Friday, February 15, 2013

மொஹிதீன் பெய்க்: நகலெடுக்க முடியாத குரல்


அப்போது எனக்கு 14 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எனது வாப்பாவின் தங்கை ஒருவர் வெளிநாடு சென்று வந்திருந்தார். இரண்டு பொருட்களைத் தவிர அவர் என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார் என்று எனக்கு நினைவில் இல்லை. ஒன்று ஒரு விளையாட்டு விமானம் மற்றது மொஹிதீன் பெய்க்கின் பாடல்கள் அடங்கிய ஒரு ஒலிப்பேழை). அந்த விமானம் இப்போது இல்லை.ஆனால் ஒலிப்பேழை இருக்கிறது.

மொஹிதீன் பெய்க் இந்தியாவின் தமிழ் நாடு,சேலத்தில் 1919 டிசம்பர் 5 இல் பிறந்தார்.1932 ஆம் ஆண்டு இலங்கைக்கு இடம்பெயர்ந்தார்.இசையின் தேடல் எப்போதும் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.வேறு விடயங்களில் அவர் நாட்டம் கொள்ளவில்லை.கல்வியில் ஆர்வம் இல்லை என்பதை அவரது தலைமை வாத்தியார் ஒரு முறை தந்தையை அழைத்துச் சொல்லிவிட்டார்.அடுத்த நாள் திருச்சியிலுள்ள ஒரு நடனக் கம்பனிக்கு பெய்க் ஓடி விட்டார்.தனது உஸ்தாதுடனே இருக்கப் போவதாக வீட்டுக்குச் சொன்னார்.

 
'எமவிட பவஸெனு முவின் ஒபே புத்தங் சரணங் கச்சாமி..' என்ற பாடலை அந்தக் கெஸெட்டிலிருந்துதான் நான் கேட்டேன்.அந்தக் குரலின் சக்தியை முழுதாகப் புரிந்து கொள்ள என்னால் அப்போது முடியவில்லை. ஆனால் பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தேன்.


இந்தியாவில் இசை கேட்க பலமணி நேரத்தை செலவிட்டார். கவாலி,கஸல்,பஜன் வகை இசைகளைக் கேட்டார்.உஸ்தாத் அஹ்மத் பக்ஷ் இசையின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தார்.ஆர்மோனியத்திலும் உருது இசையிலும் அவருக்கு நல்ல பயிற்சி கிடைத்தது.
பெய்க்க்கின் இசைக் கனவுக்கு கவுஸ் மாஸ்டர் உயிரூட்டினார்.ரேடியோ சிலோனில் அவரை அறிமுகப்படுத்தினார். ஹிந்துஸ்தானி, தமிழ், இஸ்லாமியப் பாடல்களை அவர் பாடினார்.கிரமபோன் பதிவுகளின் பொற்காலத்திலே அவர்  'கருண முகுதே நாமு கிலேலா' எனும் பாடலை ராஜலட்சுமியுடன் இணைந்து பாடினார்.கொலம்பிய லேபலுக்காக கவுஸ்மாஸ்டர் பதிவு செய்த அப்பாடலே அவர் பாடிய முதல் சிங்களப் பாடலாகும்.அதன் பிறகு ஏராளமான பாடல்கள் அவரிடம் குவிந்தன.


 சிங்கள சினிமாவில் பின்னணிப் பாடகராக அவர் நுழைந்தார். இலங் கையின் இரண்டாவது சிங்களத் திரைப்படமான 'அசோகமாலா' வில் நயன வெனி சுதோ எனும் பாடலைப் பாடினார். .கவுஸ் மாஸ்டர், மொஹிதீன் பேக் ஆகிய இருவரும் சிங்கள இசை வளர்ச்சியில் தவிர்க்க முடியாத இருவராக மாறிவிட்டார்கள்.எச்.ஆர் ஜோதிபால,ராணி பெரேரா,லதா வல்பொல,ருக்மனி தேவி,ஜமுனா ராணி போன்ற பலரோடு இணைந்து பாடிய பெய்க் அவர்கள் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடும் வாய்ப்பையும் பெற்றார்.

தன் கனதியான குரல் இசையின் அடி ஆழங்களிலும் மேல்நிலையிலும் தாராளமாகப் பயணித்தது.ஏராளமான வாய்ப்புக்கள் அவரைத் தேடி வந்தன.வானொலிப் பாடகர்,சிங்கள சினிமாப் பின்னணிப் பாடகர்,பௌத்த பக்திப் பாடகர் என பல பரிமாணங்களை அவர் தாண்டிச் சென்றார்.400 சிங்களத் திரைப்படங்களுக்காப் பாடினார்.அவர் மொத்தமாகப் பாடிய பாடல்கள் 10000 ஐயும் கடந்து நிற்கின்றது.

பௌத்த பக்திப் பாடல்களைப் பாடுவதில் அவர் அதிக விருப்பம் கொண்டவராகக் காணப்பட்டார்.எப்போதும் அவர் இலங்கையையும் அதன் மக்களையும் விரும்பினார்.எல்லா மதங்களுக்கும் சமமான கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

1950,60 களில் இலங்கை வானொலியில் மொஹிதீன் பெய்க்கின் தமிழ் மொழி மூல இஸ்லாமிய கீதங்களும் தொடர்ச்சியாக ஒலித்தன.அவை பெரு வரவேற்பையும் பெற்றன.


சிங்கள இசை வளர்ச்சிக்கு அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.அதிலேதான் அவர் திருப்தி கொண்டிருந்தார். தன்னை இன்னொரு கலாசாரத்துடன் பிணைத்துக் கொண்டு அதனையே தன் வாழ்நாளாகக் கொண்டு அவர் வாழ்ந்தார்.இன,மத எல்லைகளை கடந்து பிரிதொரு சமூகத்துடன் அவர் தன்னைக் கரைத்துக் கொண்டார்.இதனால் கலாசாரம் மற்றும் மதப் பன்மைத்துவத்தில் இலங்கைக் கலை வரலாற்றிலே  மிகச் செல்வாக்குள்ள ஒருவராக அவர் விளங்கினார்.அவர் ஒரு பௌத்தராக இல்லா விட்டாலும் ஒரு பௌத்தரின் உணர் அனுபவத்தை அவர்களுக்குள் பரவச் செய்தார்.

1956 இலே பன்டாரனாயகவினால் புகழ்பெற்ற குடியுரிமை அவருக்கு இந்த நாட்டிலே வழங்கப்பட்டது.அவரது புகழ் முதலாவது சுதந்திர தின விழாவில் தோன்றுவதற்கும் 1974 இல் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்ல் வரவேற்புப் பாடலை இசைக்கவும் வாய்ப்பைக் கொடுத்தது.1983,1987 இல் கலாசூரி விருதினை வென்றார்.

பல நாடுகளில் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.ஆனால்இலங்கை மீதான நேசம் அவற்றைப் பெறுவதிலிருந்து அவரைத் தடுத்தது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியாஉல் ஹக் 1987 இல் இலங்கை வந்த போது தனது நாட்டில் குடியுரிமை வழங்குவதாக பெய்க்கை அழைத்த போது அப்போதிருந்த ஜனபதிபதி ரனசிங்க பிரேமதாஸ பெய்க் எமது தேசியச் சொத்து,அவரைத் தர முடியாது என மறுத்துள்ளார்.
 
உருது மொழியை தாய் மொழியாகக் கொண்ட அவர் முதலில் சிங்களப் பாடல்களை உர்து லிபியிலேதான் எழுதிப் பாடினார்.பின்னர் அதனை மாற்றிக் கொண்டார்.அவர் பாடிய புத்தங் சரனங் பாடலை இதுவரைக்கும் யாரும் முறியடிக்கவில்லை.எந்தக் கலைஞருக்கும் அவர் பாடிய அளவுக்கு அதனைப் பாட இயலவில்லை.அது அவருக்கே உரித்தான ஒரு பாடலாக சிங்களக் கலை வரலாற்றிலே மிளிர்கிறது.இப்பாடலின் ஹிந்தி மூலத்தைப் பாடிய மன்னாடே மொஹிதீன் பெய்க் பாடியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்து போனார்.தன்னை விடச் சிறப்பாக அப்பாடலை பாடியமைக்காக தனிப்பட்ட முறையிலே பெய்க்கைப் பாராட்டினார். 

அப் பாடல் தலைமுறைகளைக் கடந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது .எல்லா விகாரைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் காலைச் சூரியனின் முதல் புலர்தலிலும் அதன் மறைதலிலும் என அப் பாடல் ஒலக்கிறது.இன்னும் அது தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கத்தான் போகிறது.ஒரு முஸ்லிமாகப் பிறந்த மொஹிதீன் பெய்க் தன் பிறந்த மண்னையும் மொழியையும் கடந்து இன்னொரு தேசத்தில் தன் ஆஸ்தான குரலால் பல லட்சம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இரண்டு சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை தன் குரலால் அவர் சாத்தியப்படுத்தினார்.இங்கு பௌத்தம் பரவியுள்ள எல்லா இடங்களிலும்  ஒவ்வொரு அரச மரத்தின் இலையிலும் விகாரைகள் சூழ்ந்த அவர்களது புனிதப் பகுதிகளிலும் பௌத்த விழாக்களிலும்  ஒரு முஸ்லிமின் குரல் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இம்மாத வைகறை இதழில் வெளியான கட்டுரை


 

 
 













No comments:

Post a Comment