Wednesday, May 27, 2015

வளவையின் மடியிலே:ஒரு சிறிய குறிப்பு

மானுடப் பெறுமானங்களுக்காக நேர்மையுடனும் துணிச்சலுடனும் இயங்கிய ஒரு கலைஞர் எம்.எச்.எம் ஷம்ஸ். தென்னிலங்கை மாத்தறை மாவட்டத்திலுள்ள திக்குவல்லை எனும் கிராமத்தில் 1940.மார்ச் 17 இல் பிறந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று இலங்கை ஆசிரிய சேவையில் சேர்ந்த இவர் பல உயர்நிலைப் பள்ளிக்கூடங்களிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி இறுதியாக மதுராபுரி அஸ்ஸபா முஸ்லிம் பாடசாலையில் தமிழாசிரியராக இருந்து 1992 ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் இலங்கையின் நாளேடான தினகரன் ஆசிரிய பீடத்தில் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
ஷம்ஸ் அவர்கள் சிறுகதை,நாவல்,கவிதை,பாடல்,இசை,மொழிபெயர்ப்பு என பல துறைகளுடன் இயங்கியவர்.அவரது 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வளவையின் மடியிலே அண்மையில் வெளிவந்துள்ளது.அவர் மரணித்து 13 ஆண்டுகளின் பின்னர் இத்தொகுதி வெளிவந்துள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Monday, May 11, 2015

இன்னும் கொடுக்காத பரிசு…


“கொடுப்பவரின் விருப்பமும் பெற்றுக் கொள்பவரின் விருப்பமும் இணையும் ஒரு அபூர்வமான தருணத்தில்தான் ஒரு உண்மையான பரிசு உருவாகிறது.வாழ்க்கையில் எல்லா பரிசுகளுக்கும் ஒரு விலை இருக்கிறது.அது கடையில் செலுத்தப்படும் விலை மட்டுமல்ல:நமது வாழ்க்கையில் செலுத்தும் விலை.நமது இதயத்தின் ஆழத்தில் செலுத்தும் விலை அது.“ மனுஷ்யபுத்திரன்.
 
பரிசுகள் கொடுப்பதும் எடுப்பதும் ஒரு சம்பிரதாயம் மட்டுமல்ல அது ஒரு வாழ்முறை.உறவுகளை அன்பினால் பிணைக்கும் பெருங் கருணை அது. கடந்த காலத்தின் நினைவுகள் போல பரிசுகளும் வாழ்க்கையின் சுவடுகளாக இதயத்தில் தங்கிவிடுகின்றன.