Thursday, April 21, 2011

எப்போதும் கொடுக்கும் மரம்

ஒரு காலத்தில் மரம் ஒன்று இருந்தது.

அது ஒரு சிறுவனை மிகவும் நேசித்தது.

தினமும் அவன் அந்த மரத்திடம் வருவான்.

இலைகளை சேகரிப்பான்.

அவற்றைக் கொண்டு ஒரு கிரீடம் செய்வான்.

அதை அணிந்துகொண்டு காட்டுக்கு அரசன் நானென ஆடுவான்.

மரத்தின் மீதேறி கிளைகளில் ஊஞ்சலாடுவான்

பழங்களைப் பறித்துத் தின்பான்

அவர்கள் இருவரும் ஒளிந்து விளையாடுவார்கள்



களைத்துப் போகும்போது மரத்தின் நிழலில் படுத்து அவன் உறங்குவான்

 

அந்தச் சிறுவனும் மரத்தை மிகவும் நேசித்தான்


மரம் மிக மகிழ்ச்சி கொண்டது.

காலம் கடந்தது

சிறுவன் வளர்ந்து பெரியவன் ஆனான்

இப்போது அனேக நேரம் மரம் தனிமையில் நின்றது.

அப்போது ஒருநாள் சிறுவன் மரத்திடம் வந்தான்

மரம் அவனிடம் சொன்னது, ‘வா, வந்து என் மீது ஏறு, 

என் கிளைகளில் ஊஞ்சலாடு, என் பழங்களைப் பறித்து உண்,
என் நிழலில் விளையாடு, மகிழ்ச்சியாக இரு’.

‘உன் மீது ஏறி விளையாட நான் இன்னும் சிறு பையன் இல்லையே. நான் எனக்குத் தேவையானவற்றை வாங்கி விளையாட விரும்புகிறேன். எனக்குப் பணம் தேவை.’ என்றான் சிறுவன்.

‘ஆனால் என்னிடம் பணம் இல்லையே. என்னிடம் இலைகளும் பழங்களும் மட்டுமே இருக்கின்றன. என் பழங்களைப் பறித்துச் சென்று நகரத்தில் விற்றால் உனக்குப் பணம் கிடைக்கும். அதை வைத்து மகிழ்ச்சியாக இரு’.

சிறுவன் மரத்திலேறி பழங்களைப் பறித்துச் சென்றான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

அதன் பிறகு சிறுவன் நீண்ட நாட்கள் அந்தப் பக்கம் வரவில்லை. மரம் வருத்தமடைந்தது.

ஒருநாள் சிறுவன் திரும்பவும் வந்தான்.மரம் மகிழ்ச்சியில் ஆடியது. அது சொன்னது
‘வா, வந்து என் மீது ஏறி என் கிளைகளில் ஊஞ்சலாடு, மகிழ்ச்சியாக இரு.’

‘மரங்களில் ஏறி விளையாட எனக்கு நேரமில்லை’ சிறுவன் சொன்னான். ‘என்னை கதகதப்பாக வைத்துக்கொள்ள எனக்கொரு வீடு வேண்டும். எனக்கு மனைவி வேண்டும், குழந்தைகள் வேண்டும் அதன்பொருட்டு எனக்கொரு வீடு தேவை. உன்னால் எனக்கொரு வீட்டைத்தர முடியுமா?’

‘என் கிளைகளை வெட்டி அவற்றைக் கொண்டு வீடொன்றைக் கட்டிக் கொள். நீ மகிழ்ச்சியாக இருப்பாய்.’

சிறுவன் மரத்தின் கிளைகளை வெட்டி வீடு கட்ட எடுத்துச் சென்றான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

அதன் பிறகு சிறுவன் நீண்ட நாட்கள் அந்தப் பக்கம் வரவில்லை. திரும்ப அவன் வந்தபோது மகிழ்ச்சியில் மரத்திற்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.

‘வா, வந்து விளையாடு’ மெல்ல முணுமுணுத்தது மரம்.

‘நான் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும், உன்னால் எனக்கொரு படகைத் தர முடியுமா?’ அவன் கேட்டான்.

‘என் நடு மரத்தை வெட்டி அதிலிருந்து படகொன்றை செய்துகொள், அதில் நீ நீண்ட தூரம் பயணம் செய்யலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்றது மரம்.

அதன்படியே அவன் நடு மரத்தை வெட்டி அதைக் கொண்டு படகொன்றைச் செய்து அதில் பயணம் செய்தான். மரம் மகிழ்ச்சி கொண்டது, ….ஆனால் உண்மையான மகிழ்ச்சி அல்ல அது.

மிக நீண்ட காலம் கழித்து சிறுவன் திரும்பி வந்தான். ‘மன்னிக்க வேண்டும், உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை-என்னிடம் பழங்கள் இல்லை’.

‘பழங்களைத் தின்னுமளவுக்கு என் பற்களுக்கு வலுவில்லை’ சிறுவன் சொன்னான்.

‘என் கிளைகளும் என்னைவிட்டுப் போய்விட்டன, அவற்றில் நீ ஊஞ்சலாட முடியாது.’

‘கிளைகளில் ஊஞ்சலாடும் வயதை நான் கடந்து விட்டேன்.’ என்றான் சிறுவன்.

‘என் நடு மரமும் போய்விட்டது, இனி என் மீது நீ ஏற முடியாது.’ மரம் சொன்னது.

‘நான் மிகவும் களைத்துவிட்டேன், என்னால் மரம் ஏற முடியாது.’ சிறுவன் சொன்னான்.

‘மன்னிக்க வேண்டும், உனக்கு எதையாவது கொடுக்கத்தான் விரும்புகிறேன், ஆனால் என்னிடம் எதுவும் மீதமில்லை.இப்போது நானொரு வெறும் மரத் திண்டு மட்டுமே, என்னை மன்னித்துவிடு.’ என்றது மரம்.

‘எனக்கு இப்போது பெரிதாக எதுவும் தேவையில்லை, அமர்ந்து ஓய்வெடுக்க அமைதியான ஓர் இடம், அவ்வளவுதான். நான்
மிகவும் களைத்துப் போயிருக்கிறேன்’ என்றான் சிறுவன்.

‘நல்லது,’ எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தன்னை நீட்டிக்கொண்டு மரம் சொன்னது, ‘வயதான அடிமரத் திண்டு அமர்ந்து இளைப்பாற உகந்தது. வா வந்து அமர்ந்து இளைப்பாறு.’

சிறுவன் அவ்வாறே செய்தான். மரம் மகிழ்ச்சி கொண்டது.

  
ஷெல் சில்வர்ஸ்டைன். 
தமிழில் : அசதா
from-http://www.sramakrishnan.com

Tuesday, April 19, 2011

சில எளிய கோரிக்கைகள்

 
பறவை என்பது
விடுதலையின் சின்னம் எனில்
நாங்கள்
கேட்கவேயில்லை 



ஒரு முழுப் பறவையை
ஒரு கிளையிலிருந்து
மறுகிளைக்குத் தாவும்
ஒரு பறத்தலின்
கண நேர விடுபடலையே
நாங்கள் கேட்டோம்



மலர் என்பது
அன்பின் சின்னம் எனில்
ஒரு மலரைப் பறித்துக்கொள்ள
நாங்கள் முயற்சிக்கவேயில்லை



அது மலர்ந்த கணத்தின்
நறுமணம் இன்னும் கொஞ்சநேரம்
இந்த அறையில் இருக்கட்டுமே
என்றுதான் முயற்சித்தோம்



தண்ணீர் என்பது
கருணையின் சின்னம் எனில்
நாங்கள் ஒரு நதியில் இறங்க
எண்ணவே இல்லை



அப்போதுதான் பிறந்த சிசுவின்
தொண்டையை நனைக்கும்
முதல் சொட்டு நீரையே
நாங்கள் வேண்டினோம்



