Wednesday, January 15, 2020

மனிதாபிமானத்தின் உயர்ந்த செய்தியை சிறுவர்கள் மூலம் கொண்டு செல்ல நான் விரும்பினேன் - இயக்குநர் சோமாரத்ன திஸாநாயக்க




சரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான சோமாரத்ன திஸாநாயக்க இலங்கையின் சிங்களத் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர்.அவரது முதல் படமே பெரும் வெற்றியீட்டியது.இதனால் அவுஸ்திரேலியாவில் மருத்துவ கதிரியக்கவியல் நிபுணராக இருந்த அவர் சினிமாத்துறைக்கு தன்னை மாற்றிக் கொண்டு இன்றும் அத் துறையில் பயணிக்கிறார்.இவரது பெரும்பாலான படங்கள் சிறுவர்களை மையப்படுத்திய சமூக யதார்த்தப் படங்களே.

சிட்னி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்து கலைத் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தையும் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சினிமாத்துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

சரோஜா,புன்சி சுரங்கனாவீ,சூரிய அரண,சமனலதடு,சிறி ரஜ சிறி,பிந்து போன்ற படங்கள் பெரும் வரவேற்றைப் பெற்றதோடு சர்வதேச விருதுகளையும் வென்றன.இவரது பெரும்பாலான படங்கள் கலை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.அவரது சமீபத்திய திரைப்படம் சுனாமி தற்போது வெளிவந்துள்ளது.இலங்கையின் சிங்கள சினிமாவில் அவரது முயற்சியும் பங்களிப்பும் தனித்துவம் வாய்ந்தது.அவருடன் மேற்கொண்ட உரையாடல் இது.

சந்திப்பு - இன்ஸாப் ஸலாஹுதீன்

நீங்கள் மருத்துவ கதிரியக்கவியல் நிபுணராக இருந்து சினிமாத்துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

பாடசாலைக் காலத்திலிருந்து கலையில் நாட்டம் இருந்தது.கவிதை எழுதுவது மேடை நாடகங்ளில் நடிப்பது என கலைத் துறையில் நான் இயங்கிக் கொண்டிருந்தேன்.எனவே நான் நாடக வகுப்புக்களுக்கு போய் கற்க ஆரம்பித்தேன்.பேராசியர் எதிரிவீர சரத்சந்திர, தம்ம ஜெயகொட, ஹென்ரி ஜயசேன, தயானந்த குணவர்தன போன்றோர் என்னுடைய ஆசிரியர்கள்.

நாடகத்தில் அதிக ஈர்ப்பு இருந்ததால் நான் நாடகங்களை எழுதி இயக்க ஆரம்பித்தேன்.அவை பிரபலமாயின.வெடிக்காரயோ மீ புர வெசியோ போன்றன அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்.

பாடசாலை வாழ்க்கையை முடித்த பிறகு லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கதிரியக்கவியல் துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்தேன். 1978 இல் பொருளாதார காரணங்களுக்காக அவுஸ்திரேலியா பயணமாகி கதிரியக்க நிபுணராக பணியாற்றினேன்.

அங்கும் கலைத்ததுறையில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் சிட்னி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்து கலைத் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தை முடித்தேன்.

நான் மருத்துவத் துறையில் பணியாற்றினாலும் எளக்குள் இருந்த கலையின் சுவாலை அணைந்து விடவில்லை.அது எரிந்து கொண்டுதான் இருந்தது. சரோஜா திரைப்படத்தை இயக்குவதற்காக இலங்கைக்கு வந்தேன்.

அத் திரைப்படம் அமோக வெற்றியைத் தந்தது. மருத்துவத்துறையை விட்டுவிட்டு முழுநேரமாக கலைத் துறையில் ஈடுபட முடிவு செய்தேன்.பொருளாதார ரீதியாக இது ஆரோக்கியமான முடிவல்ல என்பது எனக்குத் தெரியும்.அதன் பின் அவுஸ்த்திரேலிய பணியையும் குடியுரிமையையும் கைவிட்டுவிட்டு எனது மனதுக்குப் பிடித்த சினிமாத் துறையில் இயங்க ஆரம்பித்தேன்.இது எனது மனதுக்கு திருப்தி தருகிறது.


உங்களது பெரும்பாலான படங்கள் சிறுவர்களை மையப்படுத்திய படங்களே.ஆனால் அவை சிறுவர்களுக்கான படங்கள் அல்ல.உங்களது கதைகள் ஏன் அவ்வாறு சிறுவர்களை மையப்படுத்துகின்றன?

உண்மையில் அவற்றை சிறுவர்களுக்கான திரைப்படம் என்று நான் அழைக்கவில்லை.அவை குடும்ப திரைப்படங்கள் என்றுதான் நான் சொல்ல விரும்புகிறேன்.

சிறுவர்களை மையப்படுத்தி சமூகத்திற்கு தேவையான செய்தியைக் கொடுப்பது சிறந்ததாக எனக்கத் தோன்றுகிறது. மனிதநேயக் குணங்கள் அவர்களிடம்தான் இருக்கின்றன. பிரிவுகளும் வேறுபாடுகளும் இல்லாதவர்கள் சிறுவர்கள்.வளர்ந்தவர்கள் இன பேதம், மத பேதம், கட்சி பேதம் என எத்தனையோ வகையான வேறுபாடுகளோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே மனிதாபிமானத்தின் உயர்ந்த செய்தியை சிறுவர்கள் மூலம் கொண்டு செல்ல நான் விரும்பினேன்.இந்தப் படங்கள் மூலமாக பெரியவர்களின் பிரச்சினைகளை, சமூகங்களுக்கு இடையிலுள்ள பிளவுகளை நான் மையப்படுத்தியிருக்கிறேன்.

சினிமாவால் சமூகத்தில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?

ஒரு கலைஞனால் சமூகத்தில் நிறைய மாற்றங்களை சாதிக்க முடியும்.ஏனையவர்களால் பேச முடியாதததை ஒரு கலைஞன் பேசுகிறான்.குரலற்ற ஒருவருக்கு அவன் குரல் எழுப்புகிறான்.எந்தவகையான கலைஞனாக இருந்தாலும் உணர்வுகளின் வழியே அவன் சமூகத்துடன் ஊடாடுகிறான்.சினிமா என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு கலை ஊடகம்.ஆனால் சிறந்த முறையில் அதனைப் பயன்படுத்த வேண்டும்.நல்ல செய்தியை  மகிழ்வளிப்புடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

உங்களது பாடல்கள் இல்லாத சிறுவர் நிகழ்ச்சிகள் இல்லை எனும் அளவுக்கு உங்களது திரைப்பட பாடல்களை சிறுவர் நிகழ்வுகளில் காண முடிகிறது. நீங்கள் உருவாக்க நினைக்கும் குழந்தைகளின் உலகம் என்ன?

இசை அலாதியனதொரு கலை வடிவம்.அதன் மூலம் சிறுவர்களின் உலகை நான் எட்டிப் பார்க்கிறேன்.என் பாடல்களில் இந்த உலகைப் பற்றி அதன் வசீகரம் பற்றி சுற்றுச் சூழல் பற்றி அதனைப் பாதுகாப்பது பற்றி அதனை நாம் எப்படி பகிர்ந்து வாழ வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசியிருக்கிறேன். மனிதம் நிறைந்த உலகை உருவாக்கவே நான் விரும்புகிறேன்.

வெறும் அறிவுரைகளால் மாத்திரம் அவர்களை வழிப்படுத்த முடியாது.எந்தத் தத்துவத்தையும் வாழ்க்கைப் பாடத்தையும் அவர்களுக்குப் பிடித்த முறையில் கொடுக்கும் போததான் அது உரிய விளைவைத் தரும். நீங்கள் சொல்வது போல குழந்தைகளின் கொண்டாட்டம் எனக்கு மன நிறைவைத் தருகிறது.

இன்றைய தலைமுறையின் பாடல் ரசனை பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?

இன்று பெரும்பாலும் ரசனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.தலைமுறைக்கு தலைமுறை ரசனையில் மாற்றம் ஏற்படும் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் எத்தனை காலம் கடந்தாலும் மனித உணர்வுகள் மாறுபடுவதில்லை.தொழில்நுட்பம் மாறுபட்டாலும் மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு மாறக் கூடாது என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.தொழில்நுட்பம் மட்டும் மிஞ்சியிருப்பதால் எனன் இலாபம் இருக்கிறது.

உங்களது படங்களில் இயற்கைக் காட்சிகளைப் படமாக்குவதில் கடும் பிரயத்தனம் எடுத்திருப்பீர்கள். அது பற்றி

எமது நாட்டின் அழகியலை நான் வெளியே கொண்டு வர முயற்சித்தேன்.அதனை உலகிற்கு காட்டியிருக்கிறேன்.சர்வதேச அளவில் எமது இயற்கை அழகைக் கண்டு வியக்கிறார்கள்.எல்லா நாடுகளுக்கும் அந்தக் கொடை இல்லையே.

உங்கள் படங்களைப் பார்க்கும் போது கிராம வாழ்க்கைதான் சிறந்தது என்பது போல நினைக்கத் தோன்றுகிறது. கிராமங்களில்தான் சிறந்த வாழ்க்கை இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

எங்கு வாழ்க்கை சிறந்தது என்று ஒரு போதும் நான் பிரித்துப் பார்க்கவில்லை. கிராமம்,நகரம் இரண்டுமே இப்போது ஒன்றுபோல ஆகிவிட்டன. கிராமத்தில் இருந்து நாங்கள் படித்துக் கொண்ட பாடங்கள் நகரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.  

தமிழில் திரைப்படம் எடுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறதா?

தமிழில் திரைப்படம் எடுக்கும் ஆசை இல்லாமல் இல்லை. ஆனால் தமிழில் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதற்கான நிறுவனங்களை உருவாக்கி அவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
தமிழ் ரசிகர்கள் பெரும்பாலும் சிங்களப் படங்களைப் பார்ப்பதில்லை. 

இந்தியப் படங்களையே பார்க்கின்றனர். பார்ப்பதில் தவறில்லை. ஆனால் எமது ரசனை மேம்பட வேண்டும்.ஆழமான விடயங்களை நோக்கி பயணிக்க வேண்டும். இலங்கையில் தமிழில் படம் உருவாக்க முயற்சியுங்கள்.நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்.

இலங்கையின் திரைப்படத்துறை எதிர்நோக்கும் சவால்கள் பற்றி

தயாரிப்புக்கான மூலதனம் என்பது எப்போதும் ஒரு சவால்தான். நல்ல திரையரங்குகள் இல்லை. சிறந்த விநியோக முறை இல்லை. இதுபோன்ற சவால்கள்தான் இருக்கின்றன.இருந்தாலும் எமது படங்கள் சர்வதேச விருதுகள் வென்றுள்ளன.சவால்களைக் கடந்துதான் பயணிக்க வேண்டியிருக்கிறது.

உங்களது சமீபத்திய படம் சுனாமி பற்றி...

சுனாமி எனும் துயரம் எமது நாட்டை சோகத்தில் ஆழ்த்தியது. நாங்கள் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று இல்லாமல் அனைவருமாகவே அந்த சோகத்தை எதிர் கொண்டோம்.அந்த துயரத்தை மையப்படுத்தியதுதான் இந்தப் படம். ஒரு குழந்தைக்கு தமிழ்க் குடும்பமும் சிங்களக் குடும்பமும் உரிமை கோரும் கதைதான் சுனாமி.






No comments:

Post a Comment