Sunday, May 10, 2020

ஆனந்த குமாரசுவாமி – கீழ்த்திசைக் கலையை உலகறியச் செய்தவர்


கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் எழுத்தாளர் சம்பத் பண்டார அவர்களது வீட்டில் உரையாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு நண்பகல் நேரம். அவரது வீட்டில் இருந்த சாம்பல் நிற பூனை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.


ஆனந்த குமாரசுவாமி பற்றி அவ்வளவு விரிவாக நான் அறிந்திருக்கவில்லை. அவரது பங்களிப்பு மற்றும் பணிகள் எழுத்துக்கள் பற்றி எல்லாம் ஓரளவு கூறிவிட்டு அவர் தொகுத்த  நூல் ஒன்றை அன்பளிப்பு செய்தார். ஆனந்த குமாரசுவாமி நினைவேந்தல் என்பதுதான் அந்தப் புத்தகம்.

இந்த புத்தகம் ஆனந்த குமாரசுவாமி பற்றிய ஒன்பது கட்டுரைகளைக் கொண்டு 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. 

பேராசிரியர்களான சரத் சந்திர ஜீவ, டெஸ்மண்ட் மல்லிகாரச்சி,விமல் திசாநாயக்க, ஜி. எல் ப்ரேமதிலக்க,அமரதாச வீரசிங்க ஆகியோருடன் மார்ட்டின் விக்கிரமசிங்க மற்றும் சம்பத் பண்டார ஆகியோரின் கட்டுரைகளை இந்த நூல் உள்ளடக்கி இருக்கின்றது.

ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி 1877 இல் கொழும்பில் பிறந்தார். அவரது தந்தை முத்துக்குமாரசுவாமி. தாயார் எலிசபெத் க்ளே பீபி எனும் ஆங்கில பெண். எட்டு மாத குழந்தையாய் இருந்த ஆனந்த குமாரசுவாமியுடன் 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிரந்தரமாக வசிப்பதற்கு சென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் நிலவியல் துறையில் பிஎஸ்சி பட்டம் பெற்றார்.

1903ம் ஆண்டு முதல் 1906 வரை இலங்கையிற் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். இக்காலத்தில் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று கனிய ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இவரே 'தோரியனைட்' என்ற கனியத்தை கண்டுபிடித்தார்.
இந்த பயணங்கள் அவரது சிந்தனையை இன்னும் ஒரு பக்கமும் திருப்பி விட்டது. இலங்கையின் கலை கலாசாரம் பற்றி ஆழமாக அவதானிக்கவும் ஆய்வு செய்யவும் இது உதவியது. இதன் விளைவாக “இடைக்கால சிங்கள கலை“(Medieval Sinhalese Art -1908) எனும் நூலை வெளியிட்டார். சிங்களக் கலை வரலாற்றில் முக்கிய நூலாக இது கருதப்படுகிறது.

1906ஆம் ஆண்டு முதல் தடவையாக இந்தியா பயணமானார். அவரது இந்தியப் பயணம் இந்தியா கலாசார ரீதியாக எழுச்சி பெறுகின்ற, சுதந்திரப் போராட்டம் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த ஒரு காலத்தில் நிகழ்ந்தது. இந்தியாவின் பண்டைய இடங்களை தரிசிப்பதற்காக பல இடங்களுக்கும் விஜயங்களை மேற்கொண்டார். இந்திய கலை மற்றும் கலாசாரம்  குறித்த ஆழமான உணர்வு அவருக்கு ஏற்பட்டது. கீழைத்தேச மரபுகளின் தனித்தன்மையின் சௌந்தர்யத்தில் தன்னை அவர் தொலைத்துக் கொண்டார்.இக்காலத்தில் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் உடன் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது.இந்திய கலையை உலகறியச் செய்த பெருமை அவருக்கு உண்டு.

சிவ நடனம்  (Dance of Shiva) என்கின்ற அவரது புத்தகம் அவருடைய அதிகமாக வாசிக்கப்பட்ட புத்தகங்களில் முக்கியமானதாகும்.
இனி அந்த நூல் குறித்துச் சொல்லலாம்.

இடைக்கால சிங்கள கலை  நூல் குறித்த பேராசிரியர் சரத் சந்திர ஜீவ அவர்களுடைய கட்டுரை பேசுகிறது. 

இடைக்கால சிங்கள கலை  எனும் நூலின் முன்னுரையின் ஒரு பகுதியை வைத்து ஆனந்த குமாரசுவாமி மற்றும் கால் மாக்ஸ் இருவர் பற்றிய ஒப்பீட்டு ஆய்வாக பேராசிரியர் டெஸ்மண்ட் மல்லிகாரச்சியின் விரிவான கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.

மற்றது கலாசாரத்தின் மூலத்தை தொட்டவர் என்ற மாட்டின் விக்கிரமசிங்கவினுடைய கட்டுரை.

குமாரசுவாமியினுடைய கலை, மதம் மற்றும் தத்துவக் கோட்பாடுகள் பற்றிய பேராசிரியர் விமல் திசாநாயக்கவினுடைய கட்டுரை அடுத்ததாக இடமிருக்கிறது.

