Saturday, November 29, 2014

எழுத மறந்த கடிதம்…



கடிதம் எழுதும் பழக்கம் இன்று முற்றாகக் குறைந்து போய் விட்டது. எல்லோரினதும் கடந்த காலம் என்பது எண்ணற்ற கடிதங்களால் நிரம்பியிருக்கின்றது. பாடசாலைக் காலத்தில் தமிழ்ப் பாடத்தில் கடிதம் எழுதும் வழக்கம் இருக்கின்றது.எமது பிறந்த நாளைக்கு அழைத்தோ, வாழ்த்தியோ தொலை தூர நண்பர் ஒருவரை கற்பனை செய்து கொண்டு கடிதம் எழுதுவோம்.அதுவரையில் நிஜமாக யாருக்கும் கடிதம் எழுதிப் பார்த்ததில்லை.இன்றைக்கு ஒரு குழந்தை பாடசாலையில் எழுதும் கடிதமே அது எழுதும் முதலும் முடிவுமான உறவுமுறைக் கடிதமாக மாறிவிட்டது.

பாடசாலை வாழ்க்கையின் இறுதிக் காலங்களில் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஒரு ஆசிரியை தனது பயிற்சிக் காலத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினார்.என்னுடன் மிக்க அன்பாக இருந்த அவருக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலிட்டேன்.ஒரு கடிதத்தைத் தபாலிடும் தருணம் வார்த்தைகளுக்கு அப்பால்பட்டது.ஒரு கடிதத்தின் பதிலுக்காகக் காத்திருப்பதென்பதும் அது தனியான இன்பம் கொண்டதுதான்.
தபால்காரனின் வருகையை எதிர்பார்த்து வீட்டு முற்றத்தில் எத்தனையோ பேர் காத்திருக்கின்றனர்.அந்த ஏமாற்றத்தையும் சுகமாகத் தாங்கிக் கொள்கின்றனர்.அக்கடிதத்திற்கான பதில் வந்த தருணமும் அதன் மகிழ்ச்சி அலைகள் என் இதயத்திற்குள் விரிந்ததும் எனக்குள் மறக்க முடியாமல் பதிவாகியிருக்கிறது.

என் தந்தையின் தங்கை வெளிநாட்டிலிருந்த சமயம் இடைக்கிடை வெளிநாட்டுக் கடிதங்கள் வரும்.அதன் உறையும் முத்திரையும் பார்க்க அழகாகக் தெரியும்.கடிதத்திற்குப் பதில் கெஸெட்டில் பேசிக் குரல் பதிவு செய்து அனுப்பும் வழக்கமும் இருந்தது.மாதங்களாகக் காத்திருந்தே வீட்டார் அதனைப் பெற்றுக் கொண்டனர்.

உயர் கல்விக்காக ஊரைவிட்டுச் சென்ற பிறகு நண்பர்களுக்குக் கடிதம் எழுதுவதும் பதில் கடிதத்திற்காகக் காத்திருப்பதும் கூடுதல் சுவை கொண்ட ஒன்றாக மாறிவிட்டது.இருக்கின்ற தனிமையை ஆற்றுவதற்கு அது ஓரளவேனும் துணை செய்தது.மாதத்திற்குத் தேவையான செலவுப் பணத்தை எனது சகோதரன் தபாலிலே அனுப்பி வைப்பான்.வெள்ளை நிறக் கடித உறையில் வரும் அக்கடித்ததை கடிதத்திற்குப் பொறுப்பாய் இருந்தவர் “உங்கள் நாநா அனுப்பியிருக்கிறார்“ என்று சொல்லியவாறு நீட்டுவார்.வெள்ளைக் காகிதம் ஒன்றுக்குள் சிரித்தவாறு பணம் இருக்கும்.
நண்பன் அனுப்பிய சில கடிதங்களை அண்மையில் அவனிடமே ஒப்படைத்தேன்.ஆண்டுகள் பல கடந்தாலும் ஒரு கடிதம் கடந்த காலத்தின் ஒப்பற்ற தருணங்களை மீட்டித் தரும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. கடந்த காலத்தின் காட்சிச் சித்திரத்தை நம் கண்களுக்கு முன்னாள் அவை கொண்டு வருகின்றன.ஒரு தொலை பேசி அழைப்புக்கு அந்த சக்தி இல்லை என்றே தோன்றுகிறது.


என் கல்லூரி வாழ்க்கையின் போது இணையத்திலிருந்து பெறப்பட்ட தாகக் கூறி இந்தக் கவிதையை நண்பர் ஸப்ராஸ் எனக்கு 2007.02.10 ம் திகதியன்று தபாலிட்டிருந்தார்.அந்தக் கவிதை உணர்வுகளுக்குள் இன்றும் பயணிக்கிறது.
 உனக்கு
அழத்தோன்றும் ஒரு நாளில்
எனக்குமொரு அழைப்புத்தா...
சத்தியமாய் நானுன்னை
சிரிக்கப் பண்ண மாட்டேன்.
நிச்சயமாய் என்னாலும்
சேர்ந்தழ முடியும்.

