" எப்போதும் நிச்சயமின்மைகளின் கதவுகளை தட்டிக் கொண் டிருக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் மனித உறவுகளை ஒரு கண்ணாடிச் சமவெளியில் எதிர்கொள்கின்றன. இடை விடாமல் கலைந்து அலைவுறும் பிம்பங்களும் ஆழம் காணமுடியாத நிழல்களும் அச்சம வெளியினைக் கடந்த வண்ணம் இருக்கின்றன. அன்பின் நீர்ப்பரப்பிற்குள் காற்றைத் தேடி விரையும் மீன்களின் கூட்டமாய் இச்சொற்கள் முடிவற்ற சலனங்களை உருவாக்குகின்றன."
அண்மைக் காலமாக மனுஷ்யபுத்திரனின் கவிதைகளையே அதிகம் படித்து வருகிறேன். ஒரு இனம் புரியாத ஈர்ப்பு அவரது கவிதைகளிலே இருக்கிறது. அவை உண்டு பண்னும் வாதைகளும் தரும் இன்பமும் அலாதியானது.
அவரது ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ எனும் தொகுதி அற்புதமான கவிதைகளை உள்ளடக்கியிருக்கின்றன.
இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள்…
கடவுளுடன் பிரார்த்தித்தல்
இன்று நீ
கைவிடப்பட்டிருக்கிறாய்
அல்லது அது
உன்னைப் போன்ற
யாரோ ஒருவராகவும் இருக்கலாம்
இது உனக்கு நிகழ்வது
எத்தனையாவது முறை
என்று நீ எண்ண வேண்டியதில்லை
ஒரு குழந்தையாக
மீண்டும் பிறப்பதுபோல
ஒரு துரோகத்திலிருந்து
அல்லது
ஒரு கைவிடப்படுதலிருந்து
நீ புத்தம் புதியதாய்
உன் பூமிக்குத் திரும்புகிறாய்
நீ கைவிடப்படும்போதுதான்
உன் பிரியத்தின் கனல் எரியத் தொடங்குகிறது
பிரியமற்றுக் குளிர்ந்த ஒவ்வொரு கரத்தையும்
அந்தக் கனல் வெதுவெதுப்பாக்குகிறது
கைவிடப்படும்போது
நீ தனியாக இருப்பதாக உணர்கிறாய்
ஆனால் நாம் தனியர்கள் அல்ல
இந்த உலகம்
கைவிடப்பட்ட பெண்கள்
கைவிடப்பட்ட குழந்தைகள்
கைவிடப்பட்ட முதியவர்கள்
கைவிடப்பட்ட குடிகாரர்கள்
கைவிடப்பட்ட பைத்தியங்கள்
கைவிடப்பட்ட உபயோகமற்றவர்கள்
கைவிடப்பட்ட நோயாளிகள்
கைவிடப்பட்ட உடல் சிதைக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட தண்டிக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்
கைவிடப்பட்ட கிறிஸ்துகளின்
உலகம்
அரவணைக்கப்பட்டவர்களைக் காட்டிலும்
பிரமாண்டமாக வளர்ந்துவிட்டது
கைவிடப்பட்டவர்களின் சமூகம்
நாம் பயப்பட ஒன்றுமில்லை
கைவிட்டவர்களை
நாம் தண்டிக்கவோ
மன்னிக்கவோ ஒன்றுமே இல்லை
மாறாக கைவிடப்படுதல் துக்கமல்ல
ஓரு நீண்ட கனவு தரும் களைப்பு
ஒரு பழக்கத்தை விட்டுவிடும் சமன்குலைவு
ஒருவர் கைவிடும்போது
கடவுள் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்
கைவிடப்பட்ட எல்லோருக்காகவும்
அவர் முடிவில்லாத பிரார்த்தனைகளைச்
செய்துகொண்டிருக்கிறார்
நீ கைவிடப்படும்போது மட்டுமே
கடவுளோடு சேர்ந்து பிரார்த்திக்கும்
மகத்தான வேளை
உனக்குக் கிடைக்கிறது
No comments:
Post a Comment