Wednesday, December 12, 2012

நாம் கண்ணை மூடிக்கொள்கின்றோம் என்பதற்காக மற்றவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். சீ. ரஸ்மின்  அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல்






எம். சீ. ரஸ்மின் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் விசேட பட்டம் பெற்று அதே பல்கலைக் கழகத்தில் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தை அபிவிருத்திக்கான தொடர்பாடல் (Developmental Communication) துறையில் பூர்த்திசெய்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதிநேர அறிவிப்பாளராகக் கடமையாற்றி வரும் இவர் 8 நூல்களை சிங்கள மொழியிலிருந்து பெயர்த்துத்தந்துள்ளார். ஊடகம், ஒலிபரப்புத் துறை குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் இவர் சமர்ப்பித்துள்ளதோடு அபிவிருத்திக்கான ஒலிபரப்பு, வானொலி நாடகம், பன்மைத்துவத்திற்கான ஒலிபரப்பு, ஒலிபரப்பு மொழியியல் (Broadcasting Linguistics)  மற்றும் பால்நிலையும் ஒலிபரப்பும் ஆகிய துறைகளில் ஈடுபட்டுவருகின்றார். சமூக வானொலி- மனித வலுவாக்கத்திற்கான ஊடகம் என்ற ஆய்வு நூலை அண்மையில் வெளியிட்டார். இந்தியா, மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வானொலி நாடகப் பயிற்றுவிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் எம். அஷ்ரப்கானின் வானொலி நாடகப் பாசறையில் வளர்ந்தவராவார். BBC யின் முன்னாள் வானொலி நாடகத் தயாரிப்பாளர் லூசிஹானா விடம் ஒரு மாதகால வானொலி நாடகப் பயிற்சியை பூர்த்தி செய்ததோடு வானொலி நாடகம் தொடர்பான சர்வதேசப் பயிற்சி நெறிகளிலும் பங்குபற்றியுள்ளார். தற்போது இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார்.

சந்திப்பு-இன்ஸாப் ஸலாஹுதீன்


வானொலி நாடகம் முஸ்லிம் சேவையில் ஏன் கைவிடப்பட்டது?


முஸ்லிம் சேவையில் சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு வானொலி நாடகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல செய்தி. உண்மையில் முஸ்லிம் வானொலி நாடகம் எமது சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய தனித்துவமான கலை. சமூகத்தில் பேசப்படாமலிருந்த பல பிரச்சினைகளின் குரலாக அமைந்தது. நாடகம் கேட்பதற் கென்று மக்கள் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வானொலிப் பெட்டி தேடிப்போன ஒரு காலம் இருந்தது. அந்தக் காலம் மீண்டும் வரப்போகின்றது என்கின்ற நம்பிக்கையோடு சொல்வதாக இருந்தால், நாடகம் கைவிடப்பட்டமைக்கு நிறையக் காரணங்கள் உண்டு. 


முஸ்லிம் நாடகங்களை எழுதியவர்கள் நாடு பூராகவும் இருந்தாலும் அதனை நடித்தவர்கள் பெரும்பாலும் கொழும்பையண்டியவர்கள். இதனால், நாடகத்தின் ஒரு பகுதி கொழும்பை அண்டியதாகவே வளர வேண்டியிருந்தது. சுமார் அறுபது ஆண்டு வரலாற்றில் சுமார் ஆறு பேர் மாத்தரமே முழு நேரத் தயாரிப்பாளர்களாக இருந்துள்ளார்கள். 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடகம் எழுத ஆட்கள் இல்லை என்ற நிலை உருவானது. சிறந்த பிரதிகளே வருவதில்லை. சில மூத்த எழுத்தாளர்கள் வேறு சிலரின் பெயர்களில் நாடகங்களை எழுதினர்.

