Monday, September 21, 2015

நல்ல படம் எடுப்பவர்களை உருவாக்குவதும் அவற்றைப் பார்ப்பதற்கு மக்களை தயார் பன்னுவதுமே எமது பணி - தமிழ் ஸ்டுடியோ அருண்





அருண்,இந்தியாவைச் சேர்ந்தவர். லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்பட டிப்ளோமோ முடித்திருந்தாலும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடாமல், தமிழ் குறும்படங்களை ஊக்குவிக்கும் பாதையை தேர்ந்தெடுத்தவர்அருண்.2008 ஆம் ஆண்டு  thamizhstudio.com என்ற இணையத்தை ஆரம்பித்தார். துவங்கும் போது குறும்பட ஆர்வலர்களுக்கான ஒர் இணைய வெளியாகவே அது இருந்தது. ஆனால் அடுத்த வருடமே அருண் அதை ஒரு இயக்கமாக மாற்றினார்.


குறும்படங்களை ஊக்குவிப்பதற்கு பேரார்வம் கொண்ட அருண், பல்வேறு வகைப்பட்ட வடிவங்களில் அதை செய்கிறார். தமிழ் ஸ்டுடியோவில் மாதாந்த குறும்பட திரையிடலும் அதை தொடர்ந்து பல்வேறு துறைகளிலிருந்து நிபுணர்களின் பேச்சுக்களையும் நடத்தினார். இன்றுவரை, அறுபதுக்கும் மேற்பட்ட கூட்டங்களை ஐந்து ஆண்டுகளில் அவர் நடத்தியுள்ளார். அவரது இயக்கத்தை தமிழகத்தின் உட்பகுதிகளுக்குள்ளும் எடுத்து சென்றுள்ளார். இந்திய திரைப்பட நூற்றாண்டின் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, நூறு சிறந்த இந்திய திரைப்படங்களை ஓராண்டு முழுவதும் திரையிட அவர் ஏற்பாடு செய்தார்.

லெனின் விருதை (படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவரின் பெயரில்) அவர் நிறுவினார். ஒவ்வொரு வருடமும் சிறந்த குறும்பட/ஆவணப்பட திரைப்பட கலைஞருக்கு இவ்விருது கொடுக்கப்படுகிறது. சான்றிதழுடன் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசை கொண்டது இவ்விருது. இந்த ஆண்டு, அறிமுக குறும்பட திரை கலைஞருக்காக பிரத்தியேகமாக புதிய விருதொன்றை அறிமுகப்படுத்தியுள்ளார், அதன் பெயர் பாலு மகேந்திரா விருது. தனது செயல்பாடுகளுக்கு தூணாக இருந்த பாலு மகேந்திராவின் நினைவாக அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இவ்விருது நிறுவப்பட்டது.

திரையிடல் மற்றும் விருது நிகழ்வுகள் தவிர்த்து, மாணவர்களுக்கு திரைப்படமெடுக்க பயிற்சி கொடுப்பதிலும் அவர் முழு கவனம் செலுத்துகிறார்.. அவரது படிமை பாடத்திட்டம் தனித்துவமான அம்சங்களுடன் செயற்படுகிறது.இப்படியாக ஒரு குறிக்கோளுடன் இயங்கும் அருணை பரபரப்பு மிக்க சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்திக்க முடிந்தது.எங்கே அமர்ந்து பேசலாம் என்றோம்.நிலத்திலே அமரலாம் என்றார்.அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.

சந்திப்பு- இன்ஸாப் ஸலாஹுதீன்,சாளை பஷீர்

மாற்று சினிமாவை எவ்வாறு வரைவிளக்கனப்படுத்துவீர்கள்?

சினிமா என்பது சினிமாதான்.அதில் நல்ல சினிமா கெட்ட சினிமா,வணிக சினிமா என்று ஒரு பாகுபாடே கிடையாது.ஒரு அடையாளத்திற்காகவே மாற்று சினிமா என்று சொல்கிறோம்.சினிமா என்பது ஒரு விடயத்தை காட்சியில் எப்படிச் சொல்வது என்பதாகும்.இலக்கியம் என்பது எப்படி எழுத்துக்களாலும்,ஓவியம் என்பது கோடுகளாலும் உருவாவது போல சினிமா காட்சிகளால் உருவாகிறது.

வணிக சினிமா மக்கள் மயப்பட்ட அளவு மாற்று சினிமாக்கள் மக்கள் மயப்படாதது ஏன்?