உனக்கு தூரத்தே எங்காவது
ஓடிவிடத் தோன்றும்
ஒரு நாளிலும்
அச்சமின்றி எனக்கொரு
அழைப்புத் தா...
சத்தியமாய் நானுன்னை
நின்றுவிடக் கேட்க மாட்டேன்
நிச்சயமாய் என்னாலும்
சேர்ந்தோடி வர முடியும்.


உனக்கு
அனைத்துக் குரல்களும்
கசக்குமோர் நாளிலும்
எனக்கொரு அழைப்புத் தா
சத்தியமாய் நான் வந்து
குரலெலுப்பிப் பேசமாட்டேன்.
நிச்சயமாய் என்னாலும்
நிசப்தமாய் இருக்க முடியும்...!


ஆனால்...
நீயாக அழைக்குமோர் நாளில்
என் பக்கம்
நீண்ட நிசப்தமிருந்தால்..
வேகமாய் வந்து
என்னைப் பார்!
சேர்ந்தழவோ,
நிசப்தமாய் விழி பார்த்து
அமர்ந்திருக்கவோ,
அன்றைக்கு என் தேவை
நீயாக இருக்கலாம்...

கடிதம் ஒரு இலக்கிய வடிவமகக் கூட மாறியிருக்கின்றது.உலக எழுத்தாளர்களின் கடிதங்களே தனி நூல்களாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன. தபால்காரன் யார் யாருக்கோ தூதுகளைச் சுமந்து கொண்டு வீதிகளில் திரிகிறான்.எந்த வீட்டிற்கு யாரிடமிருந்து கடிதம் வருகிறது என்பது அவனுக்குத் தெரியும்.தபால்காரனுடன் கடிதம் மூலம் உண்டாகும் உறவும் தனியானதுதான். 

பிரபல சிலி எழுத்தாளரான பாப்லோ நெருடாவுக்கு தபால்களைக் கொடுக்கும் வாய்ப்பு  தபால்காரனாக வேலையேற்ற ஒரு இளைஞனுக்குக் கிடைக்கிறது. பாப்லோ நெருடா சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இத்தாலிய நகரம் ஒன்றில் தங்கியிருக்கிறார்.கவிதையின் சக்தி பற்றி பப்லோ அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இருவருக்கிடையிலும் உறவு வளர்கிறது. இந்த உறவை மையமாக வைத்து  “இல் போஸ்டினோ“ எனும் திரைப்படம் வெளிவந்தது.

இன்று யாரும் கடிதம் எழுதுவதில்லை.அதற்கான தேவையும் பொறுமையும் குறைந்து போய்விட்டது.ஒரு கடிதத்தில்தான் இன்னொருவருடன் எமது மனதை நாம் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறோம். கடிதமே தொடர்பு அற்றுப் போகாத ஒரு உணர்வு நிலையை தேக்கி வைக்கின்றது.ஒரு தொலைபேசி அழைப்பில் அல்லது குறுஞ்செய்தியில் அவ்வளவு விரிவாக நாம் எதையும் வெளிப்படுத்துவதில்லை. 

இன்று ஒரு கடிதம் எழுதுவதற்கு, அதற்குப் பதில் வரும் வரை காத்திருப்பதற்கு யாருக்கும் முடிவதில்லை. அதற்கான தேவையும் இல்லை. தொழில் நுட்பத்தின் இராட்சத வளர்ச்சி அனைத்தையும் கைகளுக்குள் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறது.ஒரு காலத்தில் கடித உறை,முத்திரை என்பனவெல்லாம் உறவை இணைக்கும் சாதனங்களாக இருந்தன.இன்று உத்தியோகபூர்வ செயற்பாடுகளுக்கு மட்டுமென அவை சுருங்கிப் போய்விட்டன. பழைய பழக்க வழக்கங்கள் எல்லாமே “அது ஒரு காலம்“ என்றாகி விட்டது. 


இன்று ஈ மெயில்,எஸ்.எம்.எஸ்,வட்ஸ் அப்,ஸ்கைப்,வைபர்,டோக் ரே,லிபொன், லைன் என வகை வகையாக தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டன.வயதான பாட்டிகள் கூட இவற்றை உச்சரிக்கப் பழகிவிட்டனர்.இவை தூரத்தை அருகே கொண்டு வந்து விட்டன. உறவுகளைப் பிரிந்து மாதங்களாகக் காத்திருக்கும் நிலையை நீக்கி பிரிவின் துயரைத் துடைத்துவிட்டன.

இன்று ஒரு பிரிவினால் துயருறும் தருணமோ அதன் அலாதியான இன்பமோ யாருக்கும் கிடைப்பதில்லை.பிரிவு அன்பை அதிகரிக்கும் ஒரு மாயாஜாலம். இன்று யாரும் பிரிவின் துயரினால் அதன் அந்தரங்க  வாடுவதில்லை.பிரிவு தொழில்நுட்பத்தின் காலடியில் மனிதன் மண்டியிட்டுக் கிடக்கிறான்.

இணையத்தினதும் இன்னபிற சாதனங்களின் வருகையும் ஒரு அவசர யுகத்திற்குள் நம்மைத் தள்ளி விட்டன.யாருடனும் நின்று கதைக்க நேரமில்லை,யாருக்காகவும் நேரம் ஒதுக்க மனமில்லை.நீண்ட நேரம் முகம் பார்த்துக் கதைக்க வாய்ப்பில்லை.உறவினர்களைத் தேடிச் சென்று நலம் விசாரிப்பதில்லை.திரைகளையே வெறித்துப் பார்த்தபடி நகர்கின்றன எல்லோரினதும் நாட்கள்.

எஸ்.ரா சொல்லுவது போல “செல்போன் வந்தபிறகு அந்த உறவுகள் அப்படியே துண்டிக்கபட்டுவிட்டன. யாரும் யாரையும் பார்க்க விரும்புவதில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு கட்டாயமான காரணம் தேவைபடுகிறது. இந்தபக்கம் வந்தேன் உங்களையும் ஒரு எட்டு பாத்துட்டு போகலாமே என்று உரிமையோடு வருகின்றவர்கள் மிக சுருங்கி விட்டார்கள்அது ஒரு தவறான செயல் என்ற குற்றமனப்பாங்கு கூட உருவாகி விட்டது“
ஆளுக்காள் ஸ்மார்ட் போன்களே உலகம் என அடங்கிப் போயிருக்கும் உலகில் மனம் விட்டுக் கதைப்பதற்கோ உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவோ நேரமில்லாமல் போய் விட்டது.பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருப்பவருடன் கதைக்கும் பயணிகள் மிகவும் அரிதாகி விட்டனர்.ஒரு நாளையில் பலநூறு தடவைகள் விரல்கள் செல் திரைகளைத் தொடுகின்றன.விசைப் பலகையை அழுத்துகின்றன.

தொலைபேசிகள் பதட்டத்தை அதிகரித்துவிட்டிருக்கின்றன.தொலைபேசி மணி அடிக்கும் போது ஏன் பதிலளிக்காமல் இருக்கிறார் என்பதிலிருந்து அந்தப் பதட்டம் தொடங்கி விடுகிறது.ஏன் பதிலளிக்கவில்லை? எங்கிருக்கிறாறோ தெரியவில்லை? அல்லது ஏன் அழைப்பை ஏற்படுத்தவில்லை? என அன்றாட வாழ்க்கையில் பதட்டம் இயல்பாய் ஒட்டிவிடுகிறது.

தொழில்நுட்பம் அனைத்தையும் இலகுவாக்கிக் கொடுத்திருப்பது மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.நினைத்த நேரத்தில் யாரையும் தொடர்பு கொள்ளும் உடனடித்தன்மையானது மனித வரலாற்றில் உறவுகளுக்குக் கிடைத்த அரிய பொக்கிசம்.உலகில் நாளுக்கு நாள் புதிய உறவுகளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது நவீன தொழில்நுட்பம்.
ஆனால் அந்த உறவில் பொங்கும் உயிர்ப்பும் பரிவும் தொய்வாகத்தான் தென்படுகிறது.முகப்புத்தகத்தில் தன் பதிவுக்கு எத்தனை லைக் என்று தேடும் மனிதன் நிஜ உலகில் தன்னை எத்தனை  போர் உண்மையாக விரும்புகிறார்கள், தான் எத்தனை பேரை விரும்புகிறேன் என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறான்.

பிஸியான வாழ்க்கையில் சக மனிதனின் இடத்தை செல்பேசிகள் பிடித்து பிட்டன.எம்மை அறியாமலேயே அடுத்த மனிதன் புறக்கணிக் கப்படுகிறான். சனத்தொக்கும் அதிகமாக செல்பேசிகள் வளர்ந்துவிட்டன. இரவு பகலாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.இதற்கு யாரும் விதிவிலக்கில்லை.

கடிதம் எழுதுவது போன்ற உறவின் திரட்சியான தருணங்கள் நம்மை விட்டும் விடைபெற்று பல வருடங்களாகின்றன.நவீன தொழில் நுட்பத்திற்கு வாழ்வை ஒப்புக் கொடுத்துவிடடோம்.கடந்த காலத்தின் பிரியம் என் பேனை வழியே காகிதங்களில் எங்கோ ஊர்ந்துவிட்டது.
“மனித ஊடாட்டத்தை தொழில்நுட்பம் விஞ்சிவிடும் நாளை நினைத்து நான் பயப்படுகிறேன்.ஏனெனில் உலகம் முட்டாள்களைக் கொண்ட ஒரு தலைமுறையை சுமந்திருக்கும்“ என அல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு முறை சொல்லியிருக்கிறார்.அதை நோக்கியா நாம் போய்க் கொண்டிருக்கிறோம் என அச்சமாய் இருக்கிறது.




1 comment:

  1. வேற லெவல் அந்த கடிதத்தை வாசிச்ச ஒரு நொடி நான் அழுதுவிட்டேன்♥

    ReplyDelete