தெய்வத் திருமகள் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுத நினைத்திருந்தேன். ஷாஜியின் இந்த விமர்சனத்தை தற்செயலாக அவரது வலைப்பூவிலே வாசிக்கக் கிடைத்தது.அதனையே உங்களுடனும் பகிர்ந்து கொள்ள நினைத் தேன்...
“தெய்வத் திருமகள் பார்த்தீங்களா? பலநாட்கள் கழித்து தமிழில் வந்த ஒரு உண்மையான படம்“. ஒரு விளம்பரப்பட இயக்குநர் வெள்ளிக்கிழமை நள்ளி ரவில் அலைபேசியில் அழைத்து சொன்னார். சனிக்கிழமை காலையில் இன்னும் சிலர் அழைத்தார்கள். “மிக முக்கியமான படம். உடனடி பாருங்கள். கடைசி இருபது நிமிடத்தை தவறாமல் பாருங்கள். அது ஒரு சினிமா உச்சம்“. திரைப்படங்களைப் பற்றி தெளிவான கருத்துக்கள் சொல்லக் கூடிய சில நண்பர்களிடம் கேட்டபோது “இன்னும் பார்க்க வில்லை. நன்றாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. நகரங்களில் படம் பெரிய அளவில் ஓடக்கூடிய வாய்ப்பிருக்கிறதாம்“ என்று சொன்னார்கள். அப்படியானால் அந்த மகத்தான படத்தை உடனடியாக பார்க்க வேண்டுமே எனப் பட்டது. கருப்புச் சந்தையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு நுழைவுச் சீட்டை வாங்கி அன்றைக்கே இரவு காட்சியைப் பார்த்து விட்டேன். அரங்கு நிறைந்து ஆர்ப்பரிக்கும் கூட்டம். அன்றைக்கு என்னால் தூங்க முடியவில்லை. பொய்மையின் உச்சமான இத்தகைய படங்களை இவர்களால் எப்படி ரசிக்க முடிகிறது என்று யோசித்து!
பொய் சொல்லப் போறோம் என்கிற ஒரு படத்தை முன்பு எடுத்தவர் இப்படத்தின் இயக்குநர் ஏ எல் விஜய். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது பேட்டியை பார்த்தேன். தெய்வத் திருமகள், ஐ ஆம் சாம் (I am Sam) என்கிற ஹாலிவுட் திரைப் படத்தின் தழுவலா என்ற கேள்விக்கு ‘இந்த படத்தின் மையப் பாத்திரத்துக்கும் ஐ ஆம் சாமின் மையப் பாத்திரத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு. அவ்வளவுதான்’ என்றார். தெய்வத் திருமகள் ஐ ஆம் சாமின் அப்பட்டமான தழுவல்! ஆனால் இப்படத்தின் பிரச்சினை இது தழுவல் என்பது அல்ல. ஐ ஆம் சாமில் இருக்கும் உண்மை இதில் அறவே இல்லை என்பதுதான்.
மூளை வளர்ச்சி குறைந்த சாம் என்பவர் ஒரு உணவு விடுதித் தொழிலாளி. அவருக்கும் மனநலம் குன்றிய ரெபெக்கா என்கிற பெண்ணுக்கும் ஏற்படும் உடல் உறவில் லூசி என்கிற குழந்தை பிறக்கிறாள். பிரசவம் முடிந்த உடன் அக்குழந்தையை சாமின் கையில் விட்டுவிட்டு ரெபெக்கா ஓடிவிடுகிறாள். தனக்கு இருக்கிற குறைபாடுகளை எல்லாம் தாண்டி சாம் தன் குழந்தையை மிகுந்த அன்போடு செல்லமாக வளர்க்கிறார். உயர்ந்த மூளைத்திறனுடன் அவள் வளர்ந்துவருகிறாள். ஆனால் அவளுக்கு ஆறு வயதானபோது குழந்தைகள் நலத்துக்கான அரசு நிருவனம் ஒன்று, மேற்கொண்டு அவளை வளர்ப்பதற்கான மூளைத்திறன் சாமுக்கு இல்லை என்று சொல்லி, அவரிடமிருந்து அக்குழந்தையை பறித்து, குழந்தைகள் இல்லாத ஒரு பணக்கார பெண்மணியிடம் கொடுக்கிறது. தன் குழந்தையை மீட்டெடுக்க பேர்பெற்ற ஒரு பெண் வழக்கறிஞரின் உதவியுடன் சாம் நீதிமன்றம் செல்கிறார். ஆனால் அந்த வழக்கு தோல்வியடைகிறது. கடைசியில் அப்பாவுக்கும் மகளுக்குமான பிரிக்க முடியாத அன்புக்கு தடைபோட இயலாத அந்த பணக்கார பெண்மணி குழந்தையை சாமிடமே ஒப்படைக்கிறாள். ஆனால் இதற்குள் லூசிக்கு தன்னைவிட ஒரு அம்மா தான் தேவை என்பதை உணரும் சாம் தன் அன்புக் குழந்தையை அந்த பெண்ணுக்கே திருப்பி கொடுத்து விடுகிறான். இது தான் ஐ ஆம் சாம்.
மூளை வளர்ச்சி இல்லாத கிருஷ்ணா என்பவர் ஊட்டியில் ஒரு சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிலாளி. தன் பணக்காரத் தந்தையையும் குடும்பத்தையும் உதறி ஓடிவந்து கிருஷ்ணாவுடன் திருட்டுத் திருமணம் செய்துகொண்டவள் அவரது மனைவி பானு. அவர்களுக்கு நிலா என்கிற குழந்தை பிறக்கிறாள். பிரசவம் முடிந்த உடன் பானு இறந்து போகிறாள். தனக்கு இருக்கிற குறைபாடுகளை எல்லாம் தாண்டி கிருஷ்ணா தன் குழந்தையை மிகுந்த அன்போடு செல்லமாக வளர்க்கிறார். அதீதமான மூளைத்திறனுடன் அவள் வளர்ந்து வருகிறாள். ஆனால் அவளை முதலில் சேர்த்த பள்ளிக்கூடம் பானுவின் அப்பாவுக்கு சொந்தமானது. அதன் தாளாளராக அங்கு வரும் பானுவின் தங்கை ஸ்வேதா குழந்தைகளை அளவற்று நேசிக்கும் ஒருத்தி. அவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் குணம் படைத்தவள்.
தன் அக்காவின் குழந்தையை அடையாளம் காணும் ஸ்வேதா தன் காதலனை ஒரு அடியாளாக பயன்படுத்தியும் தன் அப்பாவின் தந்திரங்கள் வழியாகவும் அக்குழந்தயை, அது உயிரிலும் மேலாக நேசிக்கும் அதன் அப்பாவிடமிருந்து பறித்து தன் வீட்டுக்கு கொண்டுபோகிறாள். தன் குழந்தையை மீட்டெடுக்க கிருஷ்ணா ஒரு வழக்கேதுமில்லா பேரழகி வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்றம் செல்கிறார்! அந்த வழக்கு வெற்றிபெறுகிறது! ஆனால் இச்சம்பவங்களுக்கிடையில் தன் குழந்தை ஸ்வேதாவையும் அவளது கெட்ட அப்பாவையும் போன்ற ’மூளை வளர்ச்சியுள்ள’ அயோக்கியர்களிடம் வளரவேண்டியதன் முக்கியத்துவத்தை உணரும் கிருஷ்ணா தன் குழந்தையை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து அங்கிருந்து வெளியேறுகிறான். இது தான் தெய்வத் திருமகள்.
சாமுக்கு உதவி செய்ய பக்கத்து வீட்டில் ஆனி என்கிற ஒரு பெண். கிருஷ்ணாவுக்கு உதவி செய்ய பக்கத்து வீட்டில் ராஜி என்கிற ஒரு பெண். சாமுக்கு மூளை வளர்ச்சி குன்றிய நாலு நண்பர்கள். கிருஷ்ணாவுக்கும் மூளை வளர்ச்சி குன்றிய நாலு நண்பர்கள். லுசிக்கு பிடித்த ஒரு செருப்பை வாங்க பணம் பற்றாக்குறையினால் அவதிப்பட்டும் சாமுக்கு அந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களிடமிருக்கும் சொற்பப் பணத்தைக் கொடுத்து உதவி செய்கிறார்கள். நிலாவுக்கு செருப்பை வாங்க கிருஷ்ணாவின் நண்பர்களும் அதுவே செய்கிறார்கள்!
சாமும் அந்த நண்பர்களும் லூசியும் ஊதுபைகளை நூலில் கட்டி காற்றில் பறக்கவிட்டு சாலையின் ஜீப்ரா கோடுகளுக்குமேல் அணிவகுப்பாக நடந்துபோகிறார்கள். கிருஷ்ணாவும் நண்பர்களும் நிலாவும் அதையே செய்கிறார்கள். அமேரிக்க வெள்ளைக்காரர் சாமின் சிகை அல்ங்காரம் அதேபடி பின்பற்றுகிரார் ஊட்டித் தமிழர் கிருஷ்ணாவுமே. சாம் பெரும் பாலும் இரண்டு சட்டைகளும் அதன்மேலே ஒரு மேல்சட்டையும் அணிவார். கிருஷ்ணாவோ சென்னை நகரின் கொடும் வெப்பத்திலும் தனது கம்பளி மேல்சட்டையை கழற்ற மாட்டார். இப்படி பெருபாலும் பாத்திரத்துக்கு பாத்திரம், காட்சிக்கு காட்சி ஐ ஆம் சாம் தான் தெய்வத் திருமகள்.
ஆனால் முன்சொன்னது போல் இந்த நேரடித்தழுவல் அல்ல தெய்வத் திருமகளின் பிரச்சினை. கதைச் சுருக்கத்தில் குறிப்பிட்டதுபோல் ஐ ஆம் சாமில் மேலெழுந்து கொண்டேயிருக்கும் பல நேர்மைகள், மனித வாழ்க்கையின் உண்மைகள் தெய்வத் திருமகளில் பொய்களாக பரிண மிக்கிறது. அதன் எழுத்தாளர், இயக்குநர் தந்திரமாக உருவாக்கும் பொய்மையான பாத்திரங்களும் கதைத் தருணங்களும் திரைக் கதையில் அடிக்கடி நிகழும் தப்பித்தல் முயற்சிகளும் (Escapism) தான் இப்படத்தின் முக்கியமான பிரச்சினைகள்.
ஒரு குழந்தையை வளப்பதற்குத் தேவையான அடிப்படை மூளைத்திறன் சாமுக்கு இருக்கிறது ஆனால் கிருஷ்ணாவுக்கு அது இல்லை. இருந்தும் அவர் குழந்தையை நன்றாக வளர்க்கிறார்! சாமின் மூளை வளர்ச்சி குன்றிய நண்பர்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் மூளைக் குறை பாடுகள் எப்படிப்பட்டவை என்பது கச்சிதமாக சொல்லப்படுகிறது. அப்பாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் அக்கதையின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு உண்டு. ஆனால் கிருஷ்ணாவின் நண்பர்கள் மனிதர்களின் மூளை வளர்ச்சியின்மையை கேலிசெய்யும் பொருட்டு வலிந்து அமைக்கபட்ட நகைச்சுவை பாத்திரங்கள்.
மூளைவளர்ச்சிக் குறைபாடு என்கிற உக்கிரமான சமூக பிரச்சினையையும் அதனால் அவதிப்படும் ஒருத்தருக்கு ஒரு குழந்தை பிறந்தால் என்னவாகும் என்கிற கேள்வியையும் ஐ ஆம் சாம் முன்வைக்கும்போது தெய்வத் திருமகள் அந்த பிரச்சினையைப் பற்றிய எந்தவொரு புரிதலுமில்லாமல் மலிவான குறுநாவல்களில் வருவதுபோல் அதை அணுக முயற்சிக்கிறது. அத்தகைய கதைகளை படித்து இன்புறும் மனநிலையுடன் சாதாரண மக்கள் இந்த படத்தையும் கைதட்டி வரவேற்கிராற்கள். இது நம்முடைய சூழலின் உக்கிரமான மற்றுமொரு சமூக பிரச்சினை அல்லாமல் வேறென்ன?
தெய்வத் திருமகள் ஓடும் திரை அரங்குகளில் பெண்கள் வெள்ளமாக அலைமோதுகிராற்கள் என சொல்லப்படுகிறது. மலையாள மனோரமா என்கிற மலிவு இலக்கிய வார இதழ் இருபது லட்சம் பிரதிகள் விற்கப்படுகிறது. வாரம் தோறும் ஏராளமன கேரளப் பெண்கள் அதை படித்து அழுகிறார்கள், இன்புறுகிரார்கள். அக்கேரளச் சூழலில் இருந்து வருபவர்தான் இயக்குநர் பிரியதர்ஷன். மலையாளம், இந்தி என இதுவரைக்கும் 65 படங்களை இயக்கிய, இந்தியாவின் மிக வெற்றிபெற்ற இயக்குநர் அவர். அவரது ஏறத்தாழ எல்லாப் படங்களுமே தழுவல்கள். ஆங்கிலத்திலிருந்தும் உலகப்படங்களிலிருந்தும் மலையாளத்துக்கும் அங்கிருந்து இந்திக்கும் பிரமொழிகளுக்கும் என்பது தான் அவரது சினிமா சூத்திரம்.
அறிவார்ந்த தளத்தில் யோசிப்பவர்களுக்காகவோ, அறிவு ஜீவிகளுக் காகவோ, புத்திசாலிகளுக்காகவோ தான் படங்கள் எடுப்பதில்லை என்று தற்பெருமை பேசத் தயங்காத அந்த பிரியதர்ஷன் தான் மலையாள சினிமாவை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கேரள சலச்சித்திர பரிஷத்தின் தற்போதைய தலைவர்! அவரது படங்கள் குழந்தைகளுக்காகவும் குழந்தை உள்ளம் படைத்தவர்களுக்காகவும் தான் என்கிறார்! சிறைச்சலை, காஞ்சிவரம், கர்திஷ், விராஸத் போன்ற அவரது படங்களைப் பார்க்கும் குழந்தைகளின் நிலமை என்னவாகும் என்று தெரியவில்லை!
தனது ஒரு தழுவல் திரைப்படத்தைக் கூட அதன் மூலப்படத்தின் பாதி அளவுக்காவது சிறப்பாக இயக்க இதுநாள்வரைக்கும் அவரால் முடிந்ததில்லை. சந்தேகமிருந்தால் பரதன் இயக்கிய தேவர் மகன் திரைப்படத்தின் இந்தி வடிவம் ’விராஸத்’தைப் பாருங்கள். போதாதெனில் லோஹித தாஸ் எழுதி சிபி மலையில் இயக்கிய கிரீடத்தின் பிரியதர்ஷன் வடிவமான ’கர்திஷ்’ஐப் பாருங்கள். அந்த பிரியதர்ஷனின் பிரிய சிஷ்யன் ஆன ஏ எல் விஜயும் லோஹித தாஸின் கிரீடத்தை மொழியாக்கம் செய்துதான் தமிழில் இயக்குநரானார்.
தன் குருவைப் போலவே அசலான திரைப்படங்களின்மேல் ஏ எல் விஜயுக்கும் நம்பிக்கையில்லை என்றே நினைக்கிறேன். அவரது இரண்டாவது படமான பொய் சொல்லப் போறோம் 2006ல் வந்த கோஸ்லா கா கோஸ்லா என்கிற இந்தித் திரைப்படத்தின் மொழியாக்கம். அவரது அடுத்த படம்தான் மதராஸப்பட்டினம். அது டைடானிக், லகான் (இந்தி), அபோகாலிப்டோ, நோட்புக் போன்ற பல படங்களில் வரும் காட்சிகளின் தழுவல் தொகுப்பு. இப்போது ஐ ஆம் சாம்.
ஐ ஆம் சாமில் சாமாக நடிக்கும் ஷான் பென் (Sean Penn) ன் நடிப்பு அசாத்தியமானது, உண்மை மிக்கது, உலகத்தரமானது. ஆஸ்கார் பரிந்துரையுடன் உலகெங்கிலுமுள்ள பல முக்கியமான விருதுகளுகளை அவர் வென்ற பாத்திரம் அது. ஆனால் கிருஷ்ணாவாக வரும் விக்ரமின் நடிப்பு செயர்க்கைத்தனத்தின் உச்சம். அது பலசமையம் ஒரு கைப்பாவை ஆட்டத்தின் தன்மைகளைத்தான் கொண்டிருக்கிறது. ஷான் பென் செய்வதுபோலவே கையை தூக்கி தூக்கி வசனம் பேசுகிரார் விக்ரம். உதடுகளைச் சுளித்து, நாக்கை சுழற்றி மூளை வளர்ச்சி இல்லாத ஒருவராக நடிக்க படாத பாடுபடுகிறார். ஆனால் அவரது கண்கள் தான் செய்யும் செயற்கைத் தனத்தை தொடர்ந்து காட்டிக் கொடுத்தபடியே இருக்கின்றன. இது தான் நடிப்பின் உச்சம் என்றால் முப்பதாண்டுகளுக்கு முன்பு இத்தகைய பாத்திரங்களாக பதினாறு வயதினிலே, சிப்பிக்குள் முத்து போன்ற படங்களில் கமலஹாஸன் நடித்ததற்கு என்ன பெயர் சொல்லலாம்?
ஐ ஆம் சாம் முதலில் பார்த்தபோதே அதில் என்னை முற்றிலுமாக கவர்ந்த ஒரு விஷயம் அதன் இசை. ஜான் பவல் என்பவரின் இசையமைப்பில் பீட்டில்ஸ் இசைக்குழுவின் காலத்தை வென்ற இருபது பாடல்களை சமகாலத்தில் பிரபலமாக இருக்கும் சாரா மக்லாஷ்லன், ஷெறில் க்ரோ, ப்ளாக் க்ரோஸ், ஹீதர் நோவா, எட்டி வெட்டர் போன்ற பலரை பாடவைத்து படத்தின் முக்கியமான கதைத் தருணங்களுக்கெல்லாம் உணர்ச்சிகரமான பின்னணி இசையாக பயன்படுத்தியிருந்தார்கள். பீட்டில்ஸின் இசையும் பாடல் வரிகளும் ஐ ஆம் சாமுக்கு ஒரு காவியத்தன்மையையும் பலவித பரிமாணங்களையும் அளித்தது.