எமது சினிமா அமெரிக்காவின் தாக்கத்தால் வந்த ஒன்று.அமெரிக்கா என்பது வளர்ச்சியடைந்த ஒரு சமூகம்.அங்கு அடிப்படைத் தேவைகளுக்கான அவசியம் இல்லை.தண்ணீர் இல்லை மின்சாரம் இல்லை,மண்ணெண்ணை இல்லை போன்ற பிரச்சினைகள் அங்கு இல்லை.அமெரிக்கா தனிமனித துதி பாடலை முன்வைத்தது. தமக்கு ஆகாத நாடுகள் உலகுக்குத் தீமை செய்வது போலவும் அதனை அமெரிக்கா அல்லது அமெரிக்கக் கதாநாயகன் காப்பாற்றுவது போலவுமே அவர்களது திரைப்படங்கள் இருக்கும்.இந்த இடங்களில் இருந்துதான் தமிழ் சினிமா தன்னை உருவாக்க ஆரம்பித்தது.தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் என்பது அமெரிக்க சினிமாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றுதான்.

பிரான்ஸ் மாதிரியான ஒரு நாட்டுக்கு நாம் அடிமையாய் இருந்திருந்தால் எமது கலை வெளிப்பாடு இவ்வளவு மோசமாக இருந்திருக்காது என்று நான் நினைப்பதுண்டு.ஏனெனில் அவர்களது கலை உள்ளீடுகள் சிறப்பானதாக இருக்கும்.ஆங்கிலேய ஆதிக்கத்திற்குக் கீழ் இருந்ததால்தான் எமது கலை வெளிப்பாடுகள் இவ்வளவு சீரழிந்திருக்கிறது.
பேச்சு என்பது குறிப்பாக எமது நாட்டில் ஒரு பெரிய கலை.பேசியே நாம் அனைத்தையும் புரிய வைக்க முயற்சிக்கிறோம்.இது எமது அறிவை மழுங்கடிக்கிறது.படத்தை காட்சி மொழியில் பார்க்கின்ற அறிவு வளராததன் விளைவுதான் நல்ல சினிமாக்கள் மக்கள் மயப்படாமைக்குரிய காரணம் எனலாம். 

நல்ல சினிமாக்களை மக்களுக்கு கொண்டு போக எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள்.

நாங்கள் எட்டு வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். குறும்படங்களை மாற்று ஊடகமாக பார்த்தோம்.இப்போது அதுவும் நுழைவுச் சீட்டுக் கலாசாரத்திற்கு அடிமையானதால் நாங்கள் பிரதான நீரோட்டத்திற்குள் நுழைந்து விட்டோம்.அப்போதுதான் தமிழ் ஸ்டுடியோ இயக்கமாக மாறுகிறது.இந்தியாவில் முன்னோடி என்று சொல்வதற்கு எந்த இயக்கமும் இல்லை.பிரன்ஸில் நிவ் வேவ்ஸ் என்றும் இத்தாலியில் நியோரலிஸ் என்றும் இயக்கங்கங்கள் இருந்தன.உதாரணத்திற்கு பிரான்ஸை எடுத்துக் கொண்டால் அங்கு அரச விடுதிகளின் உல்லாசங்களையே படமாக எடுத்துக் கொண்டிருந்தார்கள்.மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகள் பால் இல்லாமல் செத்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால் நீங்கள் பார்க்கக் கூடிய சினிமா அரசனும் அரசியும் விடுதிகளில் கூடி கேளிக்கை நடத்துவதாக இருக்கும்.இதைப் பார்த்த ஆந்திரா பேசின் ,துரோபுட் போன்றவர்களுக்கு இதுவல்ல சினிமா,கலை என்பது மக்களை மேம்படுத்த வேண்டும் என்று சொல்லி நிவ் வேவ்ஸ்(புதிய அலைகள்) என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்கள்.

இவர்கள் சினிமாவின் கதையை மக்களிடமிருந்து எடுத்து மக்களுக்காக காட்சிப்படுத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள்.காலப்போக்கில் இது நல்ல வளர்ச்சியடைந்தது.நல்ல சினிமாக்களின் வருகைக்கு இது வித்திட்டது எனலாம்.

இந்தப் பின்னணியில் தமிழ் நாட்டில் தமிழ் ஸ்டுடியோவை நாங்கள் ஆரம்பித்தோம்.சினிமாவுக்கு முதல் தேவை வடிவம் தான்.இந்த வடிவத்தில் எதைப் பேசுகிறோம் என்பதும் முக்கியமானது.இந்தியா போன்ற நாடுகளில் இந்த வடிவத்தில் காமடியையோ பொழுது போக்கையோ எத்தனை நாளைக்குத்தான் சொல்வது?ஏனெனில் நல்ல தண்ணீரைக் குடிக்க முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். ஊடகங்களும் கலைகளும் மக்களின் பிரச்சினையைப் பேச வேண்டும். 

