Monday, October 1, 2012

வறுமை

நண்பர், சாளை பஷீரின் கவிதை ஒரு பகிர்விற்காக...






நான் தவழ்ந்த தெருவது
தெருவை மறைக்கும் வீட்டு முகப்புகள்


எல்லா திசைகளையும் மறைத்து நிற்கும்
மலைகளையொத்த கட்டிடங்கள்

வசீகரிக்கும் கம்பீர மலைப்பொதும்பில்
வசிக்கும் குருவியின் கூடு போல
அந்த வீடிருந்தது.

பெருநாள் கொடைக்காக கதவை தட்டினேன்
அறியாத முகமாகயிருக்கும் என எண்ணிய கணத்தில்
அறிந்ததாயிருந்தது அந்த மனிதரின் முகம்

என் பால்யத்திலிருந்தே பார்த்துப் பழகிய முகம்
அவரின் வறுமையின் வேர்களை அறிந்திடாத
அறியாமையை எண்ணி தலை கவிழ்ந்தேன்

விறைத்த பிணமாய் விறகு
வறுமையில் எரிந்து கொண்டிருந்தது

அவரின் ஒற்றையறை வீட்டில்
கரும்புகை எல்லா திசைகளிலும்
துயரின் இருளாய்ப் படிந்திருந்தது

கண்ணியம் மறுக்கப்பட்ட வாழ்வின்
தடயங்கள் அங்கு தெறித்து கிடந்தன

வாழ்வை மறுத்தவர்கள் மீது
அவருக்கு எவ்வித
முறையீடுமில்லை

சேவல்களே கூவாத தேசத்தில்
விடியலே இல்லாமல் போய் விடுமா?
விசும்பல்கள் இல்லையென்றால்
வேதனை இல்லையென்று ஆகி விடுமா?.

தடுமாறும்போதும் தன்மானத்தால்
கண்ணீரை புதைத்து வைத்து தவிக்கிறது
இரக்கத்தை எதிர்பாரா மனசு
ஒரு புன்னகையால் எல்லாவற்றையும்
சமன் செய்யும் அன்பிற்காக!!


No comments:

Post a Comment