Wednesday, January 13, 2016

ஹோகானா பொகுன- வானம் போல விரியும் கனவுகள் தேடி...




பார்த்துத் தீராத ஒரு ஆச்சரியமாக கடல் நமக்கு முன்னாள் விரிந்து கொண்டே இருக்கிறது. கடலும் அதன் அலைகளும் அது எழுப்பும் சத்தமும் இந்த உலகில் எல்லோரையுமே கவர்ந்திருக்கின்றன.கடலைப் பார்த்திராத ஒரு கிராமத்து மாணவர்கள் கடல் பார்க்க ஆசைப்படுவதும் அதனூடு விரியும் நினைவுகளையும் மையப்படுத்தி அண்மையில் வெளிவந்த திரைப்படம்தான் “ஹோகானா பொகுன“ இத் திரைப்படம் 3 சர்வதேச விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


சிங்கள மொழியில் ஹோகானா பொகுன என்பது கடலையே குறிக்கின்றது. சத்தம் எழுப்பும் தடாகம் என்று இதனை நேரடியாக மொழி பெயர்ப்புச் செய்யலாம்.மாணவர்களின் மனதும் கடல் போன்றதுதான்.அது எப்போதும் ஆர்ப்பரிக்கிறது.சத்தம் எழுப்புகிறது.அலைகள்தான் கடலுக்கு அழகு.கைகளால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.மாணவர் பருவமும் சத்தமிடும் கடலைப் போன்றதுதான்.நாம் சட்டகங்கள் கொண்டு அதனை தடுக்கப் பார்க்கிறோம். 

சிறுவர்களை மையப்படுத்தி திரைப்படங்கள் அரிதாகவே வெளிவருகின்றன. காத்திருந்துதான் இப்படி ஒரு திரைப்படத்தை காண முடிகிறது.இது சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான படமாக இருக்கிறது. திரை மொழியும் ஒளிப்பதிவும் நேர்த்தியாக இருக்கும் இத் திரைப்படம் ஒரு அழகிய நாவல் போல விரிகிறது.பாத்திரங்களும் அவர்களது வசனங்களும் நெஞ்சுக்குள் உறைகின்றன.பாத்திரத் தேர்வு மிகுந்த பாராட்டுக்குரியது.இத் திரைப்படத்தில் வருபவர்கள் எளிய பாத்திரங்கள்.நாம் அன்றாடம் சந்திப்பவர்கள்.இத்தகைய எளிய பாத்திரங்களினூடே ஒரு வலுவான கதையைக் கட்டமைத்திருக்கிறார் இயக்குநர்.

கிராமத்து மாணவர்கள் கடல் பார்க்கப் போகும் எளிய ஒரு கதைதான் என்றாலும் பாத்திர வடிவமைப்பு மற்றும் திரைமொழி ஊடாக சிறந்த ஒரு படைப்பாக இயக்குநர் இதனை மாற்றி இருக்கிறார்.

கதையில் வரும் “உக்குன்“ மற்றும் பஸ் சாரதி ஜஸ்டின் மாமா ஆகிய பாத்திரங்கள் நினைவுகளை விட்டு அகழ்வதே இல்லை.

வகுப்பில் பார்வையற்ற ஒரு மாணவி இருக்கிறாள்.ஒரு நாள் காலைக் கூட்டத்தில் அவள் பேசும் போது கடல் பற்றிச் சொல்லும் வார்த்தைகள் மிக அழகானவை.

“நீங்கள் கேள்விப்படாத ஒரு விடயத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறேன். எனது தாத்தா கடல் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார்.அது எப்படி என்று நான் கேட்பேன்.அது வானத்தைப் போல நீல நிறம் என்பார். அப்போது நான் சொல்வேன் வானத்தை நான் கண்டதில்லையே என்று. எங்கள் ஊரில் உள்ள குளத்தை விட விசாலமானது என்பார்.அப்போது நான் சொல்வேன் நான் குளத்தைக் கண்டதில்லையே என்று“ 



இப்படியாக குறிப்பிட்டுச் சொல்வதற்கு பல விடயங்கள் இத் திரைப்படத்தில் இருக்கின்றன.

படத்தின் ஆரம்பத்தில் கடற் கரையோரத்தில் ஒரு தொலை பேசி உரையாடல். சமூக அரசியல் தளம் பற்றிய யதார்த்தத்தைப் பேசுகின்றன அந்த உரையாடல். கஷ்டப் பிரதேசத்தில் எனக்கு ஆசிரிய நியமனம் கிடைத்திருக்கிறது. நான் அங்கு போகப் போகிறேன் என்கிறார் உமா. மறு முனையில் கதைக்கும் புரட்சியாளனான பல்கலைக்கழகத்து இளைஞன் ஏன் நீ கஷ்டப் பிரதேசத்திற்குப் போகப் போகிறாய் என்று கேட்கிறான். 

நீங்களும் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்.உங்கள் ஆர்ப்பாட்டம் ஒரு இடத்தில் இருக்கிறது. மக்கள் இன்னொரு இடத்தில் இருக்கிறார்கள்.இந்த இரண்டையும் இணைக்க முடியுமான ஒரு வழியை நான் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் என்கிறார் உமா. கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள இடைவெளியை இந்த உரையாடல் கோடிட்டுக் காட்டுகிறது.உண்மையில் புரட்சியினதும் எழுச்சியினதும் வித்துக்களை விதைப்பதற்கு மிகச் சிறந்த இடம்தான் பாடசாலை.சமூக மாற்றம் கல்வியிலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்.மக்களை அறிவூட்டுவதும் விழிப்படையச் செய்வதும்தான் உண்மையான வெற்றி.

இத் திரைப் படத்தில் வரும் கிராமத்துப் பாடசாலை ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது.வருகின்ற ஆசிரியர்களும் இடமாற்றம் பெற்றுக் கொண்டு போய்விடுகின்றனர்.பாடசாலையில் மிகக் குறைவான பௌதீக வளங்களே இருக்கின்றன. அண்மையில் கிராமப் புறங்களில் இருக்கின்ற பல்வேறு பாடசாலைகளுக்கு போகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அப்போதும் உணர்ந்த விடயங்களை இத்திரைப்படத்தைப் பார்க்கும் போதும் நான் உணர்ந்தேன்.



படத்தில் வரும் ஒரு காட்சியில் ஒரு நாள் காலையில் பாடசாலைக்கு ஒரு ஆச்சரியமான பெட்டி வருகிறது.வலயத்தில் இருக்கின்ற பின்தங்கிய பாடசாலைகளுக்கு உலக வங்கியின் அனுசரனையில் இது வழங்கப்படுவதாக ஒரு அதிகாரி அதிபரிடம் கூறுகிறார்.அது ஒரு பியானோ இசைக் கருவி.இது மட்டும்தான் இங்கு குறைவாக இருந்தது என்று அதிபர் கூறுவார். இது ஒரு சமூக யதார்த்தத்தை சுட்டி நிற்கின்றது. மக்களின் தேவைகளை அறிந்து உதவிகள் செய்யப்படுவதில்லை என்பதுதான் அந்த யதார்த்தம்.

குழந்தைகளின் கனவுகளுக்கு நாம் இடம் கொடுக்க வேண்டும்.கனவு காண அவர்களுக்குச் சொல்லி்க் கொடுக்க வேண்டும்.தேடலின் மீது ஆர்வத்தை உண்டாக்க வேண்டும்.சம்பிரதாயங்கள்,எல்லைகள் கடந்து அவர்களைச் சிந்திக்கப் பழக்க வேண்டும். பாடசாலை அதிபர்கள் புதிய விடயங்களை விரும்ப வேண்டும்.புதிய தலைமுறையின் ஆசைகளுக்கு இடம்கொடுக்க வேண்டும். “நான் இந்தப் பாடசாலையில் 20 வருடங்கள் இருக்கிறேன், எனது அனுபவத்தில் இப்படி ஒன்று இங்கு சாத்தியமாகாது,எமது பாடசாலை சம்பிரதாயத்தில் இப்படி எல்லாம் நடை பெறுவதில்லை“ என்றில்லாமல் தமது மனக் கதவுகளை திறந்து வைக்க வேண்டும் என்பதையெல்லாம் இத்திரைப்படம் சத்தமில்லாமல் சொல்கிறது.

மாணவர்கள் சிறகடித்துப் பறக்கும் பறவையின் மனதை ஒத்தவர்கள். அவர்களது இதயங்கள் கனவுகளாலும் சாகசங்களாலும் நகைச்சுவைகளாலும் நிரம்பியிருக்கின்றன. எமது கல்வி முறை அவர்களின் சிறகுகளைக் கத்தரிக்கிறது.உயரப் பறக்க முடியாமல் தடுத்து குறிப்பிட்ட எல்லைக்குள் பறக்க அவர்களை நிர்ப்பந்திக்கிறது.கனவுகளுடன் பாடசாலைக்குள் காலடி எடுத்து வைக்கும் ஒரு சிறுவன் உடைந்த மனதுடனே பாடசாலையிலிருந்து வெளி வருகிறான்.

ஆசிரியர்கள் வீரம் மிக்கவர்களாக எதற்கும் துணிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை இத் திரைப்படத்தில் வரும் உமா ஆசிரியை கதாபாத்திரம் மூலம் இயக்குநர் உணரத்துகிறார். உமா போன்ற ஆசிரியர்களே இன்று பாடசாலைகளுக்குத் தேவைப்படுகின்றனர். மதிப்பெண்களுக்காக நாம் மாணவர்களைத் தயார்படுத்தக் கூடாது. வாழ்வை எதிர் கொள்ளும் பக்குவம் மிக்கவர்களாக உயர்ந்த கனவுகளுக்குச் சொந்தக்காரர்களாக அவர்களை மாற்ற வேண்டும்.

இ.ரா நடராசன் சொல்வது போல “அனைவரும் மலாலாவை பாராட்டுகிறார்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் அவரது ஆசிரியை மிரியத்தை போற்றுவேன். தாலிபான்களுக்கு எதிராக ரகசிய பெண் வகுப்பறைகளை நடத்திய மிரியம் அவரது துணிச்சலும் வரலாறு அல்லவா. ஆசிரியர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

தன்னம்பிக்கையும் முயற்சியும் தேடலும் இருந்தால் சாதனைகள் நிகழ்த்தலாம் என்பதை காவியத் தன்மை கொண்ட தன் திரை மொழியாலும் கதையாலும் இந்திக பெர்னாண்டினோ நம் முன் வைத்திருக்கிறார். ஓரிருவருக்கு மாத்திரம்தான் சிறுவர் படம் எடுக்க முடியும் என்ற மனப்பதிவை இவர் தகர்த்திருக்கிறார்.திரைப்படம் மூலம் வாழ்க்கை பற்றிய ஒரு புதிய தரிசனத்தை உருவாக்கியிருக்கிறார்.

சிறுவர்களினதும் பெற்றோர்களினதும் உளவியல் கட்டமைப்பில் மாற்றங்களை உண்டுபன்னவும் தாக்கத்தை விளைவிக்கவும் கூடிய சிறந்த சாதனம் திரைப்படங்களே. சமூகத்திற்குப் பயனுள்ள அம்சங்களைச் செய்ய இலங்கையின் கலைஞர்கள் முன் வர வேண்டும்.வாழ்த்துக்கள் இந்திக!



No comments:

Post a Comment