Wednesday, January 20, 2016

பூவன் பழம் - வைக்கம் முஹம்மது பஷீர்

 
 "பூவன் பழம்' என்ற இந்தக் கதையை நான் மனப்பூர்வமாக முன்வந்து எழுதவில்லை. அப்துல்காதர் சாஹிப்பின் தொடர்ச்சி யான தொந்தரவினால்தான் இந்தக் கதையையே நான் எழுதுகிறேன். "இதில் ஒரு பாடம் இருக்கிறது' என்று கூறுகிறான் அவன். அவன் மனைவி ஜமீலா பீபியைப் பற்றிய கதையே இது.

ஜமீலா பீபி பி.ஏ. படித்தவள். அப்துல்காதர் சாஹிப் பள்ளி இறுதி வகுப்புதான் படித்திருக்கிறான். நாட்டு நடப்புப்படி பி.ஏ. படித்த ஒரு பெண்ணை பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஒருவன் திருமணம் செய்ய முடியுமா? ஆனால் போராட்டம் பண்ணித்தான் அவளைத் திருமணம் செய்ததாக அப்துல்காதர் சாஹிப் பல நேரங்களில் கூறுவதுண்டு. அந்தக் காலத்தில் பெண்களை ஆண்கள் கடத்திக் கொண்டு போய் விடுவார்கள். நீளமான கயிற்றில் சுருக்குப் போட்டு, அதைத் தூக்கி எறிந்து பெண்களை அதில் சிக்க வைத்துப் பிடிக்கவும் செய்தார்கள். சில வேளைகளில் பலாத்காரச் செயல்களிலும் பெண்களிடம் ஆண்கள் ஈடுபடுவது உண்டு. அப்துல்காதர் சாஹிப் நாகரீகமான மனிதன் என்பதால், அந்த மாதிரியான கீழ்த்தரமான காரியங்களில் எல்லாம் அவன் ஈடுபடவில்லை. அவன் நகரத்தில் பெயர் பெற்ற ஒரு கேடி. பீடித் தொழிலாளிகள் சங்கத்தின் செயலாளராகவும், நல்ல ஒரு கால்பந்து வீரனாகவும்கூட அவன் இருந்தான். நான்காவது ஃபாரத்தில் இருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை ஜமீலா பீபியும் அவனும் ஒன்றாகவே படித்தார்கள். நான்காவது ஃபாரத்தில் இருந்தே ஜமீலா பீபிமீது அவனுக்கு ஒரு பிடிப்பு. இதை அவனே பல முறை சொல்லி இருக்கிறான். ஆனால், ஜமீலா பீபியோ அதை முழுப் பொய் என்கிறாள்.

எது எப்படியோ, ஜமீலா பீபி பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றாள். அவளுடைய தந்தையின் பீடி ஃபாக்டரியில் இருந்து விருப்பம் போல பணத்தை எடுத்துக் கொண்டு பந்தாவாக அவள் நடந்து கொண்டிருந்த காலமது. ஊரில் இருந்த இளைஞர்கள் எல்லாருக் குமே ஜமீலா பீபி என்றாலே ஒருவகை ஈர்ப்புதான். ஜமீலா பீபியைப் பற்றி இளைஞர்கள் தங்கள் மனதில் கற்பனை பண்ணிக் கொண்டு வாழ்ந்தார்கள். அவளைப் பற்றி ஒருவரி சுலோகங்கள், காதல் காவியங்கள் என்று பலவற்றையும் இயற்றிக் கொண்டு இளைஞர்கள் பித்துப் பிடித்து அலைந்தனர்.

ஜமீலா பீபியின் இதயத்தை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்று அந்த ஊரின் மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பையன்கள் அனைவரும், சொல்லப்போனால் "க்யூ'வில் நின்று கொண்டிருந்தனர். அப்துல்காதர் சாஹிப் நிச்சயமாக அந்த வரிசையில் ஒரு மனிதனாக நின்று கொண்டிருக்கவில்லை. ஜமீலா பீபியைப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டும் என்றோ, அவளுக்குக் காதல் கடிதம் எழுத வேண்டும் என்றோ அவன் கொஞ்சம்கூட முயற்சி பண்ணிக்கூடப் பார்த்ததில்லை. அதெல்லாம் தனக்குத் தெரியவே தெரியாத விஷயங்கள் என்று அடித்துச் சொல்கிறான் அப்துல்காதர் சாஹிப். அவன் தன்னைப் பற்றிப் புகழ்ந்து ஒரு பாடல் எழுதியதாக ஜமீலா பீபி பலரிடமும் கூறுவதுண்டு.

அவள் சொல்வது சுத்தப்பொய் என்று அப்துல்காதர் சாஹிப் அதை மறுக்கிறான். அவன் உண்மையில் செய்தது இதுதான். ஒருநாள் ஜமீலா பீபியை பாதையில் வைத்து மறித்த அப்துல்காதர் சாஹிப் அவளிடம் கேட்டான்:

""உன் பேரு ஜமீலா பீபிதானே?''

அவன் அப்படிக் கேட்டதே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தன்னையும் தன் பெயரையும் தெரியாத ஒருவன் இந்த ஊரில் இருக்கிறானா என்ன என்று அதிசயித்த ஜமீலா பீபி பந்தாவாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்:

""ஆமா... அதுக்கென்ன?''

அதைக் கேட்டு அப்துல்காதர் சாஹிப் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு அழகு இருந்தது. அந்தச் சிரிப்பை ஜமீலா பீபியும் கவனித்தாள். அவளுக்கும் அது பிடித்திருந்தது. ஆனால், அவன் கேள்வி கேட்ட முறை- தன்னையே தெரியாது என்பது மாதிரி காட்டிக் கொண்ட விதம்- அந்தப் போக்குதான் அவளுக்குப் பிடிக்கவில்லை.

""உங்களுக்கு என்ன வேணும்?''

""விசேஷமா ஒண்ணும் வேண்டாம்.'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: ""ஜமீலா பீபி, உன்னோட வாப்பாவோட பீடித் தொழிற்சாலை இருக்குல்ல? அங்கே மொத்தம் நூற்றி இருபது தொழிலாளர்கள்  வேலை செய்றாங்க. நான் அவங்களோட செயலாளரா இருக்கேன். என்னோட பேர் அப்துல்காதர்!''

""ரொம்ப சந்தோஷம்'' ஜமீலா பீபி சொன்னாள்: ""நீங்க நகரத்துலயே ஒரு பெரிய கேடின்னும் கேள்விப்பட்டிருக்கேன்.''

""நீ கேள்விப்பட்டது ஒரு விதத்தில் உண்மைதான். பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் திட்டமிட்டிருக்காங்க. நாங்க உங்களோட தொழிற்சாலையை மூடப்போறோம்!''

ஜமீலா பீபி கேட்டாள்:

""இதை எதற்கு என்கிட்ட சொல்லணும்? என்னோட வாப்பா கிட்ட போய்ச் சொல்ல வேண்டியதுதானே!''

""உன்கிட்ட ஏன் சொல்றேன்னா அதுக்குக் காரணம் இருக்கு...''

""என்ன காரணம்?''

அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""நான் உன்னை ஆழமா காதலிக்கிறேன்.''

