“இஸ்லாத்தில் இசை“ நூலுக்கு அனார் அவர்கள் எழுதிய அறிமுகம் இம்மாத உயிர்மை இதழில் பிரசுரமாகியுள்ளது.இந்திய நண்பர் பஷீர்,எழுத்தாளர் ஷாஜி, கவிதாயினி அனார் ஆகிய மூவரையும் இங்கு நன்றியோடு நினைவு படுத்துகிறேன்.
இசை எரிக்காத தீ...
அனார்
“ உன்னை அன்றி வேறெதையும் நினைத்தறியேன் ......
உன் புகழ் கூறாத சொல் அறியேன் ......
அணை போட்டுத் தடுக்காத அருள் வெள்ளமே ......
நெஞ்சில் அலைமோதும் நினைவெல்லாம் நீ யல்லவோ ...... ”
என்ற காயல் ஷேக் முஹம்மது அவர்களின் இஸ்லாமிய கீதத்தை என் சிறுவயதில் கேட்டபோதெல்லாம் மிகவும் அந்தரங்கமான நெகிழ்வான ஒரு உணர்வு ஏற்படுவதுண்டு. இன்றும் மனம் கனத்திருக்கும் தனிமையில் இப்பாடலை கேட்கும்பொழுது அக்குரலின் உணர்வு ஒருவித பரிதவிப்பை தருவதுண்டு. அந்தப்பாடலின் இரண்டாம் பகுதியில் அழகானவரி ஒன்று பாடப்படும் :
“ தனிமைக்குள் தனிமையாய் இருப்பவனே ...... ”
இவ்வரியை அப்பாடகன் பாடும் தருணம், உருகி வந்துவிழும் கண்ணீர்த் துளிகள்… அவனுடைய குரலின் இனிமைக்காகவா ? அந்த வார்த்தையின் ஆழ்ந்த அர்த்தத்திற்காகவா ? பாடலின் மெட்டுக்காகவா ? என்று எனக்கு இப்போதும் சரியாகத் சொல்லத் தெரியவில்லை.
நான் மிகச் சிறுமியாக இருந்த நாட்களில், இசையை உணர்வதற்கான பல வாய்ப்புகள் வீட்டிலிருந்தன. எனது தந்தை மிக நேர்த்தியான அறபுமொழிப் பாடல்களை / ஹஸீதாக்களை பாடக் கேட்டு வளர்ந்தவள். எனது தந்தையின் தந்தையும் ஆலிமாக இருந்தவர். மாலைப்பொழுதுகளில் அவரது சாய்மணைக் கதிரையில் சாய்ந்தபடி பாடிக்கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அவரது மடிக்குள் அமர்ந்திருப்பேன். அறபுச் சொற்களுக் கிருக்கும் மாயத்தன்மை வசீகரிக்கக் கூடியதும் தனித்துமானதும் ஆகும். பள பளப்பான, கம்பீரமான, கூரான வாள்போன்றது அராபியமொழி.
தமிழ்மொழியும், அறபுமொழியும் இரண்டரக் கலந்து சொற்பொழிவுகள் கலைநிகழ்வுகள் என ஊரே களைகட்டியிருக்கும், இசைமயமான காலமொன்றுவரும் அது ‘றமழான்’ நோன்பு காலம். ஒரு மாதம் முழுவதும் சிறுவர்களாகிய நாங்கள் இரவில் தூங்குவதே இல்லை. றபானின் ஓசையைக் கேட்பதற்காக காதுகளைத் திறந்து வைத்து கண்களை மூடிக்கிடப்போம். நள்ளிரவு மின்சாரமில்லாத அந்நாளில் ஊரில் கைவிளக்கை சிறுவன் ஒருவன் கைகளில் பிடித்தபடி முன்னே நடக்க றபான் இசைப்பவர் ‘ பாவா ‘ தனது றபானை மிடுக்குடன் பிடித்து பலமாக தட்டித் தட்டி ஒலியெழுப்பி ஒவ்வொரு வீதியாக உறங்கும் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிச் செல்வார். அவரது வாயிலிருந்து ‘ஹஸீதா’ அதிர்ந்துவிழும். அவ்விரவின் தனிமைக்குள் அந்த முதிய பாடகன் தன் ஆண்மையான தீராத குரலைச் சிதறவிட்டு, வெறும் கால்களை மணலில் புதையும்படி நடந்து செல்வதை பச்சைநிறத் தலைப்பாகை மறையும்வரை நானும் கோடி நட்சத்திரங்களும் பார்த்து நிற்ப்போம். என்றைக்காவது ஒருநாள் அவரை அந்நள்ளிரவில் ‘ ஸஹர் ‘ நேரம் வீட்டுகழைத்து தேனீர் கொடுப்பார்கள். அவர் தேனீர் அருந்தும் வரை அந்த றபானை தொட்டு மெல்ல தட்டித் தட்டி அதிசயத்தைப் பார்த்து நிற்பேன்.
இன்று அந்த அற்புதங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. இருந்த இசை மரபுகளையும் முற்றாக இழந்து நிற்கிறோம். ‘ இஸ்லாத்தில் இசை ‘ எனும் இந்த நூலை வாசிக்கையில், என் சிறு வயது உணர்வுகள், மிகுந்த ஆதங்கத்துடன் நினைவின்மேல் எழுந்து வருவதை தவிர்க்க முடியவில்லை. நெடுங்காலமாக இசை தடைசெய்யப்பட்ட ஒன்று எனும் கருத்தே நிலவியது. இசை கேட்டால் “ நரகத்தில் இரு காதுகளிலும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுமென“ பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடுங்கியவர்களாகவும், வெருண்டோடுபவர்களாகவும் இருந்தோம்.
எதற்குத்தான் அன்று இசை இருக்கவில்லை. பிறந்த குழந்தையை முக்காடிட்ட பெண் மெல்லிய குரலில் பாடிப்பாடி தூங்க வைப்பதிலிருந்தே இஸ்லாத்தில் இசை அல்லது பாடல் கேட்பதற்கான முதல் வாய்ப்பு உருவாகி விடுகின்றது. இசையுடன் தொடங்கி இசையுடன் முடியும் வாழ்வு முறையே எங்களது கிராமத்திலிருந்தது என, எனது தந்தை விபரிக்கக் கேட்டிருக்கிறேன்.
சுமார் 60 – 70 வருடங்களுக்கு முன்புள்ள திருமண நிகழ்வு : பறை அடிப்பவர் ஒலி எழுப்பி முன்செல்ல, குரவை இடும் முஸ்லீம் பெண்கள் கூட்டமாய் குரவையிடும் ஓசையோடு பின்னே நடந்துவர, நடுவில் மணமகனைச் சூழ்ந்தபடி ஆண்கள் அறபு கீதங்களைப் பாடியவாறு, கிராம வீதிகளில் ஊர்வலம் வருவார்கள்.
மரணித்தவரை சந்தூக்கில் கொண்டு செல்லும் போதும், ‘பைத்‘ ஐ பாடி நல்லடக்கத்திற்கு எடுத்துச் செல்லும் வழக்கமும் இருந்திருக்கிறது.
மகிழ்ச்சிகரமான நிகழ்வொன்று நடக்கும் வீட்டுக்கு, ‘ பக்கீர் பாவாக்களை ’ அழைத்துவந்து இரவில் தொடங்கி அதிகாலைவரை இடம்பெறும் இசையும், நடனமுமான கோலாட்டம் போன்றதான இசை வடிவங்களும் இருந்துள்ளன.
பெண்கள் தனித் தனி குழுக்களாக இசைத்துப் பாடுகின்ற ‘மௌலூது‘ எனப்படும் ஒருவித கதைப் பாடல்கள் இன்றும் சில இடங்களில் பெண்களால் பாடப்பட்டு வருகின்றன.
உலகில் இசையோடு சம்மந்தப்படாத மதங்கள் எவையுமில்லை. மதங்களை மனிதர்களிடம் எடுத்துச் சென்றதில் இசைக்கு தனிப் பங்குண்டு. ‘சூஃபிகள்‘ அவர்களுக்கான தனித்த இசை வடிவங்களையும், நிலவிவ ருகின்ற இசையில் நிறைந்த தாக்கத்தைச் செலுத்துபவர்களாகவும் காணப் படுகின்றனர்.
உலகின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ஐந்து வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுகின்றது. இந்த ‘ அதானை ‘ நபிகளின் காலத்தில் மிக இனிமையாக கூறியவர் கறுப்பினத்தவரான பிலால் (ரழி) அவர்களாகும். தன்னிகரற்ற அவரது குரல் வளமும், இசைத் தன்மையும் மிகப் பிரபலமானது. பிலால் (ரழி) அவர்கள் “ புல் புல் “ (பாடும் பறவை) என்று நபிகளால் செல்லப் பெயரிட்டு அழைக்கப் பட்டார்கள்.
தாவூத் (நபி) க்கு வழங்கப்பட்ட வேதத்தை, இசையினூடாக அவர் மொழியும் அழகில், மனிதர்கள் மயங்கினர். பறவைகளோ அவரது குரலின் இனிமை கேட்டு, சற்று நின்று தாமதித்து செவிமடுத்து பின் பறந்து சென்றன என்று சொல்லப்படுகின்றது.
“ எங்கள் மீது ஒரு பௌர்ணமி பிரகாசிக்கிறது
அது மக்காவிலிருந்து விடைபெற்று வருகிறது “
இவ்வரிகள் மக்காவிலிருந்து வெளியேறிய நபி அவர்களை, மதீனாவின் மக்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடி, மகிழ்ச்சியில் பாடி வரவேற்று இசைக்கப்பட்ட பிரபலமான பாடலாகும்.
இசை என்பதே ஒருவகை ஆன்மீகம்தான்.
எம்முடைய இசையை அறிவதற்கான, ஓரளவு ஆறுதலான விடயங்கள் இந்தநூலில் உள்ளன. ஹறாம், ஹலாலுக்கிடையிலான தெளிவான பார்வை சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. ஆகுமான இசை என்பது என்ன ? எத்தகைய இசை ஆகுமானதில்லை ? என்ற இரு கேள்விகளுக்கும் இந்நூலில் பதில் இருக்கிறது. நடு நிலமையான ஒரு சிந்தனையை வலிமையாக பதிவு செய்திருக்கிறது. பல ஆதாரங்களை முன்நிறுவி முற்றிலுமாக இசையை இஸ்லாம் மறுக்கவில்லை என்ற கருத்தை தெளிவு படுத்துகின்றது. ஆனபோதிலும், மேலும் தெளிவு பெறவேண்டிய விடயங்களுக்கான தேவைகள் காணப்படுகின்றன. எனவே இந்தநூலை ஆரம்ப முன்னெடுப்பாகக் கொள்ளமுடியும்.
மேலும் இந்நூலில் கூறப்பட்டது போல :
“ நதிக்கரைகளில் மரங்களின் நிழலில்
இசைக்கருவிகளின் நரம்புகள் இசைக்கும்
மெல்லிய கவிதைகளை
ரசிக்கத் தெரியாதவன்
கடின சித்தம் கொண்டவனும்
கழுதைக்கு நிகரானவனுமாவான் ! ”