Monday, May 26, 2014

மழையில் நனையும் மலை




‘வாழ்க்கை என்பது ஒரு மலையேற்றம்.மலை ஏற ஏற ஒவ்வொன்றும் சிறியதாகி அற்பமாகி பார்வையை விட்டு மறைந்தபடியே உள்ளன.ஏறி ஏறி உச்சியில் கால்வைத்ததும் மலையே அற்பமாகி மறைந்து விடுகிறது.ஏறும் போதெல்லாம் நான் நான் என்று நாம் உணர்ந்த சுயமும் அற்பமாகிவிடுகிறது. எல்லாவற்றையும் அற்பமாக்கிவிடும் வானம் மட்டுமே எஞ்சுகிறது.’ ஜெயமோகன்

ஒரு மழை நாளில் கடுகண்ணாவை மேட்டுப் பாதையில் பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தது.என் ஜன்னலுக்கு வெளியே தூரத்தில் தெரியும் மலையை உற்றுப் பார்க்கிறேன்.மழையில் அது நனைந்து கொண்டிருக்கிறது. உலகம் பூராகவும் உள்ள மலைகள் மழையில் நனைவதும் வெயிலில் காய்வதும் என் நினைவுகளைத் தட்ட ஆரம்பிக்கின்றன.


மலை ஒரு நிசப்தமான அற்புதம்.எப்படிச் சிந்தித்தாலும் அதன் பிரமாண்டத்தை சிந்தனைக்குள் அடக்கிவிட முடியாது.வாய் பேச முடியாத ஒரு மௌனப் பிரமாண்டம் கைகள் கட்டி நமக்கு முன்னால் அமர்ந்திருப்பது போன்ற உணர்வே எப்போது மலைகளைப் பார்த்தாலும் ஏற்படுகிறது.
மலைகள் பார்த்துத் தீராத பரவசத்தை தருகின்றன.தொலைவிலிருந்து பார்க்கும் போது அது தரும் அழகை விட நேரிலும் அதன் முதுகில் பயணிக்கும் போது அவை தரும் இன்பம் அலாதியானது.ஒரு மலைப் பயணம் தரும் இன்பத்திற்கு ஈடான பயணம் வேறு எதுவுமில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு குழுப் பயணம் ஒவ்வொரு மனிதரையும் சரியாக எமக்கு அடையாளம் காட்டித் தருகிறது.பலம்,பலவீனம்,விருப்பு,வெறுப்பு என ஒவ்வொன்றையும் புரிய பயணம் நமக்கு வழிகாட்டுகிறது.ஒருவர் மீதான நெருக்கத்தையும் அன்பையும் பயணங்களே அதிகரிக்கின்றன.

அண்மையில் இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் அமைந்துள்ள நக்கில்ஸ் மலைத் தொடருக்கு ஒரு பயணம் மேற்கொண்டேன்.இம் மலைத் தொடருக்கு எனது இரண்டாவது பயணம் இது. கண்டி மாவட்டத்திலிருந்து இதனைப் பார்க்கும் போது இது வளைந்தும் நெளிந்தும் உயர்ந்தும் தாழ்ந்தும் ஆங்காங்கே இருப்பதனால் கையை இறுகப் பொத்தியது போன்று தோற்றமளிப்பதே இதற்கு ஆங்கிலத்தில் நக்கிள்ஸ் எனப் பெயரிடக் காரணம்.

ஆனால் பண்டை காலம் தொட்டே தும்பர கந்துவெட்டிய (பனிசூழ் மலைத்தொடர்) என்றே இது அழைக்கப்படுகிறது.பனிசூழ் மலைத் தொடர் என்பது எத்தனை உண்மை.மலையின் உயரத்திற்குச் செல்லும் போது கிடைக்கும் பனிக் காற்றின் இதத்தை எந்த ஏஸி அறையும் மின் விசிறியும் தந்து விட முடியாது.இறைவனின் கொடை அது அல்லவா?