தொடர்ந்து எழுதுவற்கு இளம் தலை முறையினர் தயாராக இருக்கவில்லை. இளம் தலைமுறையினர் தயார்படுத்தப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து நடிப்பதற்கும் இளம் தலைமுறை இருக்கவில்லை. இந்த வெற்றிடத்தில் என் போன்ற சிறுவர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அது தவிர, மூத்தவர்கள் வயோதிபத்தை அடைந்தபோது, வானொலி நாடகமும் அநாதையாகத் தொடங்கியது என்றுதான் சொல்வேன். இந்த பரம்பரை இடைவெளி நாடகம் கைவிடப் பட ஒரு முக்கிய காரணம். 


பரம்பரை இடைவெளியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞையும், முஸ்லிம் வானொலி நாடக பண்பாட்டினை பாதுகாக்க வேண்டும் என்ற நாட்டமும் உரியவர்கள் இடத்தில் இருந்திருந்தால் நாடகம் தொடர்ந்தும் ஒலித்திருக்கும். 2002 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன் - இறுதியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட அஸ்மி சாலியின் வரலாற்று நாடகம் ஒலிபரப்பாகாத நிலையில் நாடகத்தின் வரலாறு முடி வுக்கு வந்தது. இதன் பின்னர், நாடகம் ஒரு அநாதைக் குழந்தையைப் போலதான் பார்க்கப்பட்டது. 


ஒரு கட்டத்தில் அஷ்ரப்கான் போன்ற முன்னோடிகள் மன உழைச்சலுக்கு உட்பட்டனர். சமூகத்தின் நலன் கருதியாவது நாடகங்களை தயாரிக்க முயன்றாலும் கடைசிகால அனுபவங்கள் அவரின் உள்ளத்துக்கு அமைதியைக் கொடுக்கவில்லை. நாடகம் தயாரிக்கும் அவரது அர்ப்பணிப்பில் சிலர் குறுக்குமறுக்காக விழுந்ததை நான் கண்டிருக்கின்றேன். அத்தோடு, நாடகத் தயாரிப்பானது அதிகம் உழைப்பை வேண்டி நிற்கும் ஒன்று. அதற்கு அர்ப்பணிப்புடன், விடயதானம், சமூகத்தை நோக்கிய உண்மையான தரிசனம் மற்றும் நாடகத்தில் புத்தாக்க ஆளுமை என்பன வேண்டும். இதனால், இதில் விரும்பிக் கைவைப்பது பலருக்கு பிரச்சினைக்குரியது. நாடகம் தொடங்கப்படாமலிருக்க இதுவும் ஒரு காரணம். 


இலங்கை வானொலி கொடுப்பனவுகளை நிறுத்தியதால் நாடகம் கைவிடப்பட்டது என்ற ஒரு காரணமும் சொல்லப்படுகிறதே?  


சொல்லப்படுகின்றது. இதில் எனக்கு உடன்பாடில்லை. முஸ்லிம் நாடகத்தை உயிராக நினைத்து, ஒரு சமூகத்திற்கான சேவையாக நினைத்து பல்லாண்டு காலம் நடித்த முதியவர்களின் முதுகில் குத்துவதாவே இக்காரணம் உள்ளது. அப்போது கொடுக்கப்பட்ட 100 ரூபாய் சிலநேரம் அவர்களின் போக்குவரத்துக்குக் கூட போவதில்லை. சமூகத்தில் விழுமியங்களுக்கு உயிர்கொடுக்க தமது குரல்களை ஆண்டான்டு காலமாகத் தேய்த்துக் கொண்ட மூத்த கலைஞர்களின் உழைப்பு நூறு ரூபாய் இல்லாமல் நிறுத்தப்பட்ட தென்றால் இதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும். 