பேராசிரியர் ஜி. எல் பிரேம திலக்க எழுதிய ஆனந்த குமாரசுவாமியின் புத்தர் சிலையின் தோற்றம் பற்றிய கருத்து குறித்த கட்டுரை அடுத்த கட்டுரை. 

ஆனந்த குமாரசுவாமி மற்றும் கீழைத்தேய கலாச்சார முறை பற்றிய கட்டுரை கலாநிதி அமரதாச வீரசிங்கவுடைய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. 

இடைக்கால சிங்கள கலை ஆய்வும் மலையகத்தில் சாதி அழுத்தம் தொடர்பாக பேராசிரியர் சரத் சந்திர ஜீவ எழுதிய கட்டுரை அடுத்ததாக இடம்பெற்றுள்ளது.

இறுதிக் கட்டுரை ஆனந்த குமாரசுவாமியின் நூல்களின் விடயப் பரப்பு மற்றும் பன்முகத்தன்மை குறித்தும் அவரது தனித்துவமான மொழி அறிவு பற்றியும் சம்பத் பண்டாரவினால் எழுதப்பட்டுள்ளது.

ஆனந்த குமாரசுவாமியினுடைய எழுத்து சிந்தனைப் பின்புலம் பற்றி முழுமையானதும் விமர்சன ரீதியானதுமான ஒரு பார்வையை இந்த நூல் தருகிறது.

இருபதாம் நூற்றாண்டில் ஆசியாவில் தோன்றிய கலை விமர்சகர், கலை தத்துவஞானி, கலை வரலாற்றாளர் இன்னும் கீழைத்தேய உலகின் கலையை கிழக்கிற்கு வெளியே கொண்டு சென்ற ஒரு யுக புருஷராக அவர் இருக்கிறார்.

அவர் ஒரு கலை விமர்சகர் மட்டுமல்ல. சிந்தனையாளர், ஆய்வாளர், பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்று இருந்தவர். 36 மொழிகளை அறிந்திருந்த அவர் 500க்கும் மேற்பட்ட வெளியீடுகளை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த குமாரசுவாமியினுடைய எழுத்து பின்வரும் நான்கு பரப்புகளில் உள்ளடங்கி இருப்பதாக சம்பத் பண்டார குறிப்பிடுகிறார்.

1. கலை கலை வரலாறு கலை விமர்சனம்
2. தத்துவம் மற்றும் மதம்
3. கட்டடக்கலை
4. விஞ்ஞானம்

இலங்கை வரலாற்றில் சர்வதேச ரீதியாக கீர்த்தியடைந்த முதலாவது இலங்கை நபராக சம்பத் பண்டார அவரைக் குறிப்பிடுகிறார்.

“இந்தியக் கலை வரலாறு, கீழைத்தேச கலை வரலாறு பற்றிய படிப்பில் ஆய்வில் டாக்டர் கலாயோகி ஆனந்தக்குமாரசாமியின் பெயர், ஆளுமை இடம் பெறுவது தவிர்க்க முடியாதாயிற்று. அந்தளவிற்கு அவரது கலை பற்றிய சிந்தனைகள், கலைக்கோட்பாடுகள், கலை ஆய்வுகள் மேலைத்தேச கீழைத்தேச ரீதியிலான கலைப் பற்றிய ஒப்பீட்டுப் பார்வைகள் என விரிவுறும் புலமைத் தாக்கம் ஆழமானது அகலமானது. கீழைத்தேச கலையியல் வரலாற்று மூலங்களின் தனித்தன்மையை உலகளாவிய நோக்கில் எடுத்துப் பேசியவர் ஆனந்தக்குமாரசாமி.“ என தெ. மதுசூதனன் எழுதுகிறார்.

ஆனந்த குமாரசுவாமியினுடைய எழுத்தின் எல்லைகளைப் பார்க்கின்ற போது அவர் ஆசியக் கலை பற்றிய தேடலுக்கான வாயில்களைத் திறந்து விட்டிருக்கிறார்.

“கீழைத்தேச மரபுச் செல்வத்தை மேலைத் தேசத்தவர்கள் அதிசயித்து புரிந்து கொள்ளும் வகையில் ஆனந்தக்குமாரசாமியின் ஆய்வுகள் நூல்கள் கட்டுரைகள் யாவும் அமைந்துள்ளன.“ என்று தெ. மதுசூதனன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

ஒற்றை மைய உலகு குறித்துப் பேசும் இன்றைய சூழலில் சுதேசப் பண்பாடு கலாசாரம் பற்றிய பிரக்ஞை முன்நிறுத்தப்படுகிறது. அந்தஅடிப்படையில்  கீழைத்தேசப் பண்பாட்டை புரிந்து கொள்ளவும் அதனது வேர்களை அறிந்து கொள்ளவும் ஆனந்த குமாரசுவாமி பல்வேறு பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.

ஒருமுறை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது மூன்றாம் உலக நாடுகளின் கலை இலக்கியங்களை,பண்பாடுகளை,அரசியலை நாம்தான் பேசுபொருளாக்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.ஆனந்த குமாரசுவாமி அத்தகைய ஒருவராக தன்னை எப்போதோ முன்நிறுத்தியிருக்கிறார்.

Writer. Sampath Bandara




No comments:

Post a Comment