இலங்கையின் மிக அழகான மலைத்தொடர்களுள் ஒன்றான நக்கல்ஸ் இலங்கையின் மிகக் கூடிய உயிர்ப் பல்வகைமையைக் கொண்ட பகுதியாகவும் விளங்குகிறது.அத்தனையையும் உள்ளடக்கி அமைதியாக அது காட்சி தருகிறது.

கண்ணுக் கெட்டிய தூரம் மட்டும் மலைகள் மட்டுமே தெரியும் அற்புதத்தை பார்க்க வேண்டுமாயின் நீங்கள் ரிவஸ்டன் பகுதிக்கு போக வேண்டும்.அடுக்கடுக்காக மலைகள்,பச்சைத் தரைகள்.மலைகள் முழுக்க பச்சை தெளித்தது போல எங்கும் பச்சை,எதிலும் பச்சை.

இறைவா பிரபஞ்சம் உன் வேதம் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு வார்த்தை என்ற கவி வரிகள் எத்தனை நிஜம் என்பதை உணர்ந்து கொண்டேன்.இத்தனை பிரமாண்டம் சப்தமில்லாமல் நின்று கொண்டிருப்பதை நாம் கற்பனை செய்வதே இல்லை.இவை எதுவும் வீணுக்காக படைக்கப்படவில்லை.இறைவா நீ தூய்மையானவன் என்ற வார்த்தைகளை ஒரு தடவை மொழிகிறேன்.

பிரபஞ்சத்தை சமீபமாக அவதானித்து ஒவ்வொரு படைப்பு பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கும் போது நினைவுகள் தொலைவுகளைத் தாண்டிச் செல்கின்றன. மலைகள் இத்தனை பிரமாண்டமாய் இருந்தாலும் அவை சப்தமிடுவதில்லை.யாரோ சொன்னது போல் எல்லாம் இருந்தும் அமைதி காக்கும் நூலகம் போல மலைகள் அமைதியாகவே இருக்கின்றன.
ஆனால் மனிதன்தான் தன் அற்பத்தை வைத்துக் கொண்டு சப்தமிடுகிறான்.தன் சுயத்தை நினைத்து அவன் கர்வம் கொள்கிறான்.அடுத்தவரின் தவறுகளை ஏற்றுக் கொள்ள அவன் மறுக்கிறான்.எதிலும் ஒரு குறைபாட்டைக் காண முற்படுகிறான்.தன் பெருமையை பறைசாற்ற முயல்கிறான்.ஆனால் மலைகள் அப்படி இல்லை.மனிதனுக்கு அவை பாடம் கற்றுத் தருகின்றன.

ஒரு மழை நாளில் மலைப் பிரதேசம் மிக அழகாகக் காட்சி தருகிறது.குளித்த பின்னர் மலைகளும் ஆகாசத்தை அன்னார்ந்து தொட நினைப்பது போலத் தெரிகின்றது.

தன்னீரின் குளிர்மையும் இதமும் ஒரு மலையில்தான் உண்மையாக உணர முடிகிறது.நகரத்து வாழ்க்கை எத்தனை செயற்கைத் தனங்களாளும் போலிகளாலும் நிரம்பியுள்ளதை நினைத்து வருத்தமே எஞ்சுகிறது.

நாம் இயற்கையுடனும்  ஒவ்வொருவருடனும்
இணக்கமாக வாழ வேண்டும்.
இவ்வுலகின் பட்டினியைப் போக்குவதற்காக
முழுமையான பலத்துடன் உழைக்கவேண்டும்.

இது ஜான் டென்வரின் பாடல் வரிகள்.இயற்கையோடு இணக்கமாக வாழ்வதற்காக பலர் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள். இயற்கையை அறிய முற்பட்டதன் விளைவாக ஜென் கவிதைகள் தோற்றம் பெற்றதைச் சொல்லலாம்.


நாம் இயற்கை குறித்து கூடிய கரிசனை எடுப்பதே இல்லை.இலங்கை அழகிய பிரபஞ்சக் காட்சிகளை கொண்ட அழகிய நாடு.மலைகளின் பாடல்கள் கேட்காத இடமே இல்லை எனும் அளவுக்கு நமக்கு மலைகள் இருக்கின்றன.வனப்புடன் கூடிய இயற்கைக் காட்சிகள் இருக்கின்றன.இந்த மலைகளைப் போய் பார்க்க வேண்டும்,அதன் முதுகுகளில் ஏறிப் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் எம் நினைவுகளுக்கு வருவதே இல்லை.நமக்குப் பக்கத்தில் இருக்கும் அதிசயம் நிறைந்த மலைகளை நாம் மறந்தவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயற்கையை வாழ்க்கையின் ஒரு அங்கமாக நாம் கருதவே இல்லை.கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது போல மலையைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அலாதியான சுகம் என்பதை நாம் உணரவில்லை. மலைகளின் தாழ்வாரங்களிலும் அதன் உச்சிகளிலும் இருக்கும் பரவசத்தை அறிந்தவர்களுக்கு மட்டும்தான் அது சாத்தியப்படுகிறது.

மலைகளில் ஏறும் ஒவ்வொரு தடவையும் பயம் எனும் மாயம் பாதங்கள் வழியே பயணிக்க ஆரம்பித்து விடுகிறது.ஏற ஏற வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்ற நம்பிக்கை மெல்ல உடைய ஆரம்பித்து விடுகிறது.சாகசங்களில் ஈடுபடாவிட்டா விட்டாலும் பாதுகாப்பான வழிகளினூடே மலைகளின் உயரங்களை அடைகையில் நாம் பூமியிலிருந்து இவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்ற மமதை ஒரு நாளும் நம்மை கர்வம் கொள்ளச் செய்வதில்லை.வானம் எல்லாவற்றையும் மிகைத்து விடுகிறது.

ஒரு பறவை பறந்து கொண்டே பூமியைப் பார்ப்பது போலத்தான் மலைகளின் உயரே இருந்து சுற்றத்தைப் பார்ப்பது.பார்க்கும் எங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது.பறவைகள் நாள்தோறும் இயற்கையின் பெருவெளியெங்கும் அகல விரித்த சிறகுகளோடு பறக்கும் போது அது அடையும் பரவசத்திற்கு ஏது ஈடு?

பிரமாண்டத்தையே அழகாகக் கொண்ட மலைகளும் மலைத் தொடர்களும் உலகம் எங்கும் பார்ப்பவர்களின் ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கின்றன.பூமியின் சமனிலை குலையாமல் ஆப்புகளாக அவை எப்படி ஆக்கப்பட்டுள்ளன? எப்போது அவை இத்தனை பெரிதாய் வளர்ந்தன? ஏன் இத்தனை மௌனத்துடன் அவை இருக்கின்றன? தம் பள்ளத்தாக்குகளில் காவு கொண்ட உடல்களுக்கு என்னவானது? அதிசயப் பனிக் காற்று எங்கிருந்து உற்பத்தியாகின்றது? மலைகளைக் குடைந்து எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள்?தேன் ஏன் மலைகளில் கூடு கட்டிக் கொள்கிறது? ஏன் அவை மேகத்தைப் போல நகர்வதில்லை? எல்லாக் கேள்விகளும் நம்மை சிந்தனையின் அடர்ந்த காடுகளில் நம் கண்களைக் கட்டி விட்டு விடுகின்றன.

மலைகள் நம்பிக்கையின்,அமைதியின் குறியீடு.என்றோ ஒருநாள் அவை வெடித்துச் சிதறக் காத்திருக்கின்றன.உறுதியான பிரமாண்டமான கற்பாறைகள் காற்றில் பறக்கும் பஞ்சு போல ஆகும் நாளுக்கு முன்னர் அதன் அரவனணப்பில் ஏன் நாம் உறங்கக் கூடாது?


No comments:

Post a Comment