Tuesday, April 19, 2011

சில எளிய கோரிக்கைகள்

 
பறவை என்பது
விடுதலையின் சின்னம் எனில்
நாங்கள்
கேட்கவேயில்லை 



ஒரு முழுப் பறவையை
ஒரு கிளையிலிருந்து
மறுகிளைக்குத் தாவும்
ஒரு பறத்தலின்
கண நேர விடுபடலையே
நாங்கள் கேட்டோம்



மலர் என்பது
அன்பின் சின்னம் எனில்
ஒரு மலரைப் பறித்துக்கொள்ள
நாங்கள் முயற்சிக்கவேயில்லை



அது மலர்ந்த கணத்தின்
நறுமணம் இன்னும் கொஞ்சநேரம்
இந்த அறையில் இருக்கட்டுமே
என்றுதான் முயற்சித்தோம்



தண்ணீர் என்பது
கருணையின் சின்னம் எனில்
நாங்கள் ஒரு நதியில் இறங்க
எண்ணவே இல்லை



அப்போதுதான் பிறந்த சிசுவின்
தொண்டையை நனைக்கும்
முதல் சொட்டு நீரையே
நாங்கள் வேண்டினோம்



வெளிச்சம் என்பது
நம்பிக்கையின் சின்னம் எனில்
நாங்கள் சூரியோதயத்திற்காக
காத்திருக்கவில்லை



எல்லா இரவுகளிலும்
மின்மினிகள் காட்டும் பாதையைத்தான்
தொடர்ந்து போனோம்



முத்தம் என்பது
காதலின் சின்னம் எனில்
நாங்கள் அணைத்துக்கொள்ள
ஆசைப்படவே இல்லை



எதிரெதிர் திசையில் விரையும்
இரண்டு எறும்புகளின்
கண நேர முத்தம்போலாவது
அது இருக்கட்டும் என்றுதான் நினைத்தோம்



கடிகாரம் என்பது
காலத்தின் சின்னம் எனில்
எவ்வளவு நேரம் வீணாகிவிட்டது என்று
நாங்கள் வருத்தப்படவே இல்லை



அந்தக் கடிகாரம் வெறுமனே
இன்னும் எவ்வளவு நேரம்
ஓடிக்கொண்டிருக்கும்
என்பதை அறியவே
நாங்கள் விரும்பினோம்



                       
                       மனுஷ்ய புத்திரன்





No comments:

Post a Comment