Friday, February 6, 2015

தாய் மொழியில் அமைந்த படைப்பாக்கக் கல்வியே இன்றைய தேவை - ஆயிஷா இரா. நடராசன்




இரா. நடராசன் , 2014 ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர் இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.எளிய தமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும், மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இயற்பியல், கல்வியியல் மேலாண்மை, உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா,நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியர்.மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.இந்த நேர்காணலுக்காக அவரைப் பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவரது அன்பில் எதுவும் குறையவில்லை.அவரது அன்புக்கு நன்றி.



* உங்களது எழுத்து, வாசிப்பு எப்படி தொடங்கியது. இளமைக் காலத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?

நான் பிறந்ததும் வளர்ந்ததும் தமிழ்நாட்டில், திருச்சி மாவட்டம். என் தந்தை ரொம்ப கராரான (நேர்மையான) அரசு அதிகாரியாக இருந்ததால் ஊழல் பெருத்த அதிகார அமைப்பால் பந்தாடப்பட்டு பல இடங்களுக்கு மாற்றப் பட்டார். என் பள்ளிப் படிப்பு துண்டாகி துண்டாகி எட்டு ஊர்களில் தொடர்ந்தது. 

அப்பா, தான் போகிற ஊர்களுக்கு எல்லாம் குடும்பத்தையும் எடுத்துச் சென்றார். எல்லா பஞ்சாயத்துகளிலும் அரச குடியிருப்புகள் ஊர் எல்லையில் காலனிகளுக்கு அருகில் இருக்கும். என் கதைகளில் (பறையடி சித்தர், கேஸ்கூலி) அவ்வகை வாழ்வை நான் பதிவு செய்திருக்கிறேன்.
பஞ்சாயத்து பள்ளிகள் அரசு பள்ளிகள்தான் நான் படித்து வளர்ந்தவை. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளம் இயற்பியல் பட்டம். அப்போது பேராசிரிய ஆத்ரே யா மூலம் நான் தேசிய மாணவர் இயக்கத்தில் இணைந்தேன். வாசிப்பு என் மிக இளம் பிராயத்தில் ஒட்டிக் கொண்டது. கோடை விடுமுறைகளின் சமயம் நாங்கள் எங்கள் தாத்தா வீட்டுக்கு ஏறக்குறைய ஒரு மாதம் லால்குடிக்கு (திருச்சி அருகே) அப்பாவால் அனுப்பப்படுவோம். அங்கே அந்த வீட்டில் எல்லாவித புத்தகங்களும் இருந்தன. மக்சீம் கார் க்கியின் தாய் முதல் கல்கியின் அலை ஓசை வரை எனக்குக் கிடைத்ததையெல்லாம் வாசித்தேன்.

ஆனால், அந்த இளம் பிராயத்தில் (அப்போது 10 வயது இருக்கும்) ஆர்.எல். ஸ்டீபன்சன் சார்லஸ் டிக்கன்ஸ், ஆர்.கே. நாராயண் என ஆங்கில வாசிப்பும் என்னோடு ஒட்டிக் கொண்டது. புதினோறாம் வகுப்பு படிக்கும் போது பழனியில் ஒரு நாட்டு நடுப் பணி கிராம முகாம் நடத்தினார்கள். அங்கே கிராமத்துக் குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்தி, நான் ஆசிரியர் ஆனேன். அதே வகுப்பில் தமிழ்நாடு தமிழாசிரியர் கூட்டமைப்பு நடாத்திய மாணவர்களுக்கான சிறுகதை போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. ஆந்த விகடனில் வெளிவந்த கவிதை மூலம் அதே வருடம் என் இலக்கிய உலக பிரவேசமும் நடந்தது. 

கல்லூரி நாட்கள், பிறகு ஆசிரியர் பணி என்று இருபத்தி ஒன்பது ஆண்டுகளாக நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். கரூர் பி.ஆர். குப்புசாமி பாசறையில் பகுத்தறிவு இடதுசாரியாகி, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் வழியே விஞ்ஞான வரலாற்றாளனாய் என்னை மாற்றியபடி பயணித்து வருபவன். இதுவரை கவிதை நூல்கள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என ஒரு பக்கமும் அறிவியல் நூல்கள், சிறுவர் இலக்கியம் என மறுபக்கமுமாய் 73 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


* அண்மையில் கிடைத்த சாகித்ய அகடமி (சிறுவர் இலக்கியம்) விருது குறித்து...


எனது விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் (சாகித்ய அக டமியின் சிறுவர் இலக்கியத்திற்கான விருது) வழங்கப்பட்டுள்ளது. தமிழ் பிள்ளைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாகி விட்டார்கள்... வாசிப்பு இல்லை... பாடப் புத்தகத்திற்கு வெளியே அவர்கள் பத்திரிகைகள் கூட படிப்பது கிடையாது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், அதை மீறி... வகுப்பு, பாடம், பரீட்சை, மதிப்பெண் என எல்லாவற்றை யும் மீறி குழந்தைகள் வாசிக்கிறார்கள். 

விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்எட்டு பதிப்புகள் வெளிவந்து 16,000 பிரதிகள் விற்ற அறிவியல் புனைக் கதை நூல், விக்ரமன் வேதாளம் புராதனக் கதை வடிவத்தை, மருத்துவ கண்டுபிடிப்புகளின் வரலாறை குழந்தைகளுக்கு கதையாக சொல்ல நான் எடுத்த முயற்சி. இந்த பரிசை என் ஆயிரக்கணக் கான குழந்தை வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 

* பொதுவாக உலக அளவில் தமிழில் சிறுவர் இலக்கியம் என்ன நிலையில் இருக்கிறது?

இன்றைய கணினி யுகத்தில் உங்கள் வெண்திரையில் பதிவிரக்கம் செய்ய முடியாத படைப்புகள் சில உண்டு. உலக அளவில் சிறுவர் இலக்கியம் இன்று ஒரு பிரம்மாண்ட வர்த்தகம். பிராஸ்க் ஃபர்ட் (Frask Furt) புத்தகக் கண்காட்சி வெளியிடும் வருடாந்த பதிப்புரிமை கேட்டலாக் தமிழ் புத்தங்கள் பற்றி பெரிய அக்கறை எடுத்துக் கொள்வது கிடையாது. நீங்கள் எந்த வயது குழந்தைகளுக்கு எழுதுகிறீர்கள் என்பது முக்கியம். உலகம் திட்டமிட்டு இயங்குகிறது. ஹாரி பாட்டரை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் புத்தகம் 9-11 வயதினருக்கானது அடுத்தது. 13-14 வயதினருக்கு. இப்படியே கடைசி 16-19 என திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. 

அதே சந்ததி வளர வளர வாங்கி உபயோகித்தசந்தை! அவர்கள் வாசகர்கள் அல்ல. கன்ஸ்யூமர்கள். புத்தகம் எப்படி இருக்கிறது என்று யாரும் விமர்சனம் எழுத வில்லை. எவ்வளவு விற்றது என்றுதான் விளம்பரப்படுத்தி... சந்தையின் அனத்து வகை வடிவங்களாகவும் மாற்றி -பொம்மை, சட்டை, குளிர்பானம் முதல் சினிமா கார்டூன் வரை- அது விற்பனை சரக்காக மாற்றப்பட்டது. 

அதற்காக திட்டமிட்டு ஒரு விளம்பர அலை உருவாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஹாரி பாட்டர் பங்குகள் கூட உலக பங்கு வர்த்தக சந்தையில் கிடைக்குமளவு போய் அந்த நூலாசிரியை இங்கிலாந்து மகாராணியை விட செல்வந்தரான வெற்றிக் கதையையும் வாசித்திருப்பீர்கள். மறைந்த ரொனால்டு டாஹ்ல் முதல், டேவிட் வில்லியம்ஸ் வரை ஆங்கிலத்தில் குழந்தைகளுக்காக எழுத ஒரு கூட்டமே இருக்கிறது. காமிக்ஸ் உலகம் பட நாவல்களான கிராஃபிக் புத்தகங்கள் என்று உலக குழந்தைகள் படைபுலகம் மிகப் பெரியது. 

நம் தமிழ் குழந்தைகள் இலக்கிய உலகம் இப்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. மிகப் பெரிய அபத்தம் என்னவென்றால், நாம் அவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள், அப்புரம் போதனைக் கதைகள், பொய் சொல்லாதே திருமாது என்று எழுதிக் கொண்டிருக்கிறோம். நான், அகதியாக வந்த ஈழத்து பெண் குழந்தையின் கணித திறன்களை முன் வைத்து மலர் அல் ஜிப்ராபடைத்தபோது பலர் குழந்தைகளுக்கு புரியுமா என்று கேட்டார்கள். எக்ஸென்ஸ் பெர்க்கர் ஜெர்மன் மொழியில் எழுதிய நம்பர் டெவில் அதே பத்து வயது குழந்தைக்கான படைப்புதான். அது அங்கே சக்கை போடு போட்டது. 

பிறகு அதை தமிழில் நான் மொழிபெயர்த்தேன். நமது குழந்தைகள் இதுபோன்ற சவாலான புத்தகங்களையே விரும்புகிறார்கள் என்பதை இப்போதும் நிரூபிக்க முடியும். ஜெடகா கதை, மரியாதை ராமன் என்று எழுதுகிறார்கள். நாம் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்கிறேன் நான். 

* தமிழில் அறிவியல் நூல்களை படைப்பதில் முன்னணியில் இருப்பவர் நீங்கள். அதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

தமிழில் அறிவியல் எழுதுவதில் இரண்டு ரகம் இருக்கிறது. பெரும்பாலான தமிழ் அறிவியல் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு மாதிரியே இருக்கும். நட் சத்திரங்களை அறிவோம், விலங்கியல் அற்புதங்கள் என்றெல்லாம் வருகிறது. இதை எழுதுபவர்கள் பேராசிரியர் அந்தஸ்தில் இருக்கும் தமிழ் நாட்டு அன்பர்கள். ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த மாதிரியே இருக்கும். "விளையாட்டு விஞ்ஞானம்" "அறிவியல் அறிஞர்கள்" என்று இதுமாதிரி புத்தகங்கள் முதல்ரகம். இரண்டாவது ஆங்கிலத்தில் பிரபலமாக விற்ற அறிவியல் வெகுஜன நூல் ஒன்றை தமிழில் மொழி பெயர்ப்பது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியரின். நாடகத்தை பிரெஞ்சு மொழிக்கு ஏழுபேர் தனித்தனியே மொழி பெயர்த்தார்களாம். இதுகுறித்து ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறும் போது ஏழும் தனித் தனி நாடகம் என்றாராம்! 

அதுமாதிரி ஸ்டீபன் "காலம் சுருக்கமான வரலாறு (The Brief History of Time) புத்தகத்தை மூன்று பதிப்பகங்கள் தமிழில் தனித்தனியே கொண்டு வந்துள்ளார்கள். மூன்றும் வேறுவேறு புத்தகமாக இருக்கிறது என்பதே பெரும்பாலானோர் கருத்து. ஆனால் இது போன்ற முயற்சிகளை நாம் நிறுத்திவிடக் கூடாது. என்னுடைய முயற்சிகள் வேறு மாதிரி. நான் அறிவியலை விமர் சனபூர்வமாக அணுகுபவன். "கணிதத்தின் கதை" யில் கணிதத்தின் வரலாற்றை சாதாரண மனிதனின் மொழியில் கொடுத்தேன். "நீங்களும் விஞ் ஞானியாக விரும்புகிறீர்களா", "உலகப் பெண் விஞ்ஞானிகள்",  எல்லாமே அரசியல் நிலைப்பாட்டோடு அறிவியலை அணுகுகின்றன. பகுத்தறிவிற்கு ஆதரவான அதேச மயம் தொகுத்தறிசார்ந்த தமிழின் பதிவாக நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. 

