சின்ன வயதில் கிரிகெட்
விளையாட்டில் ஒரு பித்து நிலைதான் இருந்தது.வீட்டின் சிறிய முற்றம்>வீதி>வயல் வெளிகள் என விளையாடாத இடமே இல்லை.அப்போது பெட்டும் பந்தும் அபூர்வப் பொருள்களாகவே
கண்களுக்குத் தெரிந்தன.சொல்லிச் சிரிப்பதற்கும் சந்தோசப்படுவதற்கும் ஏராளமான சம்பவங்கள்
நிகழ்ந்திருக்கின்றன.
சர்வதேச கிரிகெட் போட்டிகளை நண்பர்களுடன் பார்ப்பது>பிடித்த அணிக்கு தீவிரமாக ஆதரவு வழங்குவது>மறுநாள் பாடசாலையில் அதன் வெற்றியைக் கொண்டாடுவது>தோல்வியைத் தாங்க முடியாமல் தடுமாறுவது என எத்தனையோ நினைவுகள்.
பின் வந்த நாட்களில் விளையாடுவதை
விட்டுவிட்டேன்.ஆனால் அதனை ரசிப்பதில் அப் பித்து நிலை தொடர்ந்தது.இவை எல்லாவற்றையும்
மீட்டிப் பார்க்க 'காய் போ சே' திரைப்படம் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தது.
'காய் போ சே' ஒருமாதிரியான பெயராகத்தான் இருந்தது.இந்த ஆண்டு வெளிவந்த
'காய் போ சே' Chetan Bhagat இன் ‘The 3 Mistakes of My Life’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.அபிஷேக் கபூர்
இதனை இயக்கியுள்ளார். 'காய் போ சே'-'உனது பட்டத்தை அறுத்துவிட்டேன்' என்பது இதன் பொருள்.வெற்றியின் குறியீட்டுப் பெயர்.
அப்
பெயருக்குப் பின்னே உழைப்பு>முயற்சி>அர்ப்பணம் எல்லாமே மறைந்திருக்கின்றன.ரங்தி பசன்தீ>தாரே ஸமீன் பர்>த்ரீ இடியட்ஸ் போன்ற திரைப்பட வரிசையில் இதனையும் சேர்த்துக்
கொள்ள முடியும்.ஒளிப்பதிவு காட்சியமைப்பு எல்லாமே நேர்த்தியாய் அமைந்திருக்கிறது.
இஷான்>ஓமி>கோவிந்த் ஆகிய மூன்று நண்பர்களின் கனவு>வாழ்க்கை என்பவற்றின் அடியே முழுப் படமும் பயணம் செய்கிறது.மூவரும் இணைந்து ஒரு
ஸ்போர்ட்ஸ் அகடமியை உருவாக்கி இளைஞர்களைப் பயிற்றுவிக்கின்றனர்.ஒரு கனவைத் தரையிறக்கும்
முயற்சியில் படும் துன்பங்கள் படத்தின் ஒரு பாதி.நிகழ்வுகளை அரசியலாக்கி இலாபம் தேடும்
கும்பல்களின் முயற்சி படத்தின் மறுபாதி.இந்த இரண்டுக்கும் நடுவே நேர்த்தியான இசைப்
பின்னணியுடனும் நகரும் கெமராக் கோணங்களுடனும் 'காய் போ சே' புதிய அனுபவத் தளத்தில் நம்மோடு உரையாடுகிறது.
விளையபட்டுப் பயிற்சியும்
கல்வியும் நம் மத்தியில் அறுகிப் போன ஒரு துறை.இதனை வைத்து இக் கதை பிண்ணப்பட்டிருக்கிறது.அலி
ஹஷ்மி எனும் அசாத்திய திறமை கொண்ட சிறுவனுக்கு பயிற்றுவிப்பாராக மாறும் இஷான்> வித்தியாசமான ஒரு கதாபாத்திரம்.ஒரு இளைஞனுக்குரிய எல்லா
இயல்புகளும் வெகு நேர்த்தியாக பொருந்திய இயல்பான ஒரு பயிற்றுவிப்பாளராக இஷான் தன் நடிப்பினால்
நம் முன் நிற்கிறான்.
மற்ற இருவருமே பிரமாதமாக
நடித்திருக்கிறார்கள்.கோவிந்தின் பயந்த சுபாவமும் வெகுளியும் தனிமையிலும் சிரிப்பைத்
தருவன.ஓமி ஒரு சீரியஸான நடிகன்.எதிர்காலத்தில் வில்லன் தோற்றத்தில் வரக்கூடும்.
ஓமியின் மாமாவான இந்துத்துவ
அரசியல் வாதி உலக அரசியல் சோற்றுப் பாணையின் ஒரு சோறுதான்.எல்லா அரசியல் வாதிகளும்
தனது சொந்த லாபத்திற்கு என்னவெல்லாமோ செய்வார்கள் என்பதனை யதார்த்தமாக இங்கு நாம் காண்கிறோம்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை
வைத்து ஓமியை முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வைக்கிறார் ஓமியின் மாமா.பலர் கொல்லப் படுகின்றனர்.ஓமி
அலியின் தந்தை மீது சுடும் துப்பாக்கிச் சூடு தன் நண்பன் இஷானைப் பதம் பார்த்துவிடுகிறது.தன்
உயிர் நண்பனின் கையால் இஷான் இறந்து போகிறான்.
இஷான் ஒரு இந்துவாக இருந்து
முஸ்லிமாகிய அலியையும் அவனது தந்தையையும் காப்பாற்ற முயன்றான்.ஏன் இதை இங்கு சொல்ல
வேண்டும் என்றால்,இந்து முஸ்லிம் பிரச்சினைகள் இதுவரை
பெரும்பாலும் ஒரு பக்கச் சார்பாகவே படங்களில் சொல்லப்படுகின்றன.மணிரத்தினத்தின் 'பம்பாய்' போன்ற படங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.ஆனால் 'காய் போ சே' எந்த சார்பு நிலையும் இல்லாமல் நிஜமான சம்பவங்களைக் கொண்டு படமாக்கப்பட்டிருக்கின்றது.இன்னொரு
இனத்தின் மீது வெறுப்பை இப்படம் ஏற்படுத்தவில்லை என்பது முக்கியமானது.
மூன்று இளைஞர்கள் கூடி
ஒரு தொழில் செய்வதும் நட்புக் கொண்டாடுவதும் ஒரு வித்தியாசமான அனுபவம்.இந்த அனுபவம்
அற்புதமாகக் காட்சியாக்கப்பட்டுள்ளது.இந்த அனுபவத்தை நாம் த்ரீஇடியட்ஸ் திரைப்படத்தில் காண முடியாது.இளைஞர்கள் என்பதை விட மனிதர்களின்
வேறுபாடுகள்,வித்தியாசங்கள்,பலங்கள்,பலவீனங்கள் என மூவரினதும் வேறுபட்ட நிலைகளிலிருந்து ஒரு அற்புதமான உறவை இயக்குனர்
இங்கு கட்டியெழுப்பி இருக்கிறார்.
மொத்தத்தில் 'காய் போ சே' ஒரு வித்தியாசமான முயற்சி.இயல்பான காட்சியமைப்புகள்,மனதை வருடும் பின்னணி இசை,அடுக்கடுக்காக நிகழும் சம்பவங்கள் விறுவிறுப்பாக நம்மை
அழைத்துச் செல்லும் அதே வேளை இஷான்-அலி,கோவிந்த்-வித்யா,ஓமி-அவரது மாமா ஆகியோருக்கிடையில்
தனித்தனியே நடக்கும் உறவு சார்ந்த நிகழ்வுகள்,இவர்கள் அனைவருக்கும் இடையில் நடக்கும் மொத்த நிகழ்வுகள்,என எல்லாமும் தனித்தனி அனுபங்களால் ஆகி ஒரு ரயிலைப் போல
நகர்கின்றது.அந்த அனுபவங்கள் ஏற்படுத்தும் உணர்வு நிலை மட்டும் எமக்குள் தங்கிவிடுகிறது.
நமது எண்ணத்தில் நாம் தூய்மையாக
இருக்கும் போது எமது வாழ்வும் அழகானதாய் மாறிவிடுகின்றது.அலியை சம்பியனாக காணும் நாளுக்காகவே
இஷான் துடித்தான்.இன்னொருவர் மீது கொள்ளும் அலாதியான தூய்மையான பிரியம் அவர்களுக்காக
எதனையும் இழக்கச் செய்துவிடும் என்பதையே இங்கு இஷானின் வாழ்வும் மரணமும் நமக்கு உணர்த்துகிறது.இஷான்
ஓங்கி அடிக்கும் போது உயரப் பறக்கும் பந்தென இஷானின் மனதும் பறந்தது.இத்தகையவர்ளை நாம்
வாழ்நாளில் அரிதாகவே சந்திக்கிறோம்.அத்தகையவர்களது ஆயுளும் அவ்வளவு நீளமாய் இருப்பதில்லை.
இஷான் எனக்குப் பிடித்த
ஒரு கதாபாத்திரம் என் வீதித் தெருவில் நடமாடும் ஒரு இளைஞனாய் அவன் எனக்குள் வலம் வந்தான்.
ஒருவன் ஆயுதம் ஏந்தும்
போது தனக்கு முன்னால் உள்ள அனைவரையும் எதிரியாகவே காண்கிறான்.எதற்காக ஆயுதம் தூக்கினேன்
என்பதனை மறந்துவிடுகிறான்.தான் யாரைச் சுடக் கூடாது என்று நினைத்தானோ அவனையும் சுட
வேண்டிய நிலைக்கு ஆளாகிறான் ஓமி.அவன் எவ்வளவு அழுதாலும் இஷானின் இழப்பை அவனால் ஈடு
செய்ய முடியாது.
இன்னொரு இனத்தின் மீது
கொள்ளும் காழ்ப்புணர்வு அன்பை, தோழமையை, நட்பை,தசாப்தங்களாகத் தொடரும் நல்லுறவை
ஒரு விநாடியில் தகர்த்துவிடுகிறது.அப்போது அடுத்தவனின் உயிரைக் குடிப்பது ஆனந்தமாய்
மாறிவிடுகிறது.குஜராத்தின் இரத்தக் கறை படிந்த இனக்கலவரங்களை படம் நினைவூட்டாமல் இருக்கவில்லை.
'காய் போ சே' என்றைக்குமான தோழமையை, நட்பை, பரிவை, அரவைணப்பை ஒளியின் மொழியால் தனது சட்டகங்களுக்குள் அழுத்தமாய்
பதிவு செய்கிறது. இன்றைய உலகில் இவற்றைக் காப்பாற்றுவதே
மானுடத்தின் மிகப் பெரிய வெற்றி.
விமர்சனம் அருமை! படத்தை பார்த்தேயாக வேண்டும் என்ற எண்ணம் பூத்துவிட்டது... நன்றி சகோ!
ReplyDelete