கொடுப்பனவே வேண்டாம் நாங்கள் ஒரு குடும்பமாகச் சேர்ந்து நடித்துத் தருகின்றோம் என்று பலர் முன்வந்தனர். நீங்கள் நாடகத்தை தொடங்குங்கள் நாங்கள் எழுதுகின்றோம் என பலர் துணிந்து சொன்னார்கள். வெறும் புகழினை சம்பாதித்துக் கொடுக்கும் தாக்கமற்ற நிகழ்ச்சிகளுக்காக கோடிகளை அள்ளியிறைக்கும் எத்தனையோ பேருக்கு இந்த நூறு ரூபாய் பெரியதல்லவே. 


நாடகம் நிறுத்தப்பட்ட காலப் பகுதியில் ஜாமியா நளீமியா, கொழும்புப் பல்கலைக் கழகம் மற்றும் வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பல இளைஞர் யுவதிகள் முஸ்லிம் நிழ்ச்சிகளில் குரல் கொடுத்தனர். அவர்கள் கொடுப்பனவை நாடி வந்தவர்கள் அல்லர். இத்தகைய ஒரு பரம்பரையினரை நாடகத்தின் பேரில் உருவாக்கியிருக்கலாம். எனவே, கொடுப்பன வுக்கும் நாடகம் நிறுத்தப்பட்ட மைக்கும் முடிச்சுப் போடத் தேவையில்லை. நாடகத்தை நிறுத்தப்பட் டது முஸ்லிம் ஒலிபரப்பின் இயலாமை. முஸ்லிம் சமூகத்தின் இயலாமை. இவ்விட யத்திலே  இலங்கை வானொலி உயர் நிர்வாகத்தை பிழை சொல்வது அதை விட இயலாமை.  


முஸ்லிம் ஒலிபரப்பை வயிற்றுப் பிழைப்புக்காக, அரசியல் இருப்புக்காக, சுய இலாபத்திற்காக பயன்படுத் துவர்களின் ஆதிக்கமும் செல்வாக்கும் அதிகமனது. இதனால், ஆளுமை மிக்க சிலர் ஒதுங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது. சிலர் தமிழ் சேவை தமது பெயருக்கு பாதுகாப்பு என்று நினைக்க வேண்டி ஏற்பட்டது. வரலாற்றுப் பொக்கிசங்களான நாடக ஒலிப் பதிவு நாடாக்கள் உள்ளடக்கப் பெறுமாண மற்ற, நிதியீட்டல் நிகழ்ச்சிகளின் ஒலிப்பதிவுக்காக அழிக்கப்பட்டன. 


இதனை அழித்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்களின் தேவை என்ன என்பதும் எல்லோருக்கும் தெரியும். இவர்களின் இந்த செயற்பாடு முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு வளத்திற்கும் வரலாற்றுக்கும் எதிரான யுத்தம் என்றே நான் கருதுகின்றேன். இந்த நிலையில் நாடகம் கைவிடப் பட்டதும் ஒன்றரை தசாப்தமாக தொடங்கப்படாமல் இருந்ததும் ஆச்சரியமல்ல. 


இலங்கை முஸ்லிம்களுக்கான தனியான ஊடகம் என்ற கருத்தை எப்படி நோக்குகிறீர்கள்.


இப்போதைக்கு இக்கருத்தியலில் எனக்கு உடன்பாடில்லை.

ஏனைய சமூகங்களுக்கு தனியான ஊடகம் இருப்பது போல எங்களுக்கும் ஒரு ஊடகம் இருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், தற்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழலில் இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனியான ஊடகம் ஒன்று வருவது ஆபத்தானது. 


முதலில் நமது ஊடகப் பாரம் பரியம் அதிகாரத்தின் செல்லப் பிள்ளைகள் சிலரிடமும், அரசியல் வர்த்தகர்கள் சிலரிடமும், இயக்க முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒருமித்து நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பவர்களிடமும், சமூகத்தை உணர்ச்சி வசப்படுத்தி, ஆத் திரமூட்டி அவர்களை எடுடா பிடிடா என்று வைத்துக் கொள்ள நினைப்பவர்களிடமும், ஊடகத்தை வைத்து தமது புகழையும், சுய இருப்பினையும் பேணிக் கொள்ள நினைப்பவர்களிடமும் சிக்கியுள்ளது. இந்த சிக்கலைப் பிரிக்க முடியும் என்று நீங்கள் கருதினால், முஸ்லிம்களுக்காகத் தனியான ஊடகத்தை தொடங் கலாம்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேச வலுவான தளங்கள் இல்லை என்பதால் தனியான ஊடகம் தேவை என்பது சிலரின் கருத்து. முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஏனைய ஊடங்களில் மூடி மறைக்கப்படுவதால் தனியான உடகம் தேவை என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால்இன்றைய நிலையில் எமக்கு ஏராளமான தளங்கள் உண்டு. தொகுத்துப் பார்த்தால் ஏனைய சமூகங்களுக்கு நிகரான ஊடகம் முஸ்லிம்களின் கையில் இருக்கிறது. 


600 முஸ்லிம் உடகவியலாளர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ பத்திரிகைகள் வெளிவருகின்றன. சகோதர சமய சஞ்சிகைகளை விட மிகத் தகுதியான முறையில் இஸ்லாமிய சமய சஞ்சிகைகள் வெளி வருகிறன. பல மணி நேரங்கள் வானொலி நிகழ்ச்சி இருக்கின்றது. முஸ்லிம்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் பேசுகின்ற பல  இணையத்தளங்கள் வந்து விட்டன. இவை முஸ்லிம் ஊடகந்தான். இவற்றை விட வேறு என்ன வேண்டும்? இவற்றில் பேச முடியாத எந்த புதிய பிரச்சினையை தனியான ஊடகத்தில் பேசப் போகின்றோம். இது ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலை. முற்றிலும் சமூக நலன் கொண்ட நிலைப்பாடு அல்ல. 


இருக்கின்ற ஊடகங்களில் நாம் செயற்படும் முறைகளில் பல சிக்கல்கள் உண்டு. முதலில், எமது பிரச்சினை என்ன என்பதில் பல முரண்பாடுகள் நிலவுகின்றன. அத்தோடுபிரச்சினைகளைப் பேசுவதில் நாம் ஒருமைப்பட்டு நிற்க இன்னும் தயங்குகின்றோம். நாட்டில் எந்த சமூகத்திற்கும் வழங்கப் பட்டிராத ஒலிபரப்புக்கால எல்லை முஸ்லிம்களின் கையில் உள்ளது. இதில் 78 சதவீதம் வெறும் பயான்களை ஒலிபரப்பித் தள்ளுகின்றோம், அதிலும் ஆயிரத்து எட்டுப் பிரச்சினைகள். 


பொதுநலனை பேணிக்கொள்ள இன்னும் நாம் நமது தனிப்பட்ட சித்தாந்தங்கள் இடமளிப்பதில்லை. நமது பொதுவான பலயீனத்தை வெளிப்படுத்துவதில் நாம் அவசரப் படுகின்றோம். நமக்குள் நியதியாகி இருக்கின்ற கருத்து வேற்றுமைகளை நாம் விலை பேசுவதில் கூச்சப்படுவதில்லை. இப்படியிருக்கும் போது, தனியான ஊடகம் தொடங்கவது ஆபத்தானது. அதனை யார் தொடங்கப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்து, சமூகம் இன்னும் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட இது வழியாகிவிடும். 

அல்லது முஸ்லிம்களுக்கான தனித்துவமான ஊடகம் தொடங்க ஒரு வழி இருக்கின்றது. அது அதி காரத்திற்கு சலாம் போடாத, இனவாத அரசியலுக்குள் தம்மை பிடி கொடுக்காத, இயக்க சார்பினை சக முஸ்லிம் கௌரவத்திற்கு எதிராக பயன்படுத்தாத, உண்மையை சமூகத்தின் நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு பேசக்கூடிய ஒரு புத்தம் புதிய பரம்பரை தேவை. ஊடகத்தை ஒரு சமூக விடுதலைக்கான வன்முறையற்ற கருவியாக பயன்படுத்தக் கூடிய ஒரு இளம் பரம்பரை தேவை. இப்போதைக்கு அது தான் உடனடித் தேவை. அது உருவானால் தனியான ஊடகம் இல்லாமலும் அவர்கள் சாதிப்பார்கள்.


தற்போதைய முஸ்லிம் ஒலி பரப்பின் போக்கு மற்றும் அதன் தாக்கம் பற்றிச் சொல்ல முடியுமா?



இது பிரச்சினைக்குரிய கேள்வி. இருந்தாலும் நான் பேசுகின்றேன். 

உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முன் ஒரு விடயத்தை நான் கூற வேண்டும். தென்னாசியாவில் சாதனை புரிந்த ஒரு வானொலி சேவை இருந்தது. அது பற்றி நான் கூற வேண்டும். வெறும் ஒரு மணி நேர நிகழ்ச்சியின் வாயிலாக, சில சர்வதேச வானொலிகளின் அடைவினை விஞ்சியது அந்த வானொலி சேவை. சமயத்தை இசை, நாடகம், கவிதை, சிறுகதை, கிராமியம், வரலாறு, அறிவியல், சமூக மேம்பாடு என வெற்வேறு மொழிகளால் அது பேசியது. 


அந்த ஒரு மணி நேரம் ஒலிபரப்பினால், எத்தனையே உலமாக்களை இனிமையான சொற்பொழிவாளர் களாக மாற்றினார்கள். பல நூறு கவிஞர்களை உருவாக்கினர். பலநூறு எழுத்தாளர்கள் உருவானார்கள். நீண்ட இசைப் பாரம்பரியம் உரு வானது. பல நூறு இசை, நாடக, கலைஞர்களும் உரைஞர்களும் உருவானார்கள். பல நூறு ஒலிபரப் பாளர்கள், தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.


கற்றுத் தேறிய சமூக விஞ்ஞானிகள் எல்லாம் அதில் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். பெண் கலைஞர்கள் எழுத்தாளர்கள், சிறு கதையா சிரியர்களை உருவானார்கள். ஒரு சிறுபான்மை சமூகத்தின் வாழ்க்கை முறை, வரலாறு, பண்பாட்டு பதிவு, மொழி என பலவும் பதியப்பட்டன. மொழி ரீதியான சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் நிகழ்சிகள் படைக்கப்பட்டன. முஸ்லிமல்லாதவர்களும் அதனை விரும்பிக் கேட்டார்கள். அந்த ஒரு மணி நேரத்தை வைத்து இந்தியாவைச் சேர்ந்த மூன்றுக்கும் அதிக மான கலாநிதிப் பட்ட ஆய்வுகள் வந்துள்ளன.

அக்கால அரசியல் இதற்கு சாதமாக இருந்தது. அந்த சேவைதான் 90 களுக்கு முந்திய முஸ்லிம் சேவை. அந்த நினைப் பில்தான் இப்போதும் மக்கள் முஸ்லிம் சேவையைக் கேட்கின்றார்கள்.  


இனி உங்கள் கேள்விக்கு வருகின்றேன். இப்போது பல மணி நேர இஸ்லாமிய ஒலிபரப்பு இடம் பெறுகின் றது. முஸ்லிம் சேவை நேரத்திலும் தமிழ் சேவை நேரத்திலும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றில், 78 வீதமானவை முற்றிலும் பயான் நிகழ்ச்சிகள். 


ஆன்மீக சொற் பொழிவுகள். இவை மக்களை வெறும் நுகர்வோராக மாத்திரம் மாற்றி வருகின்றன. அதிகரித்த உபதேசங்கள் மக்களை செயற்படுகின்றவர்களாக ஒரு போதும் மாற்றப் போவதில்லை. சமூகத்தில் சோம்பேறித்தனத்தை விதைக்கின்றன. செயலாற்றலைத் தூண்டாத ஆன்மீகத்தை விதைக் கின்றன. சிக்கல் நிறைந்த இந்த உலகில், மக்களை ஈர்க்க சொற் பொழிவுகள் எனும் உத்தி ஒரளவுக் குத்தான் தாக்கம் செலுத்த முடியும். எனவே இஸ்லாமிய எண்ணக்கருத் துக்கள் சொற் பொழிவுகளாக மாத் திரமன்றி, வேறு தாக்கமான வடி வங்களிலும் வழங்கப்பட வேண்டும். 
  

அத்தோடு, உள்ளடக்கத்திற்கும் விளம்பரங்களுக்கும் இடையில் மக்களின் ரசனை புண்பட்டுப் போயிருக்கின்றது. இது முதலில் சட்ட விரோதமானது. தவறை நாம் செய்வதால் யாரிடமும் நியாயம் கேட்க முடியாது. விளம்பரங்கள் வேண்டாம் என்பது எனது கருத் தல்ல. விளம்பரங்கள் நிழ்ச்சிகளின் தரத்தை பாதிக்க வேண்டாம் என் கின்றேன். நிகழ்ச்சிகளில் பல்வகையை அழிக்க வேண்டியதில்லை. விளம்பரங்களை வைத்துக் கொண்டே, நிகழ்ச்சிகளின் தரத்தைப் பேணும் உத்திகளை கையாளலாம். மணித்தியாலங்களை நிமிடங்களாக அரிந்து சில்லறை யாவாரம் செய்வதை விட, விளம்பரமும் உள்ளடக்கமும் தரத்தில் உயர்ந்திருக்கலாம். 

முஸ்லிம் ஒலிபரப்பைப் பொருத்தவரை, இது இலங்கை வானொலி நிர்வாத்தின் கடமையோ, அல்லது சந்தைப் படுத்தல் பிரிவின் கடமையோ மாத்திரமல்ல. இதில் முக்கிய பங்கு முஸ்லிம் சேவைக்கு உண்டு.

இப்போது கட்டணம் அதிகரிக் கப்பட்டதென்று உயர் நிர்வாகத்தில் குறை ண முடியாது. இதே நிர்வாகத்தின் கீழ்தான் தமிழ் சேவையும் இயங்குகின்றது. அங்கு இந்த மல்லுக்கட்டல்கள் இல்லை. முஸ்லிம் சேவையில் காரியங்களை நிர்வாகத்தினர் தீர்மானிக்கின்றார் கள் என்றிருந்தால் அதற்கு சகப்பான ஒரு உண்மை இருக்கின்றது. காலத்தின் தேவையை ஈடுசெய்யாமல், தனிப்பட்ட முதலீட்டலுக்காவும், அற்ப சுய புகழுக்காகவும் ஊடகத்தை பயன்படுதும் ஆர்வ த்தை சில முன்னைய அதிகாரிகள் வெளிப்படையாகக் காட்டினார்கள். முஸ்லிம் ஒலிபரப்புக்குப் பின்னால் அதிகம் சுய நலம் இருப்பதை நிர்வாகம் கண்டு கொண்டது. ரமழான் கால ஒலிபரப்புகளின் போது சிலர் ஒலிபரப்பினை புண் படுத்திய விதத்தை அவர்கள் பார்த்தார்கள். அங்கு இயக்கச் சண்டைகளை விலத்தி விட்டார்கள். நாம் எடுத் ததற்கெல்லாம் அரசியலை இழுப்பவர்கள் என்று அவர்களுக்கு தெரியும். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தித்தான் விடயங்களை சாதிக்கின்றோம் என்றால் நாம் நமது தகுதியை இழந்து விட்டோம் என்று அவர்களுக்குத் தெரியும். இவை எல்லாவற்றையும் செய்து, நிர்வாகத்திடம் பிடியைக் கொடுத்து விட்டு இனி அவர்களை குற்றம் சொல்ல முடியாது. இப்போது புதிதாக முஸ்லிம் சேவையை பொறுப் பேற்றவர்களுக்கு ஒரு சுமூகமான சூழ்நிலை அமையவில்லை எனலாம். 


