இத்தனை வருடப் பழக்கத்தில் எத்தனை பகிர்தல்கள்... பறிமாறல்கள்... புரிதல்கள்..எல்லாம் மறக்க முடியாத நினைவுகள் நண்பனே! கொள்கை எம்மை நீண்ட நாள் நண்பர்களாக ஆக்கியிருக்கின்றது.
இறைவனுக்காகக் கொள்ளும் நட்பில் எப்போதும் ஒரு ஆத்ம திருப்தி இருக்கின்றது.அதன் எல்லை இப் பிரபஞ்சத்தை தழுவி நிற்கின்றது.வானவில் வசந்தம் போன்றதுதான் அந்த நட்பும். பல்வேறு வண்ணங்களால் ஆகியிருக்கின்றது.ஈமானின் சுவையை ஒருவன் இங்குதான் உணர்ந்து கொள்கின்றான்.அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சுவை.
நண்பா! வாழ்க்கை எல்வோருக்கும் ஒன்று போல் வாய்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை.அதனுள் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள். ஈமான் எல்லாவற்றையும் ஒற்றைப் புள்ளியில் சேர்த்து விடுகின்றது.ஒவ்வொரு பரிமானத்தில் ஒவ்வொன்றும் பயணிக்கின்றது. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.
ஆயுள் முடிவதற்குள் இந்த வாழ்க்கையை வென்றாக வேண்டும். உனக்குள் எப்போதும் சாதனைக் கனவுகளை வளர்க்கவே நான் விரும்புகிறேன். வளர்த்திருப்பேன் என நினைக்கிறேன்.
நல்ல நட்பென்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.அதிலும் இறை வனுக்காக நட்புக் கொள்ளும் சந்தர்ப்பம் அனைவருக்கும் வாய்ப் பதில்லை. எப்போது நாம் சுயநலமற்று அடுத்தவருக்காய் வாழ்கிறோமோ அப்போதுதான் வாழ்க்கை அர்த்தப்படுவதாக தெரிகிறது.
வாழ்க்கையில் எல்லோரையும் நேசிக்க வேண்டும்.மதிக்க வேண்டும்.ஆனால் எல்லோரையும் புனிதனானக் கருதத் தேவையில்லை. ஒவ்வொருவருக் குள்ளும் பலம், பலவீனம் இருக்கத்தான் செய்கிறது.அதற்கு யாரும் யாரையும் மறுத்துக் கொள்ளத்தேவையில்லை.பலத்தை அதிகரிப்பதற்கும் பலவீனத்தைக் குறைப்பதற்கும் பரஸ்பராம் உதவிக் கொள்ள வேன்டும். நேரம் கிடைக்கும் போது சிரித்துக் கொள்ளும் நட்பில் எந்தப் பயனும் இல்லை நண்பனே!
இந்த உலகைப் பார்க்கும் போது எவ்வளவோ எண்னத் தோன்றுகின்றது. ஓவ்வொரு விடியலிலும் அந்தியிலும் எத்தனை மாற்றங்கள்...எத்தனை வசீகரங்கள்...எவ்வளவு கவலைகள்... எல்லா நிமிடங்களிலும் ஒரு குழந்தை பிறந்து கொண்டுதான் இருக்கிறது,ஒரு மரணம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஓவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள்.தம் பிரத்தியேகக் கனவுகளில் அதிக ஆர்மாய் இருக்கிறார்கள்.இருப்பினும் நண்பனே அதுமட்டும் வாழ்க்கையல்ல. எம் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு மற்றவனுடைய வாழ்க்கையின் இடைவெளிகளையும் நிரப்ப வேண்டும். அவர்களையும் நம் பயணத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு விசாலமோ அப்படித்தான் மறுமைக்கான வாழ்க்கையின் அர்த்தமும். வாழ்க்கை மிகச் சிறந்ததொரு பாடப் புத்தகம். இருந்தும் யாருமே அதனைச் சரியாகக் கற்றுக் கொள்வதில்லை. கற்க இவ்வளவு இருக்கின்றதா என மனிதன் கடைசித் தருணத்தில் நினைக்கும் போது வாழ்க்கை முடிவடைந்து விடுகின்றது. மரணம் வாழ்கையை விட சிறந்த ஒரு புத்தகம்.முடிவில்லாத அதன் பக்கங்களை எத்தனையோ பேர் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பனே! எஞ்சப் போவது இந்த உலக வாழ்க்கையின் நன்மை மட்டுமே. ஒரு மலையினளவு நுரையிருந்தாலும் அது பயணளிக்கப் போவதில்லை. வாழ்க்கையின் எல்லா மகிழ்ச்சிகளையும் நாம் தொலைத்து விட்டுத்தான் போகப் போகிறோம்.
நீ உனக்குள் கனவுகளை வளர்த்துக்கொள். கனவுகள்தான் வாழ்க்கை யாகின்றன. நேற்றுக் கண்ட கனவுகள்தான் இன்று மெய்பட்டிருக்கின்றன. இன்றைய கனவுகள்தான் நாளை மெய்ப்படபப் போகின்றன.
அந்தக் கனவுகளை ஜெயிக்கும் துணிவு, தன் நம்பிக்கை உன்னிடம் நிறையவே இருக்கின்றது நண்பனே.
வா இந்த சமூகத்தின் எழுச்சிக்காய் ஒரு கனவு காண்போம். அது சமத்து வத்தையும் சுதந்திரத்தையும் முழு மனித சமூகத்திற்கும் யாசிக்கும் ஒரு பெருங்கனவு. எல்லோர் முகத்திலும் மலர்ச்சியை, புன்னகையை காண நினைக்கும் இப் பணியில் நீ மனதால் இணைந்திரு நண்பனே!
ஒரு கனவு கண்டோம் என்பதற்காக அது நிஜமாகாது. அந்தக் கனவு நம் நித்திரையைக் கலைக்க வேண்டும்.சதா நம்மைத் துரத்திக் கொண்டிருக்க வேண்டும்.அக் கனவை மெய்ப்படுத்தும் நம்பிக்கையோடு உழைகை;க வேண்டும்,செயற்பட வேண்டும். அந்தக் கனவில் கொண்டிருக்கும் நம்பிக்கையை அவனது தியாகத்திலும் அர்ப்பணத்திலும் கண்டு கொள்ள முடியும்.
சாவதற்கு முன்னர் நீ படைக்கும் மகத்தான சாதனைகளினாலே மரணத்தின் பின்னரும் உன்னால் வாழ முடியும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்.நீ வாழ்ந்து இறந்தாய் என்பதற்காக சரித்திரம் உன்னை நினைவில் வைத்துக் கொள்ளாது.
நீ உன் பணியில் தூய்மையாய் களமிறங்கிடு.வானவர்கள் உனக்குத் துணை நிற்பார்கள்.கைப் பிடியளவே உன் கனவிருந்தாலும் உன் எண்னம் தூய்மை யாயின் இறைவன் அதனை ஒருநாள் நிஜப்படுத்தி வைப்பான்.
இத்தகைய ஒரு கனவை மெய்ப்படுத்தும் நம் நட்பில் எத்தனை பறிமாறல்கள்... உரையாடல்கள்... தூங்காத இரவுகள்...உண்னாத பொழுதுகள்..நினைக்க நினைக்க இனிக்கிறது நண்பனே! இந்தப் பணியில் நீ விழும் போது நான் தாங்கவும் நான் விழும் போது நீ தாங்கவும் வேண்டும்.பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்வோம்.எல்லாக் கனவுகளையும் வென்றெடுப்போம். அன்றைய நாளில் உன்னுடன் நான் என்னுடன் நீ சேர்ந்திருப்போம்.
ஒக்டோபர் வைகறை இதழில் வெளியானது