‘பிரிவில்
சந்திப்பின்
ஏக்கம்
சந்திப்பில்
பிரிவின்
அச்சம்
மனமே!
உனக்கு
இரண்டிலும்
நிம்மதி
இல்லை’
-கவிக்கோ-
பயணங்களின்
போது ஒருவரிடம் சரியாக விடைபெற்றுக் கொள்ளவில்லை என்றாலோ ஒருவரை சரியாக வழியனுப்பவில்லை
என்றாலோ மனசு மிகுந்த சங்கடப்படுகிறது.வழியனுப்புதல் அல்லது விடைபெறுதல் என்பது மனித
உறவின் அத்தியந்தத்தைப் பினைக்கும் ஒன்று.உலகில் ஒவ்வொரு கனமும் வழியனுப்புதல்களும்
விடைபெறுதல்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
விமான
நிலையம் செல்லும் ஒவ்வொரு முறையும் இதனை நான் அதிகமாகவே சிந்திப்பதுண்டு.நிடைபெறக்
காத்திருக்கும் மனிதர்களின் முக ரேகைகளை நெருக்கமாக வாசிக்கும் போது எமக்கும் கண்ணீர்த்
துளிர்க்கும் தருணமது.ஒரே இடத்தில் சந்தோசமும் கண்ணீரும் நிகழும் அதிசயம் அங்குதான்
நடைபெறுகிறது.ஒரு கூட்டம் கண்ணீருடன் பிரியாவிடை வழங்க இன்னுமொரு சாரார் புன்னகையோடு
வரவேற்கின்றனர்.
வழியனுப்புதல்
என்பது ஒரு தற்காலிகப் பிரிவுதான்.இப்போதைக்கு இவரை இழக்கிறோமே என்கிற மனக் கவலை எல்லோருக்குள்ளும்
இருக்கவே செய்கிறது.அந்த வலியை எல்லோராலும் வெளிக்காட்டிக் கொள்ள முடிவதில்லை.உறவுகளின்
பல்வேறு நிலைகளில் இது வேறு வேறு பரிமாணங்களைப் பிரதிபலிக்கிறது.
தனது
பிள்ளையைப் பாடசாலைக்கு அனுப்பும் ஒரு தாய் ஒவ்வொரு நாளும் ஒரு தற்காலிகப் பிரிவினால்
அவதிப்படவே செய்கிறாள். மறுபடி மாலையில் பிள்ளையைக் காணும் போதுதான் இழந்த சந்தோசத்தை
மீண்டும் பெறுகிறாள்.
அதுபோலத்தான்
தன் கணவனை தற்காலிகமாகப் பிரியும் ஒரு மனைவியின் கண்கள் கடலுக்கு நிகரான நீரின் பாரத்தை
தன் கண்களுக்குள் தாங்கிக் கொண்டிருக்கிறாள்.மறுபடி எப்போது சந்திப்பது என்ற ஏக்கத்துடனேதான்
ஒவ்வொரு வழியனுப்புதல்களும் நிகழ்கின்றன.
வழியனுப்புதலுக்கும்
விடை பெறுவதற்கும் இடையிலுள்ள இடைவெளியின் மௌனமும் அதன் பாரமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
மனித வாழ்க்கை இந்த இரண்டிற்கும் பழக்கப்பட்டாகி விட்டது.
வெளிநாடுகளுக்கு
தொழிலுக்காகச் செல்பவர்களை வருடங்களுக்குப் பிறகு சந்திக்க வழியனுப்பும் தருணங்கள்
கண்ணீரால் எழுதப்படுபவை. விமான நிலைத்தில் கண்கள் வடிக்கும் கண்ணீருக்குப் பின்னால்
படிந்திருக்கும் துயரத்தின் பாரத்தை பேனாக்கள் ஒரு போதும் எழுதியதில்லை.அவர்கள் பிரிவின்
நினைவுகளை ஆண்டுகளாகச் சுமக்கின்றனர்.
பொருளாதாரச்
சுமை பாசத்தின் முழுமையையும் பறித்துக் கொள்வது இங்குதான்.தொழில் நிமித்தம் பிரிவை
அனுபவிப்போர் கோடிப் பேர் உலகில் இருக்கின்றனர்.அத்தனை பேருடைய கவலைகளையும் சுமந்து
கொண்டுதான் பூமி சுழல்கிறது.
வழியனுப்புதல்இவிடைபெறுதல்
என்ற இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் இரண்டு மர்மங்கள்.அன்பெனும் சங்கிலிகள் அறுத்துக்
கொள்ளும் இரண்டு முனைகள் அவை.அன்பைப் பிரிப்பதும் அதுதான் இணைப்பதும் அதுதான்.
'போய்
வருகிறேன்' என்ற விடைபெறும் வார்த்தைக்கு எத்தனையோ பதில்கள் சொல்லப்படுகின்றன.சொல்லும்
பதில்கள் மீண்டும் திரும்பி வரும் வரைக்குமான பாதுகாப்பை பிரார்த்திக்கின்றதது. .கவனத்தை
யாசிக்கிறதுஇபத்திரமாக நாட்களைக் கழிக்கும் படி உத்தரவிடுகிறது.
ஒரு
விடைபெறும் தருணமானது அலாதியான அன்பைக் கொண்டது.கண்ணீர்ச் சுவர்களால் ஆன ஒரு அறையை
ஒத்தது அது.எப்போதும் அச் சுவர்கள் உடைப்பெடுக்கக் காத்திருக்கின்றன.
எல்லாப்
பயணங்களின் போதும் வழியனுப்புபவர்களின் முகங்களைப் பார்த்துக் கொண்டு மறையவே நாம் விரும்புகிறோம்.முகம்
மங்கலாகத் தெரிந்து மறையும் வரை நம் பார்வை அலைந்து கொண்டே இருக்கின்றது.வாகனத்தின்
ஜன்னல் வழி,பேரூந்தின் கம்பிகளுக்கிடையிலான வெளி,ரயிலின் அகலமான ஜன்னல் வழி,விமான நிலையத்தின்
பரந்த வெளி,வீட்டு வாசலின் முற்ற வெளி, என ஒவ்வொரு இடத்திலும் நாம் விடைபெறுகிறோம்
அல்லது ஒருவரை வழியனுப்புகிறோம்.முடிவற்ற வார்த்தைகளாலும் பிரிவின் தற்காலிக அல்லது
நிரந்தரத் துயர்களாலும் காற்று மண்டலம் அதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ரயில்
நிலையத்தில் ஒரு தாய் தன் பிள்ளையை வழியனுப்பிய வண்ணம் நீண்ட நேரம் கைகளை அசைத்துக்
கொண்டு நிற்கிறாள்.ரயில் மறையும் பொழுதில் அவளது கையும் இதயமும் கனக்கத் தொடங்கிவிடுகின்றன.தனது
பந்தத்தை,பாசத்தை ரயில் இழுத்து அறுத்துக் கொண்டு போவதாகவே அவள் உணர்கிறாள்.
அன்று
விமான நிலையத்தில் உறவினர் ஒருவருக்கு விடை கொடுத்தேன். அவர் கண்களிலிருந்து மறையும்
வரை கண்கள் அவரையே தேடிக் கொண்டிருந்தன.கடந்த நாட்களின் சம்பவங்களை நினைத்தபடி மனம்
அலைமோதத் தொடங்கியிருந்தது.
இந்த
உலகில் குற்றங்களுக்காகவும் குற்றமின்மைகளுக்காகவும் பலர் சிறைகளில் வாழ்கின்றனர்.அவர்களும்
விடைபெறும் தருணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.அறைகளுக்குள்ளே நிகழும் பாச நிகழ்வுகள்
அவை.
நான்
கொழும்பு வரும் ஒவ்வொரு நேரமும் அந்த அதிகாலையில் உன் குட்டித் தங்கையின் துயிலைக்
களைத்து அவளிடம் விடைபெறுவது வழக்கம்.விடைபெறும் போதெல்லாம் போக வேண்டாம்,எப்போது வருவீர்கள்?
என்ற இரண்டு கேள்விகளையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்பாள்.நெருக்கமான ஒருவரை தற்காலிகமாகப்
பிரிவதும் கொடியதுதான் இந்த உலகில்.
விடைபெறுவதும்
வழியனுப்புவதும் ஒரு சடங்கு போல உலகம் முழுவதும்
நடந்து கொண்டிருக்கின்றன.வேறு வேறு வார்த்தைகளில்,உணர்ச்சிப் பரவசங்களில்,துயர் அடர்ந்த
உள்ளங்களின் வாதைகளில் அவை மாறி மாறி நிகழ்கின்றன.தண்டவாளங்களை ஊடறுத்துச் செல்லும்
ரயில் மறுபடி திரும்பி வரத்தான் செய்கிறது என்ற நம்பிக்கையில் காத்திருப்பும் இருக்கத்தான்
செய்கிறது.
ஆனால்
இந்த வாழ்க்கைக்கு விடைகொடுக்க யாருக்கும் அவகாசம் கிடைப்பதில்லை.யாரும் யாருடனும்
சொல்லிக் கொள்வதில்லை. அப்போது கண்ணீருடனான வழியனுப்புதல் மட்டுமே எஞ்சிவிடுகின்றது
No comments:
Post a Comment