“ஒரு மரத்தை நடுவதற்கான
மிகச் சிறந்த சந்தர்ப்பம் 20 வருடங்களுக்கு முன்பாகும்.இரண்டாவது சந்தர்ப்பம் இன்றாகும்.“சீனப்
பழமொழி
பசுமையைப் பாதுகாப்பதற்கான
முயற்சி உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இயற்கை அழிப்பினால் புவி வெப்பமடைவது முதல்
பல்வேறு சிக்கல்கள்களை நாம் அனுபவிக்கிறோம்.
இன்றைய நாட்களில் வெப்பம் அதிகரித்து வெளியில்
நடமாட முடியாமல் இருக்கிறது. வனங்களை அழிப்பதே இதற்கான பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே
இயற்கையை பாதுகாப்பது குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
மனிதன் தன்னுடைய
தேவைக்காக மரங்களைத் தரிக்கிறான். ஆனால் அவன் ஒரு மரத்தை நடுவது குறித்து சிந்திப்பதேயில்லை.யாரோ
நட்ட மரங்களினால் பயனடையக் காத்திருக்கிறோமே தவிர நாம் மரம் நடத் தயாராக இல்லை.
பொதுவாக முஸ்லிம்
சமூகத்தில் இதற்கான ஆர்வத்தை நாம் குறைவாகவே காண்கிறோம்.ஆனால் இஸ்லாம் இதனை ஊக்குவித்திருக்கின்றது.மறுமை
வரப் போகிறது எனத் தெரிந்தாலும் கையிலுள்ள மரத்தை நட்டுவிடுங்கள் என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.யுத்த நேரத்தில் கூட மரங்களைத் தரிக்க வேண்டாம் என்றார்கள்.
இறைவன் இப் பூமியை
பசுமையைக் கொண்டு போர்த்தியிருக்கிறான்.நாம் வாழும் நாடானது இயற்கை வளங்கள் நிறைந்த
ஒரு நாடு.பசுமையை எங்கும் நாம் அனுபவிக்கலாம்.இப் பசுமையை நாம் பாதுகாக்க வேண்டும்,
எதிர்காலச் சந்ததிக்கு கைமாற்ற வேண்டும்.
2 கோடி மரங்களை நாடெங்கும்
நடும் Back to Green எனும் கருத்திட்டம் முகநூலில் முஹம்மத் பர்ஷான் என்பவரால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட
ஒன்று. பர்ஷான் சோஷலிஸ இளைஞர் அமைப்பின் கலாச்சாரப் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றுகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒரு மரத்தை நடுவோம் என்ற அடிப்படையில்
இப் பிரச்சாரத்தை முகநூலில் அவர் ஆரம்பித்து வைத்தார்.இதனை அறிந்து சமூக செயற்பாட்டாளர்களான
நிலுபுல் ரங்கன மற்றும் ஸஷீன் ஆகியோரும் இணைந்து இத் திட்டத்தை இன்னும் மெருகூட்டினர்.பர்ஷான்
காட்டுத் தீயாய் முகப் புத்தகத்தில் இதனைப் பரப்பி வருகிறார்.இப்போது பலரும் இத் திட்டத்தில்
இணைந்து மரம் நட ஆரம்பித்திருக்கின்றனர்.
இத் திட்டத்தை வெற்றியடையச்
செய்வதில் நாமும் பங்கெடுப்போம்.நாம் நடும் ஒவ்வொரு மரமும் எதிர் காலச் சந்ததிகளுக்கும்
பறவைகளுக்கும் விலங்கினங்களுக்கும் நிச்சயம் பயனளிக்கும்.ஒரு மரத்தை நடுவதன் மூலம்
மனித குலத்திற்கு நன்மை பயக்கிறேன் என மகிழ்ச்சியடைலாம்.
இயற்கை,சுற்றுச்
சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நாம் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.இது குறித்து
ஆசிரியர்கள், உலமாக்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ச்சியாக செயற்பட
வேண்டும்.குழந்தைகளின் உள்ளங்களில் இது குறித்த ஆசையை ஏற்படுத்த வேண்டும்.
“அழகான ஒரு கதைதான்
ஒவ்வொரு மரமும்.நீங்கள் ஒரு மரத்தைத் தொடும் போது பெரும்பாலும் ஒரு மனிதரைத் தொடுவதாகவே
நினையுங்கள். உங்களால் பார்க்கவியலாத ஒரு மனிதனின் உழைப்பு ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும்
இருக்கிறது.“ என வைக்கம் முஹம்மது பஷீர் எழுதுகிறார்.
மரம் கடந்த காலத்தின்
சாட்சியமாகத் திகழ்கிறது.நமது முன்னோர்களின் உழைப்பையும் வியர்வையையும் பறைசாற்றி கம்பீரமாக
காட்சி தருகின்றது. காலத்தைப் பார்த்தவாறே அது வளர்கிறது.அடுத்தவருக்குப் பயனளிக்வென்றே
அது வாழ்ந்து மடிகிறது.மரங்கள் பலபோது மனிதர்களை விடச் சிறந்தவை.
ஒரு மரம் மனிதர்களுக்கும்
ஏனைய உயிரினங்களுக்கும் எத்தனையோ விடயங்களைக் கொடுக்கின்றது. காற்று,நிழல்,கனி,விறகு
என மரம் தன்னையே அர்ப்பணிக்கிறது.மரம் எப்போதும் கொடுக்கிறது.அப்படிப்பட்ட மரத்தை நடுவதும்
நிலையான தர்மம் ஆகிறது.நாம் நடும் ஒரு மரம் வளர்த்து அதிலிருந்து ஒரு பறவையோ பிராணியோ
சாப்பிட்டாலும் அதன் நன்மை நட்டவனுக்குக் கிடைக்கின்றது.
ஒரு மரத்தை நடுவதென்பது
வெறுமனே ஒரு செயல் மாத்திரமல்ல.அது ஒரு வாழ்க்கை முறை.மானுடத்தின் மீது மனிதன் கொள்ளும்
மிகப் பெரிய கரிசனையின் வெளிப்பாடு அது.
No comments:
Post a Comment