Monday, May 9, 2011

மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போது...



மிக அதிகமாக  அன்பு செய்யப்படும் போதும்

மிக அதிகமாக  வெறுக்கப்படும் போதும்


நாம் இருக்கிறோம்


உறக்கத்தில் மரிப்பதைப் போல 


மிகச் சிறந்த அன்பு


குருதி சொரியும் வாளைப் போலவும்


மிகக் கொடூரமான வெறுப்பு


ஆக சௌந்தர்யமான  பூக்களின் ஒரு மழையைப்  போலவும்


இருப்பதும்


ஒரு இயல்பு என்பதை


இயல்பாகவே அப்போது நாம்


உணர்வதில்லை


குளிர்கால குளிரைப் போல்


அழுத்தமான தெளிவான


அடையாளங்களுடன்  வரும்


அன்பையும் வெறுப்பையும்


நாம் செயற்கை  என்று


உதாசீனிக்கிறோம்


இரண்டுக்கும்  நியாய அநியாயங்களும்


விதிகளும்


அளிக்கிறோம்


இருட்டில் வெளிச்சத்தைக் காண்கிற ஒரு  பூனையைப் போல்


இரண்டும் 


இயல்பாய்  இருப்பது குறித்து அச்சம் கொள்கின்றன 


கசப்பை அல்லது இனிப்பை 


மட்டுமே 


அருந்தி வாழ்பவர்கள்


ஏதாவதொன்றின்  இன்மையை அல்ல


பேரொளியின்  திகைப்பைத் தான்


அஞ்சுகிறார்கள்


கடவுளும்  சாத்தானும் எங்கிருந்தோ 


ஒரு புள்ளியில் இருந்து வெடித்து தோன்றாதவரை


கடவுளும்  சாத்தானும்


அவர்களுக்கு ஏற்ப 


கசப்பை அல்லது இனிப்பை 


மட்டுமே 


அருந்தி வாழ்பவர்களுக்கு


கசப்பதோ இனிப்பதோ 


இல்லை 


அவர்களை யாரும்


நேசிக்கவோ வெறுக்கவோ


முடிவதில்லை 


வாலை வாய் முழுங்கிய பின்


வால் எங்கிருந்து  தொடங்குகிறது


என்று அவர்களுக்குப்  புரிவதில்லை 


அவர்களால் யாரையும்


நேசிக்கவோ வெறுக்கவோ


முடிவதில்லை 


மிகுந்தோ  மிகாமலோ


              ஆர்.அபிலாஷ்

No comments:

Post a Comment