எனவே வடிவமும் உள்ளடக்கமும் சிறப்பாக இருக்கக்கூடிய படங்களை சிறந்த சினிமா எனச் சொல்லிவிடலாம். உள்ளடக்கம் மக்களின் பிரச்சினையைப் பேசும் போதுதான் வெற்றி பெறுகிறது.
தமிழ்நாட்டில் மின்சாரப் பிரச்சினை என்பது பெரும் பிரச்சினையாக தலைவிரித்தாடுகிறது.ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை அது உண்டுபண்ணியிக்கிறது.ஆனால் தமிழில் வந்த எந்த சினிமாவும் இந்தப் பிரச்சினையையோ இது போன்ற இன்னபிற பிரச்சினைகளையோ பதிவு செய்யவில்லை.

வடிவமும் உள்ளடக்கமும் சிறப்பாக உள்ள  படங்களை முன்னெடுப்பதற்காக நாம் எழுதுகிறோம்,செயலமர்வுகளை நடாத்துகிறோம்,சிறந்த சினிமாக்களை திரையிடுகிறோம்,நல்ல சினிமா வரவேண்டிய அவசியத்தை தெளிவுபடுத்துகின்றோம்,நல்ல படம் எடுப்பதற்கான மாணவர்களை உருவாக்குவதும் நல்ல படங்களைப் பார்ப்பதற்கு மக்களை தயார் பன்னுவதுமே எங்களது பிரதான குறிக்கோள்கள்.இந்த இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது எமது நோக்கம் நிறைவேறும்.


சிறுவர்களுக்கான சினிமாவின் உலகலாவிய ரீதியில் எப்படி இருக்கிறது.தமிழ்ச் சூழலில் அதன் இடம் என்ன?

இந்த உலகில் பாவப்பட்ட ஜென்மங்கள் யாரென்றால் சிறுவர்களும் வயோதிபர்களும் மாற்றுத் திறனாளிகளும்தான்.இந்த மூன்று தரப்பினரையும் உலகம் கண்டுகொள்வதில்லை.வெர்னர் ரஸ்ஸாக் என்ற ஜெர்மனிய இயக்குனர் ஒரு விடயத்தை சொல்வார்.ஜெர்மனியில் என்னுடைய பேரக்குழந்தைகள்,கொள்ளுப் பேரக் குழந்தைகள் ஏன் தொலைக்காட்சியை எங்களுக்கு அறிமுகப் படுத்தினீர்கள்?எங்கள் சந்ததிவரை இதனை விட்டு வைக்காமல் நீங்களே அழித்திருக்கலாமே என்று எங்கள் கழுத்தை நெறித்துக் கொல்லும் அளவுக்கு வெறியுடன் திரிவார்கள்.ஏனெனில் தொலைக்காட்சியில் இருக்கக் கூடிய பிம்பங்கள் அவர்களது மனதை அவ்வளவு சேதப்படுத்தியிருக்கிறது என அவர் சொல்வார்.ஜெர்மனியிலே இப்படியென்றால் தமிழ்நாட்டின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.நிச்சயம் அடுத்த தலைமுறை உங்களை அப்படியான ஒரு தாக்குதலுக்கு உள்ளாக்கும்.ஏனெனில் குழந்தைகளின் அக உலகத்தில் இருக்கக்கூடிய பிம்பங்கள் சிதைந்து போயிருக்கின்றன. சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை சிறுவர்களே பார்க்க முடியாத நிலையே காணப்படுகிறது.படு அபத்தமான நிகழ்ச்சிகளை பார்க்கும் போது குழந்தைப் பருவத்தின் தன்மை என்பது அழிபட்டுப் போகிறது.

இன்று சிறுவர்கள் பெரிய வன்முறையுடன் இருக்கிறார்கள். எப்போதும் அடிப்பதையும் உதைப்பதையுமே பார்க்கிறார்கள்.ஒரு சின்னப் பிரச்சினை என்றால் கூட உடனே குத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.அவர்களது மனதில் வன்முறை திணிக்கப்படுகிறது.சிறுவர்களுக்கான சினிமா என்பது தமிழ்நாட்டில் சுத்தமாக இல்லை.சிறுவர்களை வைத்து பெரியவர்களுக்காக எடுத்த சில படங்களே இங்கு இருக்கின்றன.குழந்தைகளின் உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க முடியாது.
ஈரானில் ஜப்பானில் அதிகமான குழந்தைகளுக்கான படம் வருகிறது. பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் குழந்தைகளாகவே இல்லை. அமெரிக்காவில் 12 வயதுச் சிறுவன் துப்பாக்கியை எடுத்து சுடுகிறான். குழந்தைகள் எங்கிருந்து இதைக் கற்றுக் கொள்கிறார்கள்.குழந்தைகளின் உள்ளம் எதிர்த்தன்மையை மிகவும் விரும்பும்.அவனை வன்முறைக்கு உட்படுத்தும் போது குழந்தைத் தன்மை செத்துப் போய்விடுகிறது.

கருத்துச் சுதந்திரம் என்பது இன்று வாத்திற்குள்ளாகிறது. கருத்துச் சுதந்திரக்கு என்று ஒரு அளவு கோள் இருக்கிறதா?எல்லையற்ற கருத்துச் சுதந்திரம் என்று ஒன்றுன்டா?

சினிமாவைத் தப்பாகப் புரிந்தது போல நாம் இதனையும் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.உங்களுடைய கருத்துச் சுதந்திரம் எதுவரைக்கும் என்றால் எனது மூக்கு வரைக்கும்தான் என்று பிரபலமான ஒரு கூற்று உள்ளது.மூக்குவரைக்கும் விரலை அசைத்துக் கூடப் பேசலாம்.மூக்கைத் தொடுவது உங்கள் சுதந்திரம் கிடையாது.மூக்கைத் தொடுவது என் மீது திணிக்கும் வன்முறையாகும். ஒருவரை சேதாரப்படுத்தாத எதுவும் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வந்துவிடும்.சேதாரப்படுத்துவதாக இருந்தால் அது கருத்துச் சுதந்திரத்திற்குக் கீழ் வராது. ஒருவர் ஒரு கருத்தை முன்வைக்கும் போது அதற்கு எதிர்வினையாற்றுபவர்கள் அவர் கருத்து முன்வைத்த பாணியிலேயேதான் எதிர்வினையை முன்வைக்க வேண்டும்.அதை விடுத்து வன்முறையை நோக்கிப் போகக் கூடாது.

கலை இலக்கியம் சமூகம் என்று வாழ்பவர்களை சமூகம் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.இதனால் என்ன லாபம் கிடைக்கிறது என்ற மன நிலை பொதுப்புத்தியில் இருக்கிறது.இதனை எப்படிக் களையலாம்?

படிக்கும் போது பிள்ளைகளை விளையாடக் கூடாது என்று சொல்லியே வளர்க்கிறோம்.படிப்பதன் நோக்கமே பணம் ஈட்டுவது என்றாகிப் போய்விட்டது.எம்மைச் செழுமைப்படுத்திக் கொள்ளவே நாம் படிக்க ஆரம்பித்தோம்.ஆனால் இன்று சம்பாதிக்கவே படிக்கிறோம்.
என்னுடைய எல்லைக்கு அப்பால் ஒரு பிரச்சினை வரும் போது நுட்பக் கலைகளை நுணுக்கமாய் பிரித்தாலும் பக்குவம் உள்ளவன் அதனை இலகுவாகத் தாண்டிப் போவதை நாம் பார்க்கிறோம்.நுட்பக் கலைகளை பகுப்பாய்வு செய்யத் தெரியாத,தனது குடும்ப வாழ்க்கைக்குள் அல்லது என் வீடு என் குடும்பம் என்று சிக்கிக் கொண்டிருப்பவன் தற்கொலைக்குத் துணிகிறான்,அடுத்தவன் மீது வன்முறையைப் பிரயோகிக்கிறான்.நுட்பக் கலைகள் மனதைப் பக்குவப்படுத்துகிறது.அப்படிப் பக்குவப்படும் போது வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்று அவன் உணர்கிறான். 

பொருளாதார வெற்றிதான் வாழ்க்கையை முழுமைப்படுத்துவதாக நாம் நம்புகிறோம்.வெற்றி பெற்றவன்தான் வாழ்க்கையில் போற்றப்படுகிறான். நாம் இருக்கும் பணியில் லயிக்கும் போதுதான் அது வெற்றி பெறுகிறது.
பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றவன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை இழந்திருப்பதனை உணர்ந்து கொண்டே இருக்கிறான்.அடுத்தவனுக்கு உதவும் மனநிலையில் அவன் இருப்பதில்லை.வறுமையிலும் கொடுக்க நினைப்பவன் மனதளவில் தைரியமாக இருக்கிறான்.

சமூகத்தின் பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் நீங்கள் சொல்கின்ற மனநிலையையை களையும் பணியை குழந்தைகளிடமிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.குழந்தைகள் ரசிக்க ஆரம்பித்தால் அதுதான் வெற்றி.

No comments:

Post a Comment