பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான ஒரு
செயலமர்வில் லறீனா அப்துல் ஹக் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அப்போது அவர்
“பொறு மகளே பொறு மகளே“ என்ற பாடலைப் பாடினார்.அதன் சில வரிகள் அன்றிலிருந்தே
எனக்குள் மனனமாய் இருக்கிறது.
அப்போது அவருடனான பரிச்சயம் எனக்கு இருக்கவில்லை.
பின்னர் பிரதேச கிளை மொழி குறித்த ஒரு ஆய்வு தொடர்பாக அவரைச்
சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது அவர் கெலிஓய,முருதகஹமுல பிரதேசத்தில்
தங்கியிருந்தார்.வயல் வெளிகளினூடே சென்று அவரது வீட்டில் கலந்துரையாடினேன். அதற்குப்
பிறகு பல முறை அவரை சந்தித்துப் பேசியிருக்கிறேன். கலை,இலக்கியம்,இசை,சமூகம் என
பல்வேறு தளங்களில் காத்திரமான உரையாடல்களை மேற்கொண்டிருக்கிறோம்.
சுயமி என்பது ஒரு குழந்தையாய் அப்போதிலிருந்தே அவரிடம் இருந்த
ஒன்றுதான்.இன்று ஒரு வடிவம் பெற்று எம் முன் நிற்கிறது.இத்தனை வருடம் கடந்து அவரது
எண்ணம் செயல் வடிவம் பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
இலங்கை முஸ்லிம் சமூகத்திலிருந்து இசை முயற்சிகள் அவ்வப்போது
வெளிவந்திருக்கின்றன.அத் தொடரில் 2000 களைத் தொடர்ந்து “காற்றுச் சுமந்து வரும்
கனவுகள்“ “அக்கினிச் சுவாசம்” “பிரகாசம்“ “ சிகரம் தொட்டு“ “பிரார்த்தனை“ “மனிதம்“
போன்ற தொகுதிகள் இளைஞர்களால் வெளிக் கொண்டு வரப்பட்டது. இதில் 4 இசைத்
தொகுப்புகளில் பணியாற்றிய அனுபவம் எனக்கிருக்கிருக்கிறது. இந்த எல்லாத்
தொகுப்புக்களை விடவும் மாறுபட்டதுதான் லறீனா ஹக்கின் “சுயமி“
எதனையும் பிரதிபன்னாது லறீனா ஒரு புதிய இசை வடிவத்தை உருவாக்க
முயன்றிருக்கிறார். அதில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.ஈழத்து இசை
மரபில் நிச்சயம் இதற்கு ஒரு இடம் இருக்கிறது.இசையில் தேர்ச்சி பெற்றவர்கள் இது
குறித்துப் பேசும் போது நாம் அதனை உணர்ந்து கொள்ளலாம்.
முஸ்லிம் இசை மரபு என்றொன்று எம்மிடம் இல்லை.ஒரு காலத்துடன்
அது நின்று விட்டது.அந்த இடைவெளியை லறீனா புதிய புள்ளியில் தொடங்கியிருக்கிறார்.
அதுதான் சுயமி இசைத் தொகுப்பின் தனித்துவம் என்பேன்.ஆனால் அந்த இடைவெளி உடனடியாக நிரப்ப
முடியுமான ஒன்றல்ல.அதற்கான ஒரு உந்துதலை சுயமி நிச்சயம் இளம் கலைஞர்களுக்கு
வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த இசைத் தொகுப்பில் லறீனா பாடல் எழுதி, மெட்டமைத்து, பின்னணி
இசைக் குறிப்புக்களை எழுதி அவரே பாடியுமிருக்கிறார். இது எல்லோருக்கும் வாய்க்கப்
பெறாத ஒரு தனித்திறமை.இறைவன் அவருக்கு அளித்த கொடை. ஒரு பெண்ணாக, தாயாக,
பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்து கொண்டு இதற்காக அவர் எடுத்த பிரயத்தனம்
அலாதியானது.எந்தப் படைப்புக்குப் பின்னாலும் வார்த்தைகளால் வடிக்க முடியாத துயரம்
நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. லறீனா அவற்றையெல்லாம் கடந்து துணிச்சலுடன்
செயலாற்றியதன் விளைவே சுயமி.
இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான பாடல்கள் பல வருடங்களுக்கு
முன்னர் எழுதப்பட்டவை என்று நினைக்கிறேன்.வரிகள் காலவோட்டத்தில் பார்த்துப்
பார்த்துச் செதுக்கப்பட்டைவை.ஆனால் இசையமைப்புக்கு அத்தனை காலம் அவரால் தாமதிக்க
முடியவில்லை. இசையமைப்பும் பாடல் பதிவும் வெறும் இரு வாரங்களுக்குள் நடந்தது என
அறிந்தேன்.இன்னும் தாமதித்து இம் முயற்சி தள்ளிப் போகக் கூடாது என்று அவர்
விரும்பியிருப்பார். இதனால் இசையில் ஓர் ஒத்த தன்மை இழையோடுவதை அவதானிக்க
முடிகிறது. இதைச் சொல்லி வெறுமனே இம் முயற்சியைக் கடந்து போய் விட முடியாது. அவரது
முயற்சியில் அவர் வெற்றியடைந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இத் தொகுப்பிலுள்ள 9 பாடல்களும் பல்வேறு பாடு பொருள்களைக்
கொண்டிருக்கின்றன.சமூக விடியல், மானிட அவலம், சுதந்திரம், போர்,சமூக மாற்றம்,ஐக்கியம்
என சமூகம் சார் பிரக்ஞை கொண்டதாக எல்லாப் பாடல்களும் அமைந்திருக்கின்றன.கவித்துவம்
கொண்ட கருத்துக்களாலும் உபதேசங்களாலும் நிரம்பியிருக்கின்றன பாடல்கள்.
இயற்கை,சுற்றுச் சூழல் குறித்தும் இதமான பாடல்கள் இருக்கும் என
நான் நினைத்திருந்தேன்.ஆனால் எல்லாம் அர்த்தம் செறிந்த மெல்லிசைப் பாடல்கள்.அடுத்த
தொகுதியில் புதிய பேசுபொருள்களை அவர் தருவார் என நினைக்கிறேன்.
‘மண்ணிலே நாம் வாழும் மண்ணிலே…“ போர் குறித்து ஒலிக்கும் ஒரு
சோகம் நிறைந்த பாடல்.இப் பாடல் சில காலங்களுக்கு முன்பு வெளி வந்து நல்ல
வரவேற்பைப் பெற்றது.இப் பாடல் மூலமே லறீனா ஹக்கின் இசை குறித்த திறமையை நான் முதன்
முதல் புரிந்து கொண்டேன்.மிகத் தரமான முறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது இப்பாடல்.
“இசைப் பாடல் ஒன்றைப் பாடினே்.“ இதுதான் “சுயமி“ யின்
உள்ளார்ந்த பொருளைக் கொண்டமைந்த பாடல்.லறீனா அப்துல் ஹக்கின் அகவெளி இங்கு சித்தரிக்கப்படுகிறது.
மிகுந்த உணர்ச்சி வெளிப்பாடு இப் பாடலில் தெரிகிறது. இப் பாடலின் வரிகளும் ராகமும்
என்னை வெகுவாக ஈர்த்தது.ஒரு பெண்ணினுடைய அகம் சார்ந்த தவிப்பாக இப்பாடல்
தெரிகிறது. “காற்றுக்கு இல்லை வேலியடி..என் சிறகுக்கு இல்லை எல்லையடி“ என பெண்
மனதை அவர் இங்கு வெளிப்படுத்துகிறார்.
“நாளை விடியல் வரும் என்ற கனவினை நம்பிக் காத்திருந்தோம்“ என்ற
பாடல் முரண்பாடுகளைக் கடந்த ஐக்கியத்தை
நோக்கிய அழைப்பாகவும் சமூகம் குறித்த யதார்த்தமாகவும் இருக்கிறது.
“அண்ணை மடியில் இருக்கையிலே“ எனும் பாடலில் லறீனாவின் குரல்
உருகி ஒலிக்கிறது.தாயை நினைத்து உணர்வு ததும்பும் ஒரு அனுபவத்தை இப் பாடல் மூலம்
அவர் உருவாக்குகிறார்.
“வையம் மீதிலே மானிட ஓலம்“ என்ற பாடல் உலகமெங்கும் நடக்கும்
போர்களை நினைத்துப் பாடுகிறது.போர் என்ற பெயரில் கொல்லப்படும் அப்பாவி மக்களின்
நினைவுகளை குருதி தோய்ந்த நிலங்களில் அரங்கேறும் குரூரத்தைச் சித்தரிக்கிறது
இப்பாடல்.
“பொறு மகளே..பொறு மகளே“ பலஸ்தீன அவலத்தை நினைவு கூறும் ஒரு
பாடல்.போராட்டத்தின் நிரந்தரக் குறியீடாக இருக்கும் பலஸ்தீன மண்ணின் ஆராத
காயங்களைப் பாடுகிறது இப் பாடல்.
இப்படியாக ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமான
விடயங்கள் இருக்கின்றன.லறீனாவின் தந்தை கலகெதர ஏ.ஹக் ஒரு பிரபலமான
இசையமைப்பாளர்.அவரது நீட்சியாக லறீனா நம் முன் நிற்கிறார்.இத் தொகுப்பில்
இசையமைத்தல் என்ற பணியை மட்டும்தான் லறீனா செய்யவில்லை. அவர் இசையைக்
கற்றிருந்தால் அதையும் அவரால் நிச்சயம் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதுதான்
உண்மை.
இது போன்ற முயற்சிகளுக்கு சமூகம் எந்தளவு முக்கியத்துவம்
கொடுக்கின்றது என்பதுதான் இங்குள்ள கேள்வி. அவ்வப்போது தோன்றி மறையும்
முயற்சிகளால் எமக்கான கலைப் பாரம்பரியம் ஒன்றை கட்டியெழுப்ப முடியாது என்பதை நாம்
மனங்கொள்ள வேண்டும். இது போன்ற முயற்சிகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு
முன்னெடுக்கப்பட வேண்டும். இது போன்ற முயற்சிகளைச் செய்பவர்கள் பல்வேறு
சிரமங்களுக்கும் பொருளாதாரம் மற்றும் தத்துவச் சிக்கல்களுக்கும் மத்தியில்தான்
தமது முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.எனவே இத் துறையில் ஈடுபாடும் நாட்டமும்
உள்ளவர்கள் தொடர்ச்சியாக இயங்குவது காலத்தின் அவசியம் எனலாம்.
அந்தவகையில் லறீனா அப்துல் ஹக் போராட்டம் மிகுந்த வாழ்க்கைக்கு
மத்தியில் இத்தனை சிறப்பான ஒரு முயற்சியை செய்துவிட்டு இதனைப் போதுமாக்கிக்
கொள்ளக் கூடாது. எமக்கான ஒரு இசைப் பாரம்பரியத்தை நோக்கி நகர முடியும் என்ற
நம்பிக்கையை இத் தொகுப்பு தருகிறது. உங்களைப் போன்றவர்களால்தான் இத்துறையில் புதிய
கதவுகளைத் திறக்க முடியும்.நம் சமூகத்தில் இக் கதவுகளைத் திறப்பது அவ்வளவு
சுலபமில்லை. இருந்தாலும் சமூகத்தைக் குறை சொல்லிக் கொண்டு கழித்த காலங்கள்
போதும்.நமது முயற்சிகளைப் பாராட்டவும் புரிந்து கொள்ளவும் ஒரு தலைமுறை இருக்கிறது
என்ற நம்பிக்கையில் நடை பயில்வோம்.ஏனெனில் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
No comments:
Post a Comment