Monday, November 3, 2014

நோபல் விருதின் அரசியல்! – கெளதம சித்தார்த்தன்


 உலகளவில் கவனத்தைக் கவரும் நோபல் விருதுகள் குறித்து காலங்காலமாக விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து கொண்டேயிருப்பது வாடிக்கைதான் என்று, அந்த விமர்சனக் கருத்துக்களை  மலினப்படுத்துவதும், அலட்சியப்படுத் துவதுமான போக்கைத் தொடர்ச்சியாக, சர்வதேச வெளியில் உருவாக்கிக் கொண்டே வந்திருக்கிறது நோபல் விருதுக்குழு. அப்படியான விமர்சனங்களை யும்,   செயல்பாடுகளையும் மாற்றுப்பார்வை கொண்ட சிந்தனையாளர்களும், முற்போக்கு எண்ணங்கள் கொண்ட எளிய மனிதர்களும் முன்வைக்கும்போது, அதைப் பகடி செய்து அலட்சியப்படுத்தும் உளவியலை சர்வதேச அளவில் வெற்றிகரமாக உருவாக்கி வைத்திருப்பதுதான் நோபல் அமைப்பின் மகதத்தான சாதனை.

தற்போது இலக்கியத்துக்கான நோபல் விருது அறிவித்திருக்கிறார்கள். யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரெஞ்சு நாவலாசிரியரான பாட்ரிக் மோடியானோ வுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

patrick modiano
பிரெஞ்சு நாவலாசிரியர் பாட்ரிக் மோடியானோ

சர்வதேச ஊடகங்கள் முழுக்க முழுக்க ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியையே முன்னிறுத்தின. அந்த வரிசையில் அமெரிக்க எழுத்தாளரான பிலிப்ரோத், செக் வம்சாவளி பிரெஞ்சு எழுத்தாளரான மிலன் குந்தேரா, உக்ரேனிய எழுத்தாளரான ஸ்வெட்லானா அலெக்ஸியோவிச், சிரியக் கவிஞர் அடோனிஸ்.. என்று கருத்துக் கணிப்புகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும், முரகாமியின் பெயரையே தொடர்ந்து சொல்லிச் சொல்லி சர்வதேச இலக்கியவாசகர்களின் மனதில் உருவேற்றி வைத்தன ஊடகங்கள்.

முரகாமியின் எழுத்தைப் பொறுத்தவரை தற்கால இலக்கிய எழுத்தாகவும் அதே சமயம் பெஸ்ட் செல்லிங் என்கிற சிறந்த வணிகத்தன்மைகொண்ட வகையாகவும் இருப்பதாக இலக்கிய விமர்சகர்கள் கணிக்கிறார்கள். ஆனால், இவரது படைப்புகள், தனது மண்சார்ந்த கலை, பண்பாடு, வாழ்வியல் சார்ந்ததாக அல்லாமல் மேற்கத்திய தன்மையை முன்னிறுத்துவதாக அமைந்திருக்கின்றன என்கிறார்கள். இவரும் தன்னைப்பற்றி ‘I’m an outcast of the Japanese literary world’என்று கூறிக் கொள்ளுவதில் பெருமை கொள்கிறார்.சர்வதேச பாபுலர் ஊடகங்கள் இவரை முதன்மையாக முன்னிறுத்துவதன் காரணம், ‘தீவிர இலக்கியம் மட்டுமல்லாது, வணிகத்தன்மை கொண்ட இலக்கிய ரசனையும் தற்காலங்களில் முக்கியமானது என்கிற பார்வையை உருவாக்கும் தன்மை’யை உருவாக்குவது. மேலும் ஐரோப்பிய மேற்கத்திய சிந்தனைகளை முன்னிறுத்தி எழுதுவதுதான் உலக இலக்கியம் என்கிற கருத்தியலை சர்வதேச எழுத்தாளர்களின் உளவியலில் கட்டமைப்பது.. என்று பல காரணங்களைச் சொல்லலாம். பதிப்பகங்களின் சர்வதேச புத்தகச்சந்தை அரசியலையும், இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

haruki murakami
ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமி

இப்போது இந்த ஊடகங்கள் முன்வைக்கும் கணிப்பு வரிசையை நுட்பமாகக் கவனிக்கலாம்:

தமிழில் நவீனத்துவ வாசிப்பு பெருமளவில் விவாதித்துக் கொண்டிருந்த 1980 களின் தருணங்களில் இவரது எழுத்துக்கள் அறிமுகமாயின. Immortality என்னும் இவரது நாவல் முக்கியமான இலக்கியப் பிரதியாக இவரது எழுத்துக்களின் மீதான வாசிப்பை முன்னிறுத்தியது. இவருடைய நேர்காணல் (தமிழில்: சா.தேவதாஸ்) மீள்சிறகு என்னும் சிறுபத்திரிகையில் வெளிவந்தது. இது இவரது எழுத்தின் பல்வேறு பரிமாணங்களை விரித்துக் காட்டியது. இவரது சிறு கதைகளும் தமிழில் வெளியாகின. புனைகளம் என்னும் சிறுபத்திரிகையில் வெளிவந்த சவாரி விளையாட்டு என்னும் கதை (தமிழில்: அரவிந்தன்) மிக மிக சுவாரஸ்யமான விளையாட்டு தன்மை (Game) கொண்டது. ஒரு காதல் ஜோடியின் பயணத்தின் போது அவர்களது மனங்களில் எழும் விந்தையான எண்ணவோட்டங்கள் விபரீத விளையாட்டை நோக்கி இட்டுச்செல்வதை சுவாரஸ்யத்துடனும் அழகியலுடனும் ஆட்டவிதிகளாக வாழ்வின் அபத்தத்தை, அதன் பன்முக நெருக்கடிகளை விவரிக்கிறது. மேலும் இவரது The Art of the Novel நூல், நாவல் கலையின் பல்வேறு பரிமாணங்களை, சாத்தியங்களை முன்வைக்கும் எழுத்தின் அழகியல் கொண்டது.

சிரியா நாட்டின் அரபுக்கவிஞரான அடோனிஸ், அரபு வாழ்வியலை படைப்பாக்கம் செய்வதில் மிக முக்கியமானவர். செழுமையான சூபி சிந்தனைகளை தனது அரபுக்கவிதைகளில் கொண்டுவந்தவர் அரபுலகம் சார்ந்த இவரது சர்ச்சைக்குரிய அரசியல் நிலைபாடுகளினால் சிக்கலாகிப்போன வாழ்வில் புலம் பெயர்ந்து வாழும் இவரது பெயர் 1988 லிருந்தே தொடர்ச்சியாக நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, ஸ்வெட்லானா அலெக்ஸியோவிச் சின் படைப்புலகம், சோவியத் மற்றும் பிந்தைய சோவியத் நபரின் உணர்ச்சிவயப்பட்ட வரலாற்றின் இலக்கிய ஆவணமாக விவரிக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கணிக்கிறார்கள். சோவியத் – ஆப்கான் போர், சோவியத்தின் வீழ்ச்சி, மற்றும் செர்னோபில் பேரழிவு போன்ற வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியது. 1950 – 60களில் உலக இலக்கிய எழுச்சியாகக் கணிக்கப்பட்ட ரஷ்யஇலக்கியம் மெதுவாகத் தேங்கிப்போயிருந்த நிலை மாறி தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெறுவதாகக் கொள்ளலாம்;
“நவீன ரஷ்ய எழுத்தாளர்கள் பல விஷயங்களைப் பல புதிய பரிமாணத்தில் எழுதுபவர்களாகவும், எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு திறமைசாலிகளாகவும் இருக்கின்றனர். பல வருடங்களாக கம்யூனிச அரசின் வசம் அடைபட்டிருந்த ரஷ்ய இலக்கியத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இவர்கள் மீட்டெடுக்கிறார்கள் என்றே கூறலாம்..” என்று தற்கால சூழலை கணிக்கிறார் ரஷ்ய விமர்சகர் எலினா டிமோவ். (Contemporary Russian Literature )https://pages.shanti.virginia.edu/russian/2012/12/27/new-realism-vs-magic-realism-what%E2%80%99s-next/ நோபல் குழுவிற்கு, சோவியத் ரஷ்யா காலத்திலிருந்தே இடதுசாரிய சிந்தனைகளை ஆதரிப்பவர்களைப் பட்டியலில் கூட சேர்த்துக் கொள்வதில்லை என்ற நிலைப்பாடுதான் என்பதை அதன் செயல்பாடுகளில் உணர்ந்து கொள்ளமுடியும்.

1901 லிருந்து 1912 வரை, நோபல் பரிசுக்குழுவின் பரிந்துரைகளானது, ஆல்பிரட் நோபலின் உயிலின்படி, அவர்வகுத்த கோட்பாடுகளின் அடிப்படையில் பரிசுகள் அளிப்பதாக விளக்கமளித்துக் கொண்டு ஒரு சித்தாந்த சாய்வில் பரிசுகளை வழங்கினார்கள். இதனால், டால்ஸ்டாய், இப்சன், எமிலி ஜோலா மற்றும் மார்க் ட்வைன் போன்ற படைப்பாளிகள் ஒதுக்கப்பட்டார்கள். அதன்பிறகு முதலாம் உலகப்போரில் தாங்கள் நடுநிலைமை வகிப்பதாகக் கூறிக்கொண்டு போரில் பங்கெடுக்காத நாடுகளுக்கும் தங்களது கூட்டாளி நாடுகளுக்கும் பரிசுகளைப் பரிந்துரைத்தார்கள். ஆனால், ஸ்வீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவிய கசப்பு காரணமாக டால்ஸ்டாயும், ஆண்டன் செக்காவும் இறுதிவரை பட்டியலில் இடம்பெறவேயில்லை என்கிற ஒரு மோசமான வரலாறும் உண்டு.

சோவியத் ரஷ்யாவை விமர்சனம் செய்வதென்பது அந்தக்கால கட்டத்தில் மிக முக்கியமான கலைச்செயல்பாடுகளாக இருந்தன. கலைஞர்களின் மீதும், சோவியத் அரசு எதிர்ப்பாளர்கள் மீதும், மாற்றுச் சிந்தனை கொண்டவர்கள் மீதும் பாய்ந்த ஸ்டாலினிய அடக்குமுறைகள் கொடூரமாகச் செயல்பட்டன. இந்தக்கட்டத்தில் வாழ்ந்த ஆந்த்ரேய் சின்யாவ்ஸ்கி என்னும் மிக முக்கியமான எழுத்தாளர் சோவியத் அடக்குமுறைகளை எதிர்த்தார். சோவியத்தின் புகழ்பெற்ற சோஷலிஸ யதார்த்தவாதம் என்னும் கோட்பாட்டை கடுமையாக விமர்சித்து On Socialist Realism (1959) என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார். ‘அப்ராம் டெர்ட்ஸ்’ என்னும் புனைப்பெயரில் ஒளிந்து கொண்டு, தலைமறைவாக அண்டர்கிரவுண்ட்டில் இருந்து இந்த அரசு ஒடுக்குமுறைகளை விமர்சிக்கும் நூல்களாக வெளியிட்டார். உருவக நாவல்களாகவும், மறைபொருள் உத்திகளிலும், ஃபேண்டஸி எழுத்துக்களிலும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். The Makepeace Experiment (1963) என்னும் இவரது நாவலில் ரஷ்யா வழிவகுப்பது ஒரு மார்க்சியக் கற்பனாவாதம் என்று லெனினை உருவகப்படுத்தும் நாயக பிம்பத்துடன் முன்வைத்து பகடி செய்கிறார். (இது ஸ்டார் பிரசுரம் வெளியீடாக தமிழில் வந்துள்ளது.) 

இப்படியான சர்வாதிகார எதிர்ப்பு முறை எழுத்துகளாகத்தோன்றிய பின்நவீனத்துவ எழுத்துகள்தான் அதே காலகட்டத்திலிருந்த லத்தீன்அமெரிக்கநாடுகளின் சர்வாதிகார ஆட்சி முறைக்கு எதிரான மாந்திரீக யதார்த்தவாதமாக மலர்ச்சியடைந்தன. நாஜிய சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தனது உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி குள்ளனாகவே வாழும் ஆஸ்கர் என்னும் நாயகனை முன்வைத்து ஜெர்மன் படைப்பாளியான குந்தர் கிராஸ் படைத்த நோபல் விருது வாங்கிய The Tin Drum நாவலும் இந்தவகை மாந்திரீக யதார்த்தவாதம் தான்.

இவரது வழித்தோன்றல்களாகத் தோன்றிய, இரும்புத்திரை நாட்டைக் கடுமையாக விமர்சித்த போரிஸ் பாஸ்டர்நாக்குக்கு 1958 ல் நோபல் கிடைத்தது. ஆனால் அந்தவிருதை வாங்க சோவியத் அரசு அவரை அனுமதிக்கவில்லை. அந்தத்துயரத்தை, ‘கண்ணியில் வீழ்ந்த மிருகம் போலுள்ளேன்..’ என்று ‘நோபல்விருது’ என்ற கவிதையில் பாடினார். (தமிழில்: காலசுப்ரமணியன்)
இதே போன்று சோவியத் ரஷ்யாவை கேன்ஸர்வார்டு என்று உருவகப்படுத்தி எழுதிய எழுத்தாளரான அலெக்சாண்டர் சோல்செனிட்சினுக்கு, அந்த வருடத்திற்கான (1970)விருது கிடைத்தது. இவரது The Gulag Archipelago நாவல் சோவியத் ரஷ்யாவின் இருண்ட பகுதிகளை வெளிச்சமிட்டுக் காட்டியது . ஸ்டாலின் காலத்தில் அரசை விமர்சித்ததற்காக கடும் உழைப்பு முகாமில் கட்டாய உழைப்பு தண்டனை பெற்ற கவிஞர் பிராட்ஸ்கிக்கும் விருது(1987) கிடைத்தது.

இந்தப் பின்புலத்தில், இடதுசாரிய ஆட்சிகளை எதிர்ப்பவர்களுக்குத்தான் நோபல் விருதுகள் தரப்படுகின்றன என்று காரசாரமாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, அவ்வப்போது, இடதுசாரி மனோபாவம் கொண்ட ஆல்பர்காம்யு, சார்த்தர், மார்க்வெஸ் போன்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்களது படைப்புலகம் தீவிர இலக்கியவயப்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம். காம்யுவின் படைப்புலகம் மனித வாழ்வியலின் அபத்தத்தை முன்வைத்தது. சார்த்தரின் படைப்புகளோ நவீன சிந்தனை வயப்பட்ட மனித வாழ்வியல் சார்ந்த இருத்தலியல் கருத்துக்களைப் படைத்தளித்தன. (இவர் விருதை ஏற்க மறுத்து விட்டது ஒரு தனி சர்ச்சை) மார்க்வெஸின் எழுத்துக்கள் மாந்திரீக யதார்த்தவாதத்தன்மை கொண்டவை என்பதையும் இங்கு ஒப்பு நோக்கவேண்டும்.

இப்படிப் பல்வேறு சர்ச்சைகளும் அரசியல் காரணங்கள், அழுத்தங்கள், ஆதாயங்கள் என்று தொடர்ந்து இன்றுவரை விமர்சனம் எழுந்து கொண்டேயிருக்கிறது.

நான் இங்கு முன்னிறுத்துவது இவர்களையல்ல.இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில் மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்து மறைக்கப்பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இட ஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும் மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனிய அரசியல் நிலைபாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில் வைத்துப் பேசுவதில்லை. இதற்குப் பின்னால் உள்ள நுண்ணரசியல் செயல்பாடுகள்தான் கலை, அழகியல் என்கிற பெயர்களிலும் தீவிரமான, தரமான, சிறந்த எழுத்து என்கிற பெயர்களிலும் விருதுகளாக வழங்கப்படுகின்றன. மாற்றுப் பார்வைகளை, மாற்றுக் கலாசாரங்களை, மாற்றுஎழுத்துக்களை என்றுமே அங்கீகரிப்பதில்லை. மாறாக, மேற்குலகினராகிய தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் எழுத்துமுறைகளைப் பின்பற்றி எவரொருவர் எழுதுகிறார்களோ அவர்களே விருதுக்குத் தகுதியானவர்கள்.

நோபல் விருது வெறும் கவனஈர்ப்பு மட்டுமல்ல; அது ஒரு அதிகாரக் கட்டமைப்பு.

இந்த விருது போட்டி வரிசையில் பத்திரிகைகளால் அதிகம் கண்டு கொள்ளப்படாமல் இருந்த ஆப்பிரிக்காவின் கென்யா எழுத்தாளரான கூகி வா தியாங்கோ வைப் பற்றித்தான் மிகமிக முக்கியமாகப் பேசப்பட வேண்டும். (தி கார்டியன் இதழ் மாத்திரம் இவரை கண்டு கொண்டது)

கூகி வா தியாங்கோ
கென்யா எழுத்தாளர் கூகி வா தியாங்கோ

“ஒரு மொழியை தங்களது காலனி ஆதிக்கமாக மாற்றவேண்டுமெனில், அதன் மீது தங்களது மொழி வன்மையைத் திணித்து இலக்கிய ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதுதான். ஓயாது தங்களது மொழியின் சிந்தனையமைப்பையும் செயல்பாடுகளையும் உயர்வாகச் சொல்லிச் சொல்லி தங்களது மொழியை சமூக அந்தஸ்துக்கான குறியீடாக ஆக்குவதும், மற்ற மொழிக்குத் தாழ்மையுணர்ச்சியை ஏற்படுத்தி அதன் வீரியத்தைக் காயடித்துக் கீழானதாக்குவதும்தான்..” என்கிறார் கூகி வா தியாங்கோ.

எனது தாய் மொழியான கிகுயு மொழியில்தான் எழுதுவேன் என்று தனது மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் இவரது எழுத்துக்கள் பின்காலனிய அரசியலை பின்புலமாகக் கொண்டவை. இவரது நூல்கள் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன. 1977ல் வெளிவந்த Petals of Blood என்ற இவரது நாவல், கென்யா, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவித்துக் கொண்டபிறகு, அதனால் ஏற்பட்ட எச்சங்களான மேற்கத்திய கலாச்சாரமும், முதலாளித்துவமும், அரசியல் மாற்றங்களும் எவ்வாறெல்லாம் கென்ய வாழ்வியலில் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை விரிவாக முன்வைக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். மாற்றுப் பார்வைகளையும், மாற்று அரசியல், மாற்று எழுத்து, மாற்று கலாச்சாரம் போன்ற கருத்தாக்கங்களை முன்வைக்கிற இவரது படைப்பாக்கங்கள் பின்காலனிய அரசியல் பேசும் தற்கால சூழலில் மிகமிக மிக முக்கியமான பார்வைகளாக கணிக்கப்படுகின்றன. இவரைத்தான் நோபல் குழு தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

நமது பண்பாட்டு அடித்தளத்தின் ஆழமும், நமக்கான இலக்கியத்தின் வலுவும் நம்மொழியிலேயே இருக்கிறது என்று முழங்கிக் கொண்டு, அய்ரோப்பிய இலக்கியத்தையும் அதன் நுட்பக் கூறுகளையும் மறுத்து அதற்குள் கட்டமைக்கப் பட்டிருக்கின்ற நுண்அரசியலையும் அதிகார மையத்தையும் இன்றைக்கு எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கூகி க்குத்தான் என் வாக்கு.
சரி.மோடியானோவைத் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம் சொல்கிறது தேர்வுக்குழு?