இதைக் கேட்டதும் ஜமீலா பீபியின் இதயம் குளிர்ந்ததென் னவோ உண்மை. இருந்தாலும், அவனை அவமானப்படுத்த வேண்டும்! ஜமீலா பீபி வேண்டுமென்றே சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஏளனம் கலந்திருந்தது.

""ரொம்ப சந்தோஷம்...'' ஜமீலா பீபி சொன்னாள்: ""பிறகு... வேற என்ன நாட்டுல நடக்குற விசேஷங்கள்?''

அவள் அப்படிக் கேட்டதற்கு, "க்யூ'வில் சாதாரணமாக நின்று கொண்டிருக்கும் ஒரு இளைஞனாக இருந்தால் நிச்சயம் அவன் வெலவெலத்துப் போயிருப்பான். ஆனால், அப்துல்காதர் சாஹிப் சவால் விடுவது மாதிரி சொன்னான்:

""ஜமீலா, நீ மட்டும் என்னைக் கல்யாணம் பண்ணல...?''

அந்தச் சவாலைச் சந்திக்கிற தைரியத்துடன் ஜமீலா பீபி கேட்டாள்:

""கல்யாணம் பண்ணச் சம்மதிக்கலைன்னா, என்ன பண்ணுவீங்க?''

""நான் தூக்கு மாட்டி செத்துடுவேன்'' என்றெல்லாம் அப்துல்காதர் சாஹிப் சொல்லவில்லை. அவன் சொன்னான்:

""ஜமீலா, நான் உன்னோட எலும்பை உடைச்சிடுவேன்.''

ஜமீலா பீபி பதிலொன்றும் சொல்லவில்லை.

அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""ஜமீலா... என்னோட வாழ்க்கையை நீ பாழ் பண்ணிடாதே. நான் உன்னை ரொம்ப ரொம்ப ஆழமா காதலிக்கிறேன். உன்னோட ஆடை களைக் காதலிக்கிறேன். உன்னை அங்குலம் அங்குலமா நான் காதலிக்கி றேன். நீ நடந்துபோற சாலையைக்கூட நான் காதலிக்கிறேன்!''

அவனுக்கு என்ன பதில் கூறுவது? ஜமீலா பீபிக்கும் அவன் அப்படிப் பேசியது மிகவும் பிடித்திருந்தது. அதற்காக உடனே அதை வெளிக்காட்டிக் கொண்டால் நன்றாகவா இருக்கும்? ஜமீலா பீபி கேட்டாள்:

""ரோட்ல பார்க்குற எல்லாப் பெண்களையும் இதே மாதிரி தடுத்து நிறுத்தி காதல் வசனங்கள் பேசுறது உங்களோட பழக்கம்னு நினைக்கிறேன்!''

""நிச்சயமா இல்ல... என் ஜமீலா, உன்னைத்தவிர நான் இதுவரை இன்னொரு பெண்ணிடம் பேசினது கிடையாது. ஏன்- பார்த்தது கூடக் கிடையாது. பேசினதும் இல்ல... பார்த்ததும் இல்ல... நீ மட்டுமே என் கண்ணுல தெரியிற...''

ஜமீலா பீபி பந்தாவாக அவனைப் பார்த்தவாறு கேட்டாள்:

""பிறகு...?''

அவன் சொன்னான்:

""உனக்கு நானும் எனக்கு நீயும்.''

""ஓ... ரொம்ப சந்தோஷம்'' என்று கூறியவாறு ஜமீலா பீபி அந்த இடத்தைவிட்டு அகன்றாள். இப்படித்தான் போர் ஆரம்பித்தது. வார்த்தைச் சண்டைகள்... பல நாட்கள் நடந்தன. ஜமீலா வீட்டில் பயங்கர எதிர்ப்பு! அதை எதிர்த்து ஊர் மக்கள்! வேலை நிறுத்த அறிவிப்பு! கடைசியில்... ஜமீலா பீபியை அப்துல்காதர் சாஹிப் திருமணம் செய்தான். அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டிருந்தபோது- வருகிறது "பூவன் பழம்' பிரச்சினை!

 

2

              நேரம் சரியாக ஐந்தரை மணி.

மழைக்காலம். வெயிலும் இருந்தது; மழையும் இருந்தது. சில நேரங்களில் இப்படித்தான் அதிசயமாக ஏதாவது நடக்கும். ஆற்றில் நீர் "கும்'மென்று பொங்கி வெள்ளமாகப் பெருக்கெடுத்து வந்தது. வெறுமனே அதைப் பார்ப்பதோடு நிற்காமல் கொஞ்சம் குளிக்கவும் செய்யலாம் என்று நினைத்த அப்துல்காதர் சாஹிப் சட்டை போடாமல் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு முற்றத்தில் இறங்கியபோது, ஜமீலா பீபி மெல்ல வாசல் கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்று அவனைக் கூப்பிட்டாள்:

""என்ன... ஏய்...''

அப்துல்காதர் சாஹிப் நினைத்தான். ஒருவேளை தன்னை சட்டை போட்டுக் கொண்டு போகச் சொல்கிறாளோ என்று. ஏனென்றால், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்தவுடன், ஜமீலா பீபி அவனுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டாள்.

அப்துல்காதர் சாஹிப் நாகரீக மனிதனாக உடனே மாற வேண்டும். நல்ல ஆடைகள் அணிந்தே அவன் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். யாருடன் பேசினாலும், அதில் ஒரு மிடுக்கு இருக்க வேண்டும். நடந்துபோகும் பாதையில் பழைய நண்பர்களையும் பிரச்சினை பண்ணக்கூடிய ஆட்களையும் பார்க்க நேர்ந்தால், அவர்களுடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் பேசக் கூடாது. பீடி சுற்றுபவர்கள், கவிஞர்கள், சுமைத் தொழிலாளர்கள், அரசியல் காரியங்களில் ஈடுபடுபவர்கள், டிரைவர்கள், ரிக்ஷா வண்டி ஓட்டுபவர்கள்- இவர்களுடன் சரி நிகராக அமர்ந்து கொண்டு பேசக்கூடாது. வீட்டில் கட்டாயம் ஒரு வேலைக்காரியை வைக்க வேண்டும். அப்துல்காதர் சாஹிப் சாதம் ஆக்குவதோ, கூட்டு சமைப்பதோ செய்யக்கூடாது. தனக்கென்று ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி அவன் நடக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால்- அவன் தன்னை முழுக்க முழுக்க மாற்றிக் கொள்ள வேண்டும். நாகரீக மனிதனாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

எந்தப் பெண் எந்த ஆணைக் கல்யாணம் பண்ணுவதாக இருந்தாலும் அவளின் முதல் வேலை தன் கணவனை முழுமையாக வேறொரு மனிதனாக மாற்றுவதாகத்தான் இருக்கும். பெண் தான் நினைக்கிறபடி தன் கணவனை நூறு சதவிகிதம் மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிறாள்- உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும். அவன் இதுவரை கைக்கொண்ட எல்லா விஷயங்களிலும் உள்ளே நுழைந்து, அவனை இதுவரை இல்லாத நேர்மாறான ஒரு மனிதனாக மாற்றுவது என்பது சாதாரண விஷயமா என்ன! கட்டாயம் இது ஒவ்வொரு பெண்ணின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்று அடித்துக் கூறுகிறாள் ஜமீலா பீபி. அவள் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லாப் பெண்களுமே இந்தக் கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். அழகான தன் மனைவி கூறிய எந்தக் காரியத்திற்கும் எதிர்வாதம் கூறவில்லை அப்துல்காதர் சாஹிப். அவன் என்ன சொல்லுவான்? திருமணம் முடிந்து அப்படி யொன்றும் அதிக நாட்கள் ஆகவில்லையே! திருமணக் களை இன்னும் அவனை விட்டு நீங்காமலே இருந்தது. அவன் ஜமீலா பீபியைப் பார்த்துச் சொன்னான்:

""என் ஜமீலா... நான் குளிக்கப்போறேன். சட்டை போட்டுக்கிட்டு போகச் சொல்றியா?''

""ஓ...'' ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஜமீலா சொன்னாள்: ""நான் சொன்னா நீங்க கேட்கவா போறீங்க!''

""ஜமீலா... அப்படிச் சொல்லாதே... நீ சொல்லி எந்த விஷயத்தை இதுவரை நான் கேட்காம இருந்திருக்கேன்?'' என்று சொன்ன அவன் உள்ளே ஓடி சட்டையை அணிந்தவாறு வெளியே வந்தான். ஆனால், அவன் போட்டிருந்த சட்டையில் ஒரு பட்டன்கூட இல்லை.

""ஒரு ஆண் இதில் கூடவா கவனம் இல்லாம இருப்பது?'' ஜமீலா பீபி மூன்று பட்டன்களை சட்டையில் வைத்துத் தைத்தாள்.

அப்துல்காதர் சாஹிப் வேகமாக நடந்தான்.

ஜமீலா பீபி மீண்டும் அவனை அழைத்தாள்:

""இங்க பாருங்க... ஏய்...!''

அப்துல்காதர் சாஹிப் திரும்பிப் பார்த்தான். அவன் நினைத்தான்- சமையல்காரியைப் பற்றித்தான் அவள் பேசப்போகிறாள் என்று! என்ன செய்வது? சமையல்காரி இல்லாமலே நாம் வாழ்க்கையை நடத்த முடியாதா என்ன? நம்முடைய விஷயத்தை நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண் பி.ஏ. படித்திருக்கிறாள் என்பதற்காக, அவள் சமையல் பண்ணக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது? பி.ஏ. என்றில்லை- எம்.ஏ., பி.எச்.டி. படித்த பெண்ணாக இருந்தால்கூட இனிமேல் சாதம் ஆக்கு வதையும் கூட்டு வைப்பதையும் குழம்பு வைப்பதையும் கட்டாயம் தெரிந்தே இருக்க வேண்டும். அப்படி அவளுக்குத் தெரியாமல் இருந்தால், அப்துல்காதர் சாஹிப் அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித் தருவான். அவன் நிச்சயம் அதைச் செய்யத்தான் போகிறான். பிரியாணி தயாரிப்பதிலிருந்து தேநீர் உண் டாக்குவது வரை அவனுக்கு எல்லாமே தெரிந்த விஷயங்கள்தாம்.

""என்ன ஜமீலா?'' அப்துல்காதர் சாஹிப் கேட்டான்: ""சமையல்காரி விஷயமா?''

""இல்ல...'' முகத்தைக் கோண வைத்துக் கொண்டு அவள் சொன்னாள். ""நான் பி.ஏ. பாஸ் ஆனது சமையல்காரி ஆகுறதுக்கா?''

""முத்தே...'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: ""என் அருமை மனைவி சமையலறைக்குள் நுழைவதா? எல்லாம் நான் பாத்துக்கிறேன். போதுமா?''

""ஒரு... போதும். இதைத்தான் ஒவ்வொரு நாளும் சொல்றீங்க.''

""இன்னைக்கு மட்டும் மகாராணி.... நீ சமையலறை வேலைகளைக் கவனி. நாளை முதல் உன்னோட இந்த தாசன்...''

""சும்மா ஏதாவது பேசிக்கிட்டே இருக்காதீங்க...''

""சரி... இப்போது எதற்கு என்னைக் கூப்பிட்டே?'' அவன் நினைத்தான்- ஒருவேளை ஒழுங்காகத் தலைமுடியை வாரி, முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்பதைக் கூறுவதற்காக இருக்குமோ? ஆனால் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்த ஜமீலா பீபி வெட்கத்துடன் தலையைக் குனிந்தவாறு காதல் மேலோங்கச் சொன்னாள்:

""பூவன் பழம்...""

""பூவன் பழமா? என்ன பூவன் பழம்?'' அவனுக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை. அவன் கேட்டான்:

""நீ என்ன சொல்ற?''

""ரெண்டு பூவன் பழம் வாங்கிட்டு வர்றீங்களா?''

ப்பூ... இதுதானா விஷயம்? பூவன் பழம் வாங்கிக் கொண்டு வருவது பெரிய விஷயமா என்ன? போன கையோடு வாங்கிவிட்டால் போகிறது. ஆற்றங்கரையில் உள்ள கடையில் பூவன் பழம் இருக்கிறது. ஒருவேளை அங்கே இல்லாவிட்டால், படகில் ஏறி அக்கரைக்குப்போய் இரண்டு ஃபர்லாங் தூரம் நடந்தால் அங்கே ஒரு சிறிய கடை வீதி இருக்கிறது. அங்கே வாங்கலாம். அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""ஒரு குலை பூவன் பழம் கொண்டு வர்றேன், சரியா?''

""எனக்கு ரெண்டே ரெண்டு பழம் போதும்.'' ஜமீலா பீபி சொன்னாள்: ""தேவையில்லாம கண்ட இடத்துக்கெல்லாம் அலைஞ்சுக்கிட்டு இருக்கக்கூடாது. சீக்கிரம் இங்கே திரும்பி வரணும். சாயங்காலம் ஆகுறதுக்கு முன்னாடி வந்திடணும். தனியா இருக்க எனக்கு பயமா இருக்கு. நான் சொன்னது எதையும் மறந்திடக் கூடாது. தெரியுதா?''

""இல்ல...'' என்று சொன்ன அப்தல்காதர் சாஹிப் நடந்தான். பெண்கள் என்ன சொல்கிறார்கள். எங்கேயும் தேவையில்லாமல் நடந்து திரியக்கூடாதாம். இதை நினைத்து நினைத்துச் சிரித்தான் அவன். அதே நேரத்தில் அவள்மீது அவன் கொண்டிருக்கும் அளவற்ற காதலும் மனதில் வலம் வராமல் இல்லை. என்ன இருந்தாலும், ஜமீலா ஆசையுடன் கேட்ட முதல் விஷயமே பூவன் பழம்தான்! வேறொரு பெண்ணாக இருந்தால்... என்னவெல்லாம் கேட்டிருப்பாள்! அப்துல் காதர் சாஹிப் நினைத்துப் பார்த்தான். சில பெண்கள் தங்கள் கணவர்களிடம் என்னவெல்லாம் வாங்கித்தரச் சொல்லி நச்சரிப்பார்கள். தங்க நகைகள், பட்டுச் சேலைகள், தங்க வளையல்கள், கார், டகோட்டா விமானம்- இதெல்லாம் கூடப் பரவாயில்லை. பணம் இருந்தால் வாங்கிவிடலாம். வேறு சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கணவன்மார்களிடம் கேட்பது சாதாரணமாக வாங்க முடியாததாக இருக்கும். காட்டில் பிரசவமாகிக் கிடக்கும் பெண் சிங்கத்தின் இரண்டு மீசை! அதைக் காட்டில் போய் அலைந்து தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அவள் கையில் தரவில்லை என்றால் அவ்வளவுதான்! கேட்டால், "நான் என்ன பெரிசா சொல்லிட் டேன்! பூனை மாதிரி இருக்குற சிங்கத்தோட முகத்துல இருந்து ரெண்டு முடி வேணும்னு கேட்டேன். இதைக்கூட உங்களால கொண்டு வந்து தர முடியல. நீங்க என்ன ஆம்பள!' என்று ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவாள். 


அப்போதைய சூழ்நிலையில் அந்தக் கணவன் என்ன செய்வான்? இன்னும் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டும் என்று கேட்பார்கள் தெரியுமா? எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி ஒரு சிறு பனிக்கட்டித் துண்டை எடுத்து வரச் சொல்வார்கள். அவர்கள் கேட்டபடி அவர்களின் கணவர்கள் கொண்டு வந்து கொடுக்கவில்லை என்றால், அடுத்த நிமிடம் அவர்களின் புலம்பலையும் கண்ணீரையும் பார்க்க வேண்டுமே! "நான் பெரிசா என்னத்தைக் கேட்டேன். ஒரு சின்ன பனிக்கட்டியை ஆசையா கொண்டு வரச்சொன்னேன். இதைக்கூட ஒரு பொண்டாட்டிக்கு உங்களால கொண்டு வர முடியல. நீங்க ஒரு கணவனா?' என்று பேச்சாலேயே கொன்று விடுவார்கள். மனைவி இப்படி அழும்போது ஒரு கணவன் என்னதான் செய்ய முடியும்? ஜமீலா பீபி இப்படியெல்லாம் கொண்டு வர கஷ்டமான விஷயங்கள் எதுவும் சொல்லிவிடவில்லையே! சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய இரண்டே இரண்டு பூவன் பழங்கள்! அவ்வளவுதானே. அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான். குளித்துவிட்டுப் போய் ஒரு குலை பூவன் பழம் உடனடியாக வாங்க வேண்டும். இதை நினைத்தவாறே அவன் ஆற்றைத் தேடிப் போனான்.

நதி காவி நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது. மழை பெய்திருந்த தால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இரு கரைகளிலும் தண்ணீரைத் தொட்டவாறு நின்றிருந்த மரங்களில் ஒன்றைக்கூடக் காணவில்லை. எல்லாவற்றையும் வெள்ளம் கொண்டு போயிருந்தது. வெள்ளத்தின் பெரும் போக்கிற்கு எந்தப் பொருள்தான் தப்ப முடியும்? மொத்தத்தில்- நதியின் போக்கைப் பார்த்து அப்துல்காதர் சாஹிப் ஒரு விதத்தில் பயப்படவே செய்தான்.

அவன் நதியில் இறங்கிக் குளித்தான். அதன் அர்த்தம் என்னவென்றால்- தலையை லேசாகத் தண்ணீருக்குள் நுழைத்தான். அவ்வளவுதான்- நதிநீர் பனியைப்போல படு குளிர்ச்சியாக இருந்தது. ஒருசில நிமிடங்கள் மட்டுமே நீருக்குள் நின்றிருந்த அப்துல்காதர் சாஹிப் சீக்கிரமே கரைக்கு வந்தான். தலையைத் துவட்டிவிட்டு படகுத் துறையில் இருக்கும் கடையைத் தேடிப் போனான். அந்தக் கடையில் கண்ணன் பழம் இருந்தது. வேறு சில வாழைப்பழங்களும் இருந்தன. ஆனால் பூவன் மட்டும் இல்லை. இப்போது என்ன செய்வது? வேறு வழியில்லை. அவன் படகில் ஏறினான். படகு புறப்பட்டது. நடு ஆற்றில் படகு போய்க் கொண்டிருந்தபோது சுகமான காற்று வீசியது. சிறிது நேரத்தில் அவனைச் சுற்றிலும் இருள் கவியத் தொடங்கியது. எப்படியோ கஷ்டப்பட்டு படகை ஓட்டியவன் படகை மறுகரையில் சேர்த்தான். அடுத்த நிமிடம் அப்துல்காதர் சாஹிப் படகை விட்டு இறங்கி ஓடினான். அவன் பாதி தூரம்தான் போயிருப்பான். மழை மிகவும் பலமாகப் பெய்யத் தொடங்கியது.

அவன் வேகமாக ஓடி கடை வீதிக்குள் நுழைந்து ஒரு கடையின் முன் போய் நின்றான். உண்மையிலேயே மிகப் பெரிய மழைதான்! கடைகளில் விளக்கு எரியத் தொடங்கியது. மழை நின்றுவிடும்  என்ற எதிர்பார்ப்போடு அவன் அங்கு நின்றிருந்தான். காற்றும் பலமாக வீசியது. நேரம் போனதே அவனுக்குத் தெரியவில்லை. தன்னுடைய பழைய நண்பர்கள் சிலருடன் அரட்டை அடித்தவாறு அவன் தன் நேரத்தைச் செலவிட்டான். எல்லாம் முடிந்து பார்த்தபோது மணி எட்டாகி இருந்தது. அவ்வளவுதான்- வெலவெலத்துப் போனான் அப்துல்காதர் சாஹிப். தன் அருமை மனைவி ஜமீலா பீபி இரவு நேரத்தில் தனியே வீட்டில் இருந்து பயந்து நடுங்கிக் கொண்டிருப்பாள். இதை நினைத்ததும் அவன் இருந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். வழியில் இருந்த ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கினான். ஆனால் எந்தக் கடையிலும் பூவன் பழம் மட்டும் இல்லை. இப்போது அவன் என்ன செய்வான்? அவனுக்கே சொல்லப்போனால் ஒருவித வெறுப்பு உண்டாகிவிட்டது. என்ன நினைத்தானோ, ஒரு டஜன் ஆரஞ்சுப் பழங்கள் வாங்கினான். "என்ன இருந்தாலும், பூவன் பழத்தைவிட ஆரஞ்சுப் பழம் நல்லதுதானே' என்று அவன் மனம் நினைத்தது. ஆரஞ்சுப் பழத்தின் விலையும் அதிகம். அதில் இருக்கும் விட்டமின்னும் அதிகம். வாங்கிய ஆரஞ்சுப் பழங்களை ஒரு பொட்டலமாகக் கட்டி கையில் வைத்தவாறு அவன் நடந்தான். மழை இன்னும் விட்ட பாடில்லை. நல்ல இருட்டு வேறு. எந்த இடத்திலும் மருந்துக்குக்கூட வெளிச்சத்தைப் பார்க்க முடியவில்லை. பூவன் பழமும் மழையும் சேர்ந்து ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தனக்கு உண்டாக்கி இருப்பதாக உணர்ந்தான் அப்துல்காதர் சாஹிப். அவன் மீண்டும் படகுத் துறைக்கு வந்தான். அங்கே யாருமே இல்லை. 

சூழ்ந்திருந்த இருட்டைப் பார்த்தவாறு படகுக்காரனை அழைத்தான். 
அப்போதும் மழை விடுவேனா என்று பெய்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட இருபது தடவை படகுக்காரனை அவன் அழைத்திருப்பான். யாரும் வந்தால்தானே! அவனுக்கு அழைத்து அழைத்து தொண்டைத் தண்ணீர் வற்றிப்போனதுதான் மிச்சம்- படகோட்டியையே காணவில்லை. எங்கு போனானோ? விளைவு- என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்த அப்துல்காதர் சாஹிப் நதியில் நீந்திச் செல்வது என்று முடிவெடுத்தான். அடுத்த நிமிடம் சட்டையைக் கழற்றினான். துண்டில் ஆரஞ்சுப் பழத்தைக் கட்டி தலையில் வைத்தான். துண்டின் இரு முனைகளையும் தாடையில் முடிச்சுப்போட்டுக் கட்டினான். சட்டையை ஆரஞ்சுப் பழங்களுக்கு மேலே சுற்றினான். இப்போது அவன் ஜமீலா பீபியைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்: "இங்க பாரு ஜமீலா.. உன்னை மட்டும் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா.... நான் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதிருக்குமா? இந்த மழை நேரத்துல நான் நினைச்ச இடத்துல படுத்துக்கலாம். ஆனா உன்னைத் திருமணம் பண்ணினதுனால பார்த்தியா... ஒரு ஆண் நினைச்ச மாதிரி இருக்க முடியுதா?' ஜமீலாவைப் பற்றி தனக்குள் நினைத்துப் பார்த்த அவன் அடுத்த நிமிடம் கடவுளை மனதிற்குள் தொழுதவாறு நதியின் போக்கிலேயே கிட்டத்தட்ட ஒரு ஃபர்லாங் தூரம் நடந்தான்.

அதற்குப் பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நதியில் இறங்கினான். அப்படியே தண்ணீரில் மூழ்கி தான் இறக்க நேர்ந்தால்..? என்ன இருந்தாலும் எல்லா கஷ்டங்களும் ஜமீலா பீபிக்காகத்தானே! நதிநீர் இடுப்பு வரை இருந்தது. கால்களைக் கீழே வைக்க முடியவில்லை. அவன் நீந்த ஆரம்பித்தான். தலை மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்தது. கைகளால் நீரைக் கிழித்தவாறு அவன் வேகமாக நீந்தினான். இருட்டில் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. எந்தத் திசையில் போகிறோம் என்பதைக் கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவித யூகத்துட னேயே அவன் நீந்தினான். இன்னும் எவ்வளவு நேரம் நீந்த வேண்டியிருக்கும், எப்போது கரையை அடைவோம் என்று எதுவுமே தெரியாமல் அவன் நீந்திக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் நீந்தியதால் கை, கால்கள் வலித்தன. சொல்லப்போனால் பலமிழந்து அவை துவண்டன. கடைசியில்- எதையோ அவன் கைகள் பற்றின. அதே நேரத்தில் அவனை நீர் கீழ்நோக்கி இழுத்தது. ஆனால் அவன் தன் பிடியை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டான். வாய்க்குள் தண்ணீர் போனது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இலேசாக எம்பிய அப்துல்காதர் சாஹிப் தான் பற்றிக் கொண்டிருந்தது என்னவென்று பார்த்தான். அது ஒரு முள்செடி. அந்த முள்செடியைப் பிடித்தவாறு மேலே ஏறினான். 

முள் ஆங்காங்கே குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் மேலே ஏறி கரையில் கால் வைத்தான் அவன். கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்தான். உடல் வெடவெடத்தது. அந்த இரவு நேரத்தில் மனதில் கொஞ்சம் பயம்கூட உண்டானது. வெறுமனே இப்படி உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி? காடு, முள் என்று பார்க்காமல் அப்துல்காதர் சாஹிப் நடக்க ஆரம்பித்தான் உடம்பில் துணியே இல்லாமல்- வேஷ்டி. சட்டை இரண்டும் நதி நீரோடு போய் விட்டிருந்தன. தாடையோடு சேர்த்துக் கட்டியிருந்ததால் துண்டும், ஆரஞ்சுப் பழங்களும் தப்பின. அருகில் இருந்த ஒரு மரத்தின் கொம்பொன்றை ஒடித்து கையில் வைத்தவாறு அவன் நடந்தான். அப்போது வானத்தில் மின்னல்! அந்த வெளிச்சத்தில் எதிரே இருந்த வாழைத்தோட்டம் அவன் கண்களில் பட்டது. பக்கத்திலேயே ஒரு வீடு இருந்தது. இன்னும் அவனுடைய வீடு இருக்கும் இடத்திற்குப் போக வேண்டுமானால்  அரை மைல் தூரம் நடக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான்.

அந்த வீட்டைத் தாண்டி ஒரு சிறு தென்னைமரப் பாலத்தைக் கடந்து அவன் வேகமாக நடந்தான். அப்போது ஒரு நாய் குரைத்தது. அடுத்து இன்னொரு நாய். சிறிது நேரத்தில் அங்கிருந்த பல நாய்கள் குரைத்தன. ஒரு நாய் குரைத்தவுடன் தொடர்ந்து எல்லா நாய்களும் குரைப்பது என்பது அவற்றின் வழக்கமாக இருக்கும் போலிருக்கிறது! இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒற்றையடிப் பாதைகளைத் தாண்டி, பாலங்கள், பாதைகள் எல்லாம் கடந்து தன்னுடைய வீட்டை அடைந்தான் அப்துல்காதர் சாஹிப். வீட்டிற்குள் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. ஜமீலா இன்னும் உறங்காமல்தான் இருக்கிறாள். "ஜமீலா... கதவைத்திற...' என்று அவன் வாயைத் திறந்து சொல்லவில்லை. "முதலில் உடம்பில் ஏதாவது ஒரு சிறு துணியையாவது சுற்றிக் கொள்வோம்' என்று எண்ணியவாறு வராந்தாவில் கால் வைத்தான். அப்போது அவன் தன்னையும் மீறி ஜன்னல் வழியே பார்த்தான். குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தாலும் தன்னையே மறந்து அவன் சிரித்துவிட்டான். அடடா என்ன காட்சி அது!

மேஜையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் இரண்டு தட்டுகள். அவை வேறு இரண்டு தட்டுகளால் மூடப்பட்டிருக்கின்றன. அதற்குப் பக்கத்தில் நான்கைந்து சிறு தட்டுகள். அவையும் மூடப்பட்டிருக்கின்றன. அவற்றில் சாதமும் குழம்பும் கூட்டும் இருக்கின்றன. கணவனை எதிர்பார்த்து மனைவி இன்னும் சாப்பிடாமல் இருக்கிறாள். அவள் கையில் பயங்கரமான ஒரு வெட்டரிவாள். அந்த அரிவாளைக் கையில் வைத்தவாறு ஜமீலா பீபி நாற்காலியில் அமர்ந்தவாறு தலையை மேஜைமேல் வைத்து தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

அதோடு நிற்கவில்லை. இன்னும் சில காரியங்களையும் அவள் செய்திருந்தாள். முன்பக்கக் கதவை உள்பக்கமாகப் பூட்டியிருந்தாள். ஆனால் வெளியில் இருந்து யாராவது திருடர்கள் கதவை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு உள்ளே பூட்டியிருந்த தாழ்ப்பாளை உடைத்து விடலாம் அல்லவா? அப்போது என்ன செய்வது? ஒரு மேஜையை எடுத்து உள்ளே கதவோடு சேர்த்துப் போட்டிருந்தாள். மேஜைக்கு இருக்கும் கனம் போதாது என்று நினைத்தாளோ என்னவோ அதன்மேல் ஒரு தலையணையை வேறு வைத்திருந்தாள். அவளின் இந்தச் செயலை என்னவென்பது?

பெண்களின் மூளையே இப்படித்தான் வேலை செய்யும் போலிருக்கிறது என்று மனதிற்குள் நினைத்த அப்துல்காதர் சாஹிப், மேஜை மேல் தலையை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஜமீலா பீபியை எழுப்பலாம் என்று அருகில் போனான். அப்போதுதான் அவன் இன்னொரு விஷயத்தைக் கவனித்தான். சமையலறை வாசல் கதவிலிருந்து வெளிச்சம் முற்றத்தில் விழுந்து கொண்டிருக்கிறது. அதெப்படி? அப்துல்காதர் சாஹிப் அங்கே போய் பார்த்தான். அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஜமீலா பீபி இருந்த பரபரப்பில் சமையலறைக் கதவையே அடைக்க மறந்துவிட்டாள். உலகத்தி லுள்ள எல்லாத் திருடர்களும் அந்தக் கதவின் மூலம் தாராளமாக வீட்டிற்குள் வரலாம். எல்லாவற்றையும் பார்த்த அப்துல்காதர் சாஹிப் உள்ளே வந்தான். எந்த ஓசையும் எழுப்பாமல் மெதுவாக- மிகமிக மெதுவாக வாசல் கதவை அடைத்தான். உள்ளே தாழ்ப்பாள் இட்டான். கையிலிருந்த கம்பை சமையலறையில் வைத்துவிட்டு, மெதுவாக உள்ளே இருந்த அறைக்குள் நுழைந்தான். உடம்பில் பல இடங்களிலும் காயம்... முள் குத்தி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. "ஜமீலா... கண்ணே... உனக்காக நான் எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கேன். பார்த்தியா?' என்று மனதிற்குள் கூறிக் கொண்டான் அவன். 

அப்துல்காதர் சாஹிப், ஜமீலா பீபி முகத்தில் எப்போதும் பூசும் பவுடரைத் தன் உடல் முழுக்க பூசினான். சட்டையும் வேஷ்டியும் எடுத்து அணிந்தான். தலைமுடியை ஒழுங்காக வாரினான். வாங்கி வந்திருந்த ஆரஞ்சுப் பழங்களை அங்கே வைத்தான். ஜமீலா பீபியை இனி எழுப்பலாம் என்று போனபோது- தான் இன்னும் ஆண்டவனைத் தொழவில்லை என்று விஷயம் அவன் ஞாபகத்தில் வந்தது. அதை முதலில் செய்யலாம் என்று தீர்மானித்த அவன் சமையலறைக்குள் நுழைந்து நீரை எடுத்து வைத்துக் கொண்டு ஆண்டவனைத் தொழுதான். ஜமீலா பீபிக்காக, தன் உயிரைக் காப்பாற்றியதற்காக ரப்புல் ஆலமீனாய தம்புரானுக்கு நன்றி சொன்னான். பிரார்த்தனை முடிந்ததும் ஆரஞ்சுப் பழங்களை இரண்டு பாத்திரங்களுக்குள் போட்டு மேஜை மேல் கொண்டு போய் வைத்தான்.

""மகாராணி...'' மெதுவான குரலில் அவன் அழைத்தான்.

அவ்வளவுதான்-

ஜமீலா பீபி திடுக்கிட்டு, பயந்துபோய் வெட்டரிவாளைக் கையில் வைத்தவாறு கண்களைத் திறந்தாள்.

""என்னை அவசரப்பட்டு வெட்டிராதே.'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: ""நான் திருடன் அல்ல. உன் முன்னாடி நிக்கிறது அப்பாவியும் முட்டாளுமான அப்துல்காதர். தெரியுதா?''

""கண்ட கண்ட இடங்கள்ல எல்லாம் அலைஞ்சிட்டா வர்றீங்க?'' என்று கேட்ட அவள் கண்கள் வாசல் கதவைப் பார்த்தன. ""ஆமா... நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?''

அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""நான் வந்தவுடன் எல்லாக் கதவுகளும் தானே வழிவிட்டுத் திறந்திடுச்சு. இதே மாதிரி நான் வர்றேன்னா எல்லா இதயங்களும் திறந்திடும்...''

""முட்டாள்தனமா எதையாவது பேசாதீங்க... எப்படி உள்ளே வந்தீங்க? சொல்லுங்க...''

அவன் சொன்னான்:

""சமையலறை வழியா...''

அவள் கேட்டாள்:

""கம்பு எதையாவது வச்சு உள்ளே நுழைச்சு தாழ்ப்பாளை நீக்கித்தானே உள்ளே வந்தீங்க? நீங்க செஞ்ச காரியத்தை யாராவது திருடன் பார்த்தா என்ன ஆவது? இதைப் பார்த்து அவங்களும் இதேகாரியத்தைச் செய்வாங்க. நான் எப்படி இந்த வீட்ல மன அமைதியோட இருக்க முடியும்?''

அப்துல் காதல் சாஹிப் சொன்னான்:

""ப்ளடி ஃபூலே! நீ சமையலறைக் கதவை அடைக்கவே  இல்ல...''

ஜமீலா பீபி சொன்னாள்:

""என்ன பேசுறீங்க? கதவை நானில்ல அடைச்சவ!''

""யாரப்புல் ஆலமின்!'' அப்துல்காதர் சாஹிப் சொன்னான்: ""பொம்பளைங்க அவங்க செஞ்ச தப்பை எந்தக் காலத்துல ஒத்துக்கிட்டிருக்காங்க நீ ஒத்துக்கிறதுக்கு... நீ தொழுகை பண்ணிட்டியா?''

""பண்ணியாச்சு...'' என்று சொல்லியவாறு எழுந்த ஜமீலா பீபியின் கண்கள் மேஜையில் இருந்த ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்தன. அவ்வளவுதான்- முகம் சுருங்கிப் போனது. அடுத்த நிமிடம் அவள் முகம் கோபத்தால் சிவந்தது. "ஆரஞ்சுப் பழம்! யார் இதைத் தின்பது?' மனதிற்குள் அவன் நினைத்தாள்.

அந்த ஆரஞ்சுப் பழங்களையே சில நிமிடங்கள் வைத்த கண் எடுக்காது பார்த்தாள். பார்வையிலேயே அந்தப் பழங்களை அழித்து விடுவாள் போலிருந்தது. இருந்தாலும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

அப்துல்காதர் சாஹிப் சொன்னான்:

""பூவன் பழம் ஒரு இடத்துலகூட கிடைக்கல...''

ஜமீலா பீபி அதற்கு ஒன்றுமே பேசவில்லை. அவள் என்ன பேசுவாள்? அவன் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு வந்து  வைத்திருக்கிறான்.

கை கழுவ அவள் தண்ணீர் கொண்டு வந்தாள். இரண்டு பேரும் கை கழுவி, சாப்பிட்டார்கள்.

""கூட்டு நல்லா இருக்கு!''அப்துல்காதர் சாஹிப் சொன்னான். உண்மையாகச் சொல்லப்போனால் அவள் சமைத்திருந்த கூட்டு சுவையாகவே இல்லை. உப்பு இல்லை. காரம் அதிகமாகச் சேர்த்திருந்தாள். அதற்காக மனைவியைக் குறை சொல்ல முடியுமா என்ன?

ஜமீலா பீபி சொன்னாள்:

""நான் தூங்கப் போறேன்!''

அவன் சொன்னான்:

""ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டுத் தூங்கு. பூவன் பழம் எங்கயும் கிடைக்கல. நான் ஆத்துல நீந்தி இந்தப் பழங்களை இங்கே கொண்டு வந்தேன்.''

அவள் சொன்னாள்:

""சும்மா வாய்க்கு வந்தபடி பொய் சொல்லாதீங்க. எனக்கு ஆரஞ்சுப் பழம் பிடிக்கவே பிடிக்காது. நீங்கதானே கொண்டு வந்தீங்க. நீங்களே சாப்பிடுங்க!''

ஜமீலா பீபி முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு -பந்தாவாக நடந்து சென்று படுக்கையில் விழுந்தாள்.

அப்துல்காதர் சாஹிப் ஆரஞ்சுப் பழத்தை உரித்து சுளை சுளையாகப் பிரித்து ஒரு பாத்திரத்தில் போட்டான். சிறிது நேரம் கழித்து அவளை அழைத்தான்.

""ஜமீலா...''

""எனக்கு வேண்டாம்...''

""என்ன வேண்டாம்?'' அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான். "நிக்காஹ் முடிஞ்ச உடனே இவளை அடிச்சு, பயமுறுத்தி வச்சிருக்கணும்!'

""ஜமீலா... சீக்கிரம் எந்திரி...''

""எனக்கு தூக்கம் வருது...''

""அப்படியா?'' அப்துல்காதர் சாஹிப் மென்மையான குரலில் சொன்னான்: ""ஜமீலா... நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்தப் பழங்களைக் கொண்டு வந்திருக்கேன். இங்க பாரு... நான் ஆத்துல நீந்தி வர்றப்போ அதுல முங்கி செத்துப் போயிருந்தா என்ன ஆயிருக்கும்?''

ஜமீலா பீபி படுக்கையில் குப்புறப்படுத்து தலையணையில் முகத்தைப் புதைத்தாள்.

""ஜமீலா...''

அவள் லேசாக முகத்தைத் திருப்பினாள்.

""நான்... உங்ககிட்ட வாங்கிட்டு வரச்சொன்னது பூவன் பழம்தான்..''

""ஏய்... பூவன் பழம் ஒரு இடத்துலயும் கிடைக்கலன்னு நான்தான் சொல்றேனே! நான் நாளைக்கு எங்கேயாவது பார்த்து வாழைக்கன்றுகளைக் கொண்டு வர்றேன்.''

""நீங்க வாழைக்கன்றுகளைக் கொணடு வந்து நட்டு, அது வளர்ந்து, குலை தள்ளி, காய் காச்சு, பழுத்து, நான் சாப்பிடணுமா?''

""சரி... இப்போ இந்த ஆரஞ்சுப் பழத்தைத் தின்னு. இதுல நிறைய வைட்டமின் இருக்கு.''

""எனக்கு வேண்டாம்...''

""நீ இதைச் சாப்பிட்டே ஆகணும்...''

ஜமீலா பீபி எழுந்து உட்கார்ந்தாள். பந்தாவாக முகத்தை உயர்த்திக் கொண்டு, ஒருவித மிடுக்குடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்:

இதைத் தின்ன மாட்டேன்னு சொன்னா, பேசாம விட வேண்டியதுதானே! அடிச்சுத் தின்ன வைப்பீங்க போலிருக்கே!''

அப்துல்காதர் சாஹிப் மனதிற்குள் நினைத்தான்: "இதுகூட நல்ல ஐடியாவாத்தானே இருக்கு!'

அடுத்த நிமிடம் அவன் சமையலறைக்குள் நுழைந்து இரண்டு சிறு குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்தான்.

ஜமீலா பீபி அவன் கையிலிருந்த குச்சிகளைப் பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ, ஒரு ஓரத்தில் ஒடுங்கியவாறு போய் அமர்ந்தாள்.

அவன் சொன்னான்:

""எழுந்திரு...''

""எனக்குப் பிடிக்கல...''

""பிடிக்கலியா?'' அவன் எழுந்துபோய் ஒரு வெட்டரிவாளுடன் திரும்பி வந்தான்.

"புஸ்க்...' என்று சொல்வது மாதிரி ஜமீலா பீபி அமர்ந்திருந்தாள்.

""வா...'' அவன் அழைத்தான்.

அவள் சொன்னாள்:

""எனக்குப் பிடிக்கல...''

""அப்படியா?'' அவன் ஜமீலா பீபியின் தொடையில் குச்சியால் இரண்டு அடிகள் கொடுத்தான். தொடர்ந்து வெட்டரிவாளை உயர்த்திக் காட்டினான்.

""அடுத்தது இதுதான்!''

அவள் பயந்துபோய் கலங்கிய கண்களுடன் எழுந்து நின்றாள்.

அவள் கண்களில் இருந்து வழிந்த நீரைப் பார்த்ததும்... என்ன சொல்வது? அப்துல்காதர் சாஹிப்பின் இதயமே நொறுங்கிப் போனதுபோல் ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் அவன் ஆண் அல்லவா? பெண்ணின் கண்ணீரைப் பார்த்தால் அவனால் தாங்க முடியுமா என்ன? இருந்தாலும் சிறிது நேரத்திற்கு வேண்டுமென்றே தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான் அப்துல்காதர் சாஹிப். சில நிமிட இடைவெளிக்குப்பிறகு அவன் சொன்னான்:

""ஜமீலா... இங்க பார்... சும்மா கண்ணீர் விடாதே... வேணும்னா ஒண்ணு செய். உன் கண்ணீர் முழுவதையும்  ஒரு அண்டால பிடிச்சு வை. நான் பிறகு அதுல குளிச்சிக்கிறேன். தெரியுதா?''

ஜமீலா பீபி முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கேட்டாள்:

""என்னைக் கொல்லப் போறீங்களா?''

""ஆமா...'' அவன் சொன்னான்: ""உன்னை அறுத்து சின்னச் சின்ன துண்டா நறுக்கிப் போட்டு பிரியாணி தயாரிக்கப் போறேன்.''

அடுத்த நிமிடம் அவன் அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் பக்கத்து அறையில் அவளை நிறுத்தினான். அவளுக்கு முன் ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன.

""ஒழுங்கா எடுத்துத் தின்னு.'' அப்துல்காதர் சாஹிப் கட்டளையிட்டான்.

ஜமீலா பீபி அசைவே இல்லாமல் அப்படியே நின்றிருந்தாள். "புஸ்க்' என்று அவனைப் பார்த்துச் சொல்வது மாதிரி இருந்தது அவள் நின்றிருந்த கோலம்.

கணவன் சொல்லும் கட்டளைப்படி ஒரு மனைவி நடக்க வேண்டுமா இல்லையா? எதுவுமே பண்ணாமல் வெறுமனே நின்றிருந்தால் அவனுக்குக் கோபம் வருவது இயல்புதானே! கையில் இருந்த குச்சியால் அவளின் பின்பாகத்தில் லேசாக அடித்தான்.

அவ்வளவுதான்.

மெதுவாக முன்னால் வந்த ஜமீலா பீபி ஒரு ஆரஞ்சு சுளையை எடுத்து வாயில் வைத்தாள்.

""இது போதாது. இனியும் எடுத்துத் தின்னணும்...'' கட்டளைக் குரலில் சொன்னான் அப்துல்காதர் சாஹிப். தொடர்ந்து கையில் இருந்த வெட்டரிவாளையும் காட்டினான்.

""கையில என்ன இருக்கு பார்த்தியா? இத வச்சு ஒரு போடு போட்டா எப்படி இருக்கும் தெரியுமா?''

இதை அவன் சொன்னதுதான் தாமதம்- பயந்துபோன ஜமீலா பீபி வேகமாக ஆரஞ்சுச் சுளைகளை எடுத்து வாயில் போட்டுத் தின்றாள்.

அவன் சொன்னான்:

""தோலை உரிச்சு மெதுவா தின்னு...''

கண்களில் நீர் வழிந்தவாறு, ஜமீலா பீபி தோலை உரித்து ஆரஞ்சுச் சுளையைச் சாப்பிட்டாள்.

அப்துல்காதர் சாஹிப் அவளைப் பார்த்துக் கேட்டான்:

""நான் உனக்கு யாரு சொல்லு...''

அவள் சொன்னாள்:

""யார்னே எனக்குத் தெரியாது...''

""இந்த வெட்டரிவாள் தெரியுதா? உனக்கு நான் யாரு?''

""கணவன்...''

அவன் கேட்டான்:

""கையில இருக்குற வெட்டரிவாள் தெரியுதா? நீ என்னைத் திருத்தணும்னு நினைப்பியா? இனி மாட்டேன்னு சொல்லு. கையில இருக்குற அரிவாள் தெரியுதுல்ல?''

""நிச்சயமா இனி உங்களைத் திருத்தணும்னு நினைக்க மாட்டேன்.''

அவன் கேட்டான்:

""இப்ப நீ என்னத்தைச் சாப்பிடுறே?''

""ஆரஞ்சுப் பழம்.''

அப்துல் காதர் சாஹிப் அவளின் பின்பாகத்தில் ஒரு அடி கொடுத்தான்:

""வெட்டரிவாள் தெரியுதா? சொல்லு... நீ இப்போ சாப்பிடுறது பூவன் பழம்...''

""பூவன் பழம்!''

""சமையல்காரி வேணுமா? வேண்டாம்னு சொல்லு. வெட்டரிவாள் தெரியுதா?''

""வேண்டாம்...''

""நீ நினைச்சுக்கிட்டு இருக்குற மாதிரி நீ என்ன பெரிய இவளா? வெட்டரிவாள் தெரியுதா? நீ என்னோட பொண்டாட்டிதானே?''

""ஆமா...''

""டிரைவர்கள், ரிக்ஷாக்காரர்கள், கவிஞர்கள், சுமை தூக்குபவர்கள், அரசியல் தொண்டர்கள், பீடி சுற்றுபவர்கள்- எல்லார்கூடயும் நான் சரிசமமா பழகலாம்லயா? வெட்டரிவாள் கையில இருக்கு. தெரியுதா? பழகலாம்னு சொல்லு...''

""பழகலாம்... பழகலாம்...''

""இப்போ தின்றது என்ன?''

""பூவன் பழம்...''

கையில இருந்த வெட்டரிவாளையும் குச்சியையும் கீழே போட்டுவிட்டு, "எண் கண்ணே...' என்று ஆசையுடன் கூறியவாறு அப்துல்காதர் சாஹிப் ஜமீலா பீபியை இறுகக் கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். அவளின் பின்பாகத்திலும் தொடையிலும் அடி வாங்கிய தடங்கள்! அதைத் தன் கைகளால் தொட்டபோது அவன் இதயம் வேதனையால் அழுதது.

""என் கண்ணு... உனக்கு வலிக்குதாடா?'' அவன் கேட்டான்.

அவள் நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னாள்:

""இல்ல..''

 

3

                    ருந்தாலும் அப்துல்காதர் சாஹிப்பின் இதயம் மிகவும் அதிகமாக வருந்தியது. ஆயிரம்தான் இருக்கட்டும்... அவன் ஆணாயிற்றே!

அன்றைய இரவு முடிந்தது. பகல் வந்தது. நாட்கள் வருடங்களாக மாறின. நதியில் எத்தனையோ முறைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜமீலா பீபி ஒன்பது தடவை பிரசவமானாள். உலகத்தில் எவ்வளவோ மாறுதல்கள் உண்டாயின. சாம்ராஜ்ஜியங்கள் தகர்ந்தன. கிரீடங்களும் செங்கோல்களும் சிம்மாசனங்களும் பறந்தன. புதிய ஆட்சிகள் வந்தன. புதிய கொள்கைகள் வந்தன. புதுப்புது சித்தாந்தங்கள் அரங்கேறின. மனித சமுதாயம் பல வகைகளிலும் வளர்ச்சியை நோக்கி நடைபோட்டது. அப்துல்காதர் சாஹிப்பிற்கும் ஜமீலா பீபிக்கும் வயது ஏறின. அவர்களின் பற்கள் அனைத்தும் விழுந்துவிட்டன. இரண்டு பேருக்கும் கூன் விழுந்துவிட்டது. தலை முழுவதும் இருவருக்குமே நரை முடி. படுகிழவனும் கிழவியுமாய் இருவரும் ஆனார்கள். அவர்களின் குழந்தைகளுக்கும் குழந்தைகள் பிறந்தன. என்னதான் வருடங்கள் பல கடந்தாலும், கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் சில விஷயங்களை மறக்க முடியுமா? அப்துல்காதர் சாஹிப் சிரித்தவாறே ஜமீலா பீபியைப் பார்த்துக் கேட்பான்:

""மகாராணி... பல வருஷங்களுக்கு முன்னாடி நீ பூவன் பழம் வேணும்னு கேட்டப்போ, ஆத்துல நீந்தி வந்து உனக்கு நான் என்ன கொண்டு வந்தேன்?''

ஜமீலா பீபி சிரித்தவாறே சொல்லுவாள்:

""பூவன் பழம்!''

அவன் கேட்பான்:

""அது எப்படி இருந்துச்சு?''

அவள் கூறுவாள்:

""ஆரஞ்சுப் பழம்போல உருண்டையாய்...''

""ஹா...ஹா...ஹ...'' என்று சிரித்தவாறு அவன் கேட்பான்:

""என்ன கொண்டு வந்தேன்?''

அவள் சொல்லுவாள்:

""பூவன் பழம்! பூவன் பழம்!''

                                                                                                                                              தமிழில் : சுரா
நன்றி- http://www.nakkheeran.in 

No comments:

Post a Comment