தயாரிப்பு உத்தி, நிகழ்ச்சி உள்ளடக்கம், பொது மக்களின் பங்கு பற்றல், நிகழ்ச்சிப் பல்வகைமை, காலப் பொருத்தமுடைமை, தயாரிப் பாளர்களின் ஒலிபரப்பு ஆற்றல், சமூகத்தின் சமூகப் பொருளாதார நகர்வு குறித்த பிரக்ஞை மற்றும் சிறந்த பின்னூட்டலுக்கான உத்திகள் என பலவற்றைப் பேசவேண்டும். அதற்கு இது பொருத்தமான இடமல்ல. இறுதியாக, நல்ல நிகழ்ச்சிகள் பல இப்போதைய முஸ்லிம் சேவையில் உள்ளன. அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் சூழ்நிலை மலினப்பட்ட, ஒழுங்கு முறை தவறிய விளம்பரங்களால் இல்லாது போயுள்ளன. 


வானொலியில் அதான் ஒலி பரப்பாவது பற்றி


உண்மையில் இதில் ஒரு பக்கத்தில் உள்ளது அரசியல் நலன். அடுத்த பக்கத்தில் உள்ளது பொருளாதார நலன். காசு கொடுத்து அதான் விற்கப்படுகின்றது என்பதுதான் உண்மை. இதில் சமூக நலன் என்று எதுவும் இல்லை. வானொலியில் அதான் ஒலிப்பது முஸ்லிம்களின் உரிமையல்ல. வானொலியில் அதான் ஒலிபரப்பாகவில்லை என்பதற்காக வழமையாக தொழுபவர்கள் தொழாமல் இருக்கப் போவது மில்லை. அதான் ஒலிக்கவில்லை என்பதற்காக நாம் எந்த உரிமையையும் இழக்கப் போவதும் இல்லை. 


இது முஸ்லிம்களை பெருமைப் படுத்துவற்கான ஒரு ஏற்பாடு. பெருமை மட்டும் போதுமானவர்களுக்கு இது பெரிய விடயம். அதனால், சகோரதர சமயத்தின் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு அதான் ஒலிபரப்பாவதுண்டு. இது இஸ்லாத்தின் முன்மாதிரிக்கு இழுக்கா னது. இதனை முன்னர் ஒரு தடைவை சுட்டிக்காட்டிய போது நமது சொந்த விடயங்களை வெளியில் பேசக்கூடாது என்றார் ஒரு சகோதரர். நாம் கண்ணை முடிக்கொள் கின்றோம் என்பதற்காக மற்றவர்கள் பார்வையற்றவர்கள் அல்ல. 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சமாளித்துக் கொண்டு காப்பாற்ற வேண்டியதில்லை. பொருத்தமற்ற சினிமாப்பாடல்களுக்கு மத்தியில் சிலநேரம் அதான் ஒலிக்கும். இன்று அரசியல் மேடைகளில் இது பெரிய தலைப் பாகியிருக்கின்றது. இது முக்கியமானது - பெருமையை விரும்பு கின்றவர்களுக்கு - அதான் ஒலிக்கச் செய்து பெருமைப்படுத்தியவர்களுக்கு பள்ளிவாசல்கள் உடைக்கப்டுவதை தடுக்க முடியல்லை. இது ஒரு பகட்டு என்பதற்கு இன்னும் என்ன வேண்டும்.



 .

 


No comments:

Post a Comment