Tuesday, January 1, 2013

இங்லிஷ் விங்லிஷ் – மறுக்கப்படும் பெண்மையின் குரல்


இது ஒரு நல்ல திரைப்படமாக இருக்கிறது எனக் கூறி எனது நண்பர் ஒருவர் இத்திரைப்படத்தை என்னிடம் தந்தார்.'இங்லிஷ் விங்லிஷ்' என்ற பெயரைப் பார்த்ததும் நிச்சயம் இத்திரைப்படம் நன்றாக இருக்காது என்றே மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.ஆனால் அதற்கு முற்றிலும் மாற்றமாக இருந்தது திரைப்படம்.தமிழ் சினிமாவின் வழக்கமான பள்ளத்தாக்குகளில் விழாமல் வேறு திசையில் படம் பயணிக்கின்றது.

மொழி அறியாமையை மையமாக வைத்து ஒரு குடும்பத்தில் கணவன் இமனைவி,பிள்ளைகளுடனான வாழ்வின் அம்சங்களைச் சுற்றிக் கதை நகர்கிறது.இன்றைய ஆங்கில யுகத்தில் அந்த மொழியை அறியாத சஷி தன் குடும்ப வாழ்வில் கணவனிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் என்னமாதிரியான எதிர்வினைகளை எதிர்நோக்குகிறாள்,அதிலிருந்து அவள் எப்படி மீள்கிறாள் என்பதுதான் கதையின் சுருக்கம்.


இன்று ஆங்கிலத்தை அறிந்திருப்பது அந்தஸ்துக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.அதனைத் தெரிந்து விட்டால் ஒரு உயர்ந்த மனிதனாக மாறிவிடலாம் என்ற நினைப்பு சமூகத்தில் பொதுவாக இருக்கிறது.ஆங்கிலம் பேசுபவர்கள் தம்மை அதிமனிதர்களாக கட்டமைத்து,ஏனையவர்களுக்கு எதுவுமே தெரியாது என நினைக்கின்றனர்.

இப்படத்திலும் அதுதான் நடக்கிறது.சஷிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதனை வைத்து அவள் குடும்பத்தில் கொஞ்சம் இழிவாகப் பார்க்கப்படுகிறாள்.தன் பிள்ளைகளும் அவளைக் கிண்டல் செய்கின்றனர்.ஆங்கிலம் பேசும் ஒரு குடும்பத்தில் இப்படி அகப்படும் எவரும் இத்தகைய சங்கடத்துக்கு ஆளாகுவார் என்பது இங்கு அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.

இங்கு மொழி மட்டுமல்லஇநமது சூழலில் கற்றவர்களுக்கு மத்தியில் அகப்படும் ஒரு கற்காதவரும் இத்தகைய கிண்டல்களை வாங்கிக் கொண்டுதான் வாழ வேண்டியிருக்கிறது.கற்ற ஒரு மாணவனுக்கு தன் தாயோ தந்தையோ ஒவ்வொரு முறையும் உபதேசிக்கும் போது அல்லது கருத்துச் சொல்லும் போது அவர்கள் சஷியின் பாத்திரத்தையே எடுக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.சஷி மனதுக்குள் படும் அவமானத்தை ஒவ்வொரு பெண்னும் ஏதோ ஒரு வகையில் அன்றாட உலகில் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

சஷி மிகத் திறமையாக சமைக்கத் தெரிந்தவள்.அவளது கை வண்ணத்தில் உருவாகும் லட்டு எல்லோராலும் விரும்பி வாங்கப்படுகிறது.ஆனால் அவளது இத் திறமை தன் கணவனாலோ பிள்ளைகளாலோ ஒருபோதும் அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப்படவில்லை.ஒரு பெண் இது போன்ற திறமைகளுக்காக ஒருபோதும் பாராட்டப்படுவதில்லை.சஷியின் அமெரிக்க ஆங்கில வகுப்புத் தோழன் (அவனும் ஒரு சமையல் காரனாக இருப்பவன்) 'சமைப்பது ஒரு கலை'எனப் பாராட்டுகிறான்.அதற்கு சஷி 'ஆண் சமைத்தால் அது கலையாகப் போற்றப்படுகிறது,பெண் சமைத்தால் அது அவளது கடமை எனப் பார்க்கப்படுகிறது' எனப் பதிலளிப்பாள்.


இன்று ஒரு பெண் செய்யும் எல்லாப் பணிகளும் கலைகளாக மாறி கம்பனிகளாக வளர்ச்சியடைந்திருக்கின்றன.அதற்கென கற்கைகள் இருக்கின்றன.சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் ஒரு சராசரிப் பெண் தன் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் எவ்வளவோ தன் ஆயுளைத் தேய்த்துக் கொண்டு செய்கிறாள்.ஆனால் அதற்குறிய கண்னியத்தையும் பாராட்டையும் எத்தனை பெண்கள் தம் குடும்பத்தாரிடமிருந்து பெறுகிறார்கள் என்ற கேள்வியையே நாம் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியிருக்கின்றது. சஷியின் சுவை கொண்ட லட்டு மறுக்கப்படும் ஒவ்வொரு நொடியிலும் இக் கேள்வியையே நான் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு மொழியைத் தெரியாமல் அம் மொழி தெரிந்தவர்களுக்கு மத்தியில் வாழ்வதும் பழகுவதும் அந்நியத்தன்மையையே தோற்றுவிக்கின்றது.இதனை ஏதோ ஒரு தருணத்தில் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம்.இதனைக் கடக்க அம் மொழியினைஇகலாசாரத்தை கற்றுக் கொண்டு அதனைத் தாண்டிச் செல்லலாம்,செல்ல வேண்டும் என்பதனை இங்லிஷ் விங்லிஷ் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

3 comments:

  1. // இன்று ஒரு பெண் செய்யும் எல்லாப் பணிகளும் கலைகளாக மாறி கம்பனிகளாக வளர்ச்சியடைந்திருக்கின்றன.அதற்கென கற்கைகள் இருக்கின்றன.சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் ஒரு சராசரிப் பெண் தன் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் எவ்வளவோ தன் ஆயுளைத் தேய்த்துக் கொண்டு செய்கிறாள்.ஆனால் அதற்குறிய கண்னியத்தையும் பாராட்டையும் எத்தனை பெண்கள் தம் குடும்பத்தாரிடமிருந்து பெறுகிறார்கள் என்ற கேள்வியையே நாம் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டியிருக்கின்றது//
    awesome description

    ReplyDelete
  2. //சஷி மனதுக்குள் படும் அவமானத்தை ஒவ்வொரு பெண்னும் ஏதோ ஒரு வகையில் அன்றாட உலகில் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.//

    ReplyDelete
  3. அழகான பதிவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete