Tuesday, October 14, 2014

அழகிய வார்த்தை


‘உன் வாழ்க்கையை மாற்றுவதற்கு உன் வார்த்தைகளுக்கு சக்தியிருக்கிறது.’


  
ஒரு நாளில் நாம் எத்தனை வார்த்ததைகளைப் பயன்படுத்துகின்றோம்? காலை முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் அறிந்தும் அறியாமலும் பல நூறு வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றோம்.நாம் பயன்படுத்திய வார்த் தைகளை யாரும் ஒரு தடவையேனும் மீட்டிப் பார்ப்பதில்லை. காற்றுடன் எல்லாம் கரைந்துவிடுகின்றன.


எமது வார்த்தைகள் ஆளுக்காள் வேறுபடுகின்றன.யாருடன் கதைக்கிறோம் என்பதைப் பொருத்து நாம் அவற்றை மாற்றிக் கொள்வதுண்டு.மனதுக்குள் வெறுப்பிருந்தாலும் வார்த்தையில் அன்பை பூசுபவர்களை நாம் அன்றாட வாழ்க்கையில் காணத்தான் செய்கிறோம். தூய்மையான மனசுள்ளவன் தெளிந்த நீரைப் போல நல்ல வார்த்தைகளைப் பேசுகிறான்.

அழகிய வார்த்தைகள் மனித உறவின் நீட்சியின் அடையாளம்.அதனைப் பேசத் தெரியாதவன் மதிக்கப்படுவதில்லை.அத்தகையவர்கள் வாழ்க்கையில் அனைவரிடமிருந்தும் விலகியே இருக்கின்றனர்.

சிலர் எப்போதும் வார்த்தைகளால் முந்திக் கொள்பவர்களாக இருக்கின்றனர். அடுத்தவரைப் பற்றிய விமர்சனத்தில் அவர்கள் அள்ள முடியாத வார்த்தை களைக் கொட்டிவிடுகின்றனர். யாருடன் எந்த வார்த்தையைப் பேச வேண்டும் என்ற அளவீடுகள் பெரும்பாலும் அவர்களது உரையாடல் கலையில் இருப்பதில்லை. தனது வார்த்தைப் பிரயோகம் அவர் பற்றிய நிரந்தர வடுவொன்றை கேட்பவர் மனதில் உண்டு பண்ணி விடுகின்றது.
பட்டென்று பேசுபவர்களையும் முகத்திற்கே தாக்கிப் பேசுபவர்களையும் அனைவரும் வெறுக்கவே செய்கின்றனர்.

அறிவுள்ளவனின் நாவு மூளைக்குப் பின்னாலும் அறிவற்றவனின் நாவு மூளைக்கு முன்னாலும் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு.பேச முன்னர் யோசிப்பதே சிறந்தது.

எமது வார்த்தைகளே எம்மை பிறருக்கு சரியாக அடையாளப்படுத்துகின்றன. அழகிய வார்த்தைகளால் வாழ்க்கையும் உறவும் அழகாகின்றன.எப்போதும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.நல்லதைப் பேசுவதும் நன்மை தரக் கூடியதே.அழகிய வார்த்தைகள் வாழ்க்கையையே மாற்றுகின்ற வல்லமை கொண்டவை.அழகிய வார்த்தைகளும் தர்மம் ஆகும்.

No comments:

Post a Comment