காயல்பட்டினம் கே.எஸ்.முஹம்மது
ஷுஐப் அவர்கள் எனது நூலுக்கு எழுதிய அறிமுகக் குறிப்பு இம்மாத “சமரசம்“ இதழில் வெளியாகியுள்ளது. நன்றியுடன் இங்கு பிரசுரிக்கிறேன்.
ஆன்மீக தளத்தில்
இயங்கும் எல்லா மதங்களும் இவ்வுலக
வாழ்க்கையை புறக்கணிக்கச்
சொல்கின்றன. இஸ்லாத்தை தவிர. இந்த வாழ்வும், இந்த உடலும் நிலையற்றவை. எனவே, அவைகளை
பராமரிக்கத் தேவையில்லை என்பது அவைகளின் உள்ளடக்கம். “காயமே இது பொய்யடா...” சித்தர்கள்
வாக்கும் இதனடியில் பிறந்ததே.
இதன் மறு கூறாக,
வாழ்க்கையை கொண்டாடுவோம் என்பது மேற்கத்திய சிந்தனை. கொண்டாடலாம் தான். ஆனால் நிறையபேரின் வாழ்க்கை இங்கு
கொண்டாடும்படி இல்லை. வறுமையும், போரும்,இன்னபிற இயற்கைச் சீற்றங்களும் பலரையும் வாழ்வின்
விளிம்புக்கே கொண்டு சென்று விடுகின்றன.
“வாழ்க்கை வேறு
வாழ்தல் வேறு” என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியை
தனது லாவகமான எழுத்துக்களால் இட்டு நிரப்புகிறார்
இலங்கை எழுத்தாளர் சகோதரர்
இன்ஸாப் ஸலாஹுத்தீன் நளீமி அவர்கள்.
தன்னுடைய சொந்த
அபிப்பிராயங்களே எல்லோரிடமும் எடுபடவேண்டும் எல்லோரும் தன்னை மட்டுமே அறிஞன் என கொண்டாட
வேண்டும் என்று எண்ணுகிற வேளையில்,
“தனது சொந்தக்
கருத்தில் உறுதியாக இருத்தல் என்பது தான் சரியான கருத்தில் இருக்கின்றேன் என்று அர்த்தப்படாது
பிழையென்று காணும் போது தன் உறுதியை அவர் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்” (பக்கம்-20)
“ஒவ்வொரு மனிதனையும்
கபரஸ்தானுக்கு அழைத்து செல்லும் வழி அவன் வீட்டு வாசலில் இருந்து துவங்குகின்றது”-
என்றான் ஒரு உருதுக்கவிஞன்.
“இதிலென்ன வேறுபாடு
இருக்கின்றது ஒருவன் வாழப் பிறப்பது போல இறப்பு இன்னொரு வாழ்க்கைக்கான பிறப்புதானே
மரணமென்றும் இறப்பென்றும் அழைக்கிறோம். பெயர் மட்டும் வித்தியாசம். பிறப்பு போல இறப்பும்
கொண்டாடக்கூடிய ஒன்று தான் ஏனெனில் அது வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கான இடமாற்றம்”
(பக்கல்-29)
மனிதனின் வாழ்க்கை
வசதிகளுக்கு ஒரு அளவே இல்லை. எல்லாவற்றையும் ஒருங்கே அடைய நினைக்கிறான்.
நபிபெருமானார்
அவர்களின் பிரபலமான ஹதீஸ் என்று உண்டு.
“இரண்டு ஓடை நிறைய தங்கம் அவனுக்கு (மனிதனுக்கு) கொடுக்கப்பட்டாலும்
மூன்றாவது ஓடையையும் அவன் மனம் வேண்டி நிற்கும் மண் ஒன்றே அவன் ஆசையை இட்டு நிரப்பும்”
மனிதனின் பேராசையை
இதைவிட அழகாக யார் சொல்ல முடியும்?
“தனக்கு எல்லா
வசதிகளும் கைகூடி வந்த பிறகு தான் மிகச்சிறந்ததொரு வாழ்க்கையை வாழலாம். இறைவனை திருப்திபடுத்தலாம்
என்று தான் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான். அப்படி வாழ எவருக்கும் இந்த உலகில்
வாழ்க்கை எஞ்சுவதில்லை. சொல்லி முடியும் போது வார்த்தை முடிந்து போவது போலத்தான் வாழக்கையும்.
அன்றாட வாழ்க்கையோடு சேர்த்து தான் எல்லாம் சாத்தியமாக வேண்டியிருக்கின்றது” (பக்கம்-52)
இப்படியான அழகான
வரிகள் நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றது. எண்பத்து மூன்று பக்கங்களைக் கொண்ட இந்தச்சிறிய
நூலின் கட்டுரைகள் தனித்தனியே இருப்பினும் மனித வாழ்வின் போதாமைகளும், அதன் மாறுபட்ட
நிகழ்வுகளையும் ஒரே சரடில் கோர்த்தது போன்றே கட்டுரைகள் அனைத்தும் அமைந்திருக்கின்றன.
இந்த சிறிய நூலுக்கு
அணி சேர்க்கும் விதமாக இலங்கை சிந்தனையாளர் ஏ.பி.எம்.இத்ரீஸ் அவர்களின் அணிந்துரையும்,
சகோதரர் சாளை-பஷீர் ஆரிஃப் அவர்களின் முன்னுரையும் மணி மகுடம் போல் அலங்கரிக்கின்றன.
தனது எளிமையான எழுத்துக்களால் சொல்ல வந்த கருத்துக்களை மிகவும் லாவகத்துடனும், திறமையாகவும்
பதிவு செய்த ஆசிரியர் இன்ஸாப் ஸலாஹுத்தீன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
தொகுப்பு நூலுக்கு
“பொருளடக்கம்” மிகவும் அவசியம். அது இந்நூலில் இல்லை. அடுத்த பதிப்பில் ஆசிரியர் அதை
சரி செய்வார் என்று நம்புகிறேன். இந்த அருமையான நூல் சென்னை ரஹ்மத் பதிப்பகத்திலும்
கிடைக்கிறது.
கே.எஸ்.முஹம்மது
ஷுஐப்
காயல்பட்டினம்
No comments:
Post a Comment