ஒரு லீஸ்மோலின், டொனால்டு கிளாரிக், ஜோசப் சவுல்ஸ்கி, வால்டர் எலவின் போல, பெரியாரும், சிங்கார வேலரும் தங்களது பெரும் பங்களிப்பை செலுத்திய தமிழுக்கு ஒரு காரல் சாகன், ஒரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் வருவதை வரும் தலைமுறையிலாவது சாத் தியமாக்குதல். அதே சமயம் வாழ்வை அறிவியல் பூர்வமாக அனுகிட எழுத்துப்பூர்வமாக ஒரு மாற்று வழியை குழந்தைகளுக்கு முன்வைப்பது. நான் சார்ந்து இயங்கும் பாரதி புத்தகாலயம் மற்றும் புக்ஸ் போஃர் சில்ரன் பதிப்பக நோக்கமும் அதுதான். இன்று ஒருகடலை மிட்டா விலைக்கு என் புத்தகம் கிடைக்கும். ஒரு பார் சோக்லெட் விலைக்கு என் அறிவியல் நூல் இரண்டு வாங்கலாம்.

* "ஆயிஷா" எழுதத் தூண்டியது எது?

அது எழுதப்பட்டு ஒரு ஐந்து வருடங்கள் ஏறத்தாழ தமிழின் முன்னணி பத்திரிகைகளால் வெளியிட முடியவில்லை என திருப்பி அனுப்பப்பட்டது. ஒருபள்ளி ஆசிரியனாக எனது மனசாட்சியின் விம்மல் அந்த படைப்பு. பள்ளிக் கூடங்கள், பலிகூடங்கள் ஆகிவிட்டன என்ற அந்த ஒரு வரியை எழுதுவதற்கு பத்தாண்டு ஆசிரியர் பணியின் வலியை நான் அனுபவிக்க வேண்டி இருந்தது. குழந்தைகளை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் ளும் அதிகாரம் படைத்தவர்களாக அமைப்பு ஆசிரியர்களை வைத்திருந்து. ஏரத்தாழ தமிழ் சூழலில் எல்லோரிடமும் நமது கல்வி குறித்த சுய அனுபவம் சார்ந்த வலியும் கோபமும் இருந்தது. ஆயிஷா கதை கிளரி கொண்டு வந்திருக்க வேண்டும்.

நமது குழந்தைகள் அறியிவில் யாவரையும் விட சிறந்தவை. என் கதைகளில் நான் திட்டமிட்டு ஒளித்து வைத்த உத்திகள் உண்மை தன்மை மாறாத காட்டாறுபோல பிரச்சினையின் தாக்கத்தைக் கூட்டி நிறுத்துபவை. திண்டிவனம் எனும் ஊரில் ஒரு கல்லூரி மாணவர் பாம்பு கடிக்கு மாற்று மருந்து தயாரித்து அதை தனக்கே சுய சோதனை செய்து பார்த்து உயிர்விட்ட உண்மை நிகழ்வை ஆயிஷாவுக்குள் நான் விதைத்திருந்தேன்.
லட்சக்கணக்கான பிரதிகள் அது விற்றதும், பிரேஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ, மராட்டியம் உட்பட மொழி பெயர்க்கப்பட்டதும், ஆயிஷாவை ஒரு இயக்கமாகவே எடுத்துச் சென்ற எத்தனையோ தோழர்களின் உழைப்பை உள்ளடக்கியது. ஆயிரக் கணக்கான ஆர்வலர்களின் மாற்றம் தேடும் மனதை பிரதிபலிப்பது அதில் என் பங்களிப்பு என்ன இருக்கிறது.

* ஆயிஷாவை ஒரு அறிவியல் கதை என்று சொல்லலமா? சமூகம் சார்ந்த அறிவியல் மையக் கதைதானே?

ஆனால், அது அறிவியல் புனை கதை அல்ல. அறிவியல் செய்திகள் உண்மைகள் குறித்த ஆர்வத்தை தூண்டுகிற கதை. அதேபோலவே நான் பூஜ்யமாம் ஆண்டு நாவலை கட்டமைத்தேன். ஆயிஷாவை ஒரு அறிவியல் நூலுக்கான நூலாசிரியையின் முன்னுரை போல எழுதி இருந்தேன். அதை அப்படியே முன்னுரையாக வெளியிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு அறிவியல் கேள்வி பதில் (ஏன், எதற்கு) நூலை வெளியிட்டும் உள்ளது.
பூஜ்யமாம் ஆண்டு பார்வையற்ற சிறுவன் கலீல் அறிவியல் திறன் போட்டிகளில் வென்று வாகை சூடி முதல்பரிசாக இந்திய அரசாங்கத்தின் சார்பில் சந்திரனில் போ இறங்க தேர்வாகும் சித்திரம். அந்த அறுபத்தியாறு பக்க கதைகளுக்குள் ஒரு 1000 அறிவியல் கண்டுபிடிப்புக்களை நான் புதைத்து வைத்திருக்கிறேன். பிரைலில் கூட பூஜ்யமாம் ஆண்டு அச்சாக்கப்பட்டு தமிழின் அவ்விதமான முதல் முயற்சியாக வெளிவந்து எட்டாண்டுகள் ஆகின்றன.

* உங்களது ஏனைய படைப்புகள் அறிவியல் புனை கதைகள் அல்லவா?

ஸர்கஸ் டாட்கொம், பூமா, மலர் அல் ஜிப்ரா மற்றும் சமீபத்தில் வெளிவந்துள்ள டார்வின் பள்ளி போன்றவை அறிவியல் புனைகதை வடிவத்திற்குள் வருபவை. 

* உங்கள் கதைகள் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையா

போர்ஹெஸ் சொல்வார், "கதை கதையாக இருக்க வேண்டாம், உண்மையாகவும் இருக்க வேண்டாம். உண்மையை விட கொதிக்கும் ஒன்றாக இருக்கனும்." என் படைப்புகள் உண்மைத் தன்மை பற்றி நான் பேசக் கூடாது. அதற்கு மேலும் தகுதியானவர்கள் உலகெங்கும் இருக்கும் என் வாசகர்கள். 

ஆனால், கதைகள் அப்படிக் கேட்கத் தூண்டுகின்றன. இது உண்மை சம்பவமா? பல பேர் கேட்கிறார்கள். மதிவெளிவந்தபோது திரு நங்கை சிலர் என்னைத் தேடி ஊருக்கு நேரில் வந்து தனக்கு நேர்ந்ததை அப்படியே எழுதியிருப்ப தாகக் கூறினார்கள். இப்படி பலருக்கு நேர்ந்திருக்கிறது. ஜீ. நாகராஜனுக்கு, கி. ராவுக்கு. கதை இப்படித்தான் பலருக்கு தழுதழுக்க வைத்துவிடும். சுசீ முதல் சுசீ வரை கதை குமுதத்தில் (மறு) பிரசுமானபோது மதுரையின் என் கையேந்தி கண்ணீர் விட்ட அந்த சகோதரியை மறக்க முடியவில்லை. இவர்கள் எல்லோருக்காகவும்தான் நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். 

* ஆனால், தீவிர இலக்கியம் படைத்த நீங்கள் குழந்தைகள் இலக்கியம், அறிவியல் என்று போய் விட்டீர்களே?

அப்படிச் சொல்லிவிட முடியாது. சமீபமாக எழுதப்பட்ட சிரிஞ்சு... (குப்பை பொறுக்கும் குழந்தைகள் கதை) ஆப்பரேஷன் ரெஜி (புற்று நோயால் போராடும் மாணவியின் கதை என நீங்கள் குறிப்பிடும் தீவிர இலக்கியம் தொடர்கிறது. 

* உங்களின் பெரும்பாலான படைப்புகள் பள்ளிக் கல்வி சார்ந்தே அமைகின்றன என்று சொல்லலாமா?

நான் ஒரு பள்ளி ஆசிரியன். ஜப்பானிய படைப்பாக்க சக்கரவர்த்தி மாக்கிகுச்சியின் பங்களிப்புகள் போலதான். என் உலகமே பள்ளிக் கூடம். அதுசார்ந்த அவலங்கள் குட்டி சந்தோசங்கள். நாம் கல்வி பற்றி மிக குறைவாகவே சிந்திக்கும் இனமாகி விட்டோம்.

* எப்படிப்பட்ட கல்வி தேவை என்று நினைக்கிறீர்கள்?