யூதர்களின் துயரங்கள், நாஜிக்களின் கொடுமை, சமூக அடையாள இழப்பு ஆகிய அம்சங்கள் அதன் தீவிரத் தன்மையுடன் இவரது படைப்புகளின் கருப்பொருள்களாக அமைந்துள்ளன. இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த நிகழ்வுகளை மிகவும் காத்திரமாக தனது படைப்பாற்றலில் வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னிய ஆக்கிரமிப்பின் பிடியில் உழலும் வாழ்வியலின் துயரத்தை, மனித உணர்வுகளை, படைப்பாக மாற்றியிருக்கும் அவரது கலைக்கு நோபல் பரிசு தகுதியானது என்கிறது தேர்வுக் குழு.

கலை என்று இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? இந்த விருதாளர்கள் முன் வைக்கும் எழுத்தின் அழகியல் எதைப் பற்றியது?

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த இரண்டாம் உலகப்போரை வைத்தே ஜல்லி அடித்துக் கொண்டிருப்பார்கள் இந்தத் தேர்வாளர்கள் என்று தெரியவில்லை. தற்காலங்களில் இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளையெல்லாம் தாண்டிப்போகின்ற அளவுக்கு மிகமிகக் கொடூரமான யுத்தங்கள் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச அரசியல்களின் காய்கள் நகர்த்தப்படும் அரசியல் சதுரங்கத்தில் எளிய மனித வாழ்வு சிதைந்து சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இனவாத அரசியல்கள், பின்காலனிய அரசியல்கள், மதவாத அரசியல்கள்.. என்ற பல்வேறு கண்ணிகளில் மாட்டிக்கொண்ட காஃப்காவின் கரப்பான் பூச்சியைப்போல மனிதர்கள் உருமாற்றமடைந்து கொண்டிருக்கிற பின் நவீனத்துவச் சூழலில், மனித வாழ்வு அபத்தமாகிக் கொண்டிருக்கின்றது.

பெருமளவிற்கு ஆதிக்க நாடுகளுக்குள் நடக்கும் போர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு இரண்டாம் உலகப்போர், மூன்றாம் உலகப் போர் என்று பெயர்சூட்டி ஆய்வு செய்யும் மேற்குலக சிந்தனையாளர்களுக்கு, மூன்றாம் உலக நாடுகளில் சிறுசிறுதேசிய இனங்களின் மீது நிகழ்த்தப்படும் பச்சையான இனப்படுகொலைகள், போர் என்கிற கருத்துருவமாகத் தெரியாமலேயே போய்விடுகின்றது. பயங்கரவாத ஒழிப்பு என்கிற பெயரில் பேரினவாதங்களின் அரசியல் சூழ்ச்சியில் கவனப்படாமலேயே போய்விடுகின்றன. மோடியானோ சொல்லும் சமூக அடையாள இழப்பு என்பது, தற்கால பின்நவீனத்துவ சூழலில், இந்த யுத்தங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஸ்தூலமான உலகில் அதிநவீன ஆயுதங்களும், ரசாயன குண்டுகளும், மனித உடல்களின் மீது தாக்குதலைத் தொடுக்கின்றன. அதே சமயம், சூட்சுமமான உலகில் பல்வேறு அரசியல் அதிகார ஆதிக்க சிந்தனைகள் மனித வாழ்வியலை சிதிலமாக்குகின்றன. இந்தப் போர் அரசியல் உருவாக்கும் இந்த அபத்தம்தான் கண்முன்னால் விரிந்து கிடக்கிறது வாழ்க்கையாக. யாருடையதோ போல்; இந்த யாருடையதோ போல் என்கிற Illusion தான் கலை.

