ஒரு நிகழ்ச்சிக்காக எனது விரிவுரையாளர் ஒருவரை அழைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் “தோன்ற மறுத்த தெய்வம்“ புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.மனுஷ்யபுத்திரன் எனும் எழுத்தாளர் அவருக்குப் பரிச்சயம் இல்லை.ஒரு சிறிய அறிமுகம் நான் சொல்ல வேண்டியிருந்தது. மூன்று மணித்தியாலப் பயணத்தில் பெரும் பகுதியில் அவர் நூலை வாசித்துக் கொண்டு வந்தார்.மொழியின் வீச்சும் வேகமும் அபாரம் என்றார்.
எனது 18 ஆவது வயதின் மத்தியில் மனுஷ்ய புத்திரன் எனும் பெயர் எனக்கு அறிமுகமானது.மிகவும் ஈர்த்துப் போன கவித்துவப் பெயர் அது.கடந்த பத்து வருடங்களாக அவரது எழுத்தையும் புத்தகங்களையும் சலிக்காமல் படித்து வருகிறேன்.சமூக வலைத்தளங்களின் பிரவேசம் எழுத்தாளனுடன் நேரடியாக ஊடாடும் வாய்ப்பினைத் தந்திருக்கிறது. தனக்குப் பிடித்த ஒரு எழுத்தாளருடன் நட்புக் கொள்வது அலாதியான சுவை கொண்டது.
மனுஷ்ய புத்திரனின் கவிதைகளையே ஆரம்பத்தில் தேடித் தேடி விடாமல் வாசித்தேன்.அவரது கவிதை ஆக்கம் தனித்த அனுபவத்தைத் தருபவை.என் 12 வயதுத் தங்கையும் அவரது கவிதையால் தாக்கமடைந்தாள்.சில கவிதைகளை மனனம் செய்தாள்.இதனை அவருக்குத் தெரியப்படுத்தினேன். மகிழ்ச்சியடைந்தார்.தன் வாசகனின் குரலுக்கு செவிசாய்க்கும் இத்தகைய எழுத்தாளர்களின் அன்பு, வார்த்தைகளுக்குள் அடங்காதவை.
இந்தியாவில் வெளிவருகின்ற எல்லா இதழ்களும் இலங்கையில் உரிய நேரத்திற்குக் கிடைப்பதில்லை.சற்று காலம் தாழ்த்தித்தான் கைகளில் வந்து சேர்கின்றன.புத்தகங்களும் அப்படித்தான்.இருந்தாலும் இங்குள்ள விலையில் எல்லாவற்றையும் வாங்குவதும் சிரமமான காரியம்தான்.
எமக்குக் கிடைக்கும் அல்லது வாங்கும் காலத்திற்கேற்பவே நாம் வாசிக்கிறோம்.
மனுஷ்ய புத்திரனின் “தோன்ற மறுத்த தெய்வம்“ கட்டுரைத் தொகுதி கடந்த வருடம் டிசம்பரில் வெளிவந்தது.
‘மனுஷ்ய புத்திரனால்
பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல்
பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை.
காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி
ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என
வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
கமல்ஹாசன், ரஜினி காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற
வெகுசன ஆளுமைகளுடன் சுஜாதா, சுந்தர
ராமசாமி, நகுலன் போன்ற படைப்பாளிகள் குறித்தும்
ஆழமான மனப்பதிவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள்
முன்வைக்கின்றன.’
கடந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளில் எழுதிய 40 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதியே “தோன்ற மறுத்த தெய்வம்“.
எழுத்தாளன் என்பவன் சமூகப் பொறுப்பு நிறைந்தவன்.ஒவ்வொரு காலகட்டகட்டத்தின் நிகழ்வுகளையும் மிகுந்த நேர்மையுடன் பதிவு செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது.அப்பதிவு வராற்றின் பிரதியாக மாறுகின்றது.
இன்றைய நவீன ஊடகங்கள் அதற்கான வாய்ப்பைத் தோற்றுவித்துள்ளது. எழுத்துக்கும் மறுமொழிக்கும் இடையில் இருந்த இடைவெளியைக் குறைத்து ஒவ்வொரு மனிதனுக்கும் தன் கருத்தைப் பதிய ஒரு வெளியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
எழுத்தாளன் ஒருபோதும் சுயலாபங்களின் மறை கரங்களிலும் அதன் அடர்ந்த இருள்காடுகளிலும் சிக்கிவிடக் கூடாது.பக்கச்சார்பில்லாமல் நடுநிலையோடு தன் வலிமை மிக்க மொழியில் அதனைப் பதிவு செய்வதே அவனது வரலாற்றுக் கடமை.
தோன்ற மறுத்த தெய்வம் கடந்த காலத்தின் மீதான ஓரு பதிவாகவே இருக்கிறது.சமூகம்,அரசியல்,ஊடகம்,ஆளுமைகள்,அஞ்சலிகள் என இத் தொகுதி பல்வேறு சமகால விசயங்களைப் பேசுகிறது.
சமகாலத்தில் தம் வாழ்க்கை வெளியில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து தாம் வெளியிட்ட அபிப்பிராயங்களின் வெளிப்பாடே இந் நூல்.
ஒரு எழுத்தாளனுக்கு,கலைஞனுக்கு சமூக விவகாரங்களில் தனக்கென ஒரு அபிப்பிராயம் இருக்க வேண்டும் என்கிறார் நூலாசியர்.
“கலைஞர்களும் எழுத்தாளர்களும் பொதுவிவகாரங்களில் பங்கேற்பவர்களாக,அவற்றிற்கு எதிர்வினையாற்றுபவர்களாக, கருத்துருவாக்கத்தில் ஈடுபடுபவர்களாக இல்லை என்பது ஒரு சமூகத்தை முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் கையில் ஒப்படைப்பதாகும்.சிவில் சமூகத்தின் உணர்வுகளை கலைஞர்களும் எழுத்தாளர்களும் மடடுமே பிரதிநிதித்துவம் செய்ய இயலும்.“
காதல்-நட்பு,அரசியல்-சமூகம்,ஊடகம்-பதிப்புலகம்,ஆளுமைகள்-அஞ்சலிகள்,குழந்தைமை-குழந்தைகள். ஆகிய உப பிரிவுகளில் இக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
எல்லாக் கட்டுரைகளும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. அரசியல், பதிப்புலகம், ஆளுமைகள், குழந்தைகள் குறித்து எழுதியுள்ள பதிவுகளும் அபிப்பிராயங்களும் என்னை வெகுவாகக் கவர்ந்தவை.மனுஷ்ய புத்திரன் அவர்களின் எழுத்து நடை கவிதையை விட அடர்த்தியானதாகவே தெரிகிறது.அந்த எழுத்து வீதியில் இடராமல் பயணிக்க முடியுமாய் இருக்கிறது.கண்களை மூட வைக்காத எழுத்துக்களாகவே அவை இருக்கின்றன.சமூக அரசியல் பிரச்சினைகளின் பிம்பங்கள் வரலாற்றின் வேர்களைத் தொட்டபடி நம் கண்களுக்கு முன்னால் நிறுத்துகிறார் ஆசிரியர்.
உரிமை மீறல்கள்,இன்னொரு மனிதன் அல்லது இனத்தின் மீதான குரூரப் பலிவாங்கல்,பெரும்பான்மை ஆதிக்கத்தின் அத்துமீறல்கள், கொலைகள்,ஊழல்,அரசியல் பழிவாங்கள்,சாதிப் பிரச்சினைகள்,சூழல் பாதிப்புகள்,பாலியல் சீர்கேடுகள் என இன்னபிற அம்சங்கள் இன்றைய உலகில் ஊர்கள்தோறும் நடந்த வண்ணமே இருக்கின்றன.
ஒரு கலைஞன், எழுத்தாளன் மானுடத்தின் பிரதிநிதியாகவே இருக்கிறான். மானுடத்தின் மீது படியும் கறைகளைத் துடைப்பது அவனுக்கு இருக்கின்ற பொறுப்பு.அந்தவகையில் அரசியல் சமூகம் குறித்த பதிவுகள் நோக்கத்தக்கது.
ஊடகம் பதிப்புலகம் சார்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் எனது தனிப்பட்ட அக்கறைக்கு முக்கியமாகப்படுகின்ற நுணுக்கமான பதிவுகள்.இன்றைய தமிழ்ப்பதிப்புலகம் எதிர் கொள்கின்ற சவால்கள்,நிரப்ப வேண்டிய இடைவெளிகள் குறித்தெல்லாம் ஆழமான விளக்கங்களை அவை முன்வைக்கின்றன. தொலைபேசி, தொலைக்காட்சி, சிற்றிதழ்கள், இணையம் என விரியும் ஊடகப் பரப்பெல்லைகளின் வராலாற்று நீரோட்டத்தில் அவை கண்ட மாறுதல்களை,இடைவெளிகளை இலகுவாகப் புரிந்து கொள்ள,அதன் தற்கால நிலைவரங்களை அறிய இப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.ஊடக உலகின் தார்மீக அறங்களைப் பாதுகாக்கும் முனைப்பை இப்பதிவுகள் வெளிக்காட்டுகின்றன.
ஆளுமைகள்-அஞ்சலிகள் குறித்த பதிவுகள் சோகத்தில் தோய்த்து எழுதப்பட்டவை.ஆளுமைகளைப் பற்றிய நேர்மையான மதிப்பீடுகள் இப் பதிவுகளில் இருக்கின்றன.நூலாசியரைப் பாதித்த சுஜாதா குறித்த பதிவுகள் அருமையானவை.நம்காலத்தில் நம் கண்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ஒருவரைப் பற்றிய குறிப்பைப் படிப்பது வரலாற்றைப் படிப்பதைவிட சுவாரஷ்யமானது.ஒரு மகத்தான கலைஞனின் வாழ்வியல்ப் பாதை நமக்கு நிறைய பாடங்களைத் தரக்கூடியது.
“பல எழுத்தாளர்கள்
இன்றும் சுஜாதாவின் பிம்பத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் சுஜாதா தன்
எழுத்துக்களின் வழியே அடைந்த மகத்தான இடத்தை அவரது பிரபலமாக மட்டுமே புரிந்து
கொள்ள விரும்பினார்கள்.அந்தப் புகழை வெல்வது அல்லது புறக்கணிப்பதுதான் சுஜாதாவைப்
பற்றிய தங்கள் மதிப்பீடாக்க் கொண்டு இன்றும் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்“
“சுஜாதாவை எத்தனையோமுறை
சந்தித்திருக்கிறேன்.எனக்குத் தெரியாமல் அவர் எனது பாதைகளை சுலபமாக்கினார்.நான்
கேட்காமலேயே அனாவசியமான போராட்டங்களிலிருந்து அவர் என்னை விடுவித்தார்.“
சுந்தர ராமசாமி பற்றிய
பாதைகள் மயங்கும் அந்தி ஒரு செறிவான பதிவு.தான் நெருக்கமாகப் பழகி பின்நாட்களில்
விலகல்களோடு வாழ்ந்த ஒரு அனுபவத்தைத் தாண்டி அன்பின் பிரகாசத்தை இருட்குகைகளில்
மறைக்காமல் இருக்கிறது அப் பதிவு.
குழந்தைமை பற்றிய
எழுத்துக்கள் கவிதையின் ஏரியில் வார்த்தைகளை நனைத்து எழுதிய அனுபவம்.குழந்தைகள்
இலக்கியம் குறித்து நூலாசிரியர் முன்வைக்கும் கருத்துக்கள் சமூகத்தின் அக்கறைக்கு
உரியவை. எதிர்காலத்தின் வாரிசுகளை வாசிப்பினடியாக வளர்த்தெடுக்க வேண்டுமாயின்
குழந்தைகள் இலக்கியத்தில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். அதனை இக்கட்டுரைகள்
வலியுறுத்துகின்றன.
நூலைக் கடந்து வரும் போதெல்லாம்
சுவாரஷ்யம் மிகுந்த ஏதோ ஒன்று நம்மைப் பின்தொடர்கிறது.ஒவ்வொரு கட்டுரையும் மனதை
விட்டகலாத நினைவுகளாய் உள்ளேயே தங்கிவிடுகிறது.சில கட்டுரைகளை மீண்டும் மீண்டும்
படிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுகிறது.நம்மைப் படிக்க வைக்கிறது.
இதனை வாசித்து
முடிக்கும் ஒருவர் தமக்கிருக்கும் அபிப்பிராயங்களைக் கொண்டு தேவையான
சந்தர்ப்பங்களில் குறுக்கீடுகளைச் செய்யவும் அதனைப் பதியவும் தயங்க மாட்டார்
என்பது புரிகிறது.எழுத்தினால் ஒருவர் கொள்ளும் ஆசுவாசத்தை விட அதன் போராட்டமே
முக்கியமானது.பெயருக்காகவும் புகழுக்காகவும் தன்னைத் திரும்பிப் பார்க்க
வைப்பதற்காகவும் எழுத்தாளனோ கலைஞனோ செயற்படக் கூடாது. எழுத்தாளன்,கலைஞன் என்பவன்
தன்னோடு மட்டும் சுருங்கிய வாழ்வை வாழாது
மானுடத்தின் மீட்சிக்காவும் வாழ வேண்டும்.அது எப்படி என்பதற்கு இந்நூலில் பதில் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment