Saturday, October 20, 2012

மழைக் குறிப்பு




நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை நாள் ஒன்றில் வீட்டில் இருக்கிறேன்.நீண்ட கோடைக்குப் பின் வந்த மழை என்பதால் யாரும் மழையை கடிந்து கொள்ளவில்லை.எல்லோர் மனதிலும் ஒரு ஆனந்தம் மிதந்து கொண்டிருக்கிறது.ஒரு மழை நாளில் அமைதியாய் வீட்டில் இருப்பதற்கு இப்போது அரிதாகத்தான் சந்தர்ப்பம் கிடைக்கிறது.வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்துக் கொண்டு மழையைக் காண்பது ஒவ்வொரு வயதிலும் நடப்பதுதான்.ஆனால் அது ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு அனுபவங்களாக நிகழ்கிறது.

சிறுவனாக இருந்த நாட்களில் மழை பெய்யும் போது காகிதக் கப்பல் செய்து விளையாடும் நினைவு எப்போது மழை பெய்தாலும் நினைவுக்கு வருகிறது.ஆனால் இந்த வயதில் ஒரு காகிதக் கப்பலை செய்து நீரில் விட மனது நினைப்பதேயில்லை.வீட்டில் திட்டு வாங்குவோம் எனத் தெரிந்தும்,கைகளில் குடையிருந்தும் நனைந்து கொண்டே இந்த வானத் திற்குக் கீழ் திரிந்த நாட்களைத் தொலைத்து எத்தனை வருடங்க ளாகின்றன.இருந்தும் அப்படிச் செய்து பார்க்க மறுபடி நினைத்ததில்லை. வெறித்தபடி மழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அவ்வளவுதான்.



பேரூந்து அல்லது ரயிலில் இருந்து மழையைப் பார்ப்பது மழையோடு பயணிப்பதைப் போன்றது.பயணம் முழுக்க “இறங்கும் போது எப்படியாவது மழை நின்று விட வேண்டும்“ என்ற பிரார்த்தனையோடே மனது இருக்கும்.வேகமாக ஜன்னலில் பட்டுத் தெரிக்கும் ஒரு துளி மழையானது எம்மைப் பாதிக்கும் ஒரு கவி வரி போலவே இருக்கின்றது.ஜன்னலில் படிந்திருக்கும் துவானத்தில் நம் பெயரையோ நமக்குப் பிடித்தவர்களின் பெயரையோ யாரும் காணாத வன்னம் எழுதி அழித்து விடுகிறோம்.ஆனால் குழந்தைகள் அதன் பாட்டிற்கு எழுதிக் கொண்டிருக்கின்றன.

ஒரு மழைநாளில் இந்தப் பிரபஞ்சமே நனைகிறது.மனிதர்கள் எப்படியாவது தம்மை மழையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.ரயிலுக்குள் அமர்ந்திருக்கிறேன் முழு ரயிலும் நனைகிறது.ரவிக்குமாரின் இந்தக் கவிதை வரிகளோடு என் நினைவும் அதன் பயணத்தைத் தொடர ஆரம்பிக்கிறது.

மழையில் நிற்கும் ரயிலை விட
சோகமானது வேறெதுவும் உண்டா
என்று கேட்கிறாய்
தண்டவாளம் எப்படி மறந்தது உனக்கு.



2 comments:

  1. கடந்த சில நாட்களாக இங்கு மழை பெய்யும் போது அதில் நனைய முடியாமல் ஏங்கிகொண்டிருந்தேன் . இந்த வரிகள் என் மனதை அப்படியே பிரதிபலிக்கின்றது . ஆகிரோகுரசோவாவின் "ரஷமோன்" இன் ஆரம்பத்தில் பெய்யும் மழை தந்த அதே அனுபவத்தை இந்த வரிகள் மீண்டும் மீட்டுகின்றன.
    வரிகளின் கோர்வை முற்றிலும் ஒரு வேறுபட்ட முதிர்ந்த இன்சாப் ஐ வெளிப்படுத்துகின்றது ,
    வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...

      Delete