வெளிச்சம் என்பது
நம்பிக்கையின் சின்னம் எனில்
நாங்கள் சூரியோதயத்திற்காக
காத்திருக்கவில்லை



எல்லா இரவுகளிலும்
மின்மினிகள் காட்டும் பாதையைத்தான்
தொடர்ந்து போனோம்



முத்தம் என்பது
காதலின் சின்னம் எனில்
நாங்கள் அணைத்துக்கொள்ள
ஆசைப்படவே இல்லை



எதிரெதிர் திசையில் விரையும்
இரண்டு எறும்புகளின்
கண நேர முத்தம்போலாவது
அது இருக்கட்டும் என்றுதான் நினைத்தோம்



கடிகாரம் என்பது
காலத்தின் சின்னம் எனில்
எவ்வளவு நேரம் வீணாகிவிட்டது என்று
நாங்கள் வருத்தப்படவே இல்லை



அந்தக் கடிகாரம் வெறுமனே
இன்னும் எவ்வளவு நேரம்
ஓடிக்கொண்டிருக்கும்
என்பதை அறியவே
நாங்கள் விரும்பினோம்



                       
                       மனுஷ்ய புத்திரன்





Sunday, April 3, 2011

மகிழ்ச்சிக் கிண்ணம்...


2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி மிகுந்த பரபரப்போடு உலகம் முழுதும் ரசிக்கப்பட்டது. இலங்கையில் எல்லா மதத்தவர்களும் இலங்கை அணிக்கு தமது ஆதரவைத் தெரிவித்து மிகுந்த உற்சாகத்தோடு அன்றைய நாளைக் கழித்தனர். சனிக்கிழமை காலையே தேசியக் கொடிகளை வாகனங்களில் ஏந்திக் கொண்டு மக்கள் பயணிக்கலானார்கள்.மாலை நேரமாகும் போது கொழும்பு முழுவதும் தேசியக் கொடிகளுடன் பெருந்திரளான மக்கள் வீதிக்கு வந்தார்கள்.குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் பெரிய ஏற்பாடுகளுடன் அனைவரும் வீதியில் இருந்தார்கள்.

புதுக்கடை, பாபர் வீதி, கொம்பனித்தெரு, மாளிகாவத்தை,போன்ற இடங்களி லும் முஸ்லிம்கள் வாழும் ஏனைய பிரதேசங்களிலும் இலங்கை அணியை ஆதரித்து வெற்றிக்காகக் காத்திருந்தார்கள்.காலிமுகத்திடல் சனத்திரலாள் நிரம்பி வழிந்தது.
 
ஒரு நாட்டின் மொத்த சனமும் தமது நாட்டுக்காக ஒன்று திரண்டதை நேரிலேயே கண்டேன்.நள்ளிரவு வரை மக்களுடனேயே விளையாட்டை ரசித்தேன்.கொண்டாட்டம் என்பது எவ்வளவு குதூகலத்திற்குரியது...
 
e media சகோதரர்களுடன் ஒளிப்பதிவில் நள்ளிரவு வரை இருந்தேன்.ஒரு நாட்டின் சந்தோசத்தையும் கவலையையும் பதிவு செய்ய முடிந்தது.

எல்லோரும் வெற்றிக்காகவே காத்திருந்தார்கள்.இலங்கையணி வென்றி ருந்தால் நேற்றைய இரவு இலங்கை வரலாற்றிலே மகிழ்ச்சி மிக்க இரவாக இருந்திருக்கும். என்ன செய்ய.. யாரும் விளையாடத் தெரியாமல் தோற்ப தில்லையே!

எமது நாட்டிற்கு எப்போதும் நாம் விசுவாசமானவர்கள் என்பதை எமது மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

 நேற்றுப் பிடித்த புகைப்படங்களிலேயே நீங்கள் அதனைக் கண்டு கொள்ளலாம். e media வின் கமெராவுக்குள்ளால் பிடித்த சில புகைப்படங்கள்..