Thursday, July 18, 2019

மகாத்மா காந்தி: இலங்கை விஜயமும் இலங்கை அரசியலும்

பிரபல சிங்கள எழுத்தாளர் சம்பத் பண்டார அவர்களது 'மகாத்மா காந்தி: இலங்கை விஜயமும் இலங்கை அரசியலும்' என்ற நூல் காந்தியின் இலங்கை விஜயம் குறித்த பல்வேறு தரவுகளை முன்வைக்கின்றது.

காந்தியின் இலங்கை விஜயம் குறித்து இணையத்தில் வித்தியாசமான கருத்துக்கள் இருக்கின்றன.அதாவது சீ. கொரியா என்பரே காந்தியை இலங்கைக்கு அழைத்ததாகவும் அவர் மூன்று வாரங்கள் இலங்கையில் இருந்ததாகவும் சிலாபத்தில் தங்கியதாகவும் தகவல்கள் இணையத்தில் இருக்கின்றன.

ஆனால் சம்பத் பண்டார இந் நூலில் அதற்கு மாற்றமான வல்களை முன்வைக்கிறார். 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் (Jaffna Students Congress) தான் காந்தியை இலங்கைக்கு அழைத்த முதலாவது அமைப்பாகும்.பின்னாளில் இது  யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) என பெயர் மாற்றம் பெற்றது.யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸின் ஸ்தாபகர்களுள் ஒருவரான ஹண்டி பேரின்பநாயகம் காந்தியின் இலங்கை விஜயத்திற்கு முக்கியமான காரணியாக செயற்பட்டார் எனவும் காந்தி இலங்கையில் 17 நாட்கள் தங்கியிருந்ததாகவும் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

சீ. கொரியாவின் அழைப்பு குறித்து நூலாசிரியருடன் உரையாடிய பொழுது அது பிழையான தகவல் எனவும் விகிபீடியா தவிர வேறு எந்த நூலிலும் அதனை நிரூபிப்பதற்கான ஆதாரம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

1901 ஆம் ஆண்டு ஆபிரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் நண்பர்களுடன் இந்தியா செல்லும் வழியில் இலங்கைக்கு குறுகிய ஒரு விஜயத்தை காந்தி மேற் கொண்தாக கொழும்பு நகர சபையில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார் என்பதையும் இங்கு மனங் கொள்ளலாம்.

இனி நூலில் உள்ள விடயங்களை சுருக்கமாக நோக்குவோம்.

ஏர்வாடா சிறையிலிருந்து காந்தி விடுதலையானதைத் தொடர்ந்து 1924 ஆம் ஆண்டு அனகாரிக தர்மபாலவினால் காந்திக்கு அனுப்பப்பட்ட செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.

'உங்கள் விடுதலையினால் இலங்கை பௌத்தர்கள் மிழ்ச்சியடைகின்றனர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இலங்கை விஜயம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கிறோம். கரையோர தங்குமிட ஏற்பாடு செய்யப்படும்' என்பதே அந்தச் செய்தி.

ஆனால் காந்தி இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கோ அதன் பிறகு இருவரும் கருத்துப் பரிமாறியதற்கோ எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 1927 நவம்பர் 12 ஆம் திகதி  S.S Chinkoa  கப்பலில் இலங்கைத் துறைமுகத்தை வந்தடைந்தார்.இலங்கை விஜயத்தின் பிரதான நோக்கம் ஏழை மக்களுக்கு உதவும் காடி (Khadi) அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதாகும்.

உலகின் நன்மதிப்பை வென்ற காந்தி எனும் ஆளுமையைக் கான மக்கள் திரண்டிருந்தனர்.மிகுந்த மரியாதையோடு காந்தி வரவேற்கப்பட்டார்.காந்தி வந்த அதே தினம்தான் டொனமூர் கமிஷகும் இலங்கை வந்தது என்பது முக்கிய செய்தி.



இந்த விஜயத்தில் காந்தியின் மனைவி கஸ்துர்பா காந்தி, சீ.ராஜகோபாலச்சாரி, மஹாதேவ் தேசாய், பியரெலால் நாயர், லக்ஷ்மி ராஜகோபாலச்சாரி, ஜம்னதாஸ் காந்தி ஆகியோர் பங்கெடுத்தனர்.
நவம்பர் 13 ஆம் திகதியிலிருந்து நவம்பர் 29 வரை அவருடைய பயணங்களை பற்றி நூலாசிரியர் விரிவாக எழுதுகிறார்.அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது.

