Monday, September 1, 2014

கோடை தகிக்கிறது நெடுநாளாய் - சு.வில்வரத்தினம்




ஆழக் கிணற்றிலும்
நீர் வத்திப் போச்சு
அள்ளப் போட்ட வாளி
வெறுமனே வருகிறது

கோடை தகிக்கிறது நெடுநாளாய்

வானில் ஒரு பொட்டு
மேகம் கிடையாது
பாலை வெளியில் விரல் நீட்டி
பரிதவிக்கின்றன
மொட்டை மரங்கள்
கனவுகள் உதிர்ந்த மனிதரைப் போல


கோடை தகிக்கிறது நெடுநாளாய்

நிழலற்று அலையும் மனிதர்
இதோ சுவடிழந்து செல்கிறார்
எனது இமைத் தெரு கடந்து.
விழியெறியும் திசையெங்கும்
கானல் நீரள்ளி நீள்கிற கைகள்
ஒரு கையும் இவர்க்கென்று
உயிர்த் தண்ணி ஏந்தவில்லை

கோடை தகிக்கிறது நெடுநாளாய்

சுற்றிலும் நெருப்பெரிவு
மானுடர்கள் தீக்குளிப்பு
பச்சையாய் உடம்புகள்
பச்சையாய் உணர்வுகள்
பச்சையாய் கனவுகள்
எரிகின்றன கரிகின்றன
பூமியே காணலில் எரிகின்ற பிணமாகி
தீ நிழல் விழுந்த எதிர்காலம்
பாம்புதிர்த்துப் போன செட்டை மினுங்கலென…

கோடை தகிக்கிறது நெடுநாளாய்

தகிக்கிற கோடையில்
பறவையின் நிழலும் பரிதவிக்க
மொட்டை மரத்தடியில்
கூன் விழுந்த மானிடம் குந்தியிருக்கிறது
பூதாககரமாய் நீளுகிற பாலையின்
நெடுமூச்சாய் அலைகாற்று
அதன் ஜீவனைச் சுடுகிறது

யாரேனும்
யாரேனும்
இதயத்தைப் பிழிந்தெனினும்
உயிர்த்தண்ணி வார்க்கும் வரை
முதுகு பிளந்தெனினும் முள்ளெலும்மை
ஊன்றுகோலாய் வழங்கும் வரை
இந்த நெடும் பாலை வழிக்
காத்திருக்கும்.
யாரேனும்…யாரேனும்


(யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வில்வரத்தினம். இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இல் வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது காற்றுவழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது. கொழும்பில் டிசம்பர் 9, 2006 அன்று தனது 56வது வயதில் காலமானார்.)


No comments:

Post a Comment