தெய்வத் திருமகள் படத்தைப் போலவே அதன் சில பாடல்களும் தழுவல்களே. விக்ரம் பாடிய பா பா பாப்பா பாடல் 1973ல் வந்த வால்ட் டிஸ்னியின் கேலிச்சித்திரப்படமான ராபின் ஹுட்டில் ரோஜர் மில்லர் பாடிய பா பா பாப்பா என்றே தொடங்கும் ஆரம்பப் பாடலின் அப்பட்டமான நகல். அதேபோல் ஜகட தோம் என்ற பாடல் சரோத் மேதை உஸ்தாத் அம்ஜத் அலி கானின் மகன்கள் அயான் அலியும் அமான் அலியும் 2008ல் வெளியிட்ட ’ட்ரூத்’ என்கிற பாடலின் நகல்! பல இடங்களில் ஐ ஆம் சாமின் இசையை நகலெடுத்த பின்னரும் தெய்வத் திருமகளில் அமைந்திருக்கும் ஜி வி பிரகாஷின் பின்னணி இசை வெறும் உரத்த சத்தங்களாக மிகுந்த நாடகத்தன்மையுடன் ஒலிக்கிறது. புத்தகம் பார்த்து எழுதிய பின்னரும் பள்ளிப் பரீட்சயில் தோல்வி அடைவதைப் போல!
ஒரு நல்ல படத்தால் பாதிக்கப்பட்டு, உந்துதல் பெற்று அதை மறு ஆக்கம் செய்ய முயற்சிப்பதில் எந்த தவறுமில்லை. பாலு மகேந்திராவிலிருந்து, மணிரத்தினத்திலிருந்து, கமலஹாஸனிலிருந்து மிஷ்கின் வரைக்கும் அதைச் செய்திருக்கிறார்கள். மிஷ்கினின் நந்தலாலா ஜப்பானிய படமான கிகுஜிறோவின் தழுவல் என்று தம்பட்டமடித்தவர்களுக்கு தெய்வத் திருமகள் ஐ ஆம் சாமின் அப்பட்டமான நகல் என்பதில் எந்தவொரு பிரச்சினையுமில்லை எனப்படுகிறது. பல தவறுகள் இருந்தாலும் காட்சிமொழியிலும் பாத்திரப்படைப்பிலும் கதைத்தருணங்களிலும் பல இடங்களில் நந்தலாலா கிகுஜிறோவை வெகுதூரம் தாண்டிச் சென்றதும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் தெய்வத் திருமகள் யாரையாவது மனதளவில் பாதிக்கிறது என்றால் அதன் முழு பெருமையும் அந்த பாத்திரங்களையும் கதைத் தருணங்களையும் உருவாக்கிய ஐ ஆம் சாமின் எழுத்தாளர்களான க்ரிஸ்டீன் ஜான்சன் மற்றும் ஜெஸி நெல்சன் என்கிற இரண்டு பெண்மணிகளுக்கு தான் சேரும். ஜெஸி நெல்சன் தான் அப்படத்தின் இயக்குநருமே.
சரி ஐ ஆம் சாம் ஐ முற்றிலுமாக மறந்து தெய்வத் திருமகளை ஒரு அசல் படமாகவே அணுகிப் பார்ப்போம். அதில்வரும் வாழ்க்கையின் யதார்த்தங்களும் உண்மைகளும்தான் என்ன? ஆரம்பக் காட்சிகளில் வழக்கரிஞர் என்ற தொழிலையே கேவலப்படுத்தும் வகையில் சந்தானம் என்கிற நடிகன் பேசும் ’யதார்த்த’ வசனங்களுக்கும் அவரது சேட்டைகளுக்கும் நீதிமன்ற வளாகத்தில் அவர் ஓடியாடி நிகழ்த்தும் இன்னபிற நகைச்சுவைகளுக்கும் திரை அரங்கில் கைதட்டல் எழுகிறது. இவ்வாறாக நகைச்சுவை உணர்ச்சியில் தமிழ்நாட்டை வெகுதூரம் முன்னேற்றியிருக்கிறது தெய்வத் திருமகள்! முதலில் வழக்கறிஞர்களை கேவலப்படுத்தும் நகைச்சுவை முயற்சியில் மும்முரமாக இருக்கும் இன்னுமொரு பாத்திரம் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் கதாநாயகியான அனுராதா என்கிற வழக்கறிஞர்!
குழந்தை பிறந்த உடன் அதற்குப் பால் கொடுக்க தன் மனைவி பானு எங்கே என்று தெளிவாக கேட்க்கும் கிருஷ்ணா பின்னர் அந்த குழந்தை பசியால் கதறி அழும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறது எதனால்? சாக்லேட் நிருவனத்தின் முதலாளியான மலையாளத்தில் தமிழ் பேசும் அந்த பாத்திரம் கிருஷ்ணாவுக்கும் அவரது குழந்தைக்கும் எல்லா உதவிகளும் செய்யும் அளவில் நல்லவரும் வல்லவருமாக இருக்கும்பொழுது, கிருஷ்ணா பலகாலமாக வேலை செய்து சேர்த்த பணம் அவரிடம் கட்டுகட்டாக இருக்கும்பொழுது, தன் குழந்தைக்கு ஒரு செருப்பு கூட வாங்க வக்கில்லாதவராக கிருஷ்ணா இருப்பது எப்படி?
நாசர் நடிக்கும் பாஷ்யம் என்கிற பாத்திரம் அசுர மூளை கொண்ட ஒரு மாபெரும் வழக்கறிஞர். அவர் சாதாரண மனிதர்களையே நீதிமன்றத்தில் மனநோயாளிகளாக சித்தரித்து வழக்குகளை ஜெயிக்கும் வல்லமை கொண்டவர். அவரை ஜெயிக்க தமிழ்நாட்டிலேயே ஆளில்லை. ஆனால் அவரது உதவியாளன் ஒருவன் அனுராதாவின் உதவியாளராக வரும் ஒரு பெண்ணின் பின்னால் ஜொள்ளு வழிந்து அலைந்துகொண்டு, மிக எளிதில் ஒற்றுவேலை செய்து நிலா வழக்கு சார்ந்த பாஷ்யத்தின் ரகசியங்கள், திட்டங்கள் அனைத்தையும் அனுராதாவிடம் சேர்க்கிறான்! அசுர மூளை கொண்ட பாஷ்யத்துக்கு வெகுநாள் அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை! ஒரே ஒரு முறை கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினால் அக்கணமே தீர்ப்பாகக் கூடிய ஒரு வழக்குக்காக எத்தனை குழப்பங்கள், திருப்பங்கள், போராட்டங்கள்! இதற்காக அந்த அசுர மூளை பாஷ்யத்தை எவ்வளவோ சோதனைகளை சந்திக்க வைக்கிரார் இயக்குநர்!
அனுராதாவின் அப்பாவாக வரும் ஒய் ஜி மஹேந்திரனின் பாத்திரம் தன் மகள் மீதும் உலகத்தின்மீதும் சதா கோபத்துடன் திரிகிறார். எதற்கு? திடீரென்று ஒருநாள் அவர் நல்லவராக மாறி தன் மகளுக்கு ஆசி வழங்கி அவளை ஊக்குவிக்கிறார். எப்படி? ஊட்டி சாக்லேட் தொழிற்சாலையில் எடுபிடி வேலைகள் செய்யும் ஒருவன் தினமும் சாக்லேட் திருடி சாப்பிடுகிறான்! அதை அங்கு வேலை செய்யும் எம் எஸ் பாஸ்கரின் மூர்த்தி என்கிற பாத்திரம் கண்டுபிடிக்கும்போது, மூர்த்தியை திசை திருப்புவதற்காக மூர்த்தியின் மனைவி ராஜிக்கும் அவள் தன் சொந்த தம்பியைப்போல் கருதும் அப்பாவி கிருஷ்ணாவுக்கும் கள்ளக்காதல் இருப்பதாகச் சொல்லுகிறான். அதைமட்டும் வைத்துக் கொண்டு தான் மிகவும் நேசிக்கும் கிருஷ்ணாவை பகைக்க ஆரம்பிக்கும் மூர்த்தி, அவனையும் அவனது குழந்தையையும் பிரிக்க தன்னால் முடிந்தவை அனைத்தையும் மிக தந்திரமாக செய்கிரார். நீதிமன்றத்தில் ஆஜராகி அங்கேயும் கிருஷ்ணாவுக்கு எதிராக பேசி கடைசியில் பெரிய ஒரு திருப்பத்துடன் ஒரு நல்லவராக மாறி கிருஷ்ணாவுக்கு ஆதரவாக பேசுகிறார். எப்படி?
குழந்தைகள் மீது பேரன்பு கொண்ட, குழந்தைக் கல்வியை முற்றிலுமாக மாற்றியமைக்க அவதரித்திருக்கும் அமலா பால் நடிக்கும் தாளாளர் ஸ்வேதா பாத்திரம் தன் பள்ளியின் குழந்தைகள் மீது யாராவது கோபப்படுவதைக் கூட தாங்க முடியாதவர். ஆனால் அந்த அம்மா தன் காதலனேயே ஒரு அடியாளாக மாற்றி அந்த பச்சைக்குழந்தையை அதன் அப்பாவிடமிருந்து பிரிப்பதும் ’குழந்தையை உனக்கு தரமுடியாது’ என்று அந்த அப்பாவியை அடித்து துரத்துவதும் எந்தவகையான திரைக்கதை உத்தி? ஒரு திடீர் திருப்பமாக அங்கு வந்து சேரும் ஸ்வேதாவின் அப்பா, எம் ஜி ஆர் படங்களில் வரும் நம்பியாரின் கெட்ட பாத்திரங்கள் செய்வதுபோல் முதலில் நல்லவனாக நடித்து கிருஷ்ணாவையும் குழந்தயையும் கூட்டிச் சென்று, சென்னை 30 கி மீ என்றெழுதியிருக்கும் மைல்க் கல்லுக்கரிகில் அந்த வாயில்லா ஜீவனை தன் வாகனத்திலிருந்து தள்ளிவிட்டு அவன் குழந்தையை அபகரிக்க வைப்பதன் நோக்கம் என்ன? தமிழ் சினிமாவை மீண்டும் அதன் இழந்த காலத்துக்கு அழைத்துச் செல்வதா இல்லை தொலைக்காட்சி கண்ணீர் தொடர் பார்த்தும் அழுகை வராமல் கஷ்டப்படும் பெண் உள்ளங்களை அழவைப்பதா?
அந்த கணனி வரைகலை கதைப்பாட்டுக் காட்சியில் கிருஷ்ணா ஒரு பேராண்மை வாலிபனாக, பேரழகனாக, போர் வீரனாக, அதிமானுடனாக காட்சியளிக்கிறார்! அதில் டைனோசர் முதல் அனகொண்டா வரைக்கும் வந்து போகுது! அதையெல்லாம் பார்த்த பின்னரும் கிருஷ்ணாவுக்கு கற்பனை சக்தி அறவே இல்லை, அவனுக்கு மூளை வளர்ச்சியே இல்லை என்பதை பார்வையாளர்கள் நம்பித்தான் தீரணுமா?
பாஷ்யத்துக்கும் ஒரு சின்னக்குழந்தை இருக்கிறது. அதற்கு இரவில் ஜுரம் வந்தால் கொடுக்க ஒரு குரோசின் மருந்து கூட அந்த மகா அஇவாளியின் வீட்டில் இல்லை! அதைக்கூட நிலா.. அவலாஞ்சி.. ஊட்டி.. சாக்லேட்.. இவைத் தவிர வேறு எதுவும் தெரியாத கிருஷ்ணா, நள்ளிரவில் தன்னை அடைத்துப் போட்டிருக்கும் அறையின் கதவை உடைத்து வெளியேறி, அடியாள்களிடமிருந்து தப்பித்து நொடிநேத்தில் எங்கிருந்தோ கொண்டுவரவேண்டியிருக்கிறது! கிட்த்தட்ட ஒரு நிழல் உலக தலைவன்மாதிரி இருக்கும் பாஷ்யத்தின் வாட்டசாட்டமான அடியாள்களால் சரியாக நடக்கக் கூடத்தெரியாத கிருஷ்ணாவை தடுத்து நிறுத்தவே முடிவதில்லை! கிருஷ்ணாவுக்கு என்னத்தான் மூளை வளர்ச்சி இல்லாமலிருந்தாலும் விக்ரம் ஒரு உச்ச நட்சத்திரம். அடியாள்களால் அவரை எளிதில் தொடமுடியுமா? என்ன?
கிருஷ்ணாவின் மூளை வளர்ச்சியில்லாத நாலு நன்பர்களையும் சாட்சிகளாக பாஷ்யம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகிறார். அது செல்லாது என்று எதிர் வழக்கறிஞர் அனுராதா சொல்லும்போது ‘சரி அப்படியானால் மூளை வளர்ச்சி உள்ள சாட்சியை ஆஜர்ப்படுத்துகிறேன்’ என்று சொல்லித்தான் மூர்த்தியை ஆஜர்படுத்துகிறார். அது முதலிலேயே செய்திருக்கலாம் தானே? அந்த கணமே நீதிமன்றத்தை ஏமாற்றியமைக்காக பாஷ்யத்தை என்றென்றைக்குமாக நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற முடியும் என்பதெல்லாம் இப்படத்தை எழுதி இயக்கியவருக்கு தெரியவேயில்லையா! நீதிமன்ற நடவடிக்கைகளை விடுங்கள், மனித உறவுகள், உணர்வுகள், மூளைக்குறைபாடுகள் உள்ள மனிதர்களின் வாழ்க்கை என எதைப்பற்றியுமே அவருக்கு எந்தவொரு நுட்பமான பார்வையோ அவதானிப்புகளோ இருப்பதற்கான அடையாளம் எதுவும் இப்படத்தில் தென்படவேயில்லை!
