Tuesday, September 29, 2015

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்





‘வாழ்வதற்கான பக்குவத்தை யாரும் திருமணப் பத்திரிகையில் அச்சடிப்பதில்லை’

இந்த வாசகத்தை என் முகநூல் பக்கத்தில் எப்போதோ நான் பகிர்ந்திருக்கிறேன். இச் சிறிய வாசகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்திருக்கின்றன. திருமணம் என்பது வாழ்க்கையில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வு. பிறந்ததற்குப் பிறகு மனிதன் கொண்டாடப்படும் இரண்டாவது தருணம் அது.வாழ்க்கையில் ஒரு துணையைத் தேடுவதும் தெரிவு செய்வதும் மனிதனுடைய ஏனைய எல்லாத் தெரிவுகளையும் தேடல்களையும் விட வித்தியாசமானதாகவும் விசித்திரமானதாகவும் இருக்கிறது.


மனித வாழ்வில் எத்தனையோ உறவுகள் இருக்கின்றன.ஒவ்வொரு உறவும் தனித்தனியான சுகத்தையும் அனுபவத்தையும் கொண்டிருக்கிறது. உறவுகளே வாழ்க்கைக்கு அர்த்தங்களைச் சேர்க்கின்றன.திருமணம் என்பது வியக்க வைக்கும் ஒரு உறவாகவே இருக்கின்றது. வெற்றிடங்களைக் கொண்ட வாழ்க்கையை அதுதான் பூரணப்படுத்துகிறது. 

மனிதன் கொண்டாடும் உறவுகளில் திருமணம் தவிர்ந்த உறவுகள் உருக் கொள்வதற்கும் அவற்றுக்கிடையில் பந்தம் ஒன்று ஏற்படுவதற்கும் பல நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் திருமணம் என்பது திடீரென இணையும் இருவருக்கிடையில் மெல்ல மெல்ல வளரும் உறவின் வேர்களால் கம்பீரமான விருட்சமாக அந்த உறவு எழுந்து நிற்கிறது. பின்னர், யாரோவாக இருந்த இருவர், ஒருவர் போல மாறும் அதிசயம் நிகழ்கிறது. அன்பெனும் ஒற்றை நூல் கொண்டு இருவர் வாழ்க்கை பின்னப்படுகிறது.  மனிதனின் எல்லா விலங்குகளையும் உடைக்கும் விடுதலையாக திருமணம் அமைகின்றது. சிலருக்கு அதுவே விலங்காகியும் போகிறது.

வாழ்க்கைப் பாதையில் திருமணம் ஒரு முக்கிய சந்தி.வாழ்க்கைப் பாதையின் இயல்பை அந்தச் சந்தியே அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறது. எம்மைச் சூழவிருக்கும் அடுத்தவர்களுடன் நாம் கொள்ளும் சமீபமானது சற்று விளக்கியே எம்மை வைத்துக் கொள்கிறது.ஆனால் திருமண உறவில் அந்த இடைவெளிகள் அற்றுப் போய், ஒருவரது வாழ்க்கை மற்றவரது வாழ்வில் கலந்துவிடுகிறது. 

புதிய உறவின் திளைப்பில் மனிதன் பூமிக்கும் வானுக்குமிடையிலான தூரத்தை நூல் கொண்டு தைக்கப் பார்க்கிறான்.தன் கனவின் வெளிச்சத்தில் கைவீசி அவன் நடக்க ஆரம்பிக்கிறான்.
பின்னர் அவன் எதிர் கொள்ளும் வாழ்வு கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உண்மையை உணர்த்துகிறது.வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதை அவனுக்குக் கற்றுக் தருகிறது.

பெண் என்பவள் அவளுக்கே உரிய இயல்புகளையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருக்கிறாள்.ஆண் என்பவன் அவனுக்கே உரிய இயல்புகளையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருக்கிறான். இரண்டுக்குமிடையில் ஏகப்பட்ட இடைவெளிகள் இருக்கின்றன.இந்த இடைவெளிகளின் கூடுதல் குறைவே முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றன.

காதலினாலும் அன்பினாலும் நிரம்பி வழியும் வாழ்வில் முரண்பாடுகள் கசப்பாக இறங்குகிறது. இனிமையான வாழ்வின் தொண்டைக் குழியை அக் கசப்பு மெல்ல ஈரமாக்குகிறது.

முரண்பாடுகளை அன்பினால் வெல்ல முடியும் என்பதுதான் யதார்த்தம். முரண்களின் கனத்தை கதவுகளை அன்பினால் திறக்கலாம்.புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்புமே எந்த உறவையும் புதிதாகவும் புத்துணர்வுடனும் வைத்துக் கொள்கிறது. இந்த உறவில் அந்த இரண்டும்தான் வாழ்க்கையின் அழகியலைக் காப்பாற்றுகிறது. திருமண உறவென்பது பல வண்ணங்கள் சொட்டும் ஈரம் காயாத ஒரு ஓவியம் போன்றது. அதன் அழகு மங்காமல் பாதுகாக்கும் பொறுப்பு கணவன் மனைவி இருவருக்கும் உரியது.
இரண்டு வித்தியாசங்கள் ஒன்றிணைவதன் மூலமே திருமண வாழ்க்கை என்பது தோற்றம் பெறுகிறது.வித்தியாசங்களைக் கையாளும் போது முரண்பாடு தன் முடிச்சுகளை மெல்ல அவிழ்த்து விடுகிறது. வித்தியாசங்கள் இருக்கும் போதுதான் வாழ்க்கையும் அழகுபடுகிறது.


இயற்கையில் நாம் காணும் வித்தியாசங்கள் பிரபஞ்சத்தின் மீது நம்மை ரசனை கொள்ள வைக்கிறது.நிறங்களை தனித்தனியாக நாம் ரசிப்பதில்லை.ஆனால் வானவில்லில் ஏழு வர்ணங்கள் ஒன்றிணையும் போது நாம் அதனை ரசிக்கிறோம்.கருப்பு,வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களால் ஆன பியானோ இசைக் கருவி எண்ணற்ற ராகங்களைப் பிரசவிக்கிறது. முரண்களே அழகை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான மொழிகள்,கலாச்சாரங்கள், நிறங்கள்,மதங்கள்,இனங்கள்,பழக்க வழக்கங்கள் என நம்மைச் சூழ இருக்கும் எல்லாமே வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் அங்கீகரிக்குமாறு எமக்குச் சொல்கின்றன.

வாழ்க்கையிலும் முரண்பாடுகள்,வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதனை அங்கீகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.பலவீனங்கள் கொண்ட மனித வாழ்க்கையில் திருமணமும் ஒரு ஆசான்தான்.அவனது அல்லது அவளது பலவீனங்களை, இயலாமைகளை, இயலுமைகளை,திறமைகளை ஒருவர் மற்றவருக்கு உணர்த்தும், எடுத்துச் சொல்லும் அரிய சந்தர்ப்பத்தை திருமணம் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஒருவர் மற்றவரை ஊக்குவிக்கவும் பிழைவிடும் போதும் பக்குவமாகச் சுட்டிக் காட்டவும் விழும் போது தாங்கிக் கொள்ளவும் இந்த வாழ்க்கை நமக்குக் கற்றுத் தர வேண்டும்.ஒரு ஆடை மனிதனை அழகுபடுத்துகிறது, கண்ணியப்படுத்துகிறது,குறைகளை மறைக்கிறது.அதுபோலத்தான் ஒரு கணவனுக்கு மனைவியும் மனைவிக்குக் கணவனும்.இருவரும் இருவருக்கும் ஆடையாக இருக்கிறார்கள்.

“சின்னச் சின்னதாய் சேவை செய்து மகிழ்வாள்.கண்ணின் வழியே பாச மழை பொழிவாள்.மனைவி போல ஒரு உறவு இல்லை.அவளைக் காதலி தோல்வி இல்லை“ என்று ஆரம்பமாகும் ஒரு பாடல் நினைவுகளில் அலைமோதுகிறது.

ஆண் உயர்ந்தவன்,பெண் தாழ்ந்தவள் என்ற ஒரு நியதி உலகத்தில் இல்லை. இருவரும் வேறு வேறு சுபாவங்களைக் கொண்டிருக்கின்றனர். பெண் என்பவள் ஆணுக்கு சேவகம் செய்யும் இயந்திரம் அல்ல,அவளும் மனிதன் என்தை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருவரும் இருவருக்காகவும் வாழ்க்கின்றனர்.குடும்பத்தைச் சுமப்பதில் இருவரும் சமமான பாரங்களைத் தாங்குகின்றனர்.ஒருவர் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் வீடுகளில் அன்பு என்பது சுவர்களில் தொங்கும் வார்த்தை அட்டையாக மட்டும்தான் இருக்கும்.

கொழும்பின் பிரதான வீதியொன்றினால் ஒரு இரவு நேரம் களைப்பு மிகுதியுடன் நடந்து கொண்டிருந்தேன்.ஒரு பெண் தனது கணவரை வெளியில் தள்ளி கதவை அடைக்க முயன்று கொண்டிருந்தாள்.கணவன் குடிபோதையில் தகராரு செய்திருக்க வேண்டும்.மாநகரின் பரபரப்பில் இதையலெ்லாம் யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்.இப்படிக் குடிபோதையில் சதாவும் வீட்டையே காயப்படுத்தும் ஆண்கள் பலர் இவ்வுலகில் இருக்கிறார்கள்.

எல்லா மனிதர்களுக்கும் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.சிலர் மனிதனாக இல்லாமல் பிரச்சினையாகவே இருக்கவும் செய்கிறார்கள். மாநகரத்தில் நான் தங்கியிருக்கும் இடத்திற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் கணவனும் மணைவியும் ஓயாமல் சண்டை பிடிப்பார்கள்.எல்லை கடந்த வார்த்தைப் பிரயோகங்களைத் தாண்டி கூச்சலைக் கடந்து அடியில் போய் முடிவடையும் அந்தச் சச்சரவு.இது போன்ற அன்றாடச் சண்டைகளால் குடும்பம் எனும் அழகிய ஓவியம் சிதைவடைகிறது.குழந்தைகள் மனது காயம்படுகிறது.

கடல் அழகாகத்தான் காட்சி தருகின்றது.அதன் ஆர்ப்பரிப்பும் கொந்தளிப்பும் வெளிப் பார்வைக்கு வருவதில்லை.எல்லாக் குடும்பங்களும் வெளித் தோற்றத்திற்கு அமைதியாகத்தான் தோற்றமளிக்கின்றன.உள்ளே நிலவும் அமைதியின்மைகளையும் முரண்பாடுகளையும் எல்லோரும் பொட்டலம் எனக் கட்டி வைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனைப் பாதுகாக்கத் தெரியாதவர்களும் பாதுகாத்துப் பயனில்லை என நினைப்பவர்களும் அவற்றை அவிழ்த்துவிடுகின்றனர்.

ஓவ்வொருவருக்கும் அமையும் வாழ்வானது பல படித்தரங்களில் அமைகிறது. வாழ்வதற்கான பக்குவமும் அனுபவமும் சிலருக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. சிலர் திருமணத்தின் பின்னரேயே அதைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றனர்.இது ஒரே இரவில் நடந்து முடிகிற காரியமல்ல.அனுபவம் என்பது மரணம் வரையிலும் இருக்கிற ஒரு பாடம்.

வெளியிலிருந்து பார்க்கும் போது வாழ்க்கையின் ஆழம் ஒருவருக்குப் புரிவதில்லை.ஆனால் அதன் பள்ளத்தாக்குகளில் இறங்கும் போதுதான் அதன் ஆழமும் அகலமும் நமக்குத் தெரிகிறது.ஆனால் அது நம்மை உள்ளிழுக்கும் புதைகுழி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.வாழ்வதற்கான உற்சாகம் அங்குதான் மறைந்திருக்கிறது.
அன்பெனும் திரவம் நம் குருதி முழுக்க ஓடுகிறது.அவ்வப்போது வரும் ஆத்திரங்களாலோ,கோபங்களாலோ,முரண்பாடுகளாலோ,சண்டைகளாலோ அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.அனைத்தையும் மிகைக்கும் சக்தி அதற்கு இருக்கிறது. அழகிய குரலெடுத்துப் பாடத் தெரிந்தவனுக்கு இந்த வாழ்க்கை ஒரு இனிமையான ராகம்.நாம் குரலை மறந்துவிட்டு ராகத்தை நொந்து கொண்டிருக்கிறோம்.




No comments:

Post a Comment