Thursday, April 3, 2014

மோடியை இனப்படுகொலையின் அடையாளமாகவே சிறுபான்மையினர் பார்க்கின்றனர் - அ.முத்துக்கிருஷ்ணன்

  
வாசிப்பு, பயணம், எழுத்து என கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சூழலில் சுற்றி வருபவர் .முத்துக்கிருஷ்ணன். மதுரையைச் சேர்ந்த இவர் விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். உயிர்மை, தமிழினி, ஆனந்த விகடன், ஜீனியர் விகடன், இந்தியாடு டே, தலித் முரசு, புதிய பார்வை, புது எழுத்து என தமிழில் வெளிவரும் பல பத்திரிக்கைகளில் இவரது பதிவுகளை நீங்கள் கானலாம்.மதுரை நகரின் வரலாற்று-தொல்லியல் சிறப்புகளை பற்றி மக்களிடையே ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பசுமை நடையை நிறுவியவர் .முத்துக்கிருஷ்ணன்.


இவர் மேற்கொண்ட பயணங்களில் மிக முக்கிய பயணம் சமீபத்தில் பாலஸ்தீனத்தின் காசாவுக்கு சென்றதே. இஸ்ரேலின் தொடர் குண்டு வெடிப்புகளுக்கு தினமும் மக்கள் பலியாகும் பூமிதான் காசா. 10000 கி.மீ தரை வழியாக பயணித்து காஸாவுக்கு சென்ற குழுவில் பயணித்த ஒரே தமிழர் இவர்.

கூடங்குளம், ஜைதாப்பூர், தாராபூர், கல்பாக்கம், கைக்கா என இந்திய அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் அதை பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகிறார். மிக அபூர்வமான பல தகவல்களை பார்வைகளை தமிழக வாசகர்களுக்கு வழங்கி வருபவர். தன் எழுத்தின் ஒரு பகுதியாக முக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கமும் செய்துள்ளார்.

குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை  இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழல் நமக்கு வழங்கியவர். அத்துடன் அப்சலை தூக்கிலிடாதே, தோழர்களுடன் ஒரு பயணம், அமைதிக்காக போராடுவோம், மதவெறி,  இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் இவரது இரு கட்டுரை தொகுதிகள்.தன் வேலைப்பளுவுக்கு மத்தியில் இந்நேர்காணலை வழங்க அவர் சம்மதித்தார். .முத்துக்கிருஷ்ணன் அவர்களுடன் சர்வதேசப் பார்வை இதழுக்காக மேற்கொண்ட நேர்காணல் இது.


அபிப்பிராய வாக்கெடுப்பின் உண்மை நிலை பற்றிக் கூறுவீர்களா?

உலகில் எங்குமே அபிப்பிராய வாக்கெடுப்புகள் சுதந்திரமானதாக நடைபெற்றதில்லை, அவை எப்பொழுதுமே வலுப்பெற்றவர்களினால், வலுப்பெற்றவர்களின் பார்வையாளர்களின் கண்காணிப்பின் கீழ், வலுப்பெற்றவர்களே நடத்திக் கொண்டது தான் சரித்திரம்.

மோடியின் வருகை சிறுபான்மை சமூகங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ள அச்சம் என்ன?

2002 இல் அவர் தலைமையில் நடந்த கோத்ரா இனப்படுகொலை இந்திய வரலாற்றில் மிகவும் அபாயகரமானது. பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும் பின்னும் சிறிய தாக்குதல்கள், கலவரங்கள் பல பகுதிகளில் நடந்திருந்தாலும், கோத்ரா இனப்படுகொலை இந்தியா முழுவதும் இருக்கும் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியது. பொதுவாக இரு மதங்களின் அடிப்படைவாதிகளுமே தொடர்ந்து அமைதிக்கு எதிரானவர்களாக, சமூகத்தின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் நோக்கில் தான் செயல்படுகிறார்கள். அவர்களின் பேச்சுக்கள், எழுத்துக்கள், பிரச்சாரம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாக, ஒரு விவாதத்தை தோற்றுவிப்பதாக இல்லாமல், வன்மத்தையும் வெறுப்பையுமே விதைக்கும் பாங்கில்தான் அமைகிறது. அவர்களுக்கு ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களின் மீது நம்பிக்கை அறவே இல்லை, வன்முறையின் வழியேதான் தீர்வு காண விளைகிறார்கள். பொதுவாக அடிப்படைவாதிகளின் போக்கு மொத்த சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கிறது, இப்படியான சூழல்களில்  பெரும்பான்மை சமூகத்தினரைவிட சிறுபான்மை சமூகத்தினரே  அச்ச உணர்வுக்கு ஆளாகிறார்கள் என்பதை உலகின் பல பகுதிகளை நாம் உதாரணம் காட்டி விளக்கலாம்.

இந்தியாவிலும் கூட நூற்றாண்டுகளாக சகோதரர்களாக இருந்து வந்தவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் கடந்த 40 ஆண்டுகளாக ஊடகங்களின் வழியாகவும் அவர்களது வதந்திகள் ஏற்படுத்தும் கட்டுமானங்களின் வாயிலாகவும் நஞ்சின் விதைகளை விதைத்து வருகிறது. இந்த விதைகளின் வழியான அருவடையின் உச்சத்தை மோடி செய்து வருகிறார். மோடி என்பது இனப்படுகொலையின் அடையாளமாகவே சிறுபான்மையினர்  மத்தியில் பார்க்கப்படுகிறது. அந்த இனப்படுகொலையில் ரத்தக்கறைகளை மோடி, வளர்ச்சி என்னும் முகமூடிஅணிந்து மறைக்க முயலுகிறார்.


 ஊடகங்கள் சொல்லும் அளவுக்கு காங்கிரஸ் பலவீனமாய் உள்ளதா?

பொதுவாகவே 10 ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் விரோத அரசை நடத்தும் எல்லா கட்சிகளுக்குமே ஒரு சோர்வு வந்துவிடும், இது இயற்கையானது இயல்பானது. அப்படித்தான் 10 ஆண்டுகள் மக்கள் விரோத ஆட்சி செய்து அதன் பலியை காங்கிரஸ் மன்மோகன் மீது போட்டு அவரை பலிகடாவாக்கி அவருக்கு ஒய்வு கொடுக்கும் திட்டத்தில் தான் செயல்பட்டு வந்தது. இந்த இடத்திற்கு அவர்கள் உடன் ராகுல் காந்தியை பதவி உயர்வு செய்திடவே விரும்புகிறார்கள். இந்த பதவி மடை மாற்றம் சடங்கு மெல்ல மெல்ல ஒரு ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற போதும், இந்த பதவிக்கான கருவிகளை கையாளும் திறன் ராகுல் இடத்தில் இன்னும் முழுவதுமாக கை கூடி வரவில்லை என்பதில் தான் இன்றைய காங்கிரஸ் கொஞ்சம் தடுமாறி நிற்கிறது, இந்த தடுமாற்றம் தான் பலவீனமாய் காட்சியளிக்கிறது.

 காங்கிரஸ் , பாஜக என்ற இரு பெரும் அரசியல் சக்திகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி என்ற எளிய மக்களுக்கான கட்சியை புரிந்து கொள்ளலாமா ?

நிச்சயம் அவர்களின் குரல் ஒரு மாற்றதின் குரலாகவே மிக பலமாக ஒலிக்கிறது, இந்தியாவில் புரையோடிக் கிடக்கும் ஊழல் மீதான ஒரு பெரும் விவாதத்தை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் ஒரு முழுமையான அரசியல் சக்தியாக உருவெடுக்க இன்னும் காலம் பிடிக்கும். பல தளங்களில் அவர்களது கொள்கைகள் என்ன என்பது குறித்த ஒரு தெளிவு அறிவிப்பு இன்னும் அவர்களிடத்தில் இருந்து வரவில்லை, உதாரணத்திற்கு  - சிறுபான்மையினர், அணு உலைகள், கார்பரேட்டு ஊழல் லோக்பால் மசோதாவில் இணைக்கப்படுமா, இட ஒதுக்கீடு குறித்த அவர்களது பார்வை என்னஇது போல் அவர்களது கட்சி திட்டம் இன்னும் கொஞ்சம் எல்லாவற்றை பற்றியும் தெளிவாக அறிவிக்குமேயானால் இன்னும் கூட அது ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

 தேசிய , மாநில மட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் அரசியல் செயல்பாடு பற்றி உங்களின் மதிப்பீடு ?

இந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் இன்னும் கூட அடையாள அரசியல் எனும் அளவில்தான் சுருங்கிக் கிடக்கிறது. சமீப காலங்களில் தமிழகத்தில் தமுமுக, ஜமாதே இஸ்லாமி ஹிந்த், எஸ்டிபிஐ என இந்த இயக்கங்களின் பங்களிப்பு ஆரோக்கியமானதாக உள்ளது. பல சமூக நிகழ்வுகள் குறித்து இவர்களின் அபிப்ராயங்கள், போராட்டங்கள் இன்று இஸ்லாத்தின் ஜனநாயக குரலாக பார்க்கப்படுகிறது.


இன்றைய தேர்தல் நிலவரத்தை பார்க்கும்போது சாதிய , பிராந்திய கட்சிகளின் நிலை வலுப்பெற்றிருப்பதாக தோன்றுகின்றதே . இந்த பார்வை சரியா ?

வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னனி முதலே பிராந்திய கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்தவண்ணம் தான் உள்ளது, இந்த பிராந்திய கட்சிகள் தான் அடுத்து அமைந்த பல தேசிய அரசுகளின் போக்கை தீர்மானித்துள்ளது, இவர்கள் தங்களின் கட்சிகளின் நலன்கள் சார்ந்து பேசிய பேரங்கள் அளவிற்கு தங்களின் மாநில நலன்களுக்காக வாதிடவில்லை. இந்த பிராந்திய கட்சிகள்  பெரும் பகுதியாக குடும்ப கட்சிகளாக சுருங்கி போயின, பல கட்சிகள் முற்றிலுமான சாதிய கட்சிகளாகவும், மற்றவை சாதியை எல்லா தளங்களிலும் செயல்படும் காரணிகளாக வெளிபப்டையாக வைத்துள்ளது. வேட்பாளர் தேர்வு, அமைச்சர் பதவிகள் பங்கீடு, கட்சி பதவிகள் என சகலத்திலும் ஜாதி பிரிக்க முடியாத அங்கமாக மாறிப் போனது. இது பற்றிய குற்றவுணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் போனது தான் வேதனை.

காங்கிரஸ் , பாஜக , கம்யூனிஸ்டு உள்ளிட்ட மற்ற கட்சிகள் என்ற தேர்தல் கள நிலவரத்தில் இந்திய குடிமகனின் தேர்வு என்னவாக இருக்க வேண்டும் ?

காங்கிரஸ்-பாஜக ஆகிய இரு கட்சிகளிடையே மதவாதம் தவிர்த்து மற்ற கொள்கைகளின் எந்த விதமான முரண்பாடும் இல்லை. இரு திருடர்களும் தான் கடந்த இருபது ஆண்டுகளில் கூட்டாக நாட்டை விற்றார்கள், RELAINCE, ADANI, ESSAR, SAHARA, TATA, BIRLA என இந்திய முதலாளிகளின் சிறந்த அடிமை யார் என்பதில்தான் இவர்களின் போட்டியே. இந்த வெற்றிடத்தை இடதுசாரிகள் நிரப்பியிருப்பதற்கான பல வாய்ப்புகள் இருந்த போதிலும், ஒரு தேசிய இயக்கமாக இன்னும் வளர்ச்சி பெற முடியாமல் சில மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள், இடதுசாரிகளின் குரல் ஒரு மாற்று குரலாக ஊடகங்களின் வழியே ஒலித்தாலும், மக்கள் இயக்கமாக இன்னும் அவர்கள் வலுப்பெறவில்லை.



இந்திய தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெரு வணிக முதலாளிகளின் ஆதிக்க பிடி இறுகியுள்ளதா ?

இது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் எங்கிலும் இந்த போக்குதான் காண்ப்படுகிறது, உலக முதலாளிகள் நேரடியாக நாடுகளின் தலைமையுடன் வர்த்தக பேரங்களில் ஈடுபடுகிறார்கள். உலகமயத்திற்கு பின் இன்று மூன்றாம் நாடுகளின் அரசுகள் எல்லாம்  வெளிநாட்டு- உள்நாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்யும் நிறுவனங்களாக உருமாற்றம் அடைந்துவிட்டன. இந்த உலக போக்கு இந்தியாவில் மிக அதிகமாக காணப்படுகிறது ஏனென்றால் இந்தியாவில் இல்லாத வளம் என்று ஒன்று இல்லை. கனிமங்கள், நீர், காடுகள், எண்ணை என காப்பரேட்டுகளின் கண்களின் கருவிழியில் இவை எல்லாம் கச்சிதமாக பதிந்துவிட்டன. இவைகளின் கடைசி சொட்டு உறிஞ்சி எடுக்கப்படும் வரை இவர்களின் ஆதிக்கத்திற்கு கீழ்தான் தேர்தலும் அரசும் இயங்கும்.




No comments:

Post a Comment