ஒரு நேபாள் குழந்தையின் முக அமைப்பு கொண்ட சின்ன சாரா என்கிற அந்த அழகுக் குழந்தையின் நாவில் ஒரு குழந்தை ஒருபோதும் பேச வாய்ப்பில்லாத ”நீங்க உங்க அப்பா கூட இருக்கலாம், நான் என் அப்பா கூட இருக்கக் கூடாதா” போன்ற மேதாவித்தனம் மிகுந்த வசனங்களை தயக்கமில்லாமல் நிரப்புகிரார் இயக்குநர். இருந்தும் அக்குழந்தையின் நடிப்பு அசாத்தியமானது. அத்துடன் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் அனுஷ்காவின் அழகும் மட்டும்தான் இப்படத்தின் குறிப்பிடக்கூடிய அம்சங்கள்.
பலநாட்கள் பார்க்காமல் இருந்த தன் அன்பு அப்பவிடம், ’அப்பா’ என்ற கதறலுடன் அந்த குழந்தை ஓடி வந்து கட்டியணைத்தால் இந்த உலகத்தின் எந்த நீதிமன்றமும் அக்குழுந்தையை தடுக்கப்போவதில்லை. ஆனால் தெய்வத் திருமகள் நாடகத்தில் அது சாத்தியமில்லை! வழக்கறிஞர்களின் சரமாரியான வார்த்தைப் போரின் நடுவில் அந்த அப்பாவும் குழந்தையும் வாய் பேசாத ஊமைகளைப்போல், நாடகத்தனமான பின்னணி இசையின் உதவியுடன் அதீதமான சைகை மொழியில் ஏதேதோ பேசுகிராற்கள். வழக்கறிஞர்களின் அனல் பறக்கும் விவாதங்களுக்கு காதே கொடுக்காமல் நீதிபதி அக்காட்சியை பார்த்து ரசிக்கிரார். திரை அரங்கில் பலர் கண்ணீர் வடிக்கிறார்கள். அதுதான் போலும் நாம் தவறாமல் பார்க்க வேண்டிய தெய்வத் திருமகளின் அந்த கடைசி இருபது நிமிடங்கள்!
விவாதத்தின் கடைசியில் ’வழக்கறிஞர் பாஷ்யம்’ என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு உற்றுப் பாற்கிறார் நீதிபதி! ஆம்! இப்படத்தில் நீதிபதி அல்ல, வழக்கறிஞர் தான் தீர்ப்பு சொல்லுகிறார்! ’குழந்தை அதன் அப்பாவுடன் போவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை’ என்று! அவ்வாறாக நள்ளிரவில் தன் குழந்தைக்கு குரோசின் மருந்து வாங்கிக் கொடுதத்மைக்கு தனது நன்றியை கிருஷ்ணாவுக்கு காணிக்கையாக்குகிரார் போலும் பாஷ்யம்!
படம் இன்னும் முடியவில்லை. நீதிமன்ற வாதாட்டங்களுக்கிடையில் தன் குழந்தயை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க தன்னை விட பல ’சிறப்புகள்’ உள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள் என்று உணரும் கிருஷ்ணா, தன் உயிரான நிலாவை தன்னிடமிருந்து அடியாள்களை வைத்து பறித்த அந்த சித்தியிடமும், ஊர் பேர் தெரியாத தன்னை நடுசாலையில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற, இரக்கமே இல்லாத அவளது அப்பாவிடமும் தானாகவே கொண்டு சென்று ஒப்படைக்கிறார். ஒரு தொலைக்காட்சிக் கண்ணீர்த் தொடரின் பலபகுதிகளை ஒரே அடியாக பார்த்துவிட்டதைப் போன்ற கண்ணீர் மகிழ்ச்சியில் தாயுள்ளங்களும் தந்தை உள்ளங்களும் திரை அரங்கிலிருந்து வெளியேறும்போது அங்கு இருள்மட்டும்தான் மீதமிருக்கிறது.
Thanks: http://musicshaji.blogspot.com/