இந்த கலையைத்தான் மூன்றாம் உலகநாடுகளின் படைப்பாளிகள் படைக்கிறார்கள்.ஆப்பிரிக்கா, இலங்கை, வியட்நாம், லத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் யுத்தப் பின்னணியில் ரத்தமும் சதையுமாக எழுதப்பட்ட படைப்புகளை இவர்கள் பரிசீலனைக்காவது எடுத்துக் கொள்கிறார்களா? இனவாத, பின்காலனியவாத பார்வைகளை, மதிப்பீடுகளை, யதார்த்தங்களை கணக்கில் கொள்கிறார்களா?
இத் தருணத்தில் எங்கள் தமிழ்மொழியின் மகாகவி பிரமிள் எழுதிய கவிதை ஞாபகம் வருகிறது.

//சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது! //

பறவையின் சிறகிலிருந்து பிரிந்து விழும் இறகு என்பது வெறும் இறகு அல்ல, அது ஒரு வரலாற்றை எழுதும் கலை என்று நோக்க வைக்கும் சிந்தனைதான் மூன்றாம் உலகநாடுகளின் வாழ்வியல் கலை.

இதெல்லாம் உணராத சிறுபிள்ளைகளா தேர்வுக்குழுவினர்? அண்டசராசரமும் ஆட்டிப்படைக்கவல்ல ஏகாதிபத்திய அதிகாரமும், ஆதிக்க இன உணர்வுகளும், நுண்ணரசியலும் கைவரப்பெற்றவர்களாயிற்றே. எனில், யூத இனத்தை சேர்ந்த மோடியானோவைத் தேர்ந்தெடுத்த நுண்ணரசியலைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்:

பாலஸ்தீனத்தில், காஸாவில், இஸ்ரேலின் ஜியோனிசம் என்றழைக்கப்படும் யூதப் பேரினவாதம் (யூத அடிப்படைவாதிகளின் ஒடுக்குமுறை) இஸ்லாமியர்களை அழித்தொழித்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஒடுக்கப்பட்ட யூதர்களாக அல்லாமல் ஆதிக்கமும் வல்லாண்மையும் வாய்ந்த அதிகார சாம்ராஜ்யத்தின் ஆண்டைகளாக, ஜியோனிஸ்டுகளாக, இருக்கின்ற காட்சிகளாக மாறிப்போயிருக்கின்றன இப்போது. இந்த யதார்த்தச் சூழலை யாரும் உணர்வதற்கு முன்பே தங்களது துயரக்கதைகளை முன்வைக்க வேண்டும். தங்களது சமூக அடையாள இழப்புகளை தூசிதட்டிக் காட்டவேண்டும். தங்கள்மீது நாஜிகள் நிகழ்த்திய வரலாற்றுக் கொடுமையிலிருந்து தாங்கள் மீண்டெழுந்த ‘அறத்தின் உத்வேகத்தை’ கலைகளாகத் தொடந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். கண்ணெதிரில் நிகழும் தற்கால யதார்த்தத்தை மறைத்து ஒரு பின் நவீனத்துவ யதார்த்தத்தை உலகெங்கும் முன்வைக்க வேண்டும்.

என்ன ஒரு அற்புதமான பின்நவீனத்துவ அரசியல்.

இதுதான் 2005 ல் இலக்கியத்துக்காக நோபல் விருது வாங்கிய இங்கிலாந்து நாடக ஆசிரியர் ஹெரால்டு பிண்டர் தனது நோபல் ஏற்புரையில் நிகழ்த்திய கலை – மெய்மை – அரசியல்.

No comments:

Post a Comment