அப்போது எனக்கு 14 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.எனது வாப்பாவின் தங்கை ஒருவர் வெளிநாடு
சென்று வந்திருந்தார். இரண்டு பொருட்களைத் தவிர அவர் என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார்
என்று எனக்கு நினைவில் இல்லை. ஒன்று ஒரு விளையாட்டு விமானம் மற்றது மொஹிதீன் பெய்க்கின்
பாடல்கள் அடங்கிய ஒரு ஒலிப்பேழை). அந்த விமானம் இப்போது இல்லை.ஆனால் ஒலிப்பேழை இருக்கிறது.
மொஹிதீன் பெய்க் இந்தியாவின் தமிழ் நாடு,சேலத்தில் 1919 டிசம்பர் 5 இல் பிறந்தார்.1932 ஆம் ஆண்டு இலங்கைக்கு இடம்பெயர்ந்தார்.இசையின்
தேடல் எப்போதும் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது.வேறு விடயங்களில் அவர் நாட்டம் கொள்ளவில்லை.கல்வியில்
ஆர்வம் இல்லை என்பதை அவரது தலைமை வாத்தியார் ஒரு முறை தந்தையை அழைத்துச் சொல்லிவிட்டார்.அடுத்த
நாள் திருச்சியிலுள்ள ஒரு நடனக் கம்பனிக்கு பெய்க் ஓடி விட்டார்.தனது உஸ்தாதுடனே இருக்கப்
போவதாக வீட்டுக்குச் சொன்னார்.