Monday, May 11, 2015

இன்னும் கொடுக்காத பரிசு…


“கொடுப்பவரின் விருப்பமும் பெற்றுக் கொள்பவரின் விருப்பமும் இணையும் ஒரு அபூர்வமான தருணத்தில்தான் ஒரு உண்மையான பரிசு உருவாகிறது.வாழ்க்கையில் எல்லா பரிசுகளுக்கும் ஒரு விலை இருக்கிறது.அது கடையில் செலுத்தப்படும் விலை மட்டுமல்ல:நமது வாழ்க்கையில் செலுத்தும் விலை.நமது இதயத்தின் ஆழத்தில் செலுத்தும் விலை அது.“ மனுஷ்யபுத்திரன்.
 
பரிசுகள் கொடுப்பதும் எடுப்பதும் ஒரு சம்பிரதாயம் மட்டுமல்ல அது ஒரு வாழ்முறை.உறவுகளை அன்பினால் பிணைக்கும் பெருங் கருணை அது. கடந்த காலத்தின் நினைவுகள் போல பரிசுகளும் வாழ்க்கையின் சுவடுகளாக இதயத்தில் தங்கிவிடுகின்றன.


வாழ்க்கையில் முதலாவது கிடைத்த பரிசை நீங்கள் நினைத்துப் பாருங்கள்.அதைக் கொடுத்தவர் யார்,என்ன கொடுத்தார் என்பதெல்லாம் நினைக்க நினைக்க சுவாரஷ்யம் குறையாக ஒரு விருப்பமாக நமக்கு முன்னால் தோன்றும்.அது ஒரு பொம்மையாக,விளையாட்டுப் பொருளாக, ஆடையாக இருக்கலாம்.அதைத் தந்தவரது அன்பு நிச்சயம் அப் பொருளோடு முடிவடைந்துவிடுவதில்லை.அப்பொருள் இல்லாவிட்டாலும் அதனைத் தருவதற்குக் காரணமாக இருந்த அன்பு நம்மைச் சுற்றியே இருக்கும்.
ஒரு மனிதன் பிறக்கும் போதே  அவனுக்குப் பரிசுகள் கிடைக்க ஆரம்பித்து விடுகின்றன. ஆனால் அவை நம் நினைவுகளில் இருப்பதே இல்லை.அப் பரிசுகள் கிடைப்பவரை விட அவற்றைப் பார்ப்பவர்களையே மகிழ்ச்சிப்படுத்துகின்றன. வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் பரிசுகள் பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

உலகில் அன்றாடம் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டே வளர்கின்றன. ஒவ்வொருவரும் அக் குழந்தையின் மீது வைத்திருக்கும் அன்பின் அளவுக்கேற்ப பரிசுகளைத் தெரிவு செய்கிறார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொடுக்கும் பரிசை அன்புதான் அளவிடுகிறது.நாம் அடுத்தவர் மீது கொண்டிருக்கும் அன்பினை மிகச் சரியாக வெளிப்படுத்தும் அளவுக்குப் பரிசைத் தெரிவு செய்வது இலகுவான காரியமல்ல.பரிசுக் கடைகளில் மிகுந்த நேரத்தை செலவளித்தே  அதைக் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது.

நிகழ்வுகளை மையப்படுத்தியே நாம் பெரும்பாலும் பரிசு கொடுக்கப் பழகியிருக்கிறோம்.அது ஒரு சம்பிரதாயமாகவே எமக்கு மத்தியில் இருக்கிறது.திருமண வீடொன்றுக்கு தேநீர்க் கோப்பைகளும் கைக்கடிகாரங்களும் வந்து நிறைகின்றன.அல்லது ஒரு குழந்தை பிறந்தால் ஆசிரியர் தினம் வந்தால்,சிறுவர் தினம் என்றால் பரிசுகள் வழங்குகிறோம்.அது நாம் அடுத்தவர் மீது கொண்டுள்ள அன்பின் அடையாளமா அல்லது சம்பிரதாயத்தின் வெளிப்பாடா என்று தெரியவில்லை.

தனது தாயை,தந்தையை,பிள்ளைகளை அல்லது மனைவியைப் பார்த்து ஒரு சிறிய பரிசை அல்லது ஒரு மலர்ச் சென்டைக் கொடுத்து நான் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்ல நாம் தயங்குகிறோம். நிகழ்வுகளுக்கு அப்பால் நாம் அடுத்தவர் மீது வைத்திருக்கும் அன்பை,பிரியத்தை வெளிப்படுத்த, உறவுகளை இன்னும் நெருக்கமாக வைத்துக் கொள்ள பரிசுகளே துணை புரிவதாகத் தோன்றுகிறது.நாம் மனதால் விரும்பிக் கொடுக்கும் ஒரு பரிசு இதயத்தின் ஆழத்திலிருந்து அன்பை ஊற்றெடுக்கச் செய்கிறது.
நாம் கொடுக்கும் எளிய பரிசு எம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை அடுத்தவர் மனதில் ஏற்படுத்திவிடுகிறது. நமக்கென்று ஒரு நிரந்தர இடம் அவரது உள்ளத்தில் உருவாகிவிடுகிறது. உறவுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை அது சற்றே குறைத்துவிடுகிறது.


ஒரு சிறிய பரிசினால் சந்தோசம் கொள்ளும் மனிதர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள்.அதே போல பரிசுகளே கிடைக்காத மனிதர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படியான ஒரு மனிதருக்குக் கிடைக்கும் ஒரு பெறுமதியான பரிசு மகிழ்ச்சியின் சிகரத்தில் அவரை கொண்டு போய் நிறுத்துகிறது.அப்படியான ஒருவருக்குக் கொடுக்கும் பரிசு மகத்தான ஒரு பரிசாக எம் வாழ்நாளில் தங்கிவிடுகிறது.

பரிசுகள் எமக்குக் கிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அடுத்தவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியான சுகம் கொண்டது.நமது சக்தியையும் மீறி அடுத்தவர்களுக்குக் கொடுப்பதும் அடுத்தவர்கள் எமக்குக் கொடுப்பதும் ஆழ்ந்த நெகிழ்ச்சியை உண்டுபன்னக் கூடியவை.

எமக்கு மிகத் தேவையான,எப்படியாவது வாங்கியாக வேண்டும் என்ற வேட்கையில் நாம் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் பரிசாகக் கிடைத்தால் அந்த உணர்ச்சி ஏற்படுத்தும் மகிழ்வுக்கு அளவேயில்லை. அப்படியான ஒரு பரிசைத் தருபவரை நாம் வாழ்க்கையில் மறப்பதேயில்லை.நம் ஒவ்வொரு உணர்ச்சியிலும் அவர் கலந்தே இருப்பார்.நம் பிரார்த்தனை அவரை நினைவு வரும் பொழுதெல்லாம் சேர்த்துக் கொள்கிறது.

ஒரு உண்மையான அன்பை,உறவை,கௌரவத்தை ஒரு பொருளின் வழியே நாம் தெரியப்படுத்துவது மிகுந்த சிரமம் வாய்ந்ததுதான். இருந்தாலும் நாம் ஒரு பரிசினால் அதை வெளிப்படுத்த விரும்புகிறோம். வார்த்தைகளை, நடத்தைகளை விட பொருட்களே அதனைச் சரியாகச் செய்கின்றன எனத் தோன்றுகிறது.

நாம் நேசிப்பவர்களுக்கு இதுவரை என்ன பரிசுகளைக் கொடுத்தி ருக்கிறோம்,எமக்கு எத்தனை பரிசுகள் கிடைத்திருக்கின்றன எனச் சிந்திப்பதன் வழியே நாம் கொண்டிருக்கும் அன்பின்,உறவின் ஆழத்தை ஒருமுறை அளவிட்டுக் கொள்ளலாம்.சம்பிரதாயத்திற்காக அல்லாமல் நாமாகவே விரும்பி அடுத்தவருக்குக் கொடுத்த பரிசையே உண்மையான பரிசாக அடையாளப்படுத்தலாம்.

பரிசுகளின் வழியே அன்பே பரிமாறப்படுகிறது.ஒரு பரிசை நாம் மறைத்தே கொடுக்கிறோம்.அதனைப் பிரித்துப் பார்க்கும் தருணமானது எதிர்பார்ப்புக்களும் பதட்டமும் நிறைந்தது.பொதிக்குள் இருப்பது அன்பின் உருவமாக நமக்கு முன்னால் எழுந்து நிற்கிறது.

கிடைக்கின்ற எல்லாப் பரிசுகளுமே நம்மை மகிழ்விப்பதில்லை. தேவையற்ற ஒரு பொருள் எமக்குக் கிடைக்கும் போது அது நம்மைப் பரவசப்படுத் துவதில்லை.அதனைப் பாதுகாக்கவும் நாம் விரும்புவதில்லை. மிகுந்த பிரியத்தோடு வழங்கப்படும் சிறிய ஒரு பொருளும் காலாகாலம் நினைவுகளில் தங்கிவிடும் சக்தி கொண்டது.

சேவை நலனைப் பாராட்டி வழங்கப்படும் நினைவுப் பரிசுகள் பெரும்பாலும் சின்னங்களாகவே இருக்கின்றன.சிலருடைய வீடுகளில் சின்னங்கள் நிரம்பி வழிவதனை நான் பார்த்திருக்கிறேன். ஒருவருக்கு அத்தனை சின்னங்கள் எதற்கு என்று வியப்பாக இருக்கிறது. சிலரது சேவைகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்படுவதேயில்லை. அப்படிக் கண்டுகொள்ளப்படாத மனிதர்கள் பலர் உலகில் இருக்கிறார்கள். சமூகத்திற்காக உண்மையாக உழைக்கின்ற மனிதர்களை நாம் தேடி கௌரவிக்க வேண்டும். வாழும் காலத்தில் பரிசுகளை வழங்கி அவர்களை கௌரவிக்காமல் அவர்களது மரணத்தின் பின் கௌரவித்து என்ன புண்ணியம் இருக்கப் போகிறது? 

பரிசுகள் எனும் போது நாம் பொருட்களையே நினைக்கிறோம். பொருட்களைத் தாண்டிய உயர்வான பரிசுகளும் இருக்கின்றன.நாம் அடுத்தவர்களுக்காகச் செய்யும் உதவிகளும் பரிசுகள்தான். பிரதிஉபகாரத்தை எதிர்பார்க்காமல் சுயநலமில்லாமல் நாம் அடுத்தவர்களுக்கும் அடுத்தவர்கள் எமக்குச் செய்யும் உதவிகளும் நினைவுகளில் தங்கும் பரிசுகள்தான்.

அடுத்தவனின் முதுகில் குத்துவதற்கே காத்திருக்கும் உலகில் அடுத்தவன் முதுகைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு வார்த்தைக்கு ஈடாக ஒரு பரிசை நாம் கண்டு கொள்ள முடியாது.கவலைகளால் நிரம்பிக் காலம் கடத்தும் ஒருவருக்கு மகிழ்ச்சியைப் பரிசளிக்க ஏன் எங்களால் முடிவதில்லை.

போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெறுவதன் மூலமும் பரிசுகள் கிடைக்கின்றன.ஒவ்வொருவரதும் வாழ்க்கையில் சான்றிதழ்கள், கிண்ணங்கள்,பதக்கங்கள் என எத்தனையோ பரிசுகள் நிச்சயம் இருக்கும்.அவற்றைப் பெற்ற தருணங்கள் வாழ்க்கையில் முக்கிய சந்தர்ப்பங்களாகும்.ஆனால் பின்நாட்களில் அவை எந்த உபயோகமும் அற்று தேங்கிக் கிடக்கின்றன.

பரிசுகளைப் பறிமாறிக் கொள்ளும் ஒரு கலாசாரம் ஏன் எமக்கு மத்தியில் ஊக்குவிக்கப்படுவதில்லை?கணவன் மனைவி,பெற்றோர் பிள்ளைகள், சகோதர சகோதரிகள்,ஆசிரியர் மாணவர்,நண்பர்கள், அலுவலகப் பணியாளர்கள் என நாம் கொள்ளும் உறவுகளில் இதனை நாம் நடைமுறைப்படுத்தலாம்.

பரிசு எனும் போது தேநீர்க் கோப்பை,பீங்கான்,கரண்டி என்பவற்றுக்கு அப்பால் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கும் ஒரு பழக்கத்தை இளைய தலைமுறை மீது நாம் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

உறவுகளை நீடிக்கவும் அவற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் இருவருக்கிடையிலுள்ள அன்பு அதிகரிக்கவும் நாம் கட்டாயம் பரிசுகளை வழங்கும் ஒரு வழக்கத்தை உருவாக்க வேன்டியிருக்கிறது. சம்பிரதாயத்திற்கு வழங்கப்படும் பரிசுகளாக அவை இல்லாமல் உண்மையான உறவின் விருப்பத்தின் மேல் எழும் ஒன்றாகவும் அடுத்தவரின் தேவையை அறிந்து அப் பரிசுகள் வழங்கப்படுமாயின் அப் பரிசிற்கான அர்த்தம் மெய்ப்படும்.

ஒரு பரிசைக் கொடுக்கும் போது நாம் அடுத்தவரால் விரும்பப்படுகிறோம். எமக்குக் கிடைக்கும் போது கொடுத்தவரை நாம் விரும்புகிறோம்.மனித உறவின் நீட்சிக்கு அது துணை செய்கிறது. ஒரு பரிசு என்பது வெறுமனே பொருள் அல்ல.அது அன்பை, காதலை, மரியாதையை சுமந்து வரும் ஒன்று. நாம் விரும்பப்படுகிறோம் என்பதற்கான அடையாளமே அது.




No comments:

Post a Comment