நவம்பர் 13 - செட்டி பிரஜைகளை சந்தித்தல் விவேகானந்தா சமூக நிறுவனத்தில் உரை

நவம்பர் 14 - ஓய்வு

நவம்பர் 15 - கொழும்பு நகர சபையில் வரவேற்பு. பின்னர் ஆனந்த,நாலந்த கல்லூரி, மாளிகாகந்த விகாரை, இளைஞர் கிறிஸ்தவ சங்கம் ஆகியவற்றுக்கு விஜயம்

நவம்பர் 16 - யூனியன் ப்ளேஸ் புனித ஜேம்ஸ் மண்டபத்தில் உரை, இலங்கை தொழிலாளர் கங்கத்துடனான சந்திப்பு

நவம்பர் 17 - நீர் கொழும்பு விஜயம்

நவம்பர் 18 - கண்டி விஜயம்,மகாநாயக்க தேரர்களுடனான
சந்திப்பு,திரித்துவ, தர்மராஜ கல்லூரி விஜயம், ரயிலில் பதுளை நோக்கி பயணம்

நவம்பர் 19 -  பதுளை

நவம்பர் 20 - நுவரெலியா விஜயம் மற்றும் தமிழ் தொழிலாளர்களுடனான சந்திப்பு

நவம்பர் 21 - கண்டி மற்றும் மாத்தளை விஜயம்

நவம்பர் 22 - கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு விஜயம், இலங்கை தேசிய சங்கத்துடனான சந்திப்பு

நவம்பர் 23 – தெற்கு நோக்கிய பயணம்

நவம்பர் 24 - மாத்தறை மற்றும் காலி விஜயம்

நவம்பர் 25 - பௌத்த இளைஞர் சங்கத்துடனான சந்திப்பு

நவம்பர் 26-28 யாழ்ப்பாண விஜயம்

நவம்பர் 29 -  தலை மன்னார் வழியே இந்தியா நோக்கிப் பயணம்

அடுத்த அத்தியாயத்தில் பயண ஏற்பாட்டுக் குழு தொர்பாக ஓரளவு விரிவான குறிப்புக்கள் நூலில் இடம் பெற்றிருக்கின்றன.

நூலின் இறுதி அத்தியாயம் காந்தியின் இலங்கை விஜயமும் இலங்கை அரசியலும் என்ற தலைப்பில் இடம்பெறுகிறது.இது விரிவாக எழுதப்படாவிட்டாலும் காந்தியின் இலங்கை விஜயம் மற்றும் அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைய இலங்கையின் அரசியல் பின்புலத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நூலாசிரியர் விளக்குகிறார்.

காந்தி தனது குறுகிய விஜயத்தின் மூலம் சமத்துவம் மற்றும் சகவாழ்வு குறித்த அழகிய பாடங்களை கற்பித்தார்.அவர் அனைத்து இன மக்களையும் சந்தித்தார். அனைத்து இனப் பாடசாலைகளுக்கும் விஜயம் செய்தார்மாணவர்களுடன் உரையாடினார்.தொழிலார்களுடன் சந்திப்புக்களை மேற் கொண்டார். சுமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்களுடன் உறவாடினார்.


காந்தியின் இலங்கை விஜயத்தினால் இலங்கை அரசியல் சிந்தனைப் பாரம்பரியத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை நூலாசிரியர் ஆதங்கத்துடன் பதிவு செய்கிறார்.காந்தி அம்பேத்கர் வழியில் இன, மத, குல பேதங்களைக் கடந்த ஒரு தேசிய போராட்டத்திற்கு எமது அரசியல்வாதிகள் முன்வரவில்லை இதனால் 1958, 1971, 1983 ஆண்டுகளில் எத்தனையோ அழிவுகளை இந்த நாடு சந்தித்தது.

காந்தி இலங்கையின் சுதந்திரம் குறித்து மிகுந்த கரிசனை கொண்டிருந்தார்.1948 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்றால் அதற்கு  மிகப் பெரிய மறை நிழலாக அவர் இருந்தார் என்று சம்பத் எழுதகிறார்.

நூலின் இறுதியில் இலங்கை விஜயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளதோடு காந்தின் வாழ்நாளில் நடந்த முக்கிய விடயங்கள் குறிப்புக்களாக தரப்பட்டுள்ளன.

இந்த நூல் காந்தியின் இலங்கை விஜயம் குறித்த பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.காந்தியின் 150 பிறந்ததின நிகழ்வுகள் நடைபெறும் ஒரு தருணத்தில் இந்த நூல் வெளியாகியிருக்கிறது.

காந்தியின் உரைகளின் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தையும் காந்திய சிந்தனை மற்றும் இலங்கை அரசியல் குறித்தும் சமகால உரையாடல் ஒன்றை சம்பத் பண்டார இந்த நூலில் உருவாக்குகிறார்.



No comments:

Post a Comment