என்
பதினாறாவது வயதில்தான் நான் முதன்முதல் ரயிலில் பயணம் செய்திருக்கிறேன்.தண்டவாளமும் ரயிலும் ஒரு கனவென என் கற்பனையில் சுழன்று கொண்டிருந்தாலும் பால்யத்தின் பிந்திய வயதில்தான் அது கைகூடியிருக்கிறது.
பேரூந்துப்
பயணங்களின் போது வயல்களை ஊடறுத்துச் செல்லும் ரயில்களை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்.இன்றும் ஒரு ரயிலை வேடிக்கை பார்க்காத மனிதர்கள் இல்லை.ஒரு ரயில் தம்மை கடக்கும் ஒவ்வொரு கனத்திலும் யாரோ ஒருவர் அதனை ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.எத்தனையோ சிறுவர்கள் கைகாட்டி அதனை வழியனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.உலகில் ஆடம்பரமான வாகனங்கள் எவ்வளவு இருந்தாலும் ஒரு ரயில் தரும் சுகத்தை எதனாலும் தர முடிவதில்லை.
கடந்த 13 வருடங்களாக பெரும்பாலும் ரயிலில்தான் பயணிக்கிறேன்.
எத்தனையோ நினைவுகள் ஞாபகச் சுவரில் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.ஒவ்வொரு பயணம் தரும் இதமும் அலாதியான சுவை கொண்டது.
ஒரு
கிராமத்தையே சுமந்து கொண்டு ரயில் புறப்படுகிறது. நூற்றுக் கணக்கான நிழல் முகங்கள் மாறி மாறித் தெரிகின்றன.புதிய சிநேகங்கள், புன்னகைகள் தினம் தினம் தோன்றி மறைகின்றன.மனிதம் தன் பதிவேட்டில் ஒரு முறை அவற்றைப் பதிந்து கொள்கிறது.கடந்து போகும் வயல் வெளிகள், கிராமங்கள்,ஈரக் காற்று, எல்லாமே மனதின் திசைகளில் மாறி மாறிப் பயணிக்கின்றன.
ரயிலின்
ஜன்னலோர இருக்கை தரும் சுகம் எதற்கும் ஈடற்றது.ஜன்னல் சட்டகம் வழியாக நாம் பிரபஞ்சத்தை வாசிக்கும் அற்புதம் அங்குதான் நிகழ்கிறது.தொலை தூர மலைகள்,காடுகள்,நதிகள்,வானம்,பச்சை இலைகள் என ஒவ்வொன்று குறித்தும் ஒரு தனித்த சிந்தனையை அது ஏற்படுத்திவிடுகிறது.ஒன்றும் வீணுக்காகப் படைக்கப்பட வில்லை என்ற வசனம் அடிக்கடி நினைவில் வருகிறது.
ரயில்
பயணங்களின் போது புத்தகம் படிப்பது குறைவாகத்தான் நிகழ்கிறது.வயல்கள், ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் செலுத்தும் நபர்,கையசைக்கக் காத்திருக்கும் குழந்தைகள்,மரங்களுக்குக் கீழ் அமர்ந்து கதைத்துக் கொண்டிருப்பவர்கள்,அப்பம் விற்கும் மூதாட்டி,சாலை மனிதர்கள்,அந்தியின் மஞ்சள் தெளித்த வானம்,அமைதியைக் கலைக்கும் கடல் அலைகள் என ஒவ்வொன்றும் கவனத்தை தன் பக்கம் எடுத்துக் கொள்கின்றன.ஆகாசத்தை வெறித்துப் பார்த்தபடி நாம் போய்க் கொண்டிருக்கிறோம்.மழை நாட்களில் நனையும் தண்டவாளமும் மலைகளும் நினைவுகளின் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருக்கின்றன.
ரயிலின்
சுகமான அரவனைப்பு ஒரு மடி தரும் சுகம் போன்றது.ஒரு இரும்புப் பூதம் போல அது நகர்ந்தாலும் தன் மடியில் தலை வைத்து உறங்கும் ஒருவரை அது தன் இராட்சத சப்தத்தால் எழுப்பி விடுவதே இல்லை.ஒவ்வொருவரும் தம் பிரத்தியேகக் கனவுகளோடு உலா வந்து கொண்டே உறங்குகின்றனர்.தூங்குவதற்கென்று பயணிக்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இருக்கை இல்லாதவர்கள் நின்று கொண்டு உறங்கவும் செய்கிறார்கள்.அவர் மீது இரக்கப்பட்டு யாரோ ஒருவர் தன் இருக்கையில் அமரச் சொல்லும் தருணங்களும் உண்டு.சிலர் தம் இருக்கைகளில் இருந்து எழுந்து கொள்வதே இல்லை.கால் வலிக்க வலிக் பயணிப்பவர்களும் இரக்கத்தான் செய்கிறார்கள்.
அன்றாட
ஜீவனோபாயத்திற்காக
ரயிலின் திறந்த வெளிகளில் திரியும் மனிதர்களைப் பார்க்கும் போது இனம் தெரியாத ஒரு கவலை உள்ளுக்குள் ஊறுவிப் படர்கின்றது.கடலை,வடை,சோளம்,தண்ணீர் எனக் கூவிச் செல்லும் மனிதர்களின் குரல்கள் காற்றில் தேய்கின்றன.தம் விற்பனை உத்தியை குரல்களே தீர்மானிக்கின்றன என்பது போல் அமைந்திருக்கும் அவர்களது கூவல்கள்.
ஸ்வாதேஸ்
திரைப்படத்தில்
ஒரு சிறுவன் ரயில் நிற்கும் தருணமொன்றில்
தண்ணீர் விற்கும் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கும்.நசுங்கிய வாழ்க்கையிலிருந்து பீறிடும் குரல்கள் உழைப்பினதும் வறுமையினதும் அடையாளத்தை உலகிற்குப் பறைசாற்றுகின்றன.
ஒவ்வொரு
பயணத்திலம் பலநூறு யாசகர்களை சந்திக்கிறோம்.யார் உண்மை யார் பொய் என்று பிரித்தறிய முடியாதபடி அனைவரும் நடிக்கிறார்கள்.யாரோ ஒருவர் அதிகமான சில்லரைகளோடு அன்றைய நாளை அந்திபடுத்தவே செய்கிறார்.
புல்லாங்குழல் இசைத்து
பாடல் பாடி பணம் சேர்க்கும் மனிதர்கள் ரயிலில் இனிமையான தருணம் ஒன்றை உருவாக்கிவிடுகின்றனர்.என் பயணங்களில் நான் பார்த்த ஒரு புல்லாங்குழல் கலைஞனையும் கணவன் மனைவி இருவருமாக இணைந்து கிடாரின் உதவியுடன் அருமையாகப் பாடல் பாடியவர்களையும் நான் நீண்ட காலமாக சந்திக்கவே இல்லை.ஒவ்வொரு நாளும் தம் குரலையும் சுவாசத்தையும் ரயிலின் சத்தத்தைக் கடந்து காற்றுடன் தேய்த்துக் கொண்ட அவர்களது வாழ்க்கை இருக்கிறதா முடிந்து விட்டதா தெரியவில்லை.
கண்
தெரியாத மனிதர்கள்,கால்களை இழந்தவர்கள்,குழந்தையின் சத்திர சிகிச்சைக்கு உதவி தேடுவோர் என பணம் சேர்க்கும் மனிதர்களின் பயணம் தண்டவாளம் போல நீண்டு கொண்டே செல்கிறது.
தண்டவாளத்தில் ரயில்
நசுக்கிய இரண்டு ரூபாய் குற்றி நாணயத்தை சின்ன வயதில் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்.இன்றும் எத்தனையோ நாணயங்களை ரயில் நசுக்கி சிறுவர்களை ஆனந்தப்படுத்துகிறது. எத்தனையோ சிறவர்களை கையசைக்க வைத்து சந்தோசப்படுத்துகிறது.
சின்ன
வயதில் தோள்களைப் பற்றிக் கொண்டு நான்கைந்து போ் வரிசையாக ரயில் போல சத்தமெழுப்பிச் செல்வோம்.உலகில் இன்றும் அந்த விளையாட்டு இருக்கத்தான் செய்கிறது.
ஒரு
ரயிலைத் தவறவிடும் போது குற்ற உணர்ச்சி வந்துவிடுகிறது. அவ்வளவு வேதனையை அது ஏற்படுத்துகிறது.ஒவ்வொரு நாளும் ரயிலைத் தவறவிட்டு தலையில் கைவைத்து மூச்சு வாங்குபவர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்.
உலகம்
முழுவதும் ரயில்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.இரவு பகல்,மழை வெயில் மேடு பள்ளம் என எல்லாவற்றையும் கடந்து சதா அது பயணித்துக் கொண்டே இருக்கிறது.மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தில் இடைநடுவே நின்றுவிடுகிறார்கள்.
ரயில்
புதிய மனிதர்களை ஏற்றிக் கொண்டு நாடுகளின்
ஊடாகவும் நாகரீகங்களின் ஊடாகவும் தன் பயணத்தைத்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.மனித
வாழ்வே ஒரு பயணம்தான் என்பதின் அன்றாட சாட்சியாக பூமிப்பரப்பின் முதுகில் ரயில்
ஊர்ந்து கொண்டே இருக்கின்றது.
No comments:
Post a Comment