எப்படிப்பட்ட கல்வி தற்போது உள்ளது என பாருங்கள். நம் கல்வியை அரசுகள் விலை கொடுத்து வாங்கும் ஒன்றாக வைத்துள்ளன. "மலை வாழை அல்லவோ கல்வி"? அது நமது பாரம்பரியம் அறுபட்டு ஆங்கிலேய மயமாகி எனக்குள் உங்களுக்குள் இருக்கும் சுயத்தை முற்றிலும் சிதைத்து ஒரு ஐரோப்பியனைப் போல நாடகமாடுவதையே வாழ்க்கையாக்கி கட்டமைக்கும் பாசாங்கான முரட்டு பயிற்சி என்பதை தவிர வேறு என்ன?
நான் படைப்பாக்க கல்வியின் தீவிர ஆதரவாளன். ஜனநாயக வகுப்பறைகள் தேவை. நாங்கள் எமது பள்ளிகளை முன்வைக்கிறோம். ஊரின் அனைத்து வகை குழந்தைகளுக்கும் அருகாமையில் நடக்கும் தொலைவில் செயல்படும் பள்ளி. அங்கே பாவ்லோ பிரையரேவின் விமர்சன பூர்வமான விவாத வகுப் பறைகள். மக்கெரென்கோ வழியில் வேலை கல்வி, கோர்டானும் ஆண்ட்ரு பொவார்டும் முன்வைத்த எதிரொலிப்பு (Reflective Teaching) வகை கற்பித்தல், அதற்கு நாம் ஆரம்ப கல்வியை முழுதும் தாமொழி கல்வியாக மாற்ற வேண்டும்.

* இன்றைய உலகில் ஒரு ஆசிரியரின் பணியை எவ்வாறு சுருக்கமாக வரையறை செய்வீர்கள்?

சமீபத்தில் ஒரு புத்தகம் வாசித்தேன். தலைப்பு அதிர்ச்சி தருவது. "என்னிடம் கூகுல் இருக்கும் போது எனக்கு ஆசிரியர் எதற்கு?" என்று. தனது பாடம் சார்ந்த வல்லுனராக இருந்தால் மட்டும்போதாது. முதலில் இன்றைய ஆசிரியர் துடிப்பான விழிப்பான குழந்தை உரிமை போராளியாக இருக்க வேண்டும். குழந்தை நலன்கள் குறித்த சிறப்பு வல்லுனர்களே வெற்றி பெற்ற ஆசிரியர்களாக இருக்க முடியும். 

தனது சரியான வாழ்வின் மூலம் போதிப்பவரே அவர். உலக அளவில் கல்வி என்பதே நல உதவியாக உள்ளது. அரசுகளின் நல உதவிகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று சேர்ப்பதில் தனது கடமை உணர்ந்தவராக அவர் இருக்க வேண்டி இருக்கிறது. திறன் அடிப்படை கல்வியாக அது மாற்றப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளுங்கள். மனிதவள மேம்பாட்டு கல்வி வல்லுனர்கள் ஆசிரியர். இன்று அறிவு இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. கைபேசி போதும் அறிவுதேடல் நடத்த. 

ஆனால் குழந்தை பள்ளிக்கு வருவது அறிவை மட்டுமே தேடி அல்ல. படைப்பாக்கத் திறன் வளர்ச்சி, வாப்புகள். கல்விக்கு தேர்வு மதிப்பெண்களை கடந்து பிறதேவைகள் உண்டு. தன்னை சுற்றி நடக்கும் அவலத்தை உணர்ந்து கிளர்ந்தெழுதல், ஆபத்தில் உதவுதல், அநியாயத்தைப் பார்த்து நமக்கேன் வம்பு என கடந்து போகாமல் தட்டிக் கேட்பது... மதிப்பெண்கள் கடந்த மதிப்பீடுகளும் மதிக்கப்பட வேண்டும். 

வகுப்பறையில் ஆசிரியரை விட இன்று மாணவர்களே அறிவில் சிறந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்பவராக ஆசிரியர் இருக்கிறாரா என்பது முக்கியம். ஆனால் அப்படிப்பட்ட தலை சிறந்த ஆசிரியர்கள் இன்று உலகம் முழுதுவதும் இருக்கிறார்கள். அனைவரும் மலாலாவை பாராட்டுகிறார்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.
ஆனால் நான் அவரது ஆசிரியை மிரியத்தை போற்றுவேன். தாலிபான் களுக்கு எதிராக ரகசிய பெண் வகுப்பறைகளை நடத்திய மிரியம் அவரது துணிச்சலும் வரலாறு அல்லவா. ஆசிரியர்கள் அப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment