிங்கள இலக்கியத்தின்
நவீன போக்குகள் பற்றி...
நாவல்கள் பற்றிப்
பேசினால் புதிய போக்குகள் என்று சொல்வது சிரமமானது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டு கண்டி யுகத்தை மையப்படுத்தி, காலனித்துவ காலத்தை மையப்படுத்திய வரலாற்று நாவல்கள்
எழுதும் போக்கு இருக்கிறது. இத்தகைய போக்கு ஏன் தோற்றம் பெற்றது என்று புரிந்து கொள்வது
சிக்கலாக இருக்கிறது. வாசகர்கள் அறியாத ஒரு உலகைக் கற்பனா ரீதியாகக் காட்டும்போது அவர்களை
ஈர்க்க முடியும். மேலும் கலாசாரத் தேசியவாதம் என்பன காரணமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
இதனால் நவீன பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல
வேண்டியது காலனித்துவ ஆட்சியாளர்களே எனக் குற்றம் சாட்டுவதற்காகவும் இருக்கலாம். குறிப்பிடத்தக்க
வேறு போக்குகள் இல்லை.
சிறுகதைகளில் மாயயதார்த்தவாதத்தின்
தாக்கம் இருக்கிறது. நவீன கதைசொல்லல் முறை பாவிக்கப்படுகிறது. கவிதைகளிலும் புதிய போக்கு
என்று குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் மோசமான நிலையில் இல்லை.
போருக்குப் பிந்திய
நிலமையில் சிங்கள இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன?
தீர்க்கமான மாற்றங்கள்
எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. யுத்தம் இருக்கும்போது சிங்கள இலக்கியங்கள்,
சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினை குறித்து இதை
விடப் பேசியிருக்கிறது. போருக்குப் பிந்திய இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு இருக்கின்ற
பிரச்சினைகள் என்ன என்பது பற்றி சிங்கள இலக்கியவாதிகள் இன்னும் பேசவில்லை. சிறுபான்மை
சமூகங்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச ஒரு யுத்தமோ முரண்பாடோதான் தேவையா?
அப்படி இல்லாமல் பேச முடியாதா? இது குறித்து நாங்கள் சிந்திக்க வேண்டும்.
யுத்தம் முடிந்த பிறகும்,
தமிழ் முஸ்லிம் சமூகங்கள் குறித்தும், இன ஒற்றுமை குறித்தும் எழுதப் பட்டவை யுத்த காலத்தை
அடிப்படையாகக் கொண்டே இருந்தன. யுத்தத்திற்குப் பின்னரான நிலமை குறித்து நாவல்கள்,
சிறுகதைகள் மிகவும் குறைவாகவே எழுதப்பட்டுள்ளன.
கலாசார விமர்சனத்தை
நடைமுறைப்படுத்தல் பற்றி ஒருமுறை எழுதியிருந்தீர்கள். இந்த முறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா?
ஒரு கலாசாரத்திற்கு
உட்பட்டு நாம் வாழும் போது, கலாசாரம் என்பது மாறாததாக
இருக்கிறது. ஒரு கலாசாரம் மிகவும் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளும்போது, அந்தக் கலாசாரத்திலுள்ள சிக்கல்கள் நமது பார்வைக்குப்
புலப்படுவதில்லை. இது எங்களைக் குருடாக்கும் அபாயம் உள்ளது.
நமது கலாசாரத்தை நாம்
விமர்சன ரீதியாக நோக்க வேண்டும்.பெண்களைப் பற்றிய எமது பார்வை சரியானதுதானா?
எம்மைப் பற்றி நாம் சிந்திக்கும் விதம் எப்படிப்பட்டது?
எமது கலாசாரத்தில் அன்பு என்றால் என்ன? ஆண் என்பவன் யார்? மகன் மகள் என்றால் யார்? இவற்றை நாம் புரிந்து கொண்டிருக்கும் முறை சரியானதுதானா?
எமது கலாசாரத்தினுள் கணவன் அல்லது மனைவி யாக இருக்கும்
முறையில் இன்னும் மாற்றம் வேண்டுமா? எமது கலாசாரத்தில் நாம் தமிழர்களைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் சரியானது தானா?
முஸ்லிம்களைப்
புரிந்து கொண்டிருக்கும் விதம் சரியானது தானா? சிங்களவர்களைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் சரியானது தானா?
இவை போன்ற கேள்விகளை ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள
வேண்டும். இதுதான் கலாசாரத்தை விமர்னத்தை நடை முறைப்படுத்துதல் என்பது. அந்த விமர்சனத்தை
மேற்கொள்ள கலை, இலக்கியம்,
ஊடகம், இலக்கிய விமர்சனம் என பல வழிகள் இருக்கின்றன. இல்லாதபோது எமது சிந்தனைமுறை வேர்
கொண்டுவிடுகிறது.
நவீன ஊடக பாவனை மற்றும்
தொழில்நுட்ப வளர்ச்சியினால் வாசிப் பிற்கான இடம் குறைந்திருக்கிறதா?
உண்மையில் இலக்கிய
வாசிப்பு குறைந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிகரித்துள்ளது என்பதே
எனது அவதானம். நவீன ஊடகங்களைப் பயன்படுத்தியும் வாசிக்கிறார்கள் என்பது உண்மை. புதிய
தலைமுறை இலக்கியத்தை வாசிக்காவிட்டால், இன்னும் பத்து வருடங்களில் இலக்கிய உலகம் சிக்கலுக்கு முகம்கொடுக்க இடமிருக்கிறது.
ஆனால் இவர்களை இலக்கியம் சார்ந்த வாசிப்பிற்குள் எப்படிக் கொண்டு வருவது என்பது பற்றி
அனைவரும் சிந்திக்க வேண்டும். வாசிப்பு ஒரு கௌரவமான செயல் என்பதை புதிய தலைமுறைக்கு
எப்படிப் புரிய வைப்பது என்பது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். அதனை எப்படியாவது
புரிய வைக்க வேண்டும்.
தமிழ் முஸ்லிம் சமூகங்களைப்
பற்றி தமிழில் எழுதப்படும் எழுத்துக்கள் சிங்களத்திற்கு வர வேண்டும். அதேபோல சிங்கள
சமூகம் பற்றிய எழுத்துக்கள் தமிழுக்கும் வர
வேண்டும். இப் பணி தொடர்ச்சியாக, வேகமாக நடை பெற வேண்டும். தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கான விஷேட தினமொன்றைக்
கொண்டாட முடியுமாயின் மிகவும் சிறப்பாக இருக்கும். மொழிபெயர்ப்புகளுக்கான விருது வழங்கப்பட
வேண்டும். அரச மட்டத்திலும் இதற்கான ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டும்.
இந் நேர்காணல் வழித்தடம் (ஜூலை-செப்டெம்பர்) இதழில் வெளியானது
No comments:
Post a Comment