Wednesday, June 24, 2020

இசை இன,மத,மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கிறது - கிஹான் பத்திரன



கிஹான் தனன்ஜய பத்திரன இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்லயைச் சேர்ந்தவர்.பெல்மடுல்ல தர்மாலோக நவோத்யா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றுவிட்டு கட்புல மற்றும் அரங்கேற்றற் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.மனோரி உத்கலகே என்ற சங்கீத ஆசிரியை இவரை பல்கழைக்கழகம் வரை அனுப்புவதில் அதிக ஈடுபாடு காட்டியதாக கிஹான் நினைவு கூர்கிறார்.


நிகழ்த்துகலைத் துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்த கிஹான் 2016 ஆம் ஆண்டு இரத்தினபுரி பலாபத்தல, ஶ்ரீபாத மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெறுகிறார்.

தனது மாற்று இசை முயற்சி குறித்து அவர் இப்படிக் கூறுகிறார்.

2017 ஆம் ஆண்டு உலக சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.சங்கீதப் பிரிவினால் ஒரு நிகழ்ச்சி செய்ய முடிவானது.சூழல்தினம் என்பதால் அதனோடு இசைந்ததாய் ஏதாவது செய்ய வேண்டும் என என் உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

தண்ணீர்க் குவளை, குடம் போன்றவற்றை பயன்படுத்தி இசையைப் பெற முடியும் என்று நான் தெரிந்திருந்தாலும் அத்தகைய ஒரு படைப்பை இதற்கு முன்னர் செய்திருக்கிவல்லை. இலங்கையிலும் அத்தகைய முயற்சிகள் நடந்ததாக நான் அறியவில்லை.ஆனால் உலகத்தில் அப்படி இருக்கும் என்று நினைத்தேன்.இருந்தாலும் இணையத்தில் அது பற்றி நான் தேடி அறிந்து வைத்திருக்வில்லை.

சுனில் ஷான்தவினுடைய வலாகுலின் பெஸ“ எனும் பாடலை 20 மாணவர்கள் அளவில் வைத்து முயற்சி செய்தேன். வெற்றுப் போத்தல்,தண்ணீர் நிரப்பிய குவளை,குடம், PVC குழாய்,அடிமட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த முயறசியை செய்தேன். இதை ஒரு நண்பர் ஒளிப்பதிவு செய்து இணையத்தில் வெளியட்டார்.இந்த முயற்சிக்கு இவ்வளவு பாராட்டுக்கள் குவியும் என்று நான் அறிந்திருக்கவில்லை.பிந்திய நாட்களில்தான் இதனைத் தெரிந்து கொண்டேன்.

கனடாவில் இருக்கும் ஒடாவா மியூசிகல் பான் ஊடாக அண்மையில் எமக்கு இசைக் கருவிகளும் கிடைக்கப் பெற்றன.

அதன் பிறகு இது பற்றி உரையாடவும் புதிய பாடல் ஒன்றை இசைப்பதற்கும் தேசிய ரூபவாஹினியில் இருந்து அழைப்புக் கிடைத்தது.என்ன பாடலை இசைக்கலாம் என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.இந்த இசை வடிவத்திற்கு பொருத்தமான பாடலையே நான் தேடிக் கொண்டிருந்தேன்.அப்போது எனது விருப்பத்திற்குரிய .ஆர் ரஹ்மான் இசையமைத்து மின்மினி பாடிய சின்ன சின்ன ஆசை பாடல் கிடைத்தது. இந்தப் பாடல் எனது முயற்சிக்கு மிகப் பொருத்தமான பாடல் என்பதை நான் அறிந்து கொண்டேன்.


தேசிய ரூபவாஹினியின் நிகழ்ச்சி ஒன்றிற்காக இரண்டு பாடலையும் ஒளிப் பதிவு செய்தோம். வலாகுலின் பெஸ“  பாடல்தான் அதில் ஒளிபரப்பாகியது. அண்மையில் மற்றுமொரு நிகழ்ச்சியில் சின்னச் சின்ன ஆசை பாடல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதுவே வைரலாக பல திசைக்கும் பரவி உங்களையும் என்னோடு இணைத்தது.

இந்த முயற்சிக்கு இவ்வளவு அங்கீகாரமும் பாராட்டும் கிடைப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.எனது பாடசாலையினதும் மாணவர்களதும் புகழ் உலகமெல்லாம் பரவுவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

இசை இன,மத,மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை இணைக்கிறது.அந்த மகிழ்ச்சி ஒன்றே போதும்.

https://www.youtube.com/watch?v=n9eirFEKP3s


No comments:

Post a Comment