Monday, March 24, 2014

முஸ்லிம்களைப் புரிந்து கொள்ளும் வகையிலான வெளியீடுகள் சிங்களத்தில் அதிகம் வர வேண்டும் கலாநிதி லியனகே அமரகீர்த்தி



கலாநிதி லியனகே அமரகீர்த்தி குருநாகலை,குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர். தனது  கிராமத்தில் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக் கொண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நுழைந்த இவர் 2000 ஆம் ஆண்டு தனது முதுகலைமாணிப் பட்டத்தை இலக்கியத்துறையில் விஸ்கொன்ஸின் பல்கலைக் கழகத்தில் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டததையும் பெற்றுக் கொண்டார்.ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் இதுவரை புனைகதை, கவிதை,இக்கியக் கோட்பாடு குறித்து 15 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.


2000 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதும் 2008 ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான விருதும் இவருக்குக் கிடைத்தது.இலக்கியக் கோட்பாடு, மொழிபெயர்ப்புக் கற்கை,பின் காலனிய கோட்பாடு,விமர்சனம்,நாடகம்,சினிமா மற்றும் அழகியல் கோட்பாடு குறித்து கற்பித்து வரும் இவர் இன மத பேதங்களைக் கடந்து எழுதும் எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை தன் எழுத்தில் வலிமையாகப் பதிந்தவர்.தற்போது பேராதனைப் பல்கலைக்கழக சிங்களத்துறையில் சிரேஷ்ட விரிவுரை யாளராகப் பணியாற்றுகிறார். எந்த மேதைத்தனமும் இல்லாத அவரது ஆளுமை விதந்து கூறத்தக்கது.மீள்பார்வைக்காக அவருடன் மேற்கொண்ட நேர்காணல் இது.



இலக்கியம் மனித வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக காணப்படுகின்றது.இலக்கியம் ஒரு சமூகத்திற்கு ஏன் முக்கியமானதாக இருக்கின்றது?

எந்த ஒரு சமூகத்திலும் இருக்கின்ற ஆழமான சிந்தனைகள் வெளிப்படும் இடம்தான் இலக்கியம்.சமூகம்,கலாசாரம்,மனிதாபிமானம் குறித்து மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் ஆழமாகச் சிந்திப்பதில்லை.இலக்கியம்தான் அதனைச் சாத்தியப்படுத்துகிறது.

மனித வாழ்க்கையில் நாம் கதைக்க விரும்பாத விடயங்கள் இருக்கின்றன. பொறாமை,குரோதம், போன்றவற்றை அன்றாட வாழ்க்கையில் நாம் ஏற்றுக் கொள்ள,வெளிப்படுத்த விரும்புவதில்லை.இலக்கியம் என்பது இதனை ஏற்றுக் கொள்வதற்கான,வெளிப்படுத்துவதற்கான அவகாசத்தை வழங்குகிறது.

சுய விமர்சனத்தை கூட்டாக செய்வதற்கான  வழியாக இலக்கியம் இருக்கின்றது.ஒரு சமூகத்தில் வளர்ந்த இலக்கியங்கள் அதிகமாகக் காணப்படுகிறது எனில் தம்மைப் பற்றி அந்த சமூகம் அதிகமாக சிந்திக்கிறது என்று அர்த்தம். இல்லாத போது அன்றாட சிந்தனைகளாலே அந்த சமூகம் ஆளப்படுகிறது.இந்த அன்றாட சிந்தனைகளில் அடுத்தவர்களைப் பற்றி,பெண்களைப் பற்றி,சிறுபான்மையினரைப் பற்றி,பிற நாட்டவர்களைப் பற்றி மோசமான சிந்தனைகள் இருக்க முடியும்.இந்த மோசமான சிந்தனைகளை ஒரு சமூகம் கடக்க இலக்கியம் துணை புரிகிறது.எனவே ஒரு சமூகத்திற்கு இலக்கியம் மிக முக்கியமானது.

வராற்றுத் தகவல்களை நிரூபிப்பதற்கு இலக்கியம் எந்தளவிற்குப் பயன்படுகிறது.?

வரலாற்றுத் தகவல்களை நிரூபிப்பது இலக்கியத்தின் வேலை அல்ல.வரலாறு குறித்த கேள்விகளை எழுப்புவதுதான் அதனது பணியாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.வரலாறு ரீதியான தகவல்களை உறுதிப்படுத்த இலக்கியத்தை பயன்படுத்துவதாயின் வரலாற்றில் பெற முடியுமான நல்ல விடயங்கள் இருக்கின்றன. நிகழ்காலத்தை சீராக்குவதற்கே வரலாறு அவசியப்படுகின்றது.உதாரணத்திற்கு 12 ஆம் நூற்றாண்டு குறித்த வரலாற்றை நாம் அறிவது மீண்டும் அங்கு போய் வாழ்வதற்கல்ல.21 ஆம் நூற்றாண்டிற்கு தேவையான விடயங்கள் அங்கு இருக்கின்றதா என்பதை அறியவேதான் நாம் அதனை நோக்கி மீள்கிறோம்.

இலங்கை போன்ற நாடுகளில் வரலாற்றுத் தகவல்களை நிரூபிப்பதற்கு இலக்கியம் எழுதப்படுவது பயங்கரமான நோக்கங்களுக்காகும்.குறிப்பாக இனவாதத்தை,அரசை,சிங்களத்தை மையப்படுத்தியவற்றுக்கே அது பயன்படுகிறது.

21 ஆம் நூற்றாண்டின் இலங்கையானது பல் கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடாகும்.21 ஆம் நூற்றாண்டின் இலங்கையை கட்டியெழுப்புவதில் வரலாறு ரீதியாக இலக்கியத்தைப் பயன்படுத்துவதாயின் மிகவும் நுணுக்கமாகவே பயன்படுத்த வேண்டும்.அப்படிப் பயன்படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.

அடுத்த சமூகங்களின் கலாசாரங்களை சிங்கள இலக்கியம் உள்வாங்கியிருக்கின்றதா?

வரலாற்று நெடுகிலும் சிங்கள இலக்கியம் அடுத்த கலாசாரங்களை உள்வாங்கியே வளர்ந்திருக்கின்றது,அவற்றிலிருந்து பாடம் கற்றிருக்கிறது.எமது சமூகம் வெளிக் கருத்துக்களுக்கான வாயிலைத் திறந்து வைத்திருக்கின்றது.கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதானது எமது முக்கிய சக்தியாகும்.நவீன கல்வி,ஜனநாயகம்,அதே போல கலைத்துறையில் நவீன நாட்டியம்,நாவல்,சினிமா என எல்லாத் துறையிலும் நாம் அடுத்த கலாசாரங்களின் கருத்துக்களை புறக்கனிக்கவில்லை.

சிங்களக் கலாசாரத்தில் அனைத்தும் இருக்கிறது.ஏனையவர்களிடம் கடன் வாங்கத் தேவையில்லை என்று வாதிடுவோரும் உள்ளனர்.இது தவறான கருத்தாகும்.எந்த ஒரு கலாசாரத்திற்கும் தனித்து நின்று ஜீவிக்க முடியாது.மேற்கின் விஞ்ஞானத்திற்கு ஆபிரிக்கா,அரேபியா,இந்தியா போன்ற நாடுகளிடம் பெற்ற அறிவு இல்லாமல் நின்று நிலைக்க முடியாது.இன்று நாங்கள் காணும் புத்த தர்மம் இன்றைய நிலையில் இருப்பதற்கு ஒல்லாந்தர்,ஆங்கிலேயர்,மேற்கத்திய அறிஞர்கள் மற்றும் அமெரிக்கர்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

உபசம்பதா சடங்கு என்பது 17 ஆம் நூற்றாண்டில் இல்லாமல் போனது.இதனைத் தாய்லாந்திலிருந்துகொண்டு வருவதற்கு உதவியவர்கள் ஒல்லாந்தர்கள்.கண்டியில் இருக்கும் பௌத்தம் ஒல்லாந்தரின் உதவியோடு உருவாக்கப்பட்ட ஒன்று.எனவே எந்தவொரு கலாசாரமும் பரிமாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.நான் சில்க் ரோட் எனும் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். கலாசாரப் பரிவர்த்தனை எப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.எனவே கலாசாரம் என்பது தனித்து யாருக்கும் சொந்தமான ஒன்றல்ல.எல்லாக் கலாசாரமும் எடுக்கவும் கொடுக்கவும் செய்திருக்கின்றன.இது தொடர்ந்தும் நடக்கின்ற ஒன்று.

அப்படியாயின் தனித்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன?

அரசியல் பொருளாதார சமத்துவம் இருக்கும் பட்சத்தில் தனித்துவம் என்பது தேவையில்லை என்றே முன்பு நினைத்தனர்.அப்படிச் சொல்ல முடியாது.தனித்துவம் என்பது அவசியமான ஒன்று.ஒவ்வொரு கலாசாரமும் உருவாக்கிக் கொண்டுள்ள இலக்கியம்,மொழி,வரலாறு,சடங்கு சம்பிரதாயம்,உணவுப் பழக்க வழக்கங்கள் இருக்குமெனில் அதை அவ்வக் கலாசாரங்களுக்கே உரிய தனித்துவம் எனக் கருதுவது சிறந்தது.
தற்போதுள்ள பிரச்சினை தனித்துவம் குறித்ததல்ல.தனித்துவத்திற்காக அரசியலை வடிவமைப்பதாகும். அனைத்து அரசியல் காரணிகளும் தனித்துவத்திற்கு எனக் கருதுதுவதுதான் அது.தனித்துவத்திற்காக அரசியல் செய்வதுதான் தவறானது.அன்றாட வாழ்க்கைக்கு தனித்துவம் முக்கியம்.

நாம் அனைவரும் ஒன்று என சிங்கள மக்கள் நினைக்கிறார்கள்.ஆனால் அப்படி இல்லை.குல பேதம்,பிரதேச பேதம் அவர்களுக்கு மத்தியில் இருக்கிறது.பொருளாதார ஏற்றத் தாழ்வு பெருமளவு இருக்கின்றது.இவற்றுக்கு மத்தியில் தனித்துவ அரசியல் குறித்துக் கதைப்பதில் சிக்கல் இருக்கிறது.

தமக்கென நிலையான வரலாறு,கலாசாரம்,வாழ்வொழுங்கு இருக்கிறது என ஏற்றுக் கொள்ளும் முறை இருக்க வேண்டும்..ஆனால் அந்த தனித்துவத்திற்கு கீழால் உள்ள பிரச்சினைகளையும் பேசு பொருளாக்க வேண்டும். உதாரணத்திற்கு மூன்று தசாப்தகாலமாக  புலிகள் பலத்துடன் இருந்தார்கள்.இருந்தாலும் தங்களுக்கு மத்தியில் இருந்த சாதி,குல,பிரதேச பேதத்தை அவர்களால் இல்லாமல் செய்ய முடியவில்லை.இன்னும் அவை அப்படியே இருக்கின்றது என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.தனித்துவம் என்பதற்குக் கீழ் உள்ள ஏனைய விடயங்களையும் நாம் பார்க்க வேண்டும்.

இலங்கை பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதனை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?

கண்டியை எடுத்துப் பாருங்கள்.பல்வேறு இனங்கள் இங்கு இருக்கின்றன.வெள்ளையர்களும் இருக்கின்றனர்.இந்தச் சிறிய பிரதேசத்தில் இது விசித்திரமானது. இவ்வுலகில் மனிதனாக வாழ்வதற்கு நிறைய முறைகள் இருக்கின்றன.அமெரிக்கா தங்களைப் போலவே அனைவரும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.மனிதம் முழு உலகிற்கும் ஒன்றாயினும் அதை வெளிப்படுத்தும் முறைகள் வேறுபடும் என்பதை பல் கலாசார நாட்டவர்களுக்கு  இலகுவாக புரிந்து கொள்ளலாம்.ஒரு இனத்தின் வாழ்க்கை முறை அடுத்த இனத்தை விட சிறந்ததது என கூற முடியாது.அதேவேளை அதனை இன்னொரு இனத்தின் மீது திணிக்கவும் முடியாது.பல் கலாசார நாடொன்றில் வாழும் போதுதான் கலாசாரப் பல்வகைமையை படித்துக் கொள்ளலாம்.ஆனால் அதை நாம் எமது நாட்டில் காண்கிறோமா என்பதுதான் கேள்விக்குறியாய் உள்ளது.

முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய உங்களது அபிப்பிராயம்…

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை எனக்கு மேலோட்டமான ஒரு கருத்தையே சொல்ல முடியும்.ஏனெனில் நாம் தமிழர்களை விளங்க முயற்சித்த அளவுக்கு முஸ்லிம்களை விளங்க முயற்சி எடுக்கவில்லை.

முஸ்லிம்களைப் பற்றி சிங்கள சமூகம் வகைமாதிரியான (stereo type)   கருத்துக்களையே கொண்டுள்ளது.முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய ஆழமான அறிவு இல்லாமைக்கு கல்வி,இலக்கியம் போன்ற அனைத்தும் காரணமாகும். முஸ்லிம்கள் என்போர் அவர்களது மார்க்க தனித்துவத்தில் கூடிய கரிசனை கொள்ளும் ஒரு பிரிவினர்.அவர்கள் குறிப்பிட்ட ஒரு வாழ்வு முறையைப் பின்பற்ற விரும்புபவர்கள் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன்.அதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

முஸ்லிம்களது எழுத்துக்கள் தமிழ் மொழியில் இருப்பது இடைவெளியை இன்னும் அதிகமாக்குகிறது.முஸ்லிம்களது தாய் மொழி சிங்களமாக இருந்திருந்தால் அவர்களை இன்னும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.இதற்காக நான் முஸ்லிம்களை குறை சொல்லவில்லை. தமிழ் மொழியைப் படிக்காதது எமது பிரச்சினதான்.

முஸ்லிம்களில் சிங்களத்தில் பாண்டித்தியம் பெற்றவர்கள் நிறையப் போ் இருக்கிறார்கள்.அவர்கள் முஸ்லிம்களது வாழ்வியலை சிங்கள மொழிக்கு கொண்டு வருவார்களானால் மிகவும் பயனுடையதாய் இருக்கும். முஸ்லிம்களது வாழ்வியல் குறித்து எனக்கு ஆழமான புரிதல் இல்லை.எனக்குத் தெரிந்த அளவில் நாம் முஸ்லிம்கள் எனும் போது அவர்கள் அனைவரையும் ஒரே வட்டத்தில் உள்ளடக்குகிறோம்.ஆனால் அவர்களது வாழ்க்கை முறைய பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகிறது. பல்கலைக் கழகத்தில் மொழிபெயர்ப்பு தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு கற்கையை இந்த வருடத்தில் இருந்து ஆரம்பித்துள்ளோம்.இது அடுத்தவர்களது வாழ்வியலைப் புரிவதற்கான ஒரு முயற்சியாகும்.

முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் ஏன் அதிகரிக்கின்றன.

இலங்கையில் அரசியல் பௌத்தம் கடும்போக்குடையதாக மாறியிருக்கின்றது. சில பௌத்த மதகுருக்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். முஸ்லிம் கலாசாரம் தங்களை ஆக்கரமிக்க வருகிறது என்ற ஒரு மனோநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.-அப்படிச் சொல்லும் போது அவர்களது உள்ளத்தில் மத்திய கிழக்கே தோன்றுகின்றது.இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக மத்திய கிழக்குடன்  சம்பந்தப்பட்டவர்கள் என்று இவர்கள் நினைக்கின்றனர்.
மத்திய கிழக்கை நாம் எடுத்துக் கொண்டால் அங்கும் பல்வேறு கலாசார அம்சங்கள் இருக்கின்றன.நாட்டுக்கு நாடு முஸ்லிம்களது கலாசாரம் வேறுபடுகிறது.முஸ்லிம் உலகு என்பது ஒன்று என்றும் அது தங்களை ஆக்கரமிக்க வருகிறது எனவும் கடும்போக்கு பௌத்தர்கள் சிலர் நினைக்கின்றனர்.இது தவறானதாகும்.

இலங்கை முஸ்லிம்களை புரிந்து கொள்ளும் போது இன்னொரு விடயத்தை நாம் பார்க்கலாம்.அதுதான் மாடறுப்பதாகும். கிரி அம்மாவை முஸ்லிம்கள் அறுத்துச் சாப்பிடுவதை நிறுத்தக் கோரி அண்மையில் சிங்கள ராவய அமைப்பு பாத யாத்திரை மேற்கொண்டது.இவை முழுக்க முழுக்க இனவாதக் கருத்து.மாட்டிறைச்சியை முஸ்லிம்கள் மாத்திரம் சாப்பிடுவதில்லை.

அதுபோல அறுக்கப்படும் அனைத்துமே பசுக்களும் அல்ல.மாட்டிறைச்சி சாப்பிடும் சிங்கள பௌத்தர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர்.வரலாற்றிலும் இதனை நாம் காணலாம்.முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் இருக்க முடியும்.முஸ்லிம்கள் என்போர் மாடறுப்பதற்காக இலங்கைக்கு வந்தவர்கள் அல்லர்.இலங்கையில் பால் தட்டுப்பாடு இருக்கிறது எனில் அதற்கு முஸ்லிம்கள் மாடறுப்பதல்ல காரணம்.அதற்கு வேறு பொருளாதாரக் காரணங்கள் இருக்க முடியும்.வெளிப்படையான முஸ்லிம் விரோதமே இன்று காணப்படுகிறது.
இதற்கு முஸ்லிம்கள் எப்படி முகம் கொடுப்பார்கள் என்பதை நினைக்கும் போது எனக்குள் ஒரு அச்சம் படர்வதுண்டு.அதாவது முஸ்லிம்கள் ஆயுதம் தரிப்பது,ஜிஹாத் செய்வது போன்றவற்றை கைக் கொள்வது மிகவும் ஆபத்தானது.இதற்குள் முஸ்லிம்களை தள்ளிவிடவே கடும்போக்காளர்கள் நாடுகின்றனர்.

எனவே எமது சமூகத்தோடு அதிகமான உரையாடல்களை மேற்கொள்ளவும் அதிகம் சிங்களத்தில் எழுதவும் நீங்கள் முயற்சிக் வேண்டும்.பொதுபல சேனா,சிங்கள ராவய போன்றவற்றுக்கு பெருத்த வரவேற்பு எமது சமூகத்தில் இல்லை.

அடிப்படைவாதம் குறித்து இன்று அதிகம் பேசப்படுகிறது. அடிப்படைவாதம் என்பதனை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

இது மதங்களில் உள்ள கருத்துக்களை, மூல நூல்களில் உள்ளவற்றை அப்படியே புரிந்து கொண்டு நவீன உலகில் செயற்பட முனைவதாகும்.அப்படிப் பின்பற்றுவதற்குச் சிறந்த விடயங்கள் எல்லா மதங்களிலும்

இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் தனித்துவ அடையாளங்களோடு சம்பந்தப்பட்டவற்றையே அவர்கள் தெரிவு செய்கிறார்கள்.
அச்சொட்டாகப் பின்பற்றுவதில் ஆபத்து இருக்கிறது.நமக்கு கூறப்பட்டுள்ள அடிப்படைகளில் அடுத்த மனிதனுக்கு ஏதேனும் ஒருவகையில் தீங்கு ஏற்படுகிறதா என்று நாம் பார்க்க வேண்டும்.அப்படி இருக்குமாயின் அடிப்படைகளில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.அடிப்படை அம்சங்களை விட மனிதத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்.

முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?

முஸ்லிம் சமூகத்தை விமர்சனக் கண்ணோட்டத்டதில் நோக்க நான் விரும்பவில்லை.முஸ்லிம்களுக்கு மத்தியில் சிங்களத்தில் சரளமாக எழுதக் கூடிய,பேசக்கூடிய ஒரு படித்த வர்க்கம் உருவாக வேண்டும்.தமிழைக் கற்காதது சிங்கள மக்களாகிய எங்களுடைய பலவீனமாகும். முஸ்லிம்களது கலாசாரம்,வரலாறு,முஸ்லிம்கள் இலங்கையைப் பற்றி சிந்திக்கின்ற விதம் பற்றி சிங்களத்தில் தொடர்ந்து எழுத வேண்டும்.முஸ்லிம்களால் சிங்கள மொழியில் வெளியிடப்படுகின்ற ஒரு பத்திரிகை இருக்குமாயின் எவ்வளவு சிறந்தது?



No comments:

Post a Comment