Saturday, February 4, 2012

அந்திப் பொழுதின் மகிழ்ச்சியென்பது...

இந்திய நண்பர் அன்பிற்குரிய பஷீர் அவர்கள் இந்தப் பத்தியை எனது வலைப்பூ வுக்காக அனுப்பியிருந்தார்.மிக்க அன்புடன் அதனை இங்கே பிரசுரிக்கிறேன்.



எல்லா அந்திப்பொழுதுகளும் மகிழ்ச்சிகரமானவையா?
காட்சி-1
நான் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தினெதிரே உள்ள சாலையில் 4 நாட்களுக்கு முன் அந்தி சாயும் வேளையிலே பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அந்த பகுதி சென்னையின் குருதி நாளப்பகுதி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு வண்டிகளின் இரைச்சல், எச்சரிக்கை ஓசை, தொடர்வண்டியையும் பேருந்தையும் பிடிக்க குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் மக்கள்,சாலையோர சிறு வணிகர்களின் கூவல், சென்னை நகரத்தையே நிர்வகிக்கும்  அதிகார மையமான மாநகராட்சி தனது சர்வ வல்லமையுடன்  குடி கொண்டுள்ள ரிப்பன் கட்டிடம்,மெட்ரோ தொடர்வண்டி சேவைக்காக தோண்டப்படும் நிலம்,அதை மறைக்க ஆளுயர தகர தடுப்புக்கள் என மொத்த பரபரப்பும் அந்த பகுதியையே ஆட்கொண்டி ருக்க, அங்குள்ள ஒரு சோபையிழந்த கட்டிடத்தின் காட்சி என் நினை வோட்டத்திற்கு ஒரு தடை போட்டது.  

அதுதான் விக்டோரியா பொது அரங்கு என்றழைக்கப்படும் (VICTORIA PUBLIC HALL) செந்நிறக்கட்டிடம்..இது 1887 ஆம் ஆண்டு ஆங்கில - இஸ்லாமிய கலவை கட்டிட பாணியில் நிறு வப்பட்ட நகர அரங்காகும். இங்கு தேசத்தந்தை காந்தி, கோபால கிருஷ்ண கோகலே,வல்லப்பாய் பட்டேல், விவேகானந்தர் என  இந்தியாவின் அரசியல் பிதாமகர்கள்,தேச சிற்பிகள், ஆன்மீகவாதி என பென்னம்பெரும் தலைகள் வருகை புரிந்தும் உரை யாற்றியுமுள்ளனர். வெள்ளையர்கள் நாட்டை விட்டு அகன்றதோடு இக்கட்டிடத்திற்கான முக்கியத்துவமும் படிப்படியாக மங்கத்தொடங்கியது.  அறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட இக்கட்டிடம் அதன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சீந்துவாரின்றி சிதிலமடைந்து கிடந்தது.அதன் பிறகு கடந்த தி.மு.. ஆட்சியில் இந்த வரலாற்றுப்பழமை வாய்ந்த கட்டிடத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.அவைகள் நடப்பதற்கான எந்த தடயமும் இந்த ஆட்சியில் நடந்த மாதிரி தெரிய வில்லை.  


அதிகாரத்தின் விரிந்த பரப்பை பறை சாற்றும் முழுக்க முழுக்க ஆங்கிலே யப்பாணியில்  கட்டப்பட்ட ரிப்பன் கட்டிடத்தின் மிக அருகாமையில்தான் இந்த விக்டோரியா அரங்கு அமைந்துள்ளது. வெப்பம் மிகுந்த பகலுக்கும் குளிர்ந்த இரவுக்கும் இடையே மயக்கும் தன் பொற்கிரணங்களால் சந்தி செய்யும் அந்த அந்தி வானின் ஆட்சிக்கு   விக்டோரியா அரங்கின் ஓரமாக ஓரங்கமாக உயர்ந்து நிற்கும் அந்த கோபுரம் எந்த வகையிலும் ஆட்பட்ட மாதிரி தெரியவில்லை. அக்கோபுரத்தின் நான்காம் அடுக்கிலுள்ள நீள வடிவிலான மூன்று ஒளி மாடங்களும் வட்ட வடிவிலான ஒரு ஒளி மாடமும் பரவசமூட்டும் எந்த  ஒரு ஒளியையும் நிராகரித்து நிற்கின்றன. 

இளம் வயதில் கணவனை இழந்து வாழ்க்கையை சரிவர வாழாமலேயேயே முதுமையை எட்டிபிடித்த ஒரு முன்னாள் இளைஞியின் ஆற்றாமை அந்த மறுப்பில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஒரு காலத்தில் ஊர் சீமாட்டியின் அஜந்தா கொண்டைக்கே உரிய ஆங்காரத்துடன் நிமிர்ந்து நின்ற அக்கோபுரம் இன்று விறகுகளின் மரணச்செய்தியை பிரகடனப்ப டுத்தும் புகை போக்கி போல தனது இறந்த இழந்த இளமையை கனத்த துக்கப்பெருமூச்சாக அந்த ஒளிமாடங்களின் வழியே வெளி விட்டுக் கொண்டேயிருக்கின்றது

காட்சி-2

 

''எலும்பும்,சதையும்,குருதியும் கொண்ட மனிதனின் அவலமானாலும் சரி அந்த அவலத்தின் படிமகாட்சியான கல்லாலான விக்டோரியா அரங்கத்தின் கதையானாலும் சரி இவையனைத்தையும் உறுத்தலின்றி எளிதாக  கடந்து செல்ல எல்லாம் காலத்தின் கோலம் என்ற ஒற்றை வரிதான் நமக்கிருக்கிருக்கின்றதே……..''

வழமையாக நான் தொழப்போகும் பள்ளிவாசலில் சந்தி காலத் தொழுகையை நிறைவேற்றி விட்டு படிக்கட்டுகளின் வழியே இறங்கி வரும்போது இது வரை பார்த்திராத ஒரு முதியவர்  யாசகம் கேட்டு நின்றி ருந்தார். வழமையாக அங்கு முஸ்லிம் சமூக யாசகர்களே நிற்பது வழக்கம். அவர்களின் முகங்களும் எனக்கு பழக்கம். நான் இன்று பார்த்த அம்முதியவர் ஒரு முஸ்லிமல்ல என்பது அவரின் தோற்றத்தை காணும் போதே விளங்கக்கூடியதாக இருந்தது. அம்மனிதர் இரு கைகளில் ஒரு சிறிய துண்டை ஏந்தியிருந்தார்.வாயால் ஒன்றும் கேட்கவில்லை. முதிர்ந்த வயதின் பக்க விளைவான பார்வை மங்கலுக்காக கனத்த கண்ணாடி ஒன்றை அணிந்திருந்தார். மூன்றாம் படிக்கட்டில் நான் என் காலடியை எடுத்து வைத்தபோது அவரின் பார்வை மங்கலைப்போலவே மங்கிப் போயிருந்த அவரது பழைய கண்ணாடியின் வழியாக அக்கண்களை காண நேர்ந்தது.காலத்தின் கனத்த ஓட்டத்தில் திரை படர்ந்திருந்த அக்கண்கள் சொன்ன சேதி ஆயிரம்.


அக்கண்களில் எண்பதுகளின் தொடக்கத்திலும்,தொண்ணூற்களின் நடுவி லும் தங்களது இருப்பை காலத்தின் பெருவெளியில் கரைத்துக் கொண்ட என் பாட்டனாரும்,தந்தையாருமே தெரிந்தார்கள்.அந்த காலக் கண்ணா டியின் ரசவாதத்ததினால் என் மனதின் மற்றுமோர் கதவு படாரென திறந் தது. அம்முதியவர் ஒரு காலத்தில் இளமையோடும், வலிமையோடும்தான் திகழ்ந்திருப்பார் என்பதில் எந்த அய்யமுமிருக்க முடியாது. கரும்பின் தெள்ளிய சுவை மிகுந்த சாற்றை துளி கூட விடாமல் உறிஞ்சிவிட்டு ஒன் றுக்கும் உதவாமல் போன அந்த சக்கையை சற்றும்  தாமதிக்காமல் சட்டென உமிழும் அந்த அரவைப்பொறியின்  இரக்கமற்ற பங்காளிகளாக அமுதியவரின் குடும்பமும் ,அது வாழும் சமூகமும்  காட்சியளித்தனர்.

அக்கண்கள் வாசித்த குற்ற பத்திரிக்கையின் மவுனமொழி கூரிய அம்பை விட மிக கூர்மையாக என் இதயத்திற்குள் பாய்ந்தது. பையிலிருந்த பத்து ரூபாயை எடுத்து அவரின் கரங்கள் ஏந்தியிருந்த துண்டினுள் வைத்தேன். GOD BLESS YOU! என்ற ஈரம் மிகுந்த சொற்கள் அம்முதியவரின் வாயிலிருந்து நடுக்கத்துடன் வெளிப்பட்டன.  அம்முதியவரை கடந்து என் இருப்பிடம் சென்று சேர்ந்து பல மணித்துளிகள் ஆகியும் என்னால் என் கண்ணீர் துளிகளை கட்டுப்படுத்திட இயலவில்லை.

எலும்பும்,சதையும்,குருதியும் கொண்ட மனிதனின் அவலமானாலும் சரி அந்த அவலத்தின் படிமகாட்சியான கல்லாலான விக்டோரியா அரங்கத்தின் கதையானாலும் சரி இவையனைத்தையும் உறுத்தலின்றி எளிதாக  கடந்து செல்ல எல்லாம் காலத்தின் கோலம் என்ற ஒற்றை வரிதான் நமக்கிரு க்கிருக்கின்றதே……..
  







No comments:

Post a Comment