Wednesday, October 16, 2019

ஒரு கூர்வாளின் நிழலில் – கண்ணீரின் சாட்சியம்




தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“ ஒரு போராளியின் வாழ்நாள் சாட்சியமாக நமக்கு முன் நிற்கிறது.சாதாரண பாடசாலைச் சிறுமியாய் இருந்து 20 வருட போராட்ட வாழ்வில் நுழைந்து, ஒரு கைதியாய் பிடிபட்டு நோயின் காரணமாக மரணித்துப் போகும் வரையான காலத்தை உயிரோட்டமாய் பதிவு செய்திருக்கிறார். தமிழினியின் வாழ்நாளில் தனக்கு முன்னால் தோன்றிய ஒரு போராட்டத்தில் வாழ்ந்து, தன் கண்களுக்கு முன்னாளே அது தோற்றுப் போவதையும் பார்த்து அவர் பேசும் வார்த்தைகள் நம்மை ஆழமாகச் சுடுகின்றன.


இலங்கை வரலாற்றில் மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தமும் கொல்லப்பட்ட உயிர்களும் எப்படிப் பொருள் கொள்ளப்படப் போகின்றன? யாருக்காக இத்தனை கொலைகள், உயிரிழப்புகள்? என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்புகிறது தமிழினின் நூல்.

தமிழினி இப்படி எழுதுகிறார் “ போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன்.போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாக போருக்குள் வாழ்ந்திருக்கிறேன்.போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டோம். கையிலெடுத்த ஆயுதங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தை தோற்கடித்து விட்டோம்.இன்று எமது மக்களின் வாழ்வு பலநூறு வருடங்கள் பின்னோக்கிப் போய்விட்டதாகவே எனக்குப் படுகிறது“

ஒரு போராடத்தின் இலட்சியம் எப்படி வழிதவறிப் போனது என்பதையும் இறுதிக் கட்ட யுத்தத்தில் தங்களது இயலாமையும் இரத்தமும் சதையுமாக அவர் பதிவு செய்கிறார்.

தனது இளமைக் காலத்து நினைவுகள் என்று தமிழினிக்கு போரைத் தவிற எதுவும் இல்லை என்பதை மிகவும் உறுக்மாக அவர் பதிவு செய்யும் தருணம் மிகுந்த நெகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

போரோடு தன் வாழ்வையே கரைத்துக் கொண்ட ஒரு பெண்ணின் வாக்குமூலமாகவும் சாட்சியமாகவும் இப் புத்தகத்தைப் படிக்கையில் துக்கம் நெஞ்சை அடைக்கிறது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் தோல்வி,சரணடைதல்,புனர்வாழ்வு,விடுதலை பற்றிய அத்தியாயங்கள் கூடுதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
இறுதி யுத்த நேரத்தில் விதலைப் புலிகளின் பிம்பம் எத்தனை பலவீனமாய் இருந்தது என்பதை உள்ளிருந்து அவர் பேசுகிறார்.

“உயிருடன் இருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னைத் தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.“

20 வருடங்கள் ஆயுதம் ஏந்திய ஒருவர் ஆயுதப் போராட்டத்தை வெறுக்கும் அவரது மனநிலை மாற்றம் இறுதியில் சமாதானத்தை யாசிக்கிறது.
“ஆயுதம் ஏந்துவதன் மூலமோ அல்லது பழிக்குப் பழி வாங்குதலின் மூலமோ எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் செய்துவிட முடியாது என்பதை அனுபவத்தின் பாடங்கள் கற்றுத் தந்து விட்டன. அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தினதும் வளர்ச்சிக்கான இயல்பான சாத்தியப்பாட்டை உருவாக்கும்.“

உண்மையான சமாதானத்தையே இறுதியில் தமிழினி விரும்பினார்.ஆனால் அது அத்தனை சுலபமானதல்ல என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். ‘உண்மையான சமாதானத்தின் வழியானது,போருக்கான பாதையை விடக் கடினமானது என்பதையும் நான் உணர்ந்துள்ளேன்.“ என அவர் முன்னுரையில் எழுதுகிறார்.

43 வருட வாழ்க்கையில் தமிழினி போராட்டத்திற்கு வெளியே வாழ்ந்த நாட்கள் சொற்பமானவை. இருந்தாலும் தன் எழுத்தினால் மகத்தான பாடங்களை மானுடத்திற்கு அவர் வழங்கியிருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.


No comments:

Post a Comment