Thursday, August 22, 2013

அதிகாரம் இரத்தத்தை விடவும் சுவையானது...



பிணங்களை ஒதுக்கி
முடியாத வேளையில்
மிதித்தே முன்னேறினேன்
மனிதம் நசுங்கித் தொலைந்தது.

உலகம் கொலைக் களமாக மாறும் ஒவ்வொரு கணமும் இக்கவிதை எனக்குள் தோன்றி என்னை உணர்விழக்கச் செய்துவிடுகிறது. இலங்கையில் யுத்தம் முடிந்த போது முதன்முதலாக A9 வழியே பயணித்த போது காற்றெல்லாம் அழுகையின் குரல்களும் ஒப்பாரிகளும் என் செவிகளுக்குள் கேட்பது போலத் தோன்றியது.
வெள்ளைப் புறாக்களின் வானில் போரின் புகை மூட்டமும் தெருவெங்கும் குண்டுகளின் வாசனையும் என் தேசத்திலும் குடிகொண்டிருந்த ஒரு காலம் இருந்தது.
மண்ணுக்குள் புதைந்து போன மனித சாட்சியங்கள் நூற்றாண்டுக் கவலைகளை வாழ்க்கையின் வழியெங்கும் விட்டுவிட்டுப் போயினர்.யுகம் யுகமாக அழுவதற்கு அவர்களிடம் கண்ணீர் இருந்தது.துடைப்பதற்குத்தான் கைகள் இருக்கவில்லை.

போர் என்பது எத்தனை துர்ப்பாக்கியம் நிறைந்தது!? இந்த உலகின் மனசாட்சியை அது பிழிந்து கொண்டிருக்கிறது.இதுவரை இவ்வுலகில் எத்தனை பீப்பாய் மனித இரத்தம் ஓட்டப்பட்டிருக்கிறது?


எகிப்தினதும் சிரியாவினதும் பட்டப் பகல் மனிதப் படுகொலைகள் உலகத்தின் மனசாட்சியையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.பல்லாயிரம் உயிர்கள் கொன்று குவிக்கப்பட்டுவிட்டன.நீதி குற்றவாளிக் கூண்டில் இருக்கிறது.

குழந்தைகள்,பெண்கள்,இளைஞர்கள்,முதியவர்கள் என பாகுபாடின்றி சுட்டுக் கொல்லப்படும் இவர்களது காணொளிகள் கண்களை ஈரமாக் குகின்றன. ஹபீபாவினதும் அஸ்மாவினதும் மரணம் என்னை வெகு வாகவே பாதித்தது.


  
தம் வாழ்நாளின் மிகக் குறைந்த ஆயுளை அவர்கள் ஒரு போராட்டத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள். அடக்குமுறைக்கும் அதிகாரத்திற்கும் எதிரான தசாப்த காலப் போராட்டம் ஒரு முக்கிய சந்தியை வந்தடைந்திருக்கிறது.

என்ன விலை கொடுத்தேனும் பறிக்கப்பட்ட ஜனநாயகத்தை, புரட்சியை வென்றெடுக்கும் தீராத போராட்டத்தை என்றாவது ஒரு நாள் அவர்கள் வென்றெடுப்பார்கள். அப்போது இந்த உலகம் நீதிக்குச் செய்த துரோகத்தை யிட்டுத் தலை குனியும்.


எகிப்தினதும் சிரியாவினதும் மனிதப் படுகொலைகளுக்காக இந்த உலகம் ஏன் ஒரு சொட்டுக் கண்ணீரை சிந்தக் கூடாது?

அதிகாரம் இரத்தத்தை விட சுவையானது என்பதை ஸீஸியும் ஏனைய அராஜகவாதிகளும் திரும்பத் திரும்ப உலகிற்கு உணர்த்த முயல்கின்றனர். இது வரலாற்றில் ஒன்றும் முதற்தடவை நடப்பதல்ல.மனிதர்களின் இரத்தம் குடித்த வெறியர்கள் தலைமைகளாகத் திரிந்தவர்கள்தாம்.

வரலாறு ஒன்றையும் மறைப்பதில்லை.நிகழ்வுகளை வேண்டுமானால் மனிதர்கள் மறந்துவிடலாம் ஆனால் வரலாற்றுத் துரோகங்களுக்கான பழியை அது தீரக்காமல் விடுவதில்லை.

"என் தாய்நாடு! என் தாய்நாடு! என் தாய்நாடு!" இது எகிப்தின் தேசிய கீதம்.நாட்டை வளப்படுத்த நினைப்பவர்களை ஸீஸியின் இராணுவம் வன்மையான முறையில் குரூரமாகக் கொலை செய்கிறது.இத்தனை உயிர் களைப் பலி கொடுத்த சாத்வீகப் போராட்டம் ஒரு போதும் தோற்றுப் போகாது.அப்பாவி மனிதர்களின் இரத்தம் உலக ஆடம்பரங்களையும், அதி காரத்தையும் விடப் பெறுமதியானது,பலம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் ஒரு காலம் நிச்சயம் வரத்தான் போகிறது.

அநியாயக்கார்கள்,மனித மிருகங்கள்,தம் ஈனச் செயல்களுக்காக அப்போது வருந்துவார்கள்.மானுட வர்க்கத்தின் மனசாட்சிக்கு முன்னால் அப்போது அவர்கள் படும் இழிவுக்கு அளவே இருக்காது.

ஆயுதங்களை உயிர்களைக் கொண்டு எதிர் கொள்ளும் வீரர்களுக்கு இந்த வானமும் பூமியும் வாழ்த்துத் தெரிவிக்கிறது.எகிப்திய இராணுவத்தால் கோழைத்தனமான தாக்குதல்களையே செய்ய முடிகிறது. உயிரை உள்ளங் கைகளில் வைத்துக் கொள்ளும் துணிச்சல்மிக்கவர்கள்  தம் போராட்டப் பாதையில் சிரித்துக் கொண்டே மரணிக்கின்றனர்.அவர்களுக்கு என் இதயம் கனத்த அஞ்சலிகள்.



 

